அன்பினியவர்களே !

 

அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலிலே உங்களுடன் உரையாடுவதில்பெருமகிழ்வடைகிறேன். பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் எந்தவிதமாகவோ நிச்சயம் நடந்தேறும் ஒரு நிகழ்வாகும். ஆனால் எப்போது பிறக்கிறோம் என்பதும் எப்போது மடிகிறோம் என்பதும் நாம் திட்டமிட்டு நடப்பதல்ல. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் “வாழ்ந்தோமா?” என்பதுவே கேள்வி. என்ன இவன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறானே ! வாழ்க்கை என்று ஒன்று இருக்கும்போது அதை வாழ்ந்துதானே முடிக்கிறோம் எனும் கேள்வி எழுவது இயற்கையே ! வாழ்ந்தோமா? எனும் என் கேள்விக்குள் புதைந்திருப்பது ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல் மனதுக்குத் திருப்தியாக வாழ்ந்தோமா? என்பதுவே !

 

நமது மூதாதையர் வழியாக வந்த நாம் பல தலைமுறைகளைத் தாண்டி வந்துள்ளோம்.தலைமுறைக்குத் தலைமுறை வாழ்க்கை முறையில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.இம்மாற்றங்களின் தாக்கம் நாம் வாழும் முறையிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.இத்தாக்கங்களின் சில வாழ்வின் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கின்றன, சில வாழ்வின் முறைகளுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவைகளைத் தடுத்து நிறுத்துவது என்பது நமது கைகளில் இல்லை. பெரும்பான்மையாக இவை நம்மீது திணிக்கப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும். ஒரு தலைமுறை எடுக்கும் முடிவுகளின் தாக்கம் அவர்களைத் தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்துவது என்பது யதார்த்தமானது.

 

சுமார் 43 வருடங்களுக்கு முன்பாக பதின்ம வயதுகளின் எல்லையில் இங்கிலாந்துக்கு மாணவனாகப் புலம் பெயர்ந்த நான் எனது தாய், தந்தையரின் வாழ்க்கை முறையின் தாக்கத்தை எனது கலாச்சாரப் பரிமாணமாகச் சுமந்து கொண்டு இந்நாட்டுக்குள் கால் பதித்தேன்.அதைத்தொடர்ந்து வந்த அனுபவப்பதிவுகளும், வாழ்க்கைச் சவால்களும் பலமுறைகள் எனது கலாச்சாரப் பின்னணிக்கும், இந்நாட்டின் கலாச்சாரப் பின்னணிக்கும் இடையில் பல பனிப்போர்களை நிகழ்த்தியிருக்கின்றன. வாழ்க்கையை நோக்கிய ஒரு பரந்து பட்ட பார்வையை எனது பாதுகாப்பு வட்டத்தினை விட்டு வெளியே செலுத்தக்கூடிய ஒரு வாய்ப்பினை இங்கிலாந்து வாழ்க்கை நல்கியது. அன்றைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டினை இருவேறு நாடுகளின் கலாச்சாரப் பின்னணி எனும் சாளரத்தின் வழியாக நோக்கும் போது அவைகளுக்கிடையே அந்தந்த நாடுகளுக்கு எற்ற வகையில் அவர்களின் தலைமுறை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது என்பது நன்றாகப் புரிக்கிறது.

 

எதற்காக இந்த ஒரு ஆழமான அலசல் என்று எண்ணுகிறீர்களா ?

 

இன்றைய ஊடகங்களில் பரவலாக அடிபட்டுக் கொண்டும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டும் இருக்கும் ஒரு சிக்கலான விடயத்தை உங்களுடனான உரையாடலில் இங்கு முன்வைப்பதற்காக ஒரு பொதுவான அலசலுடன் மடலை ஆரம்பிக்கும் நோக்கமே அதற்குக் காரணம். இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்து மண்ணிலே பொருளாதாரச் சூழல் பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக “ப்ரெக்ஸிட்” எனும் அந்தச் சொல் பல பொருளாதார நிபுணர்களின் வயிற்றிலும், பல முன்னனி அரசியல் அவதானிகளின் வயிற்றிலும் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித் தகவலின் முடிவு நான் மேற்சொன்ன விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

இங்கிலாந்தின் 1940, 50 களில் பிறந்தவர்கள் தற்போது பெரும்பான்மையாக இங்கிலாந்தின் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கைத்தரம் திருப்திகரமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் இவர்களது காலத்தில் இவர்கள் எதிர்கொண்ட இவர்களுக்குச் சாதகமான பொருளாதாரச் சூழல். அத்துடன் அத்தகைய பொருளாதாரச் சூழலின் அடிப்படையில் இவர்கள் அப்போதிருந்தே தமது ஓய்வுகால வாழ்க்கைக்கான புரிதலின் அடிப்படையில் எடுத்துக் கொண்ட தனியார் ஓய்வூதியக் காப்புறுதியும் அதன் இன்றைய முதிர்ச்சியின் இலாபமுமாகும். இன்றைய இங்கிலாந்தில் வீடு வாங்குவது அதுவும் குறிப்பாக வேலை வாய்ப்புகள் அதிகம் நிறைந்த லண்டனும் அதனையொட்டிய தென்கிழக்கு பகுதிகளிலும் படு சிரமமான விடயமாகிறது. காரணம் வீட்டு விலைகள் கோடைகால வெப்பம் போல கிடு,கிடுவென உயர்ந்து கொண்டு செல்வதுதான்.அன்றைய சூழலில் ஒரு நடுத்தர ஊதியம் பெறும் ஒருவர் தனது ஊதியத்தின் அடிப்படையில் கிடைக்கும் வங்கிக் கடனின் மூலம் வாங்கக்கூடிய அளவில் வீட்டு விலைகள் இருந்தன. ஆனால் இன்றோ அது நிறைவேறமுடியாத கனவாக இருக்கிறது. இதற்குக் காரணம் பொருளாதாரத்தில் விரைவாக முன்னேறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரச் செழிப்பின் விளைவாக அப்பகுதிகளைச் சேர்ந்த பலர் போட்டி போட்டுக் கொண்டு லண்டனையும், அதனைச் சார்ந்த பகுதிகளிலும் வீடுகளை வாங்கி முதலீடு செய்வதும், வீட்டு விலையின் அதிகரிப்புக்கிணங்க இங்கிலாந்து நடுத்தர வர்க்கத்தினரின் ஊதியம் அதிகரிக்கப்படாததுமே என்று கூறப்படுகிறது.

 

இதற்குத் தீர்வாக அந்த ஆய்வு முன்வைத்த விடயமே இன்றைய முதியவர்களின் விசனத்துக்கும்,விவாதங்களின் முன்னெடுப்புக்கும் காரணமாகிறது. இன்றைய இருபதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் வாலிப சமுதாயம் தமக்கென ஒரு இருப்பிடத்தை வாங்கி தமது வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முகமாக இவர்களுக்கு இருப்பிடம் வாங்குவதற்கு உதவியாக 10000பவுண்ஸ் வரையில் அரசாங்கம் உதவிப்பணம் கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக அரசாங்கம் செலவிடும் பணத்தை இன்றைய ஓய்வு பெற்ற முதியவர்களில் வசதியாக வாழ்வோரிடத்தில் இருந்து கூடுதல் வரிப்பணமாக வசூலிக்க வேண்டும் என்றும் இவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.இது இன்றைய வயதானவர்கள் மத்தியில் ஒருவித அரசியல் அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்கிறது. இது பலமுனைக் கேள்விகளையும் கிளப்பி விட்டிருக்கிறது.

 

அன்றைய பொருளாதரச் சூழல் இன்று ஓய்வு பெற்று வாழ்பவர்களின் வாழ்வில் தமக்கென இருப்பிடம் வாங்குவதற்கு இலகுவாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அதை யாராவது இனாமாகக் கொடுத்தார்களா? தமது வாழ்வில் எத்தனையோ செளகரியங்களைத் தியாகம் செய்துதான் தமது வாழ்வை அவர்கள் செப்பனிட்டார்கள். ஆனால் இன்றைய தலைமுறையோ இன்று விதை விதைத்து நாளை மழை பொழிந்து நாளை மறுநாள் அறுவடை செய்ய வேண்டும் எனும் மனப்பான்மையோடு வாழ்வது மட்டுமின்றி தமது வாழ்வில் எதையும் தியாகம் செய்யாமல் தமது மனம் போன போக்கில் தாராளமாகச் செலவு செய்து கொண்டு தமது தாய் தந்தையர் இன்று வாழ்வது போல் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இவர்களின் இந்தத் தான்தோன்றித்தனமான வாழ்வுக்கு நம்மையா தண்டிக்க வேண்டும் என்கிறது பல முதியோர்களின் அமைப்புகள். இந்த விடயத்தில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் நீங்கள் எண்ணுகிறீர்கள். நாம் எல்லோரும் ஊதாரித்தனமாக வாழவில்லை எவ்வளவோ சிக்கனமாக, அவதானமாக வாழ்ந்தும் வீடு வாங்கும் நிலையை எட்ட முடியாதிருக்கிறது நமக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்னும் வாதம் நியாயமானதே என்கிறது பல இளையோருக்கான அமைப்புகள். இல்லை நாம் மிகவும் கடினமாக உழைத்து நமது இலட்சியத்தை அடைவதுதான் முறை இதற்காக நமக்கு முந்தைய தலைமுறையினரை வருத்துவது முறையல்ல என வாதிடும் இளையோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

 

இன்றைய இங்கிலாந்து கன்சர்வேடிவ் அரசாங்கத்தை அரசுக் கட்டிலில் அமர்த்தியதற்கு பல முதிய தலைமுறையின் வாக்குகளே காரணம் என்பது அரசியலை நன்றாக அவதானித்து வரும் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தமக்குச் சாதகமான வாக்கு வங்கியை முற்றிலும் நிறைந்த தண்ணீர்ப்பானையை தாகத்தில் இருக்கும் ஒருவன் ஒற்றைக்கல்லால் குறிவைத்து உடைப்பது போல் இவ்வரசு செயற்படுமா? இல்லை மேற்புறம் சத்தும் அடியில் சக்கையுமாக இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரன்டிய வைத்து சமமாக கலக்கி விடுவதைப் போல ஒரு அதிரடி திட்டத்தை முன்னெடுத்து செயற்படப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

ஓ ! இளைய தலைமுறையக் கடந்து நானும் ஓய்வுபெற்றோர் எனும் முதிய தலைமுறையின் வாயிலுக்குள் நுழைந்து விட்டேனோ ?

 

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 

  

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *