திருக்குறள்

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள நட்பு.
-திருக்குறள் -781(நட்பு )

புதுக் கவிதையில்…

எதுவுமில்லை
நட்பைப்போல்,
பெறுதற்கரிய பெருளாய்..
பெற்றுவிட்டால்
நட்பதுபோலப்
பகைவர்தம்
தீச்செயலுக்குத் தடையான
காவலும் ஏதுமில்லை…!

குறும்பாவில்…

நட்புபோலில்லை பெறுதற்கரிய பொருளேதும்,
பெற்றுவிட்டால் அதுபோல் காவலேதுமில்லை
பகைவர்தம் தீச்செயல்களுக்குத் தடையாய்…!

மரபுக் கவிதையில்…

மண்ணில் மனித வாழ்வதனில்
மிகவும் சிரமமாய் பெறுவதிலே
உண்மை யான நட்பதுபோல்
உயர்வு மிக்க தேதுமில்லை,
பண்பே யில்லா வகையில்தரும்
பகைவர் தீச்செயல் தடையாக,
கண்ணிய மிக்க நட்பதுபோல்
காவலா யில்லை வேறெதுவுமே…!

லிமரைக்கூ..

நட்புபோல் பெற்றிட அரிதாய்
வேறேதுமில்லை, பெற்றுவிட்டால் அதுபோலில்லை
தீச்செயல் தடைக்காவல் பெரிதாய்…!

கிராமிய பாணியில்…

பெருசு பெருசு நட்பு பெருசு
ஒலகத்தில நட்புதான் பெருசு..

இல்ல இல்ல வேறேதுமில்ல
செரமப்பட்டு கெடைக்கிற பொருள்
நட்பப்போல வேறேதுமில்ல..

இல்ல இல்ல வேறேதுமில்ல
எதிரிசெய்யும் கெடுதியயெல்லாம்
தடுத்துநெறுத்தும் காவலா
இந்த
நட்பப்போல வேறெதுவுமில்ல..

அதால
பெருசு பெருசு நட்பு பெருசு
ஒலகத்தில நட்புதான் பெருசு…!

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *