அவுஸ்திரேலியாவில் தமிழரது வாழ்க்கை முறை

0

ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்
M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS

அவுஸ்திரேலியா பல்லின கலாசாரம் கொண்ட நாடாக விளங்குகிறது .இங்கு வந்த தமிழர்கள் தமக்குரிய வாழ்க்கை முறையினத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும், சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் வாழ்கிறார்கள்.இவர்களுக்குள் பெரும்பாலும் மொழியும், சமயமும், பாலமாக இருப்பதனையே முக்கியமான தொடர்பென்று கருதலாம்.

இலங்கையில் இருந்து வந்த தமிழர்களிலே பல பிரிவுகளும் காணப்படுகிறது.ஆதாவது உயர் கல்வித்தகைமைகளுடன் ஆரம்பத்தில் வந்தவர்கள், பின்பு இங்கு வந்து படித்து தகைமைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், பின்னர் நாட்டின் பிரச்சினைகள் காரணமாக இடம் பெயர்ந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வந்து சேர்ந்தவர்கள், மற்றும் முகவர்கள் ஊடாக எப்படியோ இந்த நாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்கள்.

ஆனால் இந்தியத் தமிழர்கள் மத்தியிலோ சிங்கப்பூர் மலேசியத் தமிழர்கள் மத்தியிலோ இந்த நிலையினைக் காணமுடியாது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்கள் படிப்பதற்கும், கல்வித் தகைமைகளுடன் வேலைவாய்ப்பினைப் பெற்றுமே வந்திருப்பபதைக் காணமுடிகிறது.

சங்கங்கங்கள் வைப்பது, கோவில்கள் கட்டுவது, அரசியல் செய்வது என்று பார்த்தால் அது பெரும்பாலுமே இலங்கைத் தமிழர்களாகவே காணப்படுவர்.இலங்கைத் தமிழர்கள் பலர் இந்த நட்டில் குடியுரிமை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பல இழப்புகளின் மத்தியில் வந்ததாலும் உறவினர்கள் பலர் பல்வேறு நாடுகளில் குடிபுகுந்து விட்டதாலும் இலங்கைக்குப் போவது பல தமிழர்களுக்கு அவசியமானதாகப்படவே இல்லை. ஆனால் இந்தியத் தமிழர்கள் நிலை அப்படி அல்ல. அவர்களில் பலர் வசிப்பிட உரிமையுடன் இருக்கவே விரும்பி இந்த நாட்டின் குடியுரிமையில் ஆசையில்லாத வர்களாகவே விளங்குகிறார்கள்.

இலங்கைத் தமிழர்களில் முன்னர் வந்தவர்வர்கள் தாங்கள் வெள்ளைக்காரர் என்ற பாவனையில் முற்றும் முழுதாகவே ஆங்கிலக் கலாசாரத்தினையே தமது வாழ்வாக்கிக் கொண்டு வாழ்கின்றவர்களாகவே இன்றுவரை விளங்குகின்றார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு பெரும்பாலும் வெள்ளைக்காரரின் தொடர்பினையே விரும்பியவர்களாய் அவர்களின் பக்கமே தம்மைப் பார்க்கும்படி ஆக்கிக்கொண்டு வாழுகின்றார்கள்.

இன்னுமொரு சாரார் இங்கு வந்து உயர்கல்வியைக் கற்று அதனால் உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.வைத்தியர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் எனலாம்.

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் கூடுதலாக வாழும் மாநில மாக விளங்குவது நியூசவுத் வேல்ஸ் ஆகும்.அதுவும் தலைநகரான சிட்னியில் நிறையத் தமிழர்கள் வாழுகிறார்கள். வசதியுடனும் ஒரளவு அடிப்படையான வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.அதற்கு அடுத்ததாக விக்ரோறிய மாநிலமான மெல்பேணை எடுத்துக் கொள்ளலாம்.சிட்னிக்கு அடுத்து தமிழர்கள் கூடுதலாக மெல்பேணில்த்தான் வாழுகிறார்கள்.

ஆண்களும் பெண்களும் வேலைசெய்யுமொரு நிலை இங்கு அவசியமாகிறது. பிள்ளைகள் இருந்துவிட்டால் படிப்புக்கு அதிக பணமும் , வீட்டுவாடகைக்கு அதிக பணமும் தேவைப்படுவதால் உழைக்க வேண்டிய கட்டாயம் இங்கிருக்கிறது.இதனால் இரவும் பகலும் எந்த வேலை ஆனாலும் குடும்பமே உழைக்க வேண்டிய ஒரு கட்டாயம் இங்கு அவசியம் ஆகிவிட்டது.

