நீரின்றி எவ்வாறு உலக வாழ்க்கை அமையாதோ அவ்வமே ஞாயிறுக் கீற்று மண்ணில் விழாமல் உயிர்ப்பு நிகழாது. புல், பூண்டு, பயிர், பச்சை, பாசி என யாவும் கதிரொளியால் உயிர்க்கின்றன. இந்த கதிரொளியான எல்லிக்கீற்று மண்ணில் விழாவிட்டால்.பயிர், பச்சை, பாசிகளை நம்பி வாழும் உயிர்கள் எத்தனை பெருமை மிக்கதானாலும் மாண்டு போகும். நீரும் ஒளியும் உயிர் நிலைப்பிற்கும் பெருக்கத்திற்கும் இன்றியமையாதன.

கோள்கள் கதிரோனைச் சுற்றிவருவதால் இக்கோள்களின் தாக்குறுத்தம் தம் எதிர்கால வாழ்வை பாதிப்படைய செய்யும் என்பதால் அதைத் தவிர்க்க. இந்த உருள் கோள்களை மனித வடிவில் வடித்து அவற்றுக்கு கழுவாய்ப் பூசனை ஆற்றுகின்றனர் மக்கள். பூசனையால் அந்த தாக்குறுத்தத்தில் இருந்து தப்பலாம் என நம்புகின்றனர், நம்புவிக்கப்படுகின்றனர்

தஞ்சை திருவாரூர் மாவட்ட கோவில்கள் பலவற்றில் கோள்களுக்கான கழுவாய் (பரிகார) பூசனைகள் ஆற்றப்படுகின்றன. இந்த நம்பிக்கையால் நாடு முழுவதும் இருந்து அக்கோவில்கள் திரளான மக்களை நாள்தோறும் ஈர்க்கின்றன. அதனால் அக்கோவில்கள் வளமாக, செழிப்பாக உள்ளன.

கொசத்தலை ஆறு சென்னைக்கு அருகே சோழவரத்தைக் கடந்த பின் கொசத்தலை ஆற்றில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இஞ் ஞாயிறு என்னும் கிராமத் திருத்தலம் அமைந்து உள்ளது. கொசத்தலை ஆற்றில் இறுதியாக அமைந்த பழமையான கோவில் இந்த ஞாயிறு கோவிலே. இக்கால் வேயப்பட்டுள்ள வெளி வட்டச் சுற்று சாலை (outer ring road) இக்கோவிலை எளிதில் விரைந்து அடைய உதவுகிறது. செங்குன்றம் – மீஞ்சூர் வரை நீளும் இச்சாலையில் அருமந்தை கூட்டு சாலை அமைந்த இடத்தில வடக்காக 3 கிலோமீட்டர் சென்றால் இக்கோவிலை அடையலாம். செங்குன்றம் வழி செல்லாமல் மாதவரம் > வடபெரும்பாக்கம் > விளாங்காடுபாக்கம் > பெருங்காவூர் > அருமந்தை கூட்டுச் சாலை வழியாக செல்வது தொலைவைக் குறைக்கும்.​

வழிநெடுகலும் பச்சைப் பசுமை போர்த்திய வயல்களைக் கடந்தால் ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேசுவரர் கோவிலை அடையலாம். அண்மையில் புதுப்பிக்கப்பட்டு பொலிவுடன் காணப்படும் கோவில் இது. ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கழுவாய் தேடி வழிபடுகிறார்கள். இத்தனைக்கும் இங்கு கதிரோனுக்கு என்று தனி சன்னதி கூட இல்லை. ஈசுவரருக்கு தென்கிழக்கு மூலையில் கதிரவன் புஷ்பரதேசுவரரை நோக்கி நின்ற நிலையில் இரண்டடி சிலையாகக் காட்சிப்படுகிறார்.


அம்மன் சன்னதி முதல் இன்றுள்ள தெற்கு வாயில் வரையான தலைவாயில் நோக்கிய தூண் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. மண்டபம் கட்டியவர் நுழைவு வாயிலில் தனது உருவத்தை சிலையாக வடித்து தன்பெயரை தெலுங்கில் பொறித்துள்ளார். ஆக நாயக்கர் ஆட்சிக்கு முன் மண்டபம் கட்டியிருக்கவில்லை என்பது புலனாகிறது. சன்னதியை விட்டு வெளியே வரும் போது இருதூண் மண்டபம் உள்ளது. அவற்றில் எதிர் எதிராக மராத்திய அதிகாரிகளின் (அண்ணன் தம்பிகள் போலும்) புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலைப்பாகை அவர்கள் மராத்தியர் என்று அடையாளப்படுத்துகிறது. அவர்களுக்காகவே கட்டப்பட்ட இருதூண் மண்டபம் என்று தெரிகிறது. ஏற்கெனவே திருக்கழுக்குன்றம், திருவொற்றியூர் கோவில்களில் மராத்திய அதிகாரிகளின் சிற்பம் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளதை நான் குறிப்பிட்டுள்ளேன். இது குறுகிய கால மராத்திய ஆட்சியில் வடதமிழ்நாட்டில் சைவம் புத்தெழுச்சி பெற்றதைக் காட்டுகிறது. கோவிலில் சுந்தரரை மணந்த சங்கிலி நாச்சியாருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது, அவர் இவ்வூரினர் என்பதால்.

​​ ​

கோவில் கருவறையின் மேற்கு, தெற்கு புறச்சுவரில் சில தெளிவில்லாத கல்வெட்டுகள் தேய்ந்த நிலையில் காணக்கிடக்கின்றன. ஆனால் சன்னதியை விட்டு வெளியே வரும் போது கிழக்கு வலப்புறத்தில் மண்டபத்தை ஒட்டிய கருங்கல் சுவற்றில் நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. இது கோவிலின் பழமைக்கு சான்றாக உள்ளது என்றாலும் கல்வெட்டு ஆழமாக வெட்டப்படாததால் அல்லது தேய்த்து மெறுகேற்றியதால் எழுத்துகளை படத்தில் படிக்க முடியவில்லை. எனவே மைசூர் நடுவண் தொல்லியல் துறையிடம் இருந்து மைப்படி வாங்கப்பட்டு அதன் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. தென்புற கல்வெட்டு மிக தேய்ந்துள்ளதால் அப்போதே ASI மைப்படி எடுக்கவில்லை. கருவறையின் மேற்கு குமுதம் கிழக்கு சுவரில் உள்ள கல்வெட்டுகளை மட்டும் படியெடுத்துள்ளனர். ஜடவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து முடிவுறாத கல்வெட்டுப் பலகை ஒன்று இருந்துள்ளது. இப்போது இல்லை என்றாலும் இக்கோவில் அவன் காலத்தது என்பது தெளிவு.

படம்

1. தலைவாயில்.

2. அருள்பாலிக்கும் கதிரவத் தேவன்.

3. 15 ஆம் நூற்றாண்டில் தலைவாயிலை நோக்கி தூண் மண்டபம் கட்டியவர்.

4. மராட்டிய அதிகாரி சிலை.

5. மராட்டிய அதிகாரியின் உடன்பிறந்தவர்.

6. சங்கிலி நாச்சியார் சன்னதி.​

7. திருவோடு மரம்.

8. கண்கவரும் தாமரைக் குளம்.

சங்கிலியார் சன்னதி

 

திருவோடு மரம்

தாமரைக்குளம்


9. ஒயிலாக அமர்ந்த பெண் இன்னும் சிலையாகாமல் ஓவியமாய் நின்றுவிட்டாள்,என்றாலும் எழில் நங்கை தான். ஏன்இப்படி? சிற்பி கத்துக்குட்டியா? அல்லது மண்டபம் அமைத்த தெலுங்கர் குறைந்த கூலி கொடுத்தாரா? தெரியவில்லை. பல தூண் சிற்பங்கள் ஓவியமாகவே நின்றுவிட்டன இங்கு.

10. கோவில் விமானம்.

11.கொடிமர நோக்கு.​ ASI 1916 ஆம் ஆண்டு அறிக்கையில் பொன்னேரி வட்டம் ஞாயிறு கிராமம் புஸ்பரதேசுவரர் கோயில் கல்வெட்டுகள் பற்றி

12 . கல்வெட்டின் மைப்படியில் இருப்பது கிழக்கு சுவர் கல்வெட்டு.

13 & 14 கிழக்கு சுவர் கல்வெட்டின் இரு பாதி ஒளிப்படங்கள் அடுத்தடுத்து


கொசத்தலை ஆறு ஞாயிறை அடுத்து மீஞ்சூர், விச்சூர், மணலி புதுநகர் கடந்து எண்ணூர் உப்பங்கழியில் கலக்கிறது.

ஞாயிறு கல்வெட்டு பாடம் / விளக்கம் > திரு. சுந்தரம் (கோவை)

முதல் படம்: இரண்டாவது படம்

1 ………ஸ்ரீமஹாமண்டலேசுர ராஜாதிராஜ ராஜ…………….. வீரப்ரதாப பூர்வதெக்ஷிண………………
2 ய நம ………..ஆளாநின்ற ஸ்ரீ வீர அச்சுந்தை ய தேவ ய தேவ ………….ராஜ்யம் பண்ணி அருளாநின்ற
3 மஹாராயர் …………செல்லாநின்ற விசய வருஷம் மாசி மாதம் சிவராத்ரி புண்ணியகால………………….
4 னமந ய …..குமாரன் நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஸ நம் ……………………..ந்தன்ம..
5 ப…ம……க்குள கிறாமம் பூதேரி விளாகம் நாயற்று பூ…. ………………..அங்கரங்க வைபோகத்துக்கும் சுவாமி
6 தேவ ம. ….ற்கு புண்ணியமாக தந்தனவோலு வொந்நப்ப நாய க்கர் குமாரன் நாகம நாயக்கர்…….கிறாமம் பூதேரி விளாகம்
7 முதல் ……………வயிபவமும் நடத்த கடவதாகவும் யிந்த தறுமத்துக்கு யாதொருத்தர் அஹிதம் பண்ணினார்கள்
8 கெங்கை கரயிலே கோஹத்தி பிறம்ம ஹத்தி பண்ணின பாவத் திலே போக கடவனாகவும்

விளக்கம்:

கிராம தர்ம சாசனம் என்று கல்வெட்டு குறிக்கிறது. ஒரு கிராமத்தின் ஒரு பகுதியான பூதேரி விளாகம் என்னும் பகுதி கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படுகிறது. கொடையாளி நாகம நாயக்கர் என்பது “நாகம நாயக்கர் சமற்பித்த கிறாம த்ர்ம்ம சாஸனம்” என்ற கல்வெட்டுத்தொடரால் அறிந்துகொள்ள இயலுகிறது. கல்வெட்டின் தொடக்கத்தில், ஆட்சியிலிருக்கும் விஜய நகர் மன்னர் பற்றிய குறிப்பு தெளிவாயில்லாதது கொண்டு அரசர் பெயரை உறுதிப்படுத்த இயலவில்லை.. “அச்சுந்தை…ய தேவ” என்பது யாரைக் குறிக்கிறதுஎனத் தெரியவில்லை. அரசர் பெயரை முன்னிறுத்தி அவருக்குப் புண்ணியமாகக் கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடையாளி தந்தனவோலு என்னும் ஊரினர் என்பதாகப் பொருள் கொள்ளலாம். ஆந்திரத்தில், பட்டிபுரோலு என ஓர் ஊர் உண்டு. அது போன்றஓசையமைப்பில் இந்த தந்தனவோலு ஊர் அமைந்திருக்கலாம். கொடையாளியின் பெயர் நாகம நாயக்கர் என்றாலும், அவருடைய தந்தை பெயர் வொந்நப்ப நாயக்கர் என்பதை பொன்னப்ப நாயக்கர் எனவும் படிக்க வாய்ப்புள்ளது. “வொ” எழுத்து கிரந்தமாயின் பொந்நப்ப நாயக்கர் எனப் படிக்கலாம். கொடை கோயிலில் அங்கரங்க வைபோகத்துக்கும், சுவாமியின் (பூசைக்கும்?) மற்றும் சிலவைபவத்துக்கும் அளிக்கப்படுகிறது. அங்கரங்கவைபோகம் என்பதற்கு விக்கிரக அலங்காரம், பூசை, படைப்பு முதலிய அனைத்துத் தேவைகள் என்று கல்வெட்டுச் சொல்லகராதி கூறுகிறது. 7-ஆம் வரியில் வருகின்ற வயிபவம், வைபவம் ஆகலாம். இச்சொல் கல்வெட்டுச் சொல்லகராதியில் காணப்படவில்லை. மாதம் ஒரு முறை நடத்தப்பெறும் சில குறிப்பிட்ட நிகழ்வாயிருக்கலாம். கல்வெட்டின் இறுதியில், கல்வெட்டு மரபுப்படி (ஓம்படைக்கிளவி), மேற்படி தர்மத்துக்கு கேடு செய்பவர்கள் கங்கைக் கரையில்,
பசுவையும், பிராமணரையும் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொருவர் தந்த பாடம்:

வரி 1. ஸ்வஸ்தி ஸ்ரீ மஹா மண்தலேசுர ராஜாயிராஜ ராஜ வீரபிரதாப பூர்வதெக்ஷிண உத்

வரி 2. த்த ஸமுத்ராதிபதி ஆளா நின்ற ஸ்ரீ வீர அச்சுதைய தேவ மகாராயர் பிரிதிவிராஜ்யம் பண்ணி அருளா நின்ற — –

வரி 3. சூசளசயஅ (1448) த[ன்] மேல் செல்லா நின்ற விசய வருஷ மாசி மாதம் சிவராதிரி புண்ணிய காலத்திலே நா[ய]ற்று பூதே{ரி] அப்ப[னுக்]கு தந்தன்ம – – – – –

வரி 4. ன்ம நாயக்கர் குமா[ரர்] நாகமநாயக்கர் சமற்பித்த கிறாம தர்ம்ம சாஷநம் அச்சுதராய மஹாரா[யர்] நாயக்க- – த்தனமாக பண்ணி – – –

வரி 5. – – க்கு – – ள கிறாமம் பூதேரி வளாகம் நாயற்று பூதேரி அப்பற்கு அ – – – தைக்கும் அங்கரங்க வைபோகத்துக்கு[ம்]

வரி 6. தேவ மஹாராயற்கு புண்ணியமாக கந்தனவோலு பொந்நப்ப நாயக்கர் குமாரர் நாகம நாயக்கர் விட்ட கிறாமம் பூதேரி விளாகம். இந்த கிறாமத்தி – – –

வரி 7. ட முதல் பூசையும் அங்கரங்க வயிபவமும் நடத்த கடவதாகவும் இந்த தருமத்து[க்கு] யாதொருத்தர் அஹிதம் பண்ணிநார்கள்

வரி 8. [கங்]கை கரையிலே கோ ஹத்தி பிரம்ம ஹத்தி பண்ணின பாவத்திலே போவானாகவும்

கட்டுரையாளர் பின் குறிப்பு:

கல்வெட்டில் இடம் பெறும் நாகம நாயக்கர் என்பவர் இன்று கர்னூல் என மருவிவிட்ட அன்றைய கந்தெனவோலுவை வாழிடமாகக் கொண்ட பொன்னப்ப நாயக்கருடைய மகன் ஆவார். இவர் புண்ணியம் கருதி ஞாயிற்று கிராமத்தில் கோவில் கொண்ட பூதேரி அப்பனான புஷ்பரதேசுவரருக்கு (பூந்தேர் = புஷ்பரதம்) தன்னை நாயக்கனாக ஆக்கியதற்கோ அல்லது அச்சுதராயர் அரசராக பொறுப்பேற்றதற்கோ கொடையாக தந்த கல்வெட்டு ஆவணம் யாதெனில் “பூத்தேரி அப்பன் கோவிலில் முதல் பூசைக்கும் விழாக்காலத்தில் தெய்வத்திருமேனிக்கு அலங்காரம் செய்யவும் ஒரு கிராமத்தை தந்தார்” என்பதே. இந்த கிராமக் கொடையை 1533 ல் நடக்கின்ற விஜய வருடம் மாசி மாதம் சிவராத்திரி நன்னாளில் வழங்குகிறார். ஆனால் 1448 உடன் சக ஆண்டு 78 ஐ சேர்த்தால் 1526 என்ற ஆண்டில் வந்து நிற்கிறது. அப்போது கிருஷ்ண தேவராயர் விஜயநகர அரசை ஆண்டு கொண்டிருக்கிறார். அவரது தம்பி அச்சுதராயர் அப்போது அரச பொறுப்பில் இல்லை என்பது காலக்குறிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளதை காட்டுகிறது. இந்த கொடைக்கு யாரொருவர் கேடு (அஹிதம்) செய்கின்றானோ அவன் கங்கைக் கரையில் பசுக்கொலையும் பிராமணக்கொலையும் புரிந்த பாவத்தை அடைவான் என்று கல்வெட்டு முடிவுறுகிறது.

தமிழ்ச் சொல்லை அகற்றி சாசனம், அஹிதம், ஹத்தி ஆகிய சமற்கிருத சொற்கள் இடம்பெற்றுள்ளன. பூந்தேர் இன்னும் பிற்காலத்தில் புஷ்பரதம் என்றாகியுள்ளது. .

இத்தலம் பற்றிய செய்தி தரும் பிற தரவுகள்:

http://templesoftamilnadu.co.in/gnayiru-gramam-suryan-sthalam/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *