-முனைவர் இரா.வெங்கடேசன்

எந்த மொழிகளிலும் அகராதிகளின் பணி முக்கியமானதாகும். சமூகத்தையும் இலக்கியத்தையும் புரிந்துகொள்வதற்கும் நுட்பமான மையங்களைக் கணிப்பதற்கும் அகராதிகள் தேவைப்படுகின்றன. அகராதிகள் மொழியின் வளத்தைச் சொல்லும் கருவியாக உள்ளன. அகராதிகள் இல்லையென்றால் மொழியின் வளர்ச்சியை கவனத்திற் கொள்ளமுடியாது. தமிழ்மொழியின் செழுமையை எடுத்துரைப்பதற்குத் தமிழில் தோன்றிய அகராதிகள் முக்கியக் காரணிகளாக உள்ளன. தமிழில் தொல்காப்பியத்தில் சுட்டிக்காட்டப்பட்ட அகராதிக்கான முன்னெடுப்புகள் இன்று பரந்து விரிந்து வளர்ந்துள்ளன. தமிழில் ஏராளனமான அகராதிகள் இருப்பதைப் பெருமையாகக் கொண்டாலும் சில அகராதிகள் கவனம் பெறாமல் போனது துரதிர்ஷ்டமானதாகும். 1911ஆம் ஆண்டு ஏ.சி.கிலேற்றன் ஐயர் அவர்கள் உருவாக்கிய வேத அகராதி பைபிளுக்கென உருவாக்கப்பட்ட அகராதியாகும். பைபிளில் இடம்பெற்றுள்ள சொற்களையும் சொற்களுக்கான பொருளையும் விளக்கியுரைக்கும் இவ்வகராதி குறிப்பிட்ட காலம்வரை மிக முக்கியமான அகராதியாகவே இருந்துள்ளது. காலம் செல்லச்செல்ல இவ்வகராதி கவனம் பெறாமல் போனது எதனால் என்ற காரணம் தெரியாமல் உள்ளது. இவ்வகராதி குறித்த பதிவுகளைப் பற்றிச் சொல்வதாக இக்கட்டுரை அமைகிறது.

ஏ.சி.கிலேற்றன் ஐயர் அவர்களால் உருவாக்கப்பட்ட வேத அகராதியின் (A TAMIL BIBLE DICTIONARY) தேவை ஏற்பட்ட சூழலைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

கிறிஸ்தவ போதனையின் ஆதார நூலாக இருக்கக்கூடியது ‘வேதம்’ அல்லது ‘வேதாகமம்’ (BIBLE) ஆகும். இந்தப் பைபிள் தமிழில் வந்த வரலாறு முக்கியமானதாகும். கி.பி. முதற் சில நூற்றாண்டுகளில் ரோம தேசத்தில் பலர் கிரேக்க மொழியைப் பேசியதால் அவர்களுக்காகப் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. இதன்பின்னர் சீரியாக், கொப்திக், கோதிக், ஆர்மீனியன் மொழிகளில்1 மொழிபெயர்க்கப்பட்டது.

இதே காலக்கட்டத்தில் கிரேக்கத்தில் ரோமரின் சொந்த மொழியான இலத்தீனில் மொழியாக்கம் பெற்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பைபிள் திருப்புதலை ஜெரோம் என்பவர் செய்தார். பி.பி.386இல் புதிய ஏற்பாடு முழுவதையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். கி.பி. 404இல் ஜெரோம் வேதம் முழுவதையும் மொழிபெயர்த்து முடித்தார். இலத்தீனில் அமைந்த இம்மொழிபெயர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதனால் இதற்கு ‘வல்கத்தா’ (vulgage) பொது ஜனத்துக்குரிய எனப் பொருள் கொள்ளக்கூடியதாக இந்நூலை ஏற்றுக்கொண்டனர். இந்நூலை மூலப்பிரதியாகவே கொண்டு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலைத் தவிர வேறு நூல்களைப் பயன்படுத்த தடைகள் விதிக்கப்பட்டன.2 இலத்தீன் மொழியில் இருந்த வல்கத்தா தவிர வேறு மொழிகளில் மொழிபெயர்க்கத் தடையிருந்தது. புரோட்டஸ்தாந்து சபையின் முயற்சியால் 1521வரை மார்ட்டின் லுத்தர் இரகசிய காவலில் இருந்தபொழுது ஜெர்மன் மொழியில் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்தார். இவரின் முயற்சியில் ஜெர்மனியில் புரோட்டஸ்தாந்து மதம் வேரூன்றியது. இதன்பின்னர் இங்கிலாந்தில் 1525இல் தின்டேல் (Tyndale) 1538இல் கவர்டேல் (Coverdale) மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன. இருவருடைய பெயர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட அத்தியட்சர்மாருடைய மதம் (Bishops Bilble) என்னும் பெயருடன் 1538இல் வெளிவந்தது. இதே காலகட்டத்தில் ரோமன் சபையினர் ஆங்கிலமொழியில் 1582இல் பிரெஞ்சு தேசத்தில் ரேமஸ் நகரில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். இந்நூல் 1857இல் புதுச்சேரியில் தமிழில் பிரசுரமானது. மற்றொரு மொழிபெயர்ப்பு 1890இல் திருச்சியில் வெளிவந்தது.

1611இல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ஜேம்ஸ் கட்டளைப்படி மொழிபெயர்க்கப்பட்ட அதிகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு (Authorized version) முக்கியமானதாகும். இந்நூல் ஜேம்ஸ் அரசனின் திருப்புதல் என அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் செல்வாக்கு மிகுந்த நாடுகளில் இந்நூலே முதன்மை பெற்றிருந்தது.

இந்திய மொழிகளில் முதன்முதலில் தமிழில்தான் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு இலங்கையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இலங்கையில் அச்சகம் இல்லாததாதல் பல்தேயுஸ் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷம் அச்சில் வரவில்லை. பலரால் திருத்தம்பெற்று 1741இல் கொழும்பில் வெளிவந்தது. இலங்கையில் தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் சீகன்பால்கு அப்பணியைச் செய்யத்தொடங்கினார். புதிய ஏற்பாட்டில் 1714இல் முதல் பாகமும் 1715இல் இரண்டாம் பாகமும் வெளியிட்டார். பழைய ஏற்பாட்டை முடிக்கவில்லை. பின் அதனை பெஞ்சமின் பி.சூல்ட்ஸ் மொழிபெயர்த்து 1778இல் வெளியிட்டார். இவரே சீகன்பால்கு செய்த புதிய ஏற்பாட்டைத் திருத்தி 1776இலும் பழைய ஏற்பாட்டைத் திருத்தி 1777இலும் வெளியிட்டார்.

இவர்களுக்குப் பின் டாக்டர் ஜான் 1809இலும் கல்கத்தா பைபிள் கழகம் 1811 இல் புதிய ஏற்பாட்டினையும் இரேனியஸ் ஐயர் எச். பவர், பெர்சீவல், ஹன்டின், ஹென்றி பவர், லார்சன் C.H.மோனஹன் போன்றோர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்த பலரும் தமிழ் மற்றும் இருமொழி, மும்மொழி அகராதிகளை உருவாக்கியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தமிழில் புதிய ஏற்பாட்டின் முதல் மொழிபெயர்ப்பு 1714இலும் கடைசி மொழிபெயர்ப்பு 1943இல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைவிட தமிழிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் வந்த கிறிஸ்தவ மதத்தின் மூலநூலாக விளங்கக்கூடிய பைபிளைத் தமிழில் அதிகமான அளவில் மொழிபெயர்க்க வேண்டிய தேவை என்னவென்றால் தமிழில் மொழிபெயர்க்கும்போது பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. பைபிளை மொழிபெயர்க்கும்போது கட்டுப்பாடுகள்3 விதிக்கப்பட்டன.

பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தபொழுது கிரேக்கம், இலத்தினில் உள்ளவாறு அணுக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கைக்கொண்டு மொழிபெயர்த்தனர். தமிழில் மொழிபெயர்க்கும்போது மூன்று விசயங்களைக் கவனத்தில் கொண்டுள்ளனர். 1. சொல்லும் முறையில் அழகு, 2. இலக்கிண விதிகள், 3. தெளிவு. மற்றொன்று பைபிளை மொழிபெயர்ப்பவர்களுக்கு இரண்டு மொழிகளில் தெளிவு இருத்தல் வேண்டும். பைபிளை முழுமையாக அறிந்தவராக மூலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் தமிழிலும் உரிய தெளிவைப் பெற்றவர்கள்தாம் பைபிளைத் தமிழில் மெழிபெயர்த்துள்ளனர். ஆனால் தமிழில் மொழிபெயர்க்கும்போது பல்வேறு சிக்கல்களை மொழிபெயர்ப்பாளர்கள் பெற்றுள்ளனர்.

“கிரேக்கம், இலத்தின், ஆங்கிலம் போன்ற மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட பின்னரே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் மொழிபெயர்ப்பதற்குப் பல மொழிகளில் இருக்கக்கூடிய பைபிள் பெயர்ப்புகள் ஒன்றாக உள்ளனவா அல்லது வேறுபட்டிருக்கின்றன என்பதனைக் கண்டறிந்து மொழிபெயர்க்க வேண்டிய தேவை இருந்தது. சில பிரதிகளில் ‘கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்றும் சிலவற்றில் ‘காதுள்ளவன் கேட்கக்கடவன்’ என்றும் ஸ்திரீயின் சரித்திரத்தில் ‘நாங்கள் தொடவில்லை’ என்று எல்லாரும் சொல்லவே’ என்னும் வார்த்தைகள் சில பிரதிகளில் இல்லை. ‘சில பிரதிகளில் ஆசாரியரும் சேனைத்தலைவர்களும் வந்தார்கள் என்றும், சிலவற்றில் பிரதான ஆசாரியர் என்று மட்டுமே இருக்கின்றது’” 4 (சபாபதி குலேந்திரன் 1967:23)

இப்படியான வித்தியாசங்கள் தமிழுக்கு முன்னரே பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள்களில் காணப்படுகின்றன. எது ஆதியில் எழுதப்பட்டதென கவனமாகவும் நுட்பமாகவும் ஆராய்வது அவசியம். மற்றொன்று தமிழில் பேச்சுமொழி, எழுத்து மொழி என்ற வேறுபாடு உண்டு. சீகன்பால்கு மக்களின் பேச்சு வழக்கையும் இலக்கிய வழக்கையும் கலந்து பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தார். சீகன்பால்கு மக்களின் பேச்சுவழக்கை அதிகமாகக் கையாண்டார். அதனை வீரமாமுனிவர் கேலியும் கிண்டலும் செய்தார்.5 சீகன்பால்குவிற்கு பின்னால் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி மொழிபெயர்த்தனர்.

தமிழில் பைபிளை மொழிபெயர்த்தபின் அதனை மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. சமயம், வழிபாடு, மொழி, பண்பாடு, அரசியல், உணவு, பழக்க வழக்கங்கள் என அனைத்திலும் அன்னியமாகிநின்ற தமிழர்களிடம் பைபிளை ஏற்றுக்கொள்ள வைப்பது சவாலாக இருந்தது. தமிழகத்தில் தொடக்ககாலத்தில் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். அதற்கான காரணத்தைச் சீகன்பால்கு,

“ஐரோப்பியர் வாரந்தோறும் அவர்களது சீயோன் என்னும் திருச்சபையில் டேனிசு (Danish) மொழியிலும் செர்மன் மொழியிலும் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்றார்கள். ஆனால் அத்திருச்சபையிலிருந்து வெளியே வந்தவுடனே மது அருந்தினார்கள். பெருந்தீனிக்காரர்களாய் இருந்தார்கள். விபசாரமும் விவாகரத்தும் செய்தார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடனமாடினார்கள்; அவர்கள் சூதாடினார்கள்; பிறரை சபித்தார்கள்; சத்தியம் பண்ணினார்கள்; இறைவனை தினந்தோறும் நினைப்பதற்கு அடையாளமாக அவர்கள் எந்தவிதமான வெளிப்படையான காரியங்களையும் செய்யவில்லை. அவர்கள் இறைவனைப் பற்றிய அறிவில்லாத புத்தியீனராய் வாழ்ந்தார்கள்; தமிழரைக் கருப்பு நாய்கள் என்று திட்டினார்கள். இந்த தீச்செயல்களை அவர்கள் தங்களுடைய ஆலய வழிபாட்டிற்குப் பின் செய்ததால் அவர்களுடைய ஆயர்கள் இந்த இழிவான காரியங்களைச் செய்யத் தூண்டினார்கள் என்று பல தமிழ் மக்கள் நினைத்தார்கள். இந்த ஐரோப்பியரே வீடுபேறு அடைவார்கள் என்று கிறித்தவர்கள் நம்பினால், நன்னடத்தையுள்ள தமிழர் நிச்சயமாக ஈடேற்றம் பெறுவது உறுதியான காரியம் என்று தமிழ் மக்கள் எண்ணினார்கள். மேலும் இப்படிப்பட்ட இழிவான ஐரோப்பியருடன் மோட்சத்தில் இருப்பதைவிட தங்கள் சொந்த முன்னோர்களுடனும் வீட்டாருடனும், இனத்தாருடனும் நரகத்தில் இருப்பது சிறப்பென்று தமிழர்கள் நினைத்தார்கள்.” 6 (பெ.டேனியல் ஜெயராஜ் 2017:82)