தொடர்ந்து வேலைசெய்வதனால் மன ஆறுதலுக்கு ஏதாவது கொண்டாட்டங்களும் அவசியம் தேவைப்படுகிறது. அவற்றை சனி ஞாயிறு தினங்களிலேயே அனேகம் பேர் வைக்கின்றார்கள். பிள்ளைக்ளுக்குப் பாடசாலை விடுமுறை யானதாலும் தங்களுக்கு ஓய்வு கிடைப்பதாலும் இந்த நாட்களைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்.

இங்குவாழும் இலங்கைத் தமிழர்களிடையே அவர்கள் வாழ்ந்த மண்ணின் நினைவுகள் இன்னும் போகவில்லை.அதே வேளை அந்த மண்ணுக்கே உரித்தான போட்டி மனப்பாங்குகளும், பொறாமைக் குணங்களும், குறைகள் சொல்லுவதும், ஒருவரை ஒருவர் தூற்றித்திரியும், மனப்பாங்குகளும் கூட மாறவில்லை என்றே சொல்லக் கூடியதாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலுக்குள் மற்றைய இடத்துத் தமிழர்கள் சேர்ந்துவிடுவதில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதே.தாங்கள் வாழ்ந்த மண்ணில் எப்படியான வகுப்புப் பிரிவுகள் காணப்பட்டதோ அவைகள் இங்கு வந்த பின்னரும் மாறுவது என்பது மிகவும் சிரமான தாகவே இருக்கிறது. கூட்டங்களில் என்னதான் சமத்துவம் பற்றி வீராவேசமாகப் பேசினாலும் திருமணம் என்று வரும்பொழுது பேச்சுகள் யாவுமே வெறும் பேச்சுகள் ஆகவே போயிருக்கும். என்னதான் படித்து உயர் பதவியில் இருந்தாலும் இலங்கையின் பார்ம்பரியப் பழக்க வழக்கங்கள் பதுங்கிய படியேதான் இருப்பதை இங்கு காணமுடிகிறது.

வெள்ளைக்கார நாட்டுக்கு வந்துவிட்ட படியால் வெள்ளைக் காரர்களாகவே இருக்கப் போகிறோம் என்று எண்ணி அதற்கு ஏற்ப தங்கள் குடும்பத்தையே மாற்றுகின்ற தமிழர்கள் ஒருபுறம். தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் தங்கள் நட்டுக்கா போகப் போகிறார்கள் ? இந்த நாடுதானே அவர்களுக்குச் சொந்தம் என்று பிள்ளைகளை முழுக்க முழுக்க ஆங்கில மயமாக்கும் பெற்றோர்கள் ஒருபுறம். யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன வேலையாவது செய்து நல்ல வீடு, நல்ல கார், நல்ல வசதியான வாழ்க்கையினை வாழ்ந்துவிட வேண்டும் என்று எண்ணுகின்ற வர்கள் ஒருபுறம். இவர்களுக்கு மத்தியில் பண்பாடு, கலாசாரம், மொழி, சமயம், சமூகம், தனது சொந்த நாட்டின் துன்பம் பற்றிய நினைப்பு, அதற்காக எப்படி நிவாரணங்களைப் பெற்று வழங்கலாம், என்று அதற்காகவே பல செயற்பாடுகளை அல்லும் பகலும் செய்து கொண்டிருக்கும் மனோ பாவம் மிக்க குடும்பங்கள் ஒரு புறம் என்று இங்குள்ள தமிழர்கள் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது.

இவற்றைப்பற்றி எல்லாம் இங்குள்ள பிள்ளைகளுக்கு எதுவுமே விளங்குவதே இல்லை.ஏனென்றால் அவர்கள் அனைவருமே ஆங்கிலச் சூழலில் ஆங்கிலப் பிள்ளைகளுடன் ஆங்கில மொழியிலேயே படிக்கிறார்கள்.வயது வந்தவர்கள் தங்களுக்குள் முரண்பட்டு பிரிவுண்டு பிளவுடன் நடப்பதை அவர்கள் அறியும் நிலையில் இல்லை. அவர்களின் எண்ணங்கள் யாவுமே இந்த அன்னிய கலாசரத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது.

வருங்கால தமிழ்ப்பிள்ளைகள் தமிழ்வழி கலாசாரம் பண்பாடுகளுடன் வருவார்களா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருகிறது எனலாம்.இதனால் இங்குள்ள பெரியவர்கள்தான் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தைப் பற்றி உணர்த்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கின்றன. ஆனால் தங்களின் சுயத்தை இழந்து விடாமல் கிடைத்த இந்த அருமையான நாட்டையும் அதன் வாய்ப்புகளையும் உரியமுறையில் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து வாழ இங்குள்ள தமிழர்கள் அனைவரும் ஒருமித்து நினைக்கும் நாள் மிகவும் உன்னதமான உயர்வுடைய நாளாக இருக்கும்.

Attachments area

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *