Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

சிறுவர் பாடல்களில் மருத்துவச் செய்திகள்

ஜே.அனிற்றா ஜெபராணி

ஸ்காட் கிறித்தவக் கல்லூரி ,

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

 

நாட்டுப்புற மருத்துவம்:- 

 

இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை மூலிகை மருத்துவம் எனப்படுகிறது. இம்மருத்துவ முறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ அதேபோல அவைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களுக்கு மருந்துகளும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லாப் பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படைக் கருத்தாகும்.

நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால், நினைவாற்றல் அபாரமாக இருக்கும். சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை வரலாறு மூலம் அறிய இயலும். பழங்கள் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்க முடியும். மேலும் புற்றுநோய், இருதய நோய், மறதி, மாரடைப்பு போன்றவை வராமலும் தடுக்கலாம். அத்தோடு மன அழுத்தம் நீங்கும்.

ஆரோக்கியமான உணவிற்குக் காய்கறிகள் சேர்க்கப்படுதல் நல்லது. அப்படிச் செய்வதால் இதய நோய்கள் வராது. இதில் இலை வகை, பூக்கள் வகை, வேர்வகை எனப் பலவகைகள் உண்டு. மனிதனின் உண்மைச் செல்வம் உடலும் உயிருமே ஆகும். நாம்வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையினை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மிகமிக இன்றியமையாதது உடல்நலம் ஆகும். உண்ணும் உணவில் எடுத்துக் கொள்ளும் அக்கறைதான் நோய் நொடியில்லாமல் வாழ வழிவகுக்கும்.

மூலிகைச் செடி 

உலக அளவில் இந்தியாவில்தான் அதிக மூலிகைகள் உள்ளன. மேலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்ட செடிகள் மனிதனுக்கு பயனளிக்கிறது. மேலும் அனைத்துத் தாவரங்களிலும் ஏதாவது ஒரு வகை மருத்துவ குணம் உள்ளது என்பதை,

”மருத்துவப் பயன்கள் இல்லாத
மரம் செடி இல்லையே
உயிர்களுக்காய் வளர்ந்தே” என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

கீரை

உடலுக்குக் குளிர்ச்சியையும், சத்துக்களையும் அளிக்கும் கீரையினைப் பற்றிப் பின்வரும் பாடல் உள்ளது. மேலும் கீரைகள் சிறந்த மூலிகைகளாகவும் உள்ளன.

கீரை நல்ல கீரை
கிடைக்கும் எங்கும் கீரை
பேரைச் சொன்னால் போதும்
பெருமை தெரியும் கீரை

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை மருத்துவப் பொக்கிஷம் என்றழைக்கப்படும்; எண்ணற்ற வியாதிகளுக்கு இது மருந்து. வாரம் இருமுறை இதனைச் சாப்பிட்டால் உடல்சூடு தணியும். முடி உதிர்வதை தடுக்கும். தோல் நோயினை தடுக்கும். முடி நீண்டு வளரும். இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து கணிசமாக உயரும். அதோடு உடலுக்கு நல்ல வலிமையினைக் கொடுக்கும். மேலும் சிறுநீரகம் பலப்படும் கோழை அகற்றும். பல் வலிமை அடையும். வயிற்றுப்புண், வாய்ப்புண்ணுக்கு உகந்த மருந்து. காய்ச்சல் மூட்டுவலியினையும் போக்கவல்லது. இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். இரத்த விருத்திக்கும் நல்ல உணவு.

கீரை கீரை கீரை
முருங்கை இலை கீரை
முடி வளர உதவும்
மருத்துவ குணம் கீரை
உணவில் சேர்த்து உண்பீர்
நோயின்றி வாழ்வீர்

பழங்கள்: 

நாம் சாப்பிடும் உணவே நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை சாப்பிடுவதால் புற்றுநோய், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், இதய நோய்கள் போன்றவை நெருங்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிவப்பு வண்ண தக்காளி/சிரிக்கும் நல்ல பப்பாளி
தினமும் தின்ன ஆப்பிள்/இரவில் உண்ண வாழை
திராட்சை முந்திரி மா பலா/மாதுளை கொய்யா சப்போட்டா
நாள்தோறும் இவற்றைச் சாப்பிட்டா/எல்லா நோய்க்கும் டாட்டா

நோயின்றி வாழ பழங்களை தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என இப்பாடல் வலியுறுத்துகிறது.

