-மேகலா இராமமூர்த்தி

அறத்தோடு வாழ்வதில்தான் மனித வாழ்வு சிறக்கின்றது; மன நிறைவும் பிறக்கின்றது. ஆனால், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களையும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதத்தையும் மனிதன் அறிந்துகொள்வது யாங்ஙனம்?

தன் முன்னோரிடமும் மூத்தோரிடமும் கேட்டு அவன் அவற்றை அறிந்துகொள்ளலாம். எனினும், அவர்கள் தாமறிந்தவற்றை மட்டுமே அவனுக்கு அறியத்தர முடியும். ஆகவே, அறம் குறித்தும் இன்னபிற வாழ்வியல் விழுமியங்கள் குறித்தும் ஒருவன் கசடறக் கற்றுத்தெளியவும் தேரவும் வேண்டுமெனில் அதற்கு அறநூல்களே சிறந்த துணையாவன.

அத்தகு அறநூல்களுக்கு அழகுதமிழில் பஞ்சமில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை மானுட அறங்களை வகுத்தும் தொகுத்தும் செம்மையாய்ச் செப்புகின்றன. அவற்றில் முதன்மையானவை திருக்குறளும், நாலடியாரும் ஆகும்.

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” எனும் சொலவடையை நாமறிவோம். இங்கே நாலு என்று குறிக்கப்படுவது நாலடியார்; இரண்டு என்று குறிக்கப்படுவது திருக்குறள். இவ்விரு நூல்களையும் ஒருவன் கற்றால் சொல்லுறுதி பெறுவதோடு மட்டுமின்றி அறவாழ்விலும் வழாது நிற்பான் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

உலகப்பொதுமறை எனும் உயர்வோடு ஞாலம்போற்ற வலம் வரும் திருக்குறளோடு ஒப்பவைத்து எண்ணத்தக்கது நாலடி. நான்கு அடிகளால் அமைந்த வெண்பாக்களால் இயன்ற இந்நூல் ’ஆர்’ எனும் சிறப்பு விகுதிபெற்று ’நாலடியார்’ என்று நவிலப்படுகின்றது.

திருக்குறள், சூத்திரம் போன்று சுருங்க உரைக்கும் பொருளை அழகிய உவமைகளோடும் தக்க உதாரணங்களோடும் கற்போர் உளங்கொளும் வகையில் சற்றே விரித்துரைக்கின்றது நாலடியார்.

நானூறு பாடல்களைக் கொண்டிருப்பதால் ’நாலடி நானூறு’ எனும் பெயர்பெற்ற இந்நூலுக்கு ’வேளாண் வேதம்’ எனும் மற்றொரு பெயரும் உண்டு என்பதை ஒரு தனிப்பாடல் வாயிலாய் அறிகின்றோம்.

வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
எல்லாரும் கூடி எடுத்துரைத்த  – சொல்லாய்ந்த
நாலடி நானூறும் நன்கினிதா என்மனத்தே
சீலமுடன் நிற்க தெளிந்து.

ஆயினும் இந்நூலில் நுவலப்படும் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானவை என்று கொள்வது பொருத்தமற்றது  என்பதனை இதனைக் கற்றோர் நன்குணர்வர்.

சமண முனிவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாய்க் கருதப்படுகின்ற இந்நூலும் திருக்குறளைப் போலவே அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என முப்பகுப்பாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்குப் பதுமனார் எனும் புலவர் பெருந்தகை உரைசெய்தார் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அவ்வுரை இப்போது கிடைத்திலது.

சொல்நயமும் பொருட்செறிவும் மிக்க நாலடியாரில் இடம்பெற்றுள்ள சுவையான பாடல்கள் சிலவற்றைச் சிந்திப்பதை இக்கட்டுரைத்தொடர் தன் இலக்காய்க் கொண்டிருக்கின்றது.

இனி நூலுக்குள் நுழைவோம்!

அறத்துப்பாலின் முதல் அதிகாரமான ’செல்வம் நிலையாமை’யில் அமைந்துள்ள பாடல்கள் செல்வத்தின் நிலையில்லாத் தன்மையையும், செல்வத்தை அடைந்தோர் செய்யவேண்டிய கடமைகளையும் தெளிவுறுத்துகின்றன.

குற்றமற்ற சிறந்த செல்வம் ஒருவனுக்கு வாய்த்தேபோதே, பகடு வயலின்கண் நடந்ததனால்(உழுததனால்) கிடைத்த உணவை, அவன் விருந்தினரோடும் (புதியவர்), தமரோடும் (சுற்றம், நட்பு) சேர்ந்துண்ணல் வேண்டும்.

ஏனெனில் ஓரிடத்தில் நிலைத்து நில்லாது சகடக்கால்போல் மாறிமாறிப் புரளும் இயல்புடையது செல்வம். ஆதலால் அச்செல்வத்தின் பயனை முழுமையாய்த் துய்க்கவேண்டுமானால் அது கையத்தே இருக்கும்போதே விரைந்து செயலாற்ற வேண்டும் என்கிறது இப்பாட்டு.

துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.  
(நாலடி – 2)

பொருளை ஈட்டுவது பெரிதன்று! அதனை நல்வழியில் ஈட்டுவதே மாணப் பெரிது. அதைத்தான் ’துகள்தீர் பெருஞ்செல்வம்’ எனும் தொடர் ஈண்டுச் சுட்டிநிற்கின்றது.

பகடு என்பது எருதைக் குறிக்கும். எருதில்லையேல் உழவில்லை என்ற நிலையிருந்த காலமது! உழவனின் உற்ற நண்பனாய்த் திகழ்ந்த எருதுகள், அவனுக்கு நெல்லை விளைவித்துக் கொடுத்துவிட்டுத் தாம் (அதன் சக்கையான) வைக்கோலைத் தின்று வாழ்பவை. எருதின் இந்த அருங்குணத்தை, ’உழுத நோன்பகடு அழிதின் றாங்கு’ என்று புகழ்கின்றது புறநானூறு.

தம்மிடம் இருப்பதைப் பகுத்துண்ணும் அறப்பண்பை வள்ளுவமும் விதந்தோதுவது இங்கே நினையற்பாலது.

”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (322)

காலையில் தோன்றும் பகலவனை, பொழுதை அளக்கும் நாழி எனும் கருவியாய்க் கொண்டு, மாந்தரின் வாணாளைத் தானியத்தை உண்பதுபோல் ஒவ்வொரு நாளும் அளந்துண்ணும் இயல்புடையது கூற்றம். ஆதலால், வையத்து மாந்தர் எவ்வளவு அறச்செயல்களைச் செய்ய முடியுமோ அவ்வளவையும் விரைந்துசெய்து அருளுடையராதல் வேண்டும். அவ்வாறு அறஞ்செய்யாது மரம்போல் வாழ்வார் பிறந்தும் பிறவாதாரே என்கிறது மற்றொரு நாலடியார் பாடல்.

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்.
(நாலடி – 7)

இதையே,

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாரும் வைக்கப் படும்
என்று வேறுவார்த்தைகளில் நறுக்கென்று சொன்னார் செந்நாப்போதார்.

”நாளைச் செய்குவம் அறமெனில் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” என்று அறம் செய்யவேண்டியதன் அவசியத்தை மட்டுமல்லாது அவசரத்தையும் விளக்கிப் போந்தது நெஞ்சையள்ளும் சிலம்பு.

”செல்வத்துப் பயனே ஈதல்” என்று ஆன்றோரும் சான்றோரும் திரும்பத் திரும்பச் சொன்னபோதிலும்கூடச் சிலர் எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டார்கள்; சரி…! மற்றவர்களுக்குத்தான் எதுவும் கொடுப்பதில்லை; தன்னளவிலாவது தாராளமாக உண்டும் உடுத்தும் வாழ்கின்றனரா என்று பார்த்தால் அதுவும் செய்யமாட்டார்கள்.

இத்தகு மனிதர்கள் வருந்தித் தொகுத்த செல்வத்தால் ஆய பயன்தான் என்ன எனும் கேள்விக்குத் தக்கதோர் பதிலிறுக்கின்றது பின்வரும் பாடல்.

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர் வான்தோய் மலைநாட
உய்த்தீட்டும் தேனீக் கரி.
(நாலடி – 10)

தேனீக்கள் மிகுந்த சிரமப்பட்டுத் தேனைச் சேகரிக்கின்றன. ஆனால் அத்தேனால் அவற்றுக்கு எவ்விதப் பயனும் விளைவதில்லை. மாறாக, மனிதர்கள் அந்தத் தேனிறாலை எவ்வித உழைப்புமின்றித் தமதாக்கிக் கொண்டுவிடுகின்றார்கள். அதுபோல், பிறர்க்கும் ஈயாது தானும் துய்க்காது வாழ்வோனும் தன் செல்வத்தைப் பிறரிடம் இழப்பான்; அதற்கு இத்தேனீக்களே தக்க சான்று என்கிறது இப்பாடல்.

ஈத்துவக்கும் இன்பம் அறிந்தோரே வாழ்வைப் பொருளோடு வாழ்வோர் ஆவர். ஏனையோர் வாழ்வை நன்முறையில் வாழத்தெரியாது செல்வத்தை வைத்திழக்கும் வன்கணவரே.

[தொடரும்]

*****

கட்டுரைக்கு உதவியவை:

நாலடியார் பாடலும் உரையும் – திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை.
திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 1

 1. வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
  வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
  வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
  வைகலை வைத்து உணராதார்.

  நாலடியாரின் கூற்றுப்படி, நாட்கள் தினமும் புதிது புதிதாக வந்தாலும், நம் வாழ்நாளில் அது ஒவ்வொரு நாளாகக் குறைகிறது என்பதைக் கவனியுங்கள் என்கிறது நீதி போதிக்கின்ற நாலடியார்.

  தாங்கள் புதிய தொடராக ஆரம்பித்திருக்கும், “நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி” என்ற தொடரை படிப்பதன் மூலம், நமக்குக் கிடைக்கின்ற நாளும் நல்லபடியே வளரட்டும், நமது இலக்கிய அறிவும் கூடவே பெருகட்டும். கழிகின்ற நாட்களை தரமான இலக்கிய அறிவைப் பெருக்கிக் கொள்வதில் செலவு செய்வோம்.

  “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்பதற்கிணங்க, நாலடியாரைப் பற்றி, மேன்மேலும் புதிய கோணத்தில் நீதிபோதனைகளை அறிந்து கொள்ளலாம் என நம்புகிறேன்.

  இத் தொடருக்கு…தொடரும் என் வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  பெருவை பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *