வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
என் இனிய இதயமே!
செப்டம்பர் 29 இன்று உலக இதய தினம். இதயம் இல்லாத சீவன்கள் ஏது? அந்த இதயத்திற்கு இயற்கை எத்துனை பாதுகாப்பு கொடுத்திருக்கிறது! அத்தனையும் மீறி அந்த அழகான இதயத்திற்கு பிரச்சனையை ஏற்படுத்துவது யாருடைய தவறு?
இதய நோய்கள் என்று பார்த்தால் அது பெரும்பாலும் மனித சீவன்களுக்கே வருகிறதே…. அது ஏன் என்று சிந்தித்திருக்கிறோமா? ஆம் ஐந்தறிவு சீவன்கள் புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை, அதிக உடல் பருமனால் அவதிப்படுவதில்லை . சர்க்கரை வியாதியால் துன்பப்படுவதில்லை. அதனால் இதய நோய் என்ற இன்னலும் இல்லை அவைகளுக்கு. மருந்து, மாயம், மருத்துவம் என்ற வேதனைகளும் இல்லை!
இருதய பாதுகாப்பில் இன்று மருத்துவத்துறையின் முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் இருப்பினும், உலக அளவில் இன்று 17.1 கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அன்றாடம் நம் வாழ்வில் இருதய நோயுடன் போராடுபவர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆயினும் நோய் வருமுன் காக்கும் கலையும் அறிந்திலோம்.
நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் ( குறள் – 948) என்பார் ஐயன் வள்ளுவர்.
பெரும்பாலும் இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களாகவோ, உயர் இரத்த அழுத்தம், படபடப்பு அல்லது சங்கிலித்தொடர் புகை பழக்கம் உள்ளவர்கள் மற்றும் கொழுப்புச் சத்து அதிக அளவில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
இயந்திரத்தனமான நகர வாழ்க்கை முறைமையும் பல நேரங்களில் காரணமாகிறது. இருதய நோய் பற்றிய அதிக கவனம் தேவைப்படுபவர்கள் என்று மருத்துவர்களால் எச்சரிக்கை செய்யப்படுபவர்கள்:
(1) பெற்றோரில் எவரேனும் ஒருவர் அல்லது உடன் பிறந்தோர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலே விழிப்புடன் இருக்க வேண்டும், வயது கட்டுப்பாடின்றி எவருக்கு வேண்டுமானாலும் இருதய நோய் வரக்கூடும்.
(2). குழந்தைப் பருவம் தொட்டே உடலில் அதிக எடை கூடிக் கொண்டு போகும் தன்மையுடையவர்கள்.
(3). இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் [ சாப்பிடுவதற்கு முன்பு 140மி.கிராமிற்கும் அதிகமாகவும், சாப்பிட்டு 2 மணி நேரத்திற்குப் பிறகு 160 மி.கிராமிற்கும் மேலாக ] இருப்பவர்கள்.
(4). கொழுப்புச் சத்தின் அளவு 210 மி.கிராமிற்கும் அதிகமாக இருப்பது.
(5). மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள்.
இரத்த அழுத்தம், உடற்பருமன், சக்கரை வியாதி, இருதய நோய் போன்ற பரம்பரை வியாதிகள் உள்ளவர்களும் விழிப்புணர்வுடன் கவனிக்கத்தக்கவர்களாகும்.
இந்தப் பிரச்சனைகளெல்லாம் இல்லாதவர்களுக்கு இருதய நோயே வராதா என்றால் அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லையென்றாலும், நம்மால் இயன்றவரை கவனத்துடன் இருக்க முயன்றாலே ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு உற்சாகமும் கூடி, நோய் வருவதை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும் என்பதும் நிதர்சனமே!
இதயம் ஒன்றுதான், அதை பேணிப் பாதுகாப்பதும் நன்றுதான்!