பப்பாளி 

இயற்கையின் கொடை பப்பாளி. வீட்டின் பக்கம் தோட்டம் போன்ற சாதாரண இடங்களிலும் வளரக்கூடியது. இதில் பல நன்மைகள் உள்ளன. மருத்துவ குணங்கள் நிறைந்த பழம். இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உள்ளன. இது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். மிகுந்த செரிமானத்துக்கு ஏற்றது. தோலில் ஏற்படும் குறைபாடுகளைக் களையவல்லது. கண் குறைபாடுகளை நீக்கும். கேன்சர் வராமல் தடுக்கும். எல்லாப் பழங்களை விட விலையும் குறைவு. எளிதாக கிடைக்கக் கூடியது.

”பப்பாளி பப்பாளி
தங்க நிறப் பப்பாளி
பார்வை அளிக்கும் பப்பாளி
பார்க்கக் கிடைக்கும் பப்பாளி
பொலிவைத் தரும் பப்பாளி
ஜொலிக்கச் செய்யும் பப்பாளி” என்ற பாடல் பப்பாளியையும் அதன் சிறப்பையும் விவரிக்கிறது.

மாதுளம் பழம்: 

மாதுளம்பழம் இதயத்திற்கும் மூளைக்கும் சக்தியைக் கொடுக்கும். நினைவாற்றலை வளர்க்கும். அறிவுத்திறனை அதிகரிக்கும். மாரடைப்பு, நெஞ்சு எரிச்சல், இரத்தக் கொதிப்பு, அல்சர், முடக்குவாதம், அஜீரணம், இவைகளைக் குணப்படுத்தும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு. மலச்சிக்கல் நீக்கும். தோலை அம்மியில் அரைத்து உண்பதால் சீதபேதி நிற்கும். மாதுளம் பழம்பற்றிய,

மாதுளம் பழமாம் மாதுளை
மகிமை கூறும் மாதுளை
வரிசையான முத்துடன்
வளங்கள் தரும் மாதுளை
ரத்த சுத்தம் செய்ய
சித்த மருந்தாகும்
வயிறு வலி நீக்கும்
மலத்தை வசமாக்கும்…

இந்தப் பாடல் மாதுளையையும் அதன் மருத்துவ குணத்தையும் அறிமுகம் செய்கிறது.

திராட்சைப்பழம் 

திராட்சைப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் வறட்சி நீங்கி தோல் மென்மையாகி, உடல் அழகாகும். குரல் இனிமையாகும். மலச்சிக்கலை நீக்கி, வீரியத்தை விருத்தி செய்யும். நரம்புத் தளர்ச்சி காரணமாக ஏற்படும் உடல் நடுக்கத்தைச் சீர் செய்யும். மெலிந்தவர்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பு பருமனாகும். இருதய நோய்களைக் குணப்படுத்தும். குடல் கோளாறு, வாய்ப்புண், தொண்டைப்புண் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

”திராட்சைப்பழம் நல்ல திராட்சைப்பழம்
தின்ன தின்ன இனிக்கும்
கொத்துக் கொத்தாய் இருக்குமாம்
கொடியின் மேல் தொங்குமாம்
பார்க்க பார்க்க எட்டியே/பறித்து தின்னத் தூண்டுமாம்” என்ற பாடல் இதனைத் தெளிவு படுத்தும்.

கொய்யா: 

கொய்யாப்பழத்தில் வேறு எந்த பழத்திலுமில்லாத அளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யாப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்த உற்பத்தியையும் அதிகப்படுத்துகிறது. இரத்தச்சோகை நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதால் குணம்பெற முடியும். தொண்டையில் உண்டாகும் புண்களை ஆற்றும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். சொறி சிரங்கு குணப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும் சக்தி இதற்கு உண்டு. இது ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது.

”அய்யா வீட்டு கொய்யாப்பழம்
ஆசையாக தந்த பழம்
கையில் வைத்து வாயில் வைத்து
திங்க திங்க அவை தரும்
மருத்துவ குணமும் இதிலுண்டு
இரத்தத்தினையும் சுத்தப்படுத்தும்
சொறி சிரங்கினையும் தடுத்து நிறுத்தும்” என்ற பாடல் கொய்யாவின் மருத்துவ குணங்களை விவரிக்கிறது.

மாம்பழம் 

மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படும். இதனை உட்கொள்வதால் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலுக்குப் பலம் கிடைக்கும். மேலும் உடலுக்கு நோய்எதிர்ப்புச் சக்தி அளிக்கிறது. இதயத் தசைக்குப் பலம் தருகிறது. இனிய மாம்பழத்தினைப் பற்றின பாடல்,

மாம்பழமாம் மாம்பழம்
அழகான மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்…

வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்று வாழை; வாழைப்பழம் சாப்பிடுவதால் மூல நோயிலிருந்து விடுபடலாம். நல்ல ஜீரண சக்தி உண்டாகும். வாழை வாழ வைக்கும்; இரத்த சோகை நீங்கி, இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்திலுள்ள புருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. மலச்சிக்கலை நீக்கும்.

”வாழைப்பழத்தை நாள்தோறும்
வகையாய் உண்ண வேண்டுமே
ஏழை கூட வாங்கியதை
எளிதில் உண்ணலாகுமே” புகைப்பிடித்தலால் ஏற்படும் நிக்கோட்டினை வெளியேற்ற உதவும்.”

அவரைக்காய் 

புரதம், நார்ச்சத்து இதில் அதிகம் காணப்படுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தைப் பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

”கொடியில் தொங்கும் அவரைக்காய்
காய்க்கக் காய்க்கக் கொத்துக்காய்
புரதம், நார்ச்சத்து நிறைந்தது
சாப்பிட்டால் நன்மை பயக்குமே” இப்பாடலில் அவரைக்காயின் தன்மை பற்றி கூறப்பட்டுள்ளது.

சூரியகாந்தி 

ஒரே செடியில் ஒரு பூ அது சூரியகாந்திப் பூ ஆகும். இதன் விதைகள் எண்ணெய் கொடுக்கும். புகைப்பழக்கம் உள்ளவர்கள் தினமும் ஒரு விதை உட்கொண்டால் அப்பழக்கம் மறந்துவிடும். இதில் வைட்டமின் ஏ, டி, பி அதிகம் காணப்படுகிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தினைக் கொடுக்கும். விதையில் காணப்படும் மெக்னீசியம் நரம்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். பக்கவாதம், சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

”வண்ணப் பூவும் நீதானே
வட்டப்பூவும் நீதானே
சூரியப் பெயரைக் கொண்டாலும்
சூடாத பூவும் நீதானே
சூரியகாந்திப் பூ மட்டுமே
எண்ணெயாய் மாறி உணவாவாய்
மருத்துவப் பயனும் கொண்டு நீ
நிறைவாய் வருமானம் தந்திடுவாய்” மேல் தரப்பட்ட பாடல் சூரியகாந்தியின் மருத்துவ குணத்தை விளக்குகிறது.

தாமரை

தாமரை மலர் இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வெப்பத்தைக் குறைக்கும். விதை, உடலைப் பலமாக்கும். தாமரைக் கிழங்கு உள்ளுறுப்புகளின் புண்களைக் குணமாக்கும். விதையைத் தேனுடன் அரைத்து நாக்கில் தடவினால் வாந்தி விக்கல் குணமாகும். விதையை அரைத்துச் சாப்பிட்டால் பார்வை மங்கல் குணமாகும்.

செண்பகப்பூ 

கண்ணைக் காக்கும் செண்பகம். உடல் வலுவடையவும் உடல்பலம் பெறவும் உதவும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். கஷாயம் செய்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். பித்தம், வாதம், கபம் நீங்கும். ஆண்மை குறைவைப் போக்கும்; பொடிசெய்து உண்டால் வெள்ளைப் படுதல், நீர்சுருக்கு, சிறுநீர் வெற்று எரிச்சலுடன் வெளிப்படுதல் குணமாகும். வயிறு வலி மாறும். பாலியல் நோய்களை குணப்படுத்தும். பொடுகு தொல்லை நீங்கும்.

”செண்பகப்பூ/சிறப்பான பூ
மரத்தில் பூக்கும்/மணத்தால் கவரும்
இலைகளின் ஊடே/இரவில் மலரும்
இனிய மணம் வீசும்
மலரின் மணத்தால் மாசு நீக்கி காக்கும்
தெய்வங்கட்கும் கட்டுவர்/செண்டாகவும் மாற்றுவர்.”

ரோஜா 

ரோஜா மலர்கள் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றைக் குணமாக்கும். ரோஜாப் பூக்களிலிருந்து அத்தர் எனப்படும் நறுமணம் பொருந்திய எண்ணெய் பெறப்படுகிறது. ரோஜா இதழினை நீரில்போட்டு வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குணமாகும். நீரினைக் புண்ணில் கழுவினால் புண் குணமாகும். ரோஜா இதழினைக் காயவைத்து எடுப்பதற்குப் பெயர் குல்கந்து. இதனைச் சாப்பிட்டால், இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதி அடையும். ரோஜாப்பூவினைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள புண்கள் ஆறிவிடும் ரோஜாவிலுள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏறப்படும் முகப்பருக்களைக் குறைக்கு உதவும். ரோஜா இதழினைத் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவினால் முகம் பொலிவடைந்து பிரகாசிக்கும்.

”ரோசப் பூவாம் ரோஜாப்பூ
வாசமுள்ள ரோசாப்பூ
கொத்து கொத்தாய் ரோசாப்பூ
நறுமணமுள்ள ரோசாப்பூ
இதழ்கள் தின்று மென்றாலே
மருத்துவ குணமும் கொண்டது” இப்பாடலில் ரோஜாவின் சிறப்பினை கூறுகின்றன.”

மல்லிகை

மல்லிகைப் பூவும் மருத்துவ குணம் கொண்டது. நான்கு பூக்களை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால் வயிற்றிலுள்ள கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை அழியும். பூச்சிவெளியேற மருந்து இதுவே. பூவினைக் காயவைத்து பொடியாக்கி தண்ணீரிலே கலந்து உண்டால் சிறுநீரக கற்கள் தானாகவே கரையும். நோய் எதிர்ப்புச்சக்தி கூட்டும்.

”வெள்ளை நிற பூவிது/எல்லோரும் விரும்பும் பூவிது
மகிழ்வு தரும் பூவிது/மலிவான பூவிது
நறுமணம் வீசும் பூவிது/மருந்துக்கு ஏற்ற பூவிது”

வேப்பமரம்: 

வேம்பு மருத்துவக்குணமுடையது. வேப்பிலைச்சாறு குடித்தால் குடல் பூச்சிகள் நீங்கும். மலேரியா காய்ச்சல் குணமாக தோல்நோய் நீங்கப் பயன்படுகிறது. வேப்ப மரத்தின் காற்றே மருத்துவ குணம் உடையது. இது உடலுக்குத் தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லும் சக்தி கொண்டது. உடல் உபாதைகள் குறையும். சஞ்சீவி என்றழைக்கப்படுகிறது. வேர், பட்டை, மரக்கட்டை, வேப்பங் கொட்டையின் மேல் ஓடு உள்ளிருக்கும் பருப்பு, பால், பிசின், காய், பழம், பூ, இலை, ஈர்க்கு, வேப்பங்கொழுந்து போன்றன சித்தா, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருத்துவப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது. நுண்ணிய விஷக்கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. நீரழிவு, சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்தும். பாம்புகடி, விக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

”கண்ணா வேப்பமரத்தை நீ/எண்ணிப் பார்த்து நடப்பாய்
பயன்தரும் என்றிதனைப்/பகவான் வள்ளுவர் கூறினார்
திருவள்ளுவர் சொன்ன நீதி/திருவாக்கே ஆகும் என்றும்
எத்தனை பெரிய மரத்தில்/இத்தனை சிறிய காய்கள்
அத்தனையும் மருந்தாம்/பித்தனுக்கும் உகந்ததாம்
முடக்கு வாதம் கூட/படக்கென நடக்க வைக்கும்
மக்கள் மாக்கள் மரமென/மருந்தாகும் மரமிது.”

வேப்பம் பூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளைக் கொண்டது. இலை, தோல் நோய் மருந்து, நாள்பட்ட புண், கட்டி மீது பூசினால் குணமாகும். வேப்பம்பூ, வாயுத்தொல்லை ஏப்பம் அதிகமாக வருவதால் பசியின்மை போன்றவற்றினை குணப்படுத்தும். காய் -வைரஸ் காய்ச்சல், தொழுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். பழச்சாற்றினைச் சொறி, சிரங்கு, புண்களில் பூசக் குணமாகும்.

முடிவுரை 

மூலிகைகள், காய்கனிகள், கீரைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து அதற்கேற்றாற்போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை. உடலுக்கு ஊட்டத்தை தருவதில் காய்கறிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. காய்கறிகளை அதன் மருத்துவ குணம் அறிந்து தினமும் உணவில் சேர்த்து வந்தால் நோயற்ற வாழ்வு சாத்தியமாகும். கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவப் பெரிதும் உதவுவது உடல்நலமே. இயற்கை உணவுகளை உண்டு தீராத நோய்களையும் தீர்த்துக் கொள்ள இயலும்.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவி,
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி,
நாகர்கோவில்.

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க