என்று கூறியுள்ளார். தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய புரிதலைச் சீகன்பால்கு கொண்டிருந்ததால்தான் 1714இல் மக்கள் பேசிய பேச்சு மொழியை அடிப்படையாக வைத்து பைபிளை மொழிபெயர்க்கின்றார்.

1708ஆம் ஆண்டு சனவரியில் சீகன்பால்கு தமிழர்களிடம் கிறிஸ்தவ மதத்தின் சிறப்பினை விளக்க முயல்கிறார். அப்போது தமிழர்கள் மறுமொழி கூறிய விதம் மிகுந்த வேதனையைக் கொடுத்தது.7 சீகன்பால்குவிற்கு தமிழர் பலர் கடிதங்கள் வாயிலாக கிறித்துவ மதத்தைப் பற்றியும் ஐரோப்பியர்கள் குறித்தும் எழுதினர்.

சீகன்பால்கான “நீங்கள் எங்கள் சாதியைச் சேர்ந்தவராய் இல்லாமலிருப்பது வருத்தமான காரியம். நீங்கள் எங்கள் சாதிக்காரராய் இருந்தீர்களானால் எங்கள் நாட்டு மன்னர்களும் பெரியோர்களும் உங்களை மதித்திருப்பார்கள். கணக்கற்ற சீடர்கள் உங்களைப் பின்பற்றியிருப்பார்கள். ஆனால் நீங்கள் ஐரோப்பிய சாதியைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வெறுக்கப்பட்டிருக்கும் கிறித்தவத்தை எங்களுக்கு அறிமுகம் செய்வதையே உங்களுடைய மேலான நோக்கமாகக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் எங்கள் மத்தியில் வாழும் (ஐரோப்பியர்) கிறித்தவர்கள் நன்மைகளைச் செய்யாமல் அதிகமான தீமையையே செய்கின்றனர். எனவே நீங்கள் கூறும் ஞானமும், புத்தியும் எங்கள் நாட்டிற்குப் பயன்படாது.” (Hallt Reports. 1716, 1897) என்று கூறியுள்ளனர். மேலும் ஐரோப்பியர்கள் நீதியையும் கற்பையும் அறச்செய்கையையும் அறியாதவர்கள். அவர்கள் உதவிகள் செய்யமாட்டார்கள். உடலைத் தூய்மையாக வைக்காதவர்கள். கோபம், தன்னலம், ஆணவம், உலோபித்தனம், காமம், பகை, பெருந்தீனி, சோம்பல் போன்ற தீய செயல்களின் மொத்த உருவமாக இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

சீகன்பால்குவிற்குப் பிறகு தமிழகம் வந்த ஐரோப்பியப் பாதிரிமார்களைத் தமிழர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலைதான் இருந்தது. இதே காலகட்டத்தில்தான் (1711) பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அதனை முழுமையாக மக்கள் வாசிப்பதற்கான நூலாக மாற்ற வேண்டிய தேவை இருந்தது. சரியாக 200 ஆண்டுகள் கழித்து பைபிளுக்கென்று தனியாக வேத அகராதியை (A TAMIL BIBLE DICTIONARY) ஏ.சி.கிலேற்றன் ஐயர் உருவாக்கியுள்ளார்.

பைபிளைப் புரிந்துகொள்வதற்கான ஆதார நூலாக வேத அகராதியைக் கொள்ளலாம். 1911ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வகராதி உருவாக்கத்திற்கு A.பெல்பெர்க், H.E. பிலிப்ஸ், ட்ரைகார்ட், H.சொமேரஸ் போன்ற வேதசாஸ்திரிகளின் உதவியோடு ஏ.சி.கிலேற்றன் ஐயர் உருவாக்கியுள்ளார். இவ்வேத அகராதியை உருவாக்குவதற்கு இதற்கு முன்னால் இருந்த வேத அகராதி (H.பவர்), வேத வியாக்கியானங்கள் முதலிய நூல்களை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். இந்த நூலின் முன்னுரையில் வேத அகராதியை உருவாக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிடும்போது,

“தமிழில் முழு வேதாகம சொல்லகராதி இல்லாததினால் கதைப் போலும் உதவுமாறு அநேக பதங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த வேத அகராதியை வாசிப்போர் இதில் சொல்லியிருக்கும் ஒவ்வொரு நிபந்தத்தின் பொருளை முழுதும் அறிய வேண்டும் என்று விரும்பினால் அந்தந்த நிபந்தத்தில் குறித்த வாக்கியங்களை எல்லாம் வேதத்தில் பார்ப்பது அவசியம். பல பதங்களைப் பற்றிய விசேஷம் அவ்வளவு இல்லாமையால் அவைகளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அடங்கியிருக்கும் ஒரே வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறது.” (ஏ.சி. கிலேற்றன், 1911:v)

என்று குறிப்பிடுகின்றார். 1911இல் இந்த அகராதி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த அகராதி உருவாவதற்கு முன்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அனைத்திற்கும் ஒரே அகராதியாக இதனை உருவாக்கியுள்ளார். அதாவது தமிழ் பைபிளில் ஒரே ஆளின் பெயர் இடத்தின் பெயர் வெவ்வேறு வசனங்களில் வித்தியாசமான முறையில் எழுதியுள்ளனர். அதனையெல்லாம் இவ்வகராதியில் கிலேற்றன் ஐயர் முறைப்படுத்துகிறார். அதாவது யெகு – ஏழு, எத்சேர்-ஏசெர், ஏசேர், ஏத்சேர், -எசேர், ஏனாக்கீம்-ஆனாக்கீம்-வாசியா-உசியா என முறையாக மாற்றுகிறார். நிபந்தங்களில் எழுதியிருக்கும் பெரிய எண்கள் அதிகாரங்களையும் அவ்வெண்களுக்கு முன் மேலிருக்கும் சிறு எண்கள் வசனங்களையும் காட்டுகின்றன. (ப.5)

இன்றைக்கு அகராதி உருவாக்கப்பணிகள் தலைச்சொல்பகுதி, அகராதிச்சொல், கட்டிலா வடிவங்கள், கட்டுடை வடிவங்கள், திரிபுகள், ஆக்கச்சொல், தலைச்சொல் இணைப்பு, எழுத்துப்பெயர்ப்பு, இலக்கணக்குறிப்பு, துணைப்பதிவு, ஒப்புருச்சொல் பதிவு, தொடர்பதிவு, பொருள்விளக்கப்பதிவு, பொருள் விளக்கம், இணைச்சொல், மொழிபெயர்ப்பு, இணைச்சொல், எடுத்துக்காட்டு, குறிப்பான்கள், கலைக்களஞ்சிய விளக்கக் குறிப்புகள், குறுக்கு நோக்கீடு, எதிர்மறை, நிறுத்தக்குறிகள், விளக்கப் படங்கள், சொல்மூலம் போன்ற பல்வேறு கோணங்கள் கவனம் பெறுகின்றன. 1911ஆம் ஆண்டு வெளிவந்துள்ள வேத அகராதி மேற்சொன்ன பலவற்றைப் பயன்படுத்தியுள்ளது கவனத்திற்குரியதாகும்.

தலைச்சொல் இணைப்பு

அகராதிகளில் ஒருசொல் மட்டுமே தலைச்சொல்லாகத் தரப்பட்டு அதற்குப் பொருள் விளக்கம் தரப்படும். எனினும் அகராதிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் அல்லது இணைப்புச்சொற்கள மூலம் தலைச்சொற்களாகத் தரப்படுவதுண்டு. இதனை தலைச்சொல் இணைப்பு என்பர். இதனை இவ்வகராதியில் பல இடங்களில் காணமுடிகிறது.

அசபியா
அஙபியா
அஷபியா
அஷாபியா (Hashabiah) (p.6)
அசரியேல்
அசரெயேல் (Azared) (ப.7)

தலைச்சொல் தருவதன் மூலம் பக்க எண்ணிக்கை, பன்மொழிக்கான மாற்று வடிவங்கள் தவிர்க்கப்படுகின்றன. 

எழுத்துப்பெயர்ப்பு

ஒருமொழிச் சொல்லைப் பிறமொழி எழுத்துக்களில் எழுதுவது எழுத்துப் பெயர்ப்பாகும். பிற மொழியினரின் பயன்பாட்டிற்காக இது செய்யப்படுகிறது. மேலும் ஒப்புருச் சொற்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுகிறது. இதனை வேத அகராதியில் காணமுடிகிறது.

அகசாய் (Ahazai)
அகசியா (Ahaziah) (p.1) 

பொருள் விளக்கப் பகுதி

தலைச்சொல்லிற்குரிய பொருளையும் அதனோடு தொடர்புடைய செய்திகளையும் விளக்கங்களையும் கொண்டிருப்பது பொருள்விளக்கப் பகுதியாகும். தலைச்சொல்லின் பொருளை எளிமையாகவும் விளக்கமாகவும் தருவது ஓர் அகராதித் தொகுப்பாளரின் கடமையாகும். பொருள் உத்திகள் மொழித்தொடர்புடைய உத்திகள் (Linguistic techniques) என்றும் மொழித் தொடர்பிலா உத்திகள் (Extr Linguistic techniques) என்றும் இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மொழியின் உட்கூறுகளைச் சார்ந்து அவற்றின் உதவியால் தரப்பெறும் பொருள் விளக்கம் முதல்வகை விளக்கமாகும். குறியீடுகள், நிறுத்தக்குறிகள், படங்கள், படப்பகிர்வு, பத்தி அமைப்பு போன்றன இரண்டாம் வகையினைச் சார்ந்த விளக்கமாகும். (சரளா ரங்கநாதன், 2009:32). பொருள் விளக்கத்தில் அடங்கும் பொருள் வரையறை, இணைச்சொல், எடுத்துக்காட்டு, குறிப்பான்கள், விளக்கக் குறிப்புகள், குறுக்கு நோக்கீடு, நிறுத்தக்குறிகள், விளக்கப்படங்கள் போன்றவற்றை இவ்வேத அகராதி தந்துள்ளது. இவ்வகராதி பல சிறப்புகளைப் பெற்று அமைந்துள்ளது.

அண்ணகன் – Enunch என்ற சொல்லுக்கு விளக்கம் தரும்போது ஆண்மை இல்லாதவன் (ஏசா563) ‘இயல்பாகவே ஆண்மை இல்லாதவர்களும் அப்படிச் செய்யப்பட்டவர்களுமாகிய இவர்களை அரண்மனை அந்தப்புரத்தில் ஊழியர்களாக ராஜாக்கள் வைத்தார்கள்.’ இந்த விளக்கத்தில் கவனிக்கவேண்டியது இயல்பாக ஆண்மை திரிந்தவர்களால் சிக்கல் இல்லை என்பதைக்கூறிவிட்டு ஆண்மை கெடும்படி செய்துவிட்டு அவர்களை அரண்மனை அந்தப்புரத்தில் பணிக்கு வைத்தார்கள் என்று சொல்லும் பதிவிலிருந்து அன்றைய சமூகத்தில் இராஜாக்களின் அதிகார மையத்தைக் காட்டுவதாக உள்ளது. இதே போன்ற பல நிகழ்வுகளை அதிர்வுகளாகப் பல இடங்களில் தந்துள்ளார்.

பல இடங்களில் விவாதங்களை முன்வைக்கிறார். அதிசயமானவர் (Wonderful) என்ற பதத்திற்கு விளக்கம் சொல்லும்போது இப்பதம் ஆலோசனைக்கர்த்தர் என்பதோடு சேர்க்கப்பட வேண்டும். ஆரியர் படையெடுத்து வந்து யூதாவின் ஜனங்களைத் தண்டித்த பிறகு உண்டான அமைதியான காலத்தில் கடவுள் அவர்களை நடத்தும்படி அதிசயமானவைகளைப் பாதிக்க ஒருவரை அனுப்புவார் என்பது ஏசாயாவின் அர்த்தம். யூத சாஸ்திரிகள் அதிசயமானவர் என்பது மோசியாவைக் கருதுகிறதென்றும் கிறிஸ்தவர்கள் இது இயேசுவைக் கருதுகிறதென்றும் சொல்கிறார்கள். (சபாபதி குலேந்திரன், 1967:18) என்று விவாதம் செய்து தீர்வு சொல்கிறார். பல இடங்களில் விரிவாக விளக்கம் தந்து விவாதத்தை பகிர்கின்றார்.

இந்த நூலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அளவை என்ற பகுதியில் நீட்டல் அளவை விபரத்தைக் கொடுத்துள்ளார். விரற்கடை, உள்ளங்கை, சாண், முழம், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டில் பாகம், மைல் போன்றவற்றிற்கான அளவைகள் தரப்பட்டுள்ளதைத் தந்துள்ளார். மேலும் மரக்கால், ஒன்றரைக்கலம், எப்பா, குடம், படி, ஓமர், காற்படி, ஆழாக்கு, இடம், படி, கலம், கோரா, ஜல், சேக்கல், கிறாத்தல், தாலந்து போன்ற அளவைகள் குறித்து விளக்கமாகக் கூறியிருப்பது கவனத்திற்குரியதாகும்.

அகராதியில் ஏராளமான விளக்கப்படங்கள் தரப்பட்டுள்ளன. ப.9, 10, 11, 12, 15, 16, 20, 22, 30, 31, 55, 57, 63, 64, 68, 71, 73, 76, 77, 198, 200, 193, 188, 179, 171, 176 இந்தப் படங்கள் கவனிக்கத்தக்கன. ஏனென்றால் பைபிள் சொல்லும் கதைகள், நிகழ்வுகள் தமிழர்களுக்குத் தொடர்பில்லாதது அதனால் விளக்கப்படங்கள்வழி கருத்துக்களை இவ்வகராதி விளக்க முன்வந்துள்ளது சிறப்பு.

வேத அகராதியின் அட்டையில் ஒரு வாசகம் தரப்பட்டுள்ளது.  ‘இதை வாசிப்போர், அதாவது விசேஷமாய் அதிக அளவிலான சிறுகிராமங்களிலும் பட்டிக்காடுகளிலும் வசிக்கும் பிரசங்கிமார் சுவிசேஷகன்மார் உபாத்திமார் முதலியோர் இதிலிருந்து நல்உதவியும் தேர்ச்சியும் அடைவார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த வாசகங்கள் உண்மையானவை. பைபிள் தெரியாத ஒருவர் இந்த அகராதியை வாசித்தபின் பைபிளைப் படித்தால் பைபிள் முழுமையாக விளங்கும்.

வேத அகராதி என்பதைத் தாண்டி வேதத்திற்கு விளக்கம் தருவதாக அமைந்துள்ளது. வரலாற்றுச் செய்திகள், காலம் பற்றிய நுட்பமான தகவல்கள், பின் விவரணைக் குறிப்புகள், தொன்மக்கதைகள், அரசியல் செய்திகள், அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு, உடை, நாடுகளைப் பற்றிய தகவல்கள், உபதேசங்கள், போதனைகள், அரிய தகவல்கள் எனப் பல நுட்பமான தகவல்களை வைத்துள்ளது. இந்த நூலைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதானால் அத்தேனே என்ற சொல்லுக்கு விளக்கம் தரும்போது ‘கிரேக்க தேசத்திலுள்ள நகரங்களின் சிரேஷ்டமான இந்நகரம் துறைமுகத்திலிருந்து மூன்று மைல் தூரம் ஒரு சமவெளியிற் கட்டப்பட்டிருந்தது. இதன் மத்தியில் ஒரு மலையிலே கல்விக்குச் சரஸ்வதி போலச் சொல்லப்படும் இத்தேனே தேவிக்கும் இந்த மலைக்கு அடுத்த மார்ஸ் மேடை என்னும் குன்றின்மேல் முருகக்கடவுளைப் போல ‘மார்ஸ்’ என்னும் தேவனுக்கும் கோயில்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன (ப.20) என்ற மாற்றுமதமான இந்து மதக்கடவுள்கள் பற்றிய குறிப்புகளைத் தரக்கூடிய நுட்பமான நூலாக இதனைப் பார்க்கலாம். வேதத்திற்கு அகராதியாகிய இருக்கக்கூடிய இந்நூல், தமிழ் உயிர் எழுத்துக்களுக்கான அகராதியாக உள்ளது. உயிர்மெய் எழுத்துக்களுக்கு அகராதி வரும் என்று ஆசிரியர் கூறியுள்ளார். அது வந்ததா எனத் தெரியவில்லை. பைபிளைத் தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் தேவையான நூல் இவ்வகராதி. இது கவனம் பெறாமல் போனது துரதிர்ஷ்டமானது. 

குறிப்புகள்

  1. கி.பி. முதற் சில நூற்றாண்டுகளில் ரோம சாம்ராச்சியத்தில் பலர் கிரேக்க பாஷையைப் பேசியபோதும் அதைப் பேசாதவர்களின் நன்மைக்காக அவர்கள் பாஷைகளில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டது. சீரியாக் (Syriac), பாஷையில் இரண்டாம் நூற்றாண்டிலும் கொப்திக் (Coptic) பாஷையில் மூன்றாம் நூற்றாண்டிலும் அடுத்த நூற்றாண்டுகளில் கோதிக் (Gohthic) ஆர்மீனியன் (Armenian) பாஷைகளிலும் திருப்புதல்கள் எழுந்தன (சபாபதி குலேந்திரன், ப.7)
  2. 1545-1563இல் ரோமான் சபையின் மகாசங்கங்கள் திரெந்து (Trent) நகரில் கூடி கிறிஸ்தவர்கள் வேறு திருப்புதல்களை உபயோகிக்கக்கூடாதெனக் கட்டளையிட்டது (சபாபதி குலேந்திரன், ப.9)
  3. வேத நூல்கள் உன்னத விஷயங்களைப் பாராட்டும். இவைகள் சொல்வனவெல்லாம் அவ்வச் சமயத்தவர்களுக்கு முக்கியமானவை. இவைகளின் வசனங்கள், சொற்கள் மாத்திரமன்றி உருபுகள், இடைச்சொற்கள், முதலியனவும் முக்கியமானவை. ஆகவே, வேத நூல்களை மொழிபெயர்ப்பவருடைய சுயாதீனம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டதாகும். (ப.14
  4. சபாபதி குலேந்திரன், 1967, பைபிள் மொழிபெயர்ப்பு வரலாறு, ப.23
  5. சீகன்பால்க் கற்றோரை இடையிடையே சந்தித்தாலும் இவருடைய நடவடிக்கைகளையெல்லாம் பாமரரோடுதான் இருந்தன. இவர்கள் பழைய தமிழ் இலக்கியங்களையும் பண்பாட்டையும் அறிந்தவர்களல்லர். இவர்கள் மத்தியிலே அவர் வசித்து வந்தார். இப்படிப்பட்டவர்களே அவருடைய சபையார்; இவர்களையே தமது மனத்தில் வைத்து தமது திருப்புதலைச் செய்தார். சீகன்பால்கு 1. கொரி, 3:2 நீங்கள் இன்னும் மாம்சத்தாராயிருக்கிறீர்கள் எனத் திருப்பியிருந்தார். அதை உடலாசையில் தாழ்ந்த உணர்வினர்களாயிருக்கிறீர்கள்’ எனத் திருப்பியிருக்க வேண்டுமென்றார் முனிவர்.” (சபாபதி குலேந்திரன், ப.51)
  6. பொடேனியல் ஜெயராஸ், 2017 தமிழ் கிறித்தவ அறம் சீகன்பால்கு எழுதிய தன்மவழி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
  7. ஐரோப்பியர் அனுதினமும் செய்யும் அக்கிரமங்களை நாங்கள் எங்கள் சொந்தக் கண்களால் பார்க்கின்றோம். அவை எங்களுக்கே அருவருப்பாய் இருக்குமானால் கடவுளுக்கு அவை எவ்வளவு அதிகமாக அருவருப்பாய் இருக்கும் என்பதை யோசிக்க எங்களால் இயலவில்லை என்றார்கள்.” Halle Reports, (i.e., Der Konig, missionaries Ours Ost Indien eingesandter Ausfuhrlicher Berichten, Vol.I, halle, I – Verlegung des waysen – Hausen – p.544
  8. Halle Reports, 1716. p.897
  9. ஏ.சி.கிலேற்றன், 1911 வேத அகராதி, The Christian Literature Society for India, madras, Colombo and London.
  10. சரளா ரங்கநாதன், தமிழ் அகராதிகளின் வளர்ச்சிப் போக்கும் அமைப்பு வேறுபாடும், ஸ்ரீ முருகன் பிரிண்டர்ஸ், சென்னை.

*****

கட்டுரையாசிரியர் – இணைப்பேராசிரியர்
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவனம் பெறாத அகராதி

  1. தனித்துவம் மிக்க தகவல்களைக் கொண்ட நல்ல கட்டுரை, இத்தகைய தரவுகள் புதிய புரிதல்களைக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.