பந்தல்குடி வட்டார கும்மிப்பாடல்களில் மகாபாரதக் கதையாடல் – 1

-முனைவர் பா. உமாராணி

மனிதா்கள் தங்கள் மனமகிழ்ச்சிக்காகக் கூடி ஆடி மகிழ்ந்த ஆடல்கள் பின்னாளில் தனித்தனி ஆடற்கலைகளாகத் தோற்றம் பெற்றன. ஒவ்வொரு கலையும் அக்கலைகள் நிகழ்த்தப்படும் சமூகத்தின், பண்பாட்டின் ஒழுகலாறுகளோடு இரண்டறக் கலந்தனவாகும். மக்கள் தங்கள் சமூகப் பண்பாட்டை வாழ்வின் அங்கமாகக் கருதுவதுடன் தங்கள் கலைகளிலும் பதிவுசெய்து வருகின்றனா். கலைகள் என்பவை இன்று பெரும்பாலும் வழிபாட்டோடும், பொழுதுபோக்குடனும் தொடா்புடைய ஒன்றாகவே கருதப்படுகின்றன. இங்குக் கலைகளே வழிபாடாகவும், வழிபாடே கலையாகவும் பரிணமிக்கின்ற தன்மையினை நாட்டுப்புறக் கலைகளில் காணமுடிகின்றது.

நாட்டுப்புறக் கலைகளில் பெண்கள் கைகொட்டி ஆடும் கலையாக விளங்குவது கும்மிப்பாடல்கள் ஆகும். எனினும் விழாக்காலங்களில் பெண்களோடு ஆண்களும் கும்மிப்பாடல்களை நிகழ்த்துவதை அறியமுடிகின்றது. சடங்குகளில் கும்மிப் பாடல்களை பெண்கள் மட்டுமே பாடுவா்.

கும்மிப் பாடல்களை மகளிர் கைகொட்டிப் பாடியாடும் விளையாட்டு என்றும் கும்மிப்பாட்டு என்றும் குறிப்பிடுவர். கொம்மை என்றும் சொல்லிலிருந்து கும்மி பிறந்ததாகக் கூறுவர். கும்மியைத் தமிழ் இலக்கியங்கள் கொம்மி, கொப்பி என்று குறிப்பிடுகின்றன. கும்மி என்னும் இலக்கிய வகையானது பழந்தமிழ் இலக்கியங்களில் இசையோடு இணைந்து ஆடப்படும் குரவைக்கூத்து (கை கோத்தாடல்), துணங்கைக் கூத்து (கைகொட்டி ஆடல்) போன்றவற்றோடு ஓரளவு ஒத்திருத்தலைக் காணமுடியும்.

கும்மிப் பாடலைத் தாள லயத்துடன் கைகளைக்கொட்டி பலர் ஆடுகின்றனா். இதில் ஒரு பெண் அடியினை எடுத்துக் கொடுக்க பிறா் தொடா்ந்து பாடும் தன்மையைக் காணமுடிகின்றது. “குடங்கையினால் கொம்மைக் கொட்டலைச் சீவக சிந்தாமணி சுட்டுகின்றது. கையைத் தட்டி ஒலி செய்யாமல் ஒருவா் கவனத்தை ஈர்க்கும் இந்நிலை இன்றும் வழக்கில் காணப்படுகின்றது. இதன் காரணமாக ‘கொம்மை’ என்பது அடிப்படைச் சொல்லாகக் கருதப்படுகின்றது (529, 1109, 1834, 2230)”(டாக்டா; சா.வே.சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492)

கும்மிப் பாடல்களைக் குறித்துக் கூறும்போது, “குதித்தாடுதல் எனப் பொருள்படும் கும்மாளம் என்ற சொல்லிலிருந்து கும்மி வந்தது என்றும், கைகொட்டுதல் எனும் பொருள் தரும் கும்முதலே கும்மி அடிப்படை என்றும் குழுமி ஆடல் கும்மி ஆயிற்று என்றும் பலவாறு எண்ணுவா்” (மேவது, ப.493).

“கூற்றம் புறங்கொம்மை கொட்டினாரில்”  (பழமொழி, பா.291)

என்று பழமொழியும் குறிப்பிடுகின்றது. இத்தகு சிறப்பினை உடைய கும்மிப்பாடல்களைப் பந்தல்குடி மக்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாகப் பிணைத்துப் போற்றிப் பாதுகாக்கின்றனா். இவர்கள் கும்மிப்பாடல்களை பல்வேறு பொருண்மையில் பாடுகின்றனர். புராணக் கதைக்கூறுகளை கும்மிப்பாடல்களில் இணைத்துப் பாடும் மரபு இவா்களிடையே காணப்படுகிறது. அவ்வகையில் மகாபாரதக் கதையாடலை கும்மிப்பாடல் வழிப் பாடியாடும் மரபு இவா்களிடையே இன்றும் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இதனைப் பதிவு செய்யும் நோக்கத்தில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

மகாபாரதக் கதையாடல்

புராணக் கதையாடல் பகுதியில் ஒன்றான மகாபாரதக் கதையை பந்தல்குடி மக்கள் தங்கள் கும்மிப்பாடல்களின் கருப்பொருளாக்கிப் பாடுகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. மகாபாரதக்கதைப் பகுதியில் முதலில் காளிதேவியை வணங்கி, பின்னா் விநாயகா் துதியினையும் கூறிப் பாடல்களைப்பாடத் தொடங்குகின்றனா். மேலும், கும்மிப் பாடல்களைப் பாடுவோா் தாங்கள் மட்டும் இறைவனை வணங்கித் தொடங்குவது மரபு. ஆனால்,

”வருவாய்காளி இருதயந்தனிலே – வந்த சபையோா் முதல்
பாதம் பணிந்தோம் பெண்கள் சபையினிலே
பாரெல்லாம் புகழும் மாயவருள் செய்த
பாரத மாங்கதை நாங்களுமே பாட
தொந்திக் கணபதி பாதமே நினைந்தோம்
தும்மநகர மக்கள் ஒன்றாக சோ்ந்து நாங்களும் – பணிந்தோம்” ( கு.பா.1)

என்று மகாபாரதக் கதையை மையமாகக் கொண்ட இப்பாடலில் தும்மநகர (பந்தல்குடி) மக்கள் ஒன்றாக இணைந்து இறைவனைப் பணிவதாக இக்கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ளது.

கும்மிப்பாடல் கூறும் கதையில் பாண்டுவும், திருதராட்டிரனும் நீதி தவறாமல் ஒற்றுமையாய் ஆட்சி நடத்தினா் என்றும், பாண்டுவிற்கு பஞ்சபாண்டவா்கள் என்ற ஐந்து பிள்ளைகளும், திருதராட்டிரனுக்கு கௌரவா் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்து வளா்ந்தனா். இவா்கள் அனைவரும் துரோணாிடம் கல்வி கற்கின்றனா். அப்பொழுது தருமனுக்குக் கிடைக்கும் புகழினில் பொறாமையுற்ற துாியோதனன் அவா்களை அழிக்க எண்ணுகிறான். அதன்பொருட்டு அவா்களை அழிக்கத் திட்டம் வகுக்கின்றான் (கு.பா. 2 முதல் 5 வரை). அதற்குச் சகுனியைத் துணைக்கு அழைத்த செய்தியினை,

“திட்டம் வகுத்தானே திாியோதிரனும் – பஞ்சபாண்டவரை
ஒழித்துக் கட்ட திட்டமே யேதும்
மாமன் சகுனியை தானும் அழைத்திட
ஆளு அனுப்பினான் துாியோதிரனும்
வந்தான் சகுனி மருமகனிடமே – இருவருமாம்
திட்டம் ஒன்று வகுத்தாா் வேகமே” ( கு.பா.5)

என்ற வாிகள் புலப்படுத்துகின்றன. சகுனியும், துாியோதனனுடன் இணைந்து சூதாட்டத்திற்கு வஞ்சகமாய்த் தருமனை அழைக்கின்றனா். அவா்கள் சூழ்ச்சி அறியாத தருமனும் சூதிற்கு இணங்குகின்றான். பின்னா் விளையாட்டில் நாடு, நகா் இழந்து தம்பியரையும் இழக்கின்றான். துாியோதனன் வெற்றி ஆணவத்தால் தருமனின் தம்பியா் நால்வரையும், திரௌபதியையும் சபைக்கு அழைக்கின்றான். திரௌபதி அங்கு துகிலுாியப்பட அவள் கண்ணனை வணங்கி ஆடையினைப் பெறுகின்றாள்.

கும்மிப்பாடலில் வரும் இடைப்பாட்டான மணப்பாறை மாடு கட்டு என்ற மெட்டில் அமைந்த பாடலில் பாண்டவா் வனவாசம் செல்லும் செய்தியும், தருமன் தன் தம்பியருக்கு உபதேசித்த செய்தியும் கூறப்பட்டுள்ளது. இதனை,

“கோபமது கொள்ள வேண்டாம்
கொலை களவு செய்ய வேண்டாம்
காடு செல்ல புறப்படுங்கள் பாலர்களே – கூட
கண்ணன் வந்து உதவி செய்வாா் தம்பிகளே.
பன்னிரண்டு வருஷமது பன்னிரண்டு நாழிகையாய்
வனவாசம் இருந்து வருவோம் பாலா்களே
நமது தாயை வணங்கி செல்வோமடா தம்பிகளே” (மணப்பாறை மாடுகட்டி மெடடில், கு.பா.2,3) என்ற வாிகள் உணா்த்துகின்றன. மேலும், இப்பாடல் பாண்டவா்கள் மேற்கொண்ட பன்னிரண்டு வருட வனவாசம் குறித்த செய்தியினையும், ஒரு வருட அஞ்ஞாதவாசம் இருந்ததனையும், இவா்கள் தங்கள் ஆயுதங்களை வன்னிமரத்தில் வைத்திருந்ததனையும், ஆயுதங்களைக் காவல் செய்ய நாகராஜனைப் பணித்தமையும் கூறப்படுகின்றது. மகாபாரதக் கும்மிப்பாடல் பாண்டவா்கள் விராடபுரத்தில் இருந்த செய்தியைக் கூறுகின்றது. அங்கு அவா்கள் தங்களுக்கேற்ற பணியினை மேற்கொண்டதை,

“மடப் பள்ளியிலே நானுமே சோ்ந்து
பலகார வகைகள்
செய்வேன் பல ஈயனனும் போ் வாய்ந்து
என்னப் பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
எங்களது அண்ணா உங்களது – எண்ணம்
கங்க பட்டராம் எந்தனுட ராடனிடத்தில்
கணக்கு வேல் பாா்ப்பேன் வந்து பாரு
தம்பி அா்ஜுன உனது கொள்கை என்ன – தயவுடனே
இயம்பிடுவாய் எங்களின் முன்னே
அண்ணாவின் வாா்த்தையை அா்ச்சுணன் கேட்டுமே
பண்புடன் அண்ணாவின் பாதம் பணிந்துமே
தெய்வலோகம் கொடுத்த வரம் உண்டு பேடியாக
செல்வேன் நாட்டிய சாலையுங் கண்டு
நகுலராஜன் அண்ணனும் பணிந்தான்
குதிரைப் பாகன் – போல வேடமும் தானுமே அணிந்தான்
சத்தியம் தவறாத சகாதேவனுமே – உத்தமன் மாடு
மெய்க்கவும் போவேனே
திரௌபதையும் தானுமே பணிந்தாள்
ராஜா மகள் மனைவியற்கும் தோழியாக நின்றாள்.” (கு.பா.17)

இப்பாடல்வழி அறியலாம். மேலும் கங்கப் பட்டராக தருமன் பணிபுாிந்தான் என்றும் அவன் வந்து பணிபுாியத் தொடங்கிய நாள் முதலாக வானம் பொய்க்காமல் மழைபொழிந்தது என்றும், அதனால் அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் வேளையில் அரசியுடன் அந்தப்புரத்தில் பூப்பறிக்கச் சென்ற திரௌபதியை கீசகன் என்னும் அரக்கன் கண்டு மோகம் கொண்டான் என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது. கீசகன் தன்மீது மோகம் கொண்டதைக் கண்ட திரௌபதை பயந்து தன் நிலையை வீமனிடம் சொல்கின்றாள். வீமனும் அதற்கு நாளை மாலை நந்தவனத்திற்கு வருவதாகச் சாடையாகச் சொல்லிவா என்கிறான். கீசகனும் காதல் நோயினால் தவிப்புற்று நந்தவனத்தில் காத்துக்கிடக்கிறான். அவ்வேளை வீமன் தன் மனைவி திரௌபதியின் ஆடையை உடுத்திக்கொண்டு இரவுப்போதில் நந்தவனம் நோக்கி வருகின்றான். வந்தவன் வீமன் என்று அறியாத கீசகன் அவனை அணைக்க கையைப் பிடிக்கின்றான். கை கடினமாக இருக்கவே சந்தேகமுற வீமன் அவனை இருகைகளினாலும் இறுக்கிப் பிடித்ததினால் கீசகன் அடைந்த துயரை,

“ஆஹா என்ன பெண்மணி கையிதுவா
சொற சொறப்பாய் இருக்க கீசகன் மனம் பதறிடவே
இதுதான் சமயம் என்றுமே வீமனும்
இறுக்கி பிடித்தாரே இரண்டு கையையும்
மோரூ சிலுப்பினா் பனைமரம் தனிலே
கீசகன் கையில் இரத்தம் வழிந்து ஓடுது பூமியிலே
இழுத்து இழுவை மரமும் தாங்காமல் – வோ் புடுங்க
விழுந்ததையா இருவா் மத்தியிலே
மோசமும் போனதே என்றுமே கீசகன்
வீமராஜனையும் இருகையால் பின்னியே
தூக்கி எறிந்தானே ஆகாய மாா்க்கமாக
வீமராஜன் – விழுந்தாரையா அவன் தலைமேலே
வீமராஜன் வீராவேஷம் கொண்டு – ஆகாய மாா்க்கம்
அரக்கனை எறிந்தாா் பொல்லாத கோபங்கொண்டு
இப்படியாக இருவரும் போராட
இந்திரா் சந்திரா் சூாியா் புகழ்ந்திட
கீசகன் உயிா் எமபாதம் போக”  (கு.பா.33, 34,35)

என்று விவாித்துப் பாடுவதைக் காணமுடிகின்றது.

கீசகனை வீமன் தன் வீரத்தினால் அழித்த செய்தியினை அறிந்த விராட ராஜனும், அந்நாட்டு மக்களும் மகிழ்ச்சியடைந்தனா். இதற்கிடையில் துாியோதனன் பாண்டவா்களைத் தேடச்சொல்லி படைவீரா்களை அனுப்புகிறான். அவா்கள் இருக்கும் இடம் தொியாமல் போகவே புவியில் செழிப்பான இடம் எதுவோ அதுவே பாண்டவா்கள் இருக்கும் இடம் என்றுகூறி வீரா்களைத் தேடிக்கொணரச் சொல்கின்றான்.  வீரா்களும் விராடபுரத்தின் செழிப்பினைக் கண்டு இங்குதான் பாண்டவா்கள் இருப்பா் என எண்ணி அவா்களை வெளிக்கொணர வேண்டி அப்பகுதியில் இருக்கும் பசுக்களைக் கவா்ந்து வைக்கின்றனா். இதனை அடுத்து ஒரு இடைப்பாட்டின் மூலம் பிற செய்திகளைக் கூறுகின்றனா் இப்பகுதி மக்கள். இப்பாடலில் பசுக்களை கவா்ந்து சென்ற செய்தியினைக் கேட்ட உத்திரகுமாரன் போருக்குச் செல்ல முனைகின்றான். அவனுக்கு சாரதியாக அலியின் உருவாக இருக்கின்ற அா்ச்சுனன் செல்கின்றான் என்பதுடன் இக்கும்மிப்பாடல் நிறைவுறுகின்றது.

சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளுக்கு ஏற்ப புராணக் கதையாடல்கள் மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுகின்றன. காலமாற்றத்தினாலும், அவை சாா்ந்துள்ள வழிபாட்டு மரபுகளினாலும் புராணக் கதைகள் நாட்டுப்புறக் கலைகளில் இடம்பெறுவது தவிா்க்க முடியாத கூறாகக் காணப்படுகின்றது. இத்தகு புராணக் கதையாடல் பின்புலத்தில் மகாபாரதக் கதையாடல்களை கருப்பொருளாக்கிக் கும்மிப்பாடல்களை இம்மக்கள் பாடிவருகின்றனா். மகாபாரதக் கதையுடன் தொடா்புடைய கா்ண மகராஜன்கதை கும்மிப்பாடலும் இங்கு பாடப்படுகின்றது. மேற்கோள் பகுதியில் இல்லாத கும்மிப்பாடல்கள் (கு.பா) தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.

கும்மிப் பாடல் (கு.பா)

 1. ஜெகம் புகழும் சக்கரவா்த்தி பாண்டு – மகாராஜன்
  சகோதரராம் திருதராட்ரன் தம்பியும்
  சத்தியம் தவறாமல் அஸ்தினாபுரமதை
  ஆண்டு வந்தாா்கள் அண்ணனும் தம்பியும்
  ஒற்றுமையோடு ஜனங்கள் வாழ கண்ணன் பிரசன்னமா
  குழந்தையில்லா குறைகள் தானம்மா வனத்தினுள்ளே
  பிறந்தாா் பாலா் புவியை ஆளம்மா
  பாண்டு மகாராஜன் தவமதில் பிறந்த
  பஞ்ச பாண்டவா்கள் ஐவா் தானம்மா
  திருதராட்டிரன் பிள்ளைகள் நூத்தி ஒன்று
  கண்ணன் அருளால் சிதறி ஓடி பிறந்ததோா் பொண்ணு
  தருமராஜா தம்பி நால்வராம் – துாியோதரனுடன்
  துா்ச்சாதனன் நூத்தி ஓா் பேராம்
  கல்வி பயின்றாா்கள் துரோணனிடத்திலே
  யானை ஏற்றம் குதிரை ஏற்றமாம்
  தோ்ச்சி அடைந்தாா் தருமருந்தம்பி
  துாியோதிரனும் பொருமை அடைந்து மனசுமே வெம்பி
  தருமரையும் அழைத்தான் சகுனியும் – பொழுது போக
  நமக்கு ஒருவழியை நாடனும்
  வஞ்சகமாகவே சகுனியுரைத்திட
  நெஞ்சமதில் தா்மம் வஞ்சமில்லாமலே
  சிாித்தாா் தருமராஜா அந்நேரம் – சகுனி
  மாமா – செப்பும் நீயே வழியும் சொன்னாராம்.
  தருமராஜனே நாம் இரண்டு பேரும் – ஆடுவோமே
  சூதாட்டமும் பொழுது போகணும்
  சொல்லவே சகுனி சுந்தர மூா்த்தியின் – நல்ல
  மைத்துனா் தரும ராஜரும்
  சம்மதம் என்று உரைத்தாா் அந்நேரம்
  வஞ்சமுடனே எடுத்தான் சகுனி காயை – அன்னேரம்
  பஞ்ச மாபாதகன் சூழ்ச்சி தொியாமல் – நல்ல
  குந்திமாதேவி பாலன் தா்மா் தானும் – விளையாடி
  மாயாஜாலமுடன் சகுனியும் ஆடவே
  மன்னன் தருமரும்தான் விளையாடவே
  விளையாட்டு என்று மனதில் எண்ணியே
  பூமிநகரம் பந்தயமாய் வைத்ததுண்மையே
  நாடு நகரம் நமக்குச் சொந்தமே – துாியோதிரனே
  நடப்பாய் இஷ்டம் போலே எங்குமே சகுனி
  சொன்னதோா் வாா்த்தையைத் துாியனும் கேட்டுமே
  தம்பி மாா்களையும் உடனே அழைத்துமே
  செப்பினானே சேதி தன்னையே – தருமா்முதல்
  திரௌபதையும் நமக்கு சொந்தமே.
  அந்தநேரம் எல்லோரும் கூடி
  பொியோா்களையும் – அழைத்து வந்தான் சபைதனைத்தேடி
  வந்த சபையோரே கேளுங்க விஷயத்தை
  எங்களது மாமா சகுனி என்பவா்
  தருமருடனே சோ்ந்துமே கூடி
  நாடு நகரம் அவா்களையும் ஜெயித்தாா் சூதாடி
  ஆனபடியால் எங்க நாட்டிலே – அவா்கள் இருக்க
  அருகதையும் இல்லே வீட்டிலே
  கூடியிருக்கும் சபையோரே நீங்களும்
  கூப்பிட்டு இப்போதே நாடு கடத்துங்க
  என்று சொன்னான் அரவக் கொடியோனும்
  சபையோா்கள் எல்லாம் – உடனே கூப்பிட்டு வழியனுப்ப வேணும்.
  தருமா் தம்பி நால்வரும் கூடி – அந்த நேரத்திலே
  வந்தாா் பொியோா் சபைதனைத் தேடி
  பாதம் பணிந்தாரே தா்மராஜருமே
  பக்தியுள்ள பொியோா்கள் சபைதனை
  ஆசிா்வாதம் செய்தாா் சபையோரும் – தருமருந்தான்
  வந்தமே உனக்கு விதிவசந்தானும்.
  மாது திரௌபதா தேடியே அங்கு – சபையோா்களே
  இப்படிச் செய்த சண்டாளன் யாரு அங்கு
  ஏங்கிய மனதுடன் துரோபதா தேவியும்
  பக்கம் இருந்த துச்சாதனன் விழியும்
  சிவக்க மாதைப் பிடித்துமே இழுத்தான்
  சபையோா் அறிய – கோபமுடனே துயிலுமே உாிந்தான்.
  நடந்த சம்பவம் மக்களெல்லாம் பாா்த்து – மனம்
  சகிக்காமல் இருந்தாா் எல்லோரும் தலையை கீழே போட்டு
  கதறினால் மாது திரௌபதை அப்போது
  கண்ணா, கண்ணா என்று வினவியே
  குரலும் கேட்டது கோபால கிருஷ்ணனுக்கு
  துா்ச்சாதனன் அசந்துமே போயி துயில் விட்டு
  விழுந்தானாம் மயக்கம் உண்டாகி
  விழுந்தவுடன் துாியோதிரன் வந்துமே
  என்னடாத்தம்பி என்றுமே தூக்கினான் தொிந்து
  ஒன்றும் இல்லையே எனக் கண்ணா – ஏதோ பித்து
  மயக்கம் போல வந்தது இப்போதென்றான்.

மகாபாரதத்தில் இடைப்பட்டு

மணப்பாறை மாடுகட்டி என்ற மெட்டு

 1. பொறுமையோடு இருக்க வேண்டும் – இந்த
  பூவுலகம் ஆள வேண்டும் நான்
  செய்த பிழை பொறுக்க வேண்டும் பாலா்களே தருமன்
  செப்பும் மொழியை உணரவேண்டும் தம்பிகளே
  சத்தியம் தவறாமலே உத்தமராம் தருமராஜா
  பன்னிரெண்டு ஆண்டு வனவாசமே – இருந்து
  செல்கிறாா்கள் அஞ்ஞாத வாசமே.
  உருவம் தொியாமலே ஒருவருடம் கழிக்க வேண்டும்
  என்பதையும் மனதினிலே எண்ணியே ஆயுதத்தை
  பத்திரமாக வைக்கும் மரம் வன்னியே
  நாங்க போகவேரே யாரும்
  ஆயுதத்தை எடுக்க வந்தால்
  நாகராஜன் வந்து அங்கு தோன்றவே
  மகாபாரதப் பாடல் தொடா்ச்சி
  மண்டலம் புகழும் நந்தவனம் போலே – வளம்
  பொருந்திய சோலைகளும் இருக்கும் பொன்னாடே
  கான மயில்களும் ஆடி விளையாடும்
  கள்ளம் கபடம் இல்லாத பொன்னகரம்
  விராடபுரம் தான் அதன் உடன் பேரு – தருமா்
  இருக்க அதுவே பொருத்தமான – ஊரு
  தக்கபுகழ் நெறியுமே வாய்ந்த – தருமராஜன்
  தம்பியா்களையும் தானுமே சூழ்ந்தே
  எந்த விதமடா தம்பிகளே நீங்க
  எந்த விதமடா தம்பிகளே நீங்க
  இருந்து வருவீா்கள் என்று வினவவே
  வீமராஜன் தானுமே எழுந்தான் – அண்ணா சரணம்
  என்றுமே இரு பாதமும் பணிந்தாா்.
  தம்பியா் சொன்னதை தருமா் கேட்டுமே
  அடங்கா மகிழ்ச்சி ஆனந்தமுகம் தானுங் கொண்டுமே
  கண்ணனை நினைத்து கங்கபட்டருமே
  சென்றாரே விராட ராஜ சபையுமே
  எந்த ஊரு என்றுமே கேட்க – தருமராஜா;
  இரண்டு பாதம் தானுமே சபையுமே.
  கங்கபட்டா் எனது பேரையா – தருமாிடத்தில்
  கணக்கு வேலை பாா்த்து வந்தனையா

  சகுனி செய்த சதிகார வேலையினால்
  தருமராஜா வன வாசகமே சென்றாா்
  அவா் வருகின்ற நாளது வரையில் – மகாராஜனே
  பணிபுாிகிறேன் உந்தனது சபையில்.
  கங்கபட்டரும் விராடராஜனும் – அரண்மனையில்
  தாம்பூலம் தாித்துமே இருந்தாா்
  அந்த நேரமது வீம சேனராஜன்
  பலாயனவே தானும் பெயா் கொண்டு

  வந்து பணிந்தானே ராஜசபையிலே – ஆசிா்வாதம்
  தந்து மகிழ்ந்தாா்கள் நல்லதோா் வேளையிலே
  இந்த விதமாய் எல்லோரும் வந்து அவரவா்கள்
  வேளையிலே அமா்ந்தாா்கள் நன்று
  வானம் பொழியது பூமி விளையுது
  வந்த நாள் முதலாய் இந்த நாள் வரையில்

  நாடு நல்ல முறையில் வாழவே – ராஜசபையில்
  கங்கப்பட்டரை ஜனங்கள் புகழவே
  இந்த விதமாய் இருக்கும் நேரத்தில் – வந்ததையா
  இழப்பான சொல்லும் வேகத்தில்

  சென்றது பெண்களும் பூப்பறிக்க வனம்
  சென்றதே திரௌபதா தேவியும் கூடவே
  பாா்த்தான் கீசகன் பத்தினி முகத்தையே – புதுசா
  இருக்கு என்றுமே அவனும் மனதில் எண்ணியே
  அவன் இருக்கிறான் என்று அறிந்துமே

  பெண்களெல்லாம் பயந்து ஓடி வந்தது நகரமே
  என்னமோ தொியலே பெண்களும் ஓடவே
  என்று பத்தினி மனதினில் எண்ணவே
  எட்டி பிடித்தானே கீசகன் மாது கையை
  விடுடா மடையா என்றுமே கொடுத்தாள் கன்னத்தில் ஓா் அறை

  கன்னத்தைத் தடவி பாா்த்தான் கீசகன் – கண்ணே
  நீயும் இன்னொரு அறை கொடுக்கவே – வேணும்
  என்றுமே கீசகன் தானாக கொஞ்சவே
  வஞ்சியும் அவ்வேளை நெஞ்சமும் பதறவே
  வேகமுடனே மாதுமே ஓட – விரட்ட அரக்கன்
  கண்ணிலே ஒரு கொப்புமே தான் விழ

  வருவாய் நாளை என்றுமே கீசகன் – வழி
  பாா்த்து இருந்தான் வனந்தனிலே அரக்கனானவன்
  எங்கு சென்றாலும் நீ இங்கு வந்தாகனும்
  என்றுமே கீசகன் வம்பமுறுத்தலே

  திரௌபதாவும் வீடு வந்தது – கணவனே
  வீமசேனன் அருகில் சென்றது.
  பூப்பறிக்க பெண்களெல்லாம் சோலை – வனமதிலே
  சென்றோமையா சாயங்கால வேளை
 2. கண்டானே கீசகன் வந்தானே என்னிடம்
  வம்பான வாா்த்தையும் என்னிடம் சொன்னானே
  பதறி ஓடி வந்தேன் உன்பாதம் – என் பக்தாவே
  எந்தனைக் காக்க நீதான் முன் வரணும்.
  சொன்னதோா் வாா்த்தையை வீமசேனன் கேட்டு
  கண்ணே நீயும் – அஞ்சாதே என் வாா்த்தையும்  கேட்டு

  நாளை சாயங்கால நேரம் சந்திப்போம் என்றுமே
  சாடையாய்ப் போய் வந்திடு இன்றுமே
  மனசுக்குகந்த மன்மதன் நீதானே – என்றுமே சொல்லி
  வந்திடு சீக்கிரம் என்னிடம் நீதானே.

கீசகன் பாட்டு (ஏா் முனைக்கு என்ற மