பேரா.பெஞ்சமின் லெபோ

பகுதி 5 –ஆ     : ஒரு? ஓர்? மயக்கமா? தயக்கமா ? மனத்திலே குழப்பமா?

‘ஒரு’,  ‘ஓர்’பயன்பாடு பற்றிய தமிழ் முறைமையை இப்போது பார்ப்போம் ; பிறகு, அடுத்த பகுதியில் ஆங்கில முறைமைக்குப் போவோம்.
நம்மவர்கள் இந்த இரண்டு முறைமைகளைப் பற்றிய தெளிவு இல்லாமல் இரண்டையும் கலக்கி (‘கலக்கல்‘ தமிழகத்தில் அதிகமாகி விட்டதோ?)
குழம்பிக் கொண்டு / குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.அதனால்தான் மயக்கம், தயக்கம் குழப்பம் எல்லாம்.

செந்தமிழில் ‘ஒரு’,  ‘ஓர்’ எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன? இவற்றின் அடிப்படைப் பயன்பாடு ‘எண்ணுப் பெயரட’யே !
“அது என்ன ‘எண்ணுப் பெயரடை’ – எதோ எள்ளடை…மாதிரி?”…எனக் கேட்போருக்கு  விளக்கம்  இதோ :

‘எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் பெயர்ச் சொற்கள் எண்ணுப் பெயர்கள்’ . பெயரை விளக்க வரும்  சொல் ஒன்று, அப்பெயருக்கு முன் வரும்  போது, ‘அடை’ எனப்படும். அப்படி  வரும் சொல் வினையாக  இருந்தால் ‘வினையடை’, பெயராக இருந்தால் அது தான் ‘பெயரடை’.
(மற்றபடி  வயிற்றில் அடைக்கும் பருப்படைக்கும் ஆம வடைக்கும்  இதற்கும் தொடர்பு இல்லீங்கோ!)

தமிழில்  அடிப்படைச் சொற்கள் இரண்டே. இதனை முன்னரே பார்த்திருக்கிறோம்.
அவை வினை, பெயர்  ஆகும். மூன்றாவதாக  ஒன்று உண்டு என்பதையும் கண்டோம். அதுதான் ‘உரி’. இதனை  ‘உரிச் சொல்’ எனபர்.
சொல் என்று சொன்னாலும் இது தனியாக இயங்காது. தொல்காப்பியர் உறு, தவ, நனி என்னும் மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் பொருளில் வரும் என்கின்றார். இச்சொற்கள் பெயரடையாகவும் வினையடையாகவும் வரும்.
உறுபுகழ் (மிக்க புகழ்) – பெயரடை

தவச்சிறிது (மிகவும் சிறிது) – வினையடை

நனி பேதை (மிகவும் பேதை) – பெயரடை
நனி வருந்தினை (மிகவும் வருந்தினாய்) – வினையடை.

இவற்றில் பெயரடையாக வருவன எண்ணுப் பெயர்களாக அமைந்தால் அவைதாம் ‘எண்ணுப்  பெயர் அடைகள்’. இவை ஒன்று, இரண்டு, மூன்று…எனத் தொடங்கித் தொடரும்.இப்படி எண்ணிக்கையைக் குறிக்கும் சொல்  ‘ஒன்று’ என்னும் சொல். எனவே இது எண்ணுப் பெயர்.

‘ஒல் – ஒன் – ஒன்று – ஒல்லுதல் -பொருந்துதல் ; ஒன்று சேர்தல் என்பதால் “ஒன்று” என்றானது’ என்பார்    மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர். ( “தமிழ் வரலாறு” – கழகப் பதிப்பு – 1990- இரண்டாம் பதிப்பு பக்கம் 176 ). ஒன்று என்பதின் திரிபு என்பார் நா. கதிரைவேற் பிள்ளை அவர்கள்.(தமிழ் மொழி  அகராதி தொகுப்பாளர்)

இந்த எண்ணுப் பெயரின் அடை வடிவம்தான் ‘ஒரு’, ஓர்’. ஆகவே, இவற்றின் அடிப்படைப் பயன்பாடு எண்ணுப் பெயரடையாக வருவதுதான். ‘ஒன்று’ என்னும் எண்ணிக்கையைக் குறிக்கும் போது மட்டும் ‘ஒரு’, ஓர்’ இடலாம். மற்ற இடங்களில் ‘ஒரு’ ‘ஓர்’ இட வேண்டிய தேவை இல்லை.
காட்டு :

1 ) நூல் கண்காட்சிக்குச்  செல்கிறீர்கள். “சங்க இலக்கியம் பற்றி  ஏதாவது நூல் உண்டா?” – கேட்கிறீர்கள். உடனே  கடைக்காரர், “இதோ ஒரு நூல்” என்று சொல்லி ஒரு நூலை எடுத்துக் காட்டுகிறார்.

அவர் கூறுவதின் பொருள் ? ‘பல நூல்கள் உள்ளன, அவற்றுள் இது ஒன்று!’ என்பதுதானே.  இங்கே உள்ள ‘ஒரு’ எண்ணிக்கையைக் குறிக்கிறது.

2) தஞ்சாவூரில்  வசிக்கிறீர்கள். வெளியூர்  நண்பர் வருகிறார். பெரிய கோவிலைக் காட்ட அழைத்துச் செல்கிறீர்கள்.
‘இது ஒரு தஞ்சாவூர்ப்  பெரிய கோவில்’ என்று சொல்வீர்களா? உலகிலேயே,  தஞ்சாவூர்ப் பெரிய கோவில் ஒன்றே ஒன்றுதானே உள்ளது.
அப்படி இருக்க, இங்கே ‘ஒரு’, தேவை இல்லாத ஒன்றல்லவா! ‘ஒரு’ இல்லாமலே சொல்லிப் பாருங்கள் , பொருள் சரியாகத்தான் வரும்.
(இதனைத்தான் முந்திய பகுதியில் பார்த்தோம் : ‘ஒரு’ ‘ஓர்’ எடுத்துவிட்டு வாக்கியத்தைச் சரி பார்ப்பது).
இதில்  இருந்து பெறும் பாடம் என்ன? (பொருள்கள்) பல இருக்க அவற்றுள்  ஒன்றைக் குறிக்க ‘ஒரு’  ‘ஓர்’ இடலாம்.
(ஏனைய  இடங்களில் ‘ஒரு’ ‘ஓர்’ இட வேண்டிய தேவை இல்லை.)

இப்படி இந்த முறைமை தமிழ் மொழிக்கு மட்டும் சொந்தமல்ல. ஆங்கிலம், பிரஞ்சு; எசுபானியம்…போன்ற ஐரோப்பிய மொழிகளுக்கும் பொதுவானதுதான். அது மட்டும் அல்ல, உயிருக்கு முன் ‘ஓர்’ , உயிர்மெய்க்கு முன் ‘ஒரு’ எனத் தமிழில் எழுதுவது போலவே இம்மொழிகளிலும் எழுதுவது வழக்கம்.

இதனை ‘. ‘An’ and ‘a’ are modern forms of the Old English ‘an’, which in Anglian dialects was the number ‘one’ (compare ‘on’, in Saxon dialects) and survived into Modern Scots as the number ‘ane’. Both ‘on’ (respelled ‘one’ by the Normans) and ‘an’ survived into Modern English, with ‘one’ used as the number and ‘an’ (‘a’, before nouns that begin with a consonant sound) as an indefinite article.’ என்று விளக்குகிறது விக்கிபீடியா கட்டுரை. (http://en.wikipedia.org/wiki/Article_%28grammar%29).இந்த  மொழிகள் ஏறத் தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி வளர்ந்தவை. நம் தமிழ் மொழியோ பல நூறாயிரம் ஆண்டுப் பழமை உடையது.  மகாகவி பாரதியார் ,

“தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.” ( ‘பாரத நாடு 9. எங்கள் தாய் )

என்று பாடியது தமிழ் மொழிக்கும் பொருந்தும். உயிருக்கு முன் ‘ஓர்’ , உயிர்மெய்க்கு முன் ‘ஒரு’ எனத் தமிழில் எழுதும் தமிழ் முறைமை ஐரோப்பிய மொழிகளிலும் உள்ளது. இதனை இப்படிக்  கூறாமல் ‘Tamil article usage is pretty much the same as in English.’ (http://urapvr.tumblr.com/post/4023427252/tamil-article) என  எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆனாலும் ஒருவர், திரு சுந்தர் லட்சுமணன் என்பவர், ‘ஒரு/ஓர், a/an போன்றவை ஓர் ஒலிப்பியல் கட்டாயத்தின் விளைவுகள் தாம். ஆனால் ஒற்றுமை அவ்வளவுதான்.ஆங்கிலம் போல என்று சொல்வது தவறான புரிதலை ஏற்படுத்தும்.(‘http://de-de.facebook.com/tamilLanguage/posts/173523422667634) என மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் முறைமையைத் தொடர்வோம் :

அடுத்துக்  கவனிக்க  வேண்டிய செய்தி : ‘ஒரு ‘ என்ற சொல்லை அடுத்துவரும்  பெயர்ச் சொல்லோடு இணைத்து  எழுதினால்  பொருள் மாறுபடும். பிரித்து எழுதினால் வேறு பொருள் வந்து விடும். காட்டாக : ‘ஒருகால்’ (‘ஒருக்கால்’)  – ‘ஒருகால் மழை வந்தாலும் வரலாம் , வராமலும் போகலாம்’ ; ‘ஒரு   கால் (இல்லாதவன்) உள்ளவன் நொண்டி. இம்மாதிரி ‘ஒரு’வோடு  சேர்ந்த  சொற்கள் பல உள்ளன : ஒருவன், ஒருத்தி, ஒருங்கு, ஒருகலை, ஒருசார், ஒருதலை, ஒருபொழுது…. இவற்றுள் ‘ஒருவன் …’ முதலான சொற்கள் பிரித்து எழுத முடியாதவை  … ஏனைய  அப்படி அல்ல  . இவை யாவற்றுள்ளும் ஒன்று என்ற கருத்து ஊடுருவி  நிற்பினும் ஒருவன், ஒருத்தி, ஒருங்கு போன்றவற்றில் உள்ள ‘ஒரு’ பெயரடையா  எனபது கேள்விக் குறியே! இந்த முறைமை தமிழுக்கே உரியது ; ஐரோப்பிய மொழிகளுக்கு இது பொருந்தாது. சில சொற்களை  ‘ஒரு’வோடு சேர்த்து எழுதினாலும் பிரித்து எழுதினாலும் ஒரே பொருள் தருவதும் உண்டு. காட்டு : ‘ஓருயிர்’.  ஓர் உயிர் எனப் பிரித்து எழுதினாலும் பொருள் மாறுவது இல்லை.

பெயரடை பற்றிய இன்னொரு கருத்தை இங்குப் பதிவு செய்வது  பொருத்தம்  பொதுவாகப் பெயரடைகள் பெயர்ச் சொல்லுக்கு முன்பாக வரும்.  கறுப்புக் காளை ; சுட்டிக் குழந்தை… முன்பெல்லாம் ஆங்கிலத்தில் பெய்ரடைக்கு ‘adjective’ என்று பெயர்.  இப்போது அதனை ‘determiner’ என்கிறார்கள். (காண்க :
‘The Oxford Comapnion to the English Langiuage – edited by Tom McARTHUR PAGE 83)

ஒரு பெயர்ச் சொல்லுக்கு முன் பல அடைகள்  சேர்ந்து வரலாம் : நல்ல வெள்ளையான நெட்டைப் பெண். ஆங்கிலத்திலும் இப்படியே வரும் : ‘ a tall, stout and good woman’. அதற்கு  மேல்  போனால் இவ்விரு மொழிப் பெயர் அடைகளுக்கும்  இடையே  சில வேறுபாடுகள் தோன்றுகின்றன.  (‘possessive case’) நீங்கலாக  உள்ள) ஆங்கில அடைக்குத் திணை, பால் வேறுபாடுகள் இல்லை : men, woman, lion(s) … என்ற பெயர்ச் சொற்களுக்கு ஏற்ப  ‘tall, stout and  good’ போன்ற பெயரடைகள் மாறுவது கிடையாது. தமிழிலும் இப்படி வருவது உண்டு  ‘ நல்ல வெள்ளையான நெட்டைப் பெண்.’ இதில் பெண்ணை நீக்கிவிட்டு ‘ஆண்’ என்று இட்டாலும் ‘மாடு’ என்று போட்டாலும் முன்னுள்ள அடைகள் மாறுவது இல்லை. ஆனால், சில தமிழ்ப் பெயர் அடைகள்   திணை, ஒருமை, பன்மைக்கு ஏற்ப மாறும்.   ‘சில’, ‘பல’ என்ற அடைகள் அஃறிணைப்  பன்மை. இப்படி வரும் அஃறிணை அடைகள் பெயருக்கு   முன் வரும்.
காட்டு : சில நரி(கள்), பல நாய்(கள்). இந்த அடைகள்,  பெயருக்குப் பின்னாலும் வரலாம். நரி(கள்) சில ; நாய்(கள்) சில.
மலேசியக் கவிஞர், தமிழ் அறிஞர் உயர்திரு செ. சீனி நைனா முகம்மது அவர்கள்கட்டுரையில் இருந்து ஒர்  எடுத்துக் காட்டு :

‘இக் கட்டுரையில் வரும் கருத்துகளில் சிலவற்றையோ பலவற்றையோ ஆய்வாளர்கள் முந்தியே கண்டறிந்து கூறியிருக்கலாம்.’
‘கருத்துகள்’ பெயர்ச் சொல் : ‘சில’, ‘பல’ அடைகள் ; பெயருக்குப் பின்னால் வருகின்றன.

(http://semmozhichutar.com/2010/10/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/)

‘ஒரு’ ஓர்’ என்பதற்கும் இது பொருந்தும் : ஒரு மாடு, ஓர் ஆடு. ஆனால் இவை பெயருக்குப் பின் வரும் போது ‘ஒரு’, ‘ஓர்’ என்பதின் விரிவான ‘ஒன்று’ என்பதே பெயர் அடையாக வரும் : ஒரு மாடு – மாடு ஒன்று ; ஓர் ஆடு – ஆடு ஒன்று. ‘ஒரு’ ‘ஓர்’ என்ற எண்ணுப் பெயர்கள் இரு திணைக்கும்  வரக் கூடிய ஒருமை அடையாகும்.  உயர்திணையாக இருந்தால் ஒருவன், ஒருத்தி, ஒருவர் என வரும் ; வருவதே முறை. ‘ஒரு நண்பன்’ என எழுதாமல் ‘நண்பன் ஒருவன்’ என்று எழுதுவதே சிறப்பு. ஆங்கிலத்தில் இப்படி வரும் வழக்கம் இல்லை.

தமிழ், ஆங்கில மொழிகளில் இருந்து பெரிதும் மாறுபடும் ஐரோப்பிய மொழிகள் -பிரஞ்சு, எசுபானியம்  – உண்டு. பிரஞ்சு, எசுபானியம்  ஆகிய இவ்விரு மொழிகளில் திணை வேற்றுமை இல்லை என்றாலும் பால் வேற்றுமை  (ஆண் பால் பெண்பால்) இருக்கிறது. எல்லாப் பெயர்களும் ஆண் பாலாகவோ  பெண்பாலாகவோ இருக்கும். (இம்மொழிகளைக்  கற்க விரும்புவோருக்குத்  தரும் உத்தி : பெயர்களைக் கற்கும் போதே, அவற்றின் பாலையும் சேர்த்தே கற்றுக் கொள்ளுங்கள் : நூல் = livre (Fr) ; libro (Es) – இப்படிக்  கற்காமல் ,  le livre,  el libro என்று  கற்றுக்கொள்வதே பிற்காலத்தில் நல்ல பயன் தரும்). எனவே இம்மொழிகளில் பெயர் அடைகள்  இடும் போது ஆண்பால் பெண்பால்,  ஒருமை, பன்மை  அறிந்து இடவேண்டும். பெயர்ச் சொல்லைப் பொருத்து இவை மாறும் . அதாவது பெயர்ச்சொல் ஆண்பால் ஒருமையாக இருந்தால் அடைகளும் அப்படியே ஆண்பால் ஒருமையாக  இருக்கும்,  இருக்கவேண்டும். பல அடைகள் வரும் போது பிரஞ்சு மொழி ஒரு படி மேலே போய் வேறொரு விதி சொல்லும் : சிறிய அடை அல்லது ஒரே ஓர் அடை என்றால் அது பெயர்ச் சொல்லுக்கு முன்  வரும்.  அடைச்  சொல் பெரிதாக (அதாவது muti syllable word -ஆக ) இருந்தாலோ பல அடைச் சொற்கள் வந்தாலோ, பெயருக்கு முன் ஓர் அடைச் சொல்லும் மற்றவை பெயருக்குப் பின்னாலும் வரவேண்டும்.
காட்டு : un livre (ஒரு  நூல் )  ; un livre gros et cher (பருமையான விலை உயர்ந்த ஒரு நூல்).

தமிழில் இது போல் பெயருக்குப் பின்னால் அடைகள் வரலாம். உயர் திணைக்கு உரிய அடை என்றால் பெயருக்குப் பின் வருவதே முறை:
பல புலவர்(கள்) – பல என்பது அஃறிணை. இதன் உயர்திணைப் பன்மை  – பலர்.
‘பலர் புலவர்’ என எழுதினால் இருப்பவர்களில் பலர் புலவர்(கள்), மற்றவர்(கள்) புலவர் இல்லை என்ற பொருள் வந்துவிடும். மேலும் உயர்திணைப் பெயருக்கு ஏற்பப் பெயர் அடையும்  உயர்திணையாகவே  அமையவேண்டும். ஆகவே, ‘பல  புலவர் வந்தனர்’ என எழுதாமல்  ‘புலவர் பலர் வந்தனர்’ என எழுதுவதே சரி. ‘ஒரு’ வரும் போதும் இது பொருந்தும். ‘ஒரு புலவர் இருந்தார்’ என்று எழுதாமல் ‘புலவர் ஒருவர் இருந்தார்’ என்று எழுதவேண்டும். தமிழ் அறிந்த சான்றோர் இப்படித்தான் எழுதுவர்.மேலே குறிப்பிட்ட மலேசியக் கவிஞர், தமிழ் அறிஞர் உயர்திரு செ. சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதுவதைப்  பாருங்கள் :

‘இதற்கு உரையாசிரியர் சிலர், ஐகாரம் சொல்லின் மூவிடத்தும் குறுகும்…’

தினமணி- தமிழ்மணி- மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: நடுவுவாங்கி இட்டெழுதுதல் (First Published : 28 Mar 2010 12:00:00 AM IST) என்னும் கட்டுரையில்  சென்னை திரு கே.என்.பாலகிருஷ்ணன் எழுதுகிறார் :
‘சங்ககால மன்னர், மன்னர் மகள் இருவரும் அஃதை என்று புலவர் ஒருவர் கூற மற்றொரு புலவர் “அகுதை’ எனக்குறிப்பார்'(http://www.dinamani.com/edition/story.aspx?artid=218209&SectionID=179&MainSectionID=179&SectionName=Tamil%20Mani&SEO=). தமிழ் கற்றவர்கள் இப்படித்தான் சரியாக எழுதுவார்கள்.

இப்படி எழுத வேண்டும் என்பதை அறியாதவர்கள்தாம் ‘சில உரையாசிரியர்’ என்றும் ‘ஒரு புலவர்’ என்றும் எழுதித் தம் அறியாமையைப் பறை சாற்றுவர்.அப்படி எழுதுவதுதான் சரி என்ற வீம்பு  வேறு. அறியாமை தவறு இல்லை ; அறிந்துகொள்ள முயலாமையே பெருந்தவறு. இதனை அறிந்து கொண்டவர்கள்  இனியாகிலும்  இத்தவற்றைக்  களைந்து எழுதுவீர்களா?

இதுவரை பார்த்ததைச் சுருக்கிச் சொன்னால், தமிழ் முறைமையில்

‘ஒரு’ ஓர்’ என்பன எண்ணுப் பெயர் அடைகள் ; அஃறிணையாக இருந்தால் பெயருக்கு முன்போ பின்போ வரலாம் ; உயர்திணையாக இருந்தால் பெயர்ச் சொல்லுக்குப் பின்பு வருதலே  தகும். ஆங்கிலத்தில் பெயர் அடைகள் (numerical adjectives/determiners) பெயருக்கு முன்னாடிதான் வரும். (Possessive case நீங்கலாக வரும்  ) இவற்றுக்குப் பால் பாகுபாடோ எண் பாகுபாடோ இல்லை. மாறாகப்  பிரஞ்சு, எசுபானியம்… போன்ற ஐரோப்பிய மொழிகள் பால், எண் பாகுபாடுகளை வலியுறுத்தும்.

இனி ஆங்கில முறைமையைப் பார்ப்போம் , அடுத்த பகுதியில்.
அதுவரை ? சற்றே இளைப்பாறுக!

அதே சமயம்,  நீங்கள் இன்னொன்று  செய்யலாமே!
படிக்கும் கதை,  கட்டுரையில் ‘ஒரு’ ‘ஓர்’ என்பன எப்படி வருகின்றன என்று பாருங்களேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *