முனைவர் இரா.முரளி கிருட்டிணன்
உதவிப் பேராசிரியர்,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி-02

புறப்படு
பூமிப் பந்தின்
முதல் புள்ளியிலிருந்து
ஆகாயம் நோக்கி…

இடையூறுகளை எதிர்
இடைஞ்சல்களை அகற்று
தடைகளைத் தகர்த்தெறி

வீறுகொண்டு எழு
உன்
ஒவ்வோர் அசைவும்
முன்னேற்றமாய் இருக்கட்டும்
பறவையின் சிறகுபோல…

எதிர்நீச்சல் போடு
இறந்த மீன்கள்தான்
மிதந்துசெல்லும்
எட்டி உதை – உன்
பூப்பாதம் பட்டு
பொசுங்கிப் போகட்டும்
பொய்மைகள்…

நிமிர்ந்து நட – உன்
காலடி பட்டு
சாதிக் கண்ணாடிகள்
தூள் தூளாகட்டும்…

மதம் என்பது
யானைக்குத்தான்
மனிதனுக்கில்லை

போராடு …
கற்பி…
கட்டளையிடுபவனை
நெட்டி முறி
அன்பு செய்பவனை
அரவணை

சாதியின் பெயர்
சொல்லுபவனிடம் – நான்
விந்துக்குப் பிறந்தவன்
என்று சொல்…

செயல் வீரனுக்குக்
கடிவாளம் தேவையில்லை

அடங்க மறுக்கும்
காளைக்கு
மூக்கணாங்கயிறாய்
மதம்பிடித்த யானைக்கு
அங்குசமாய்
இரு…

நீ
நினைத்தால்
நிலவு உன் காலடியில்
படுத்தால் நிலவு
வான்வெளியில்…
புறப்படு…….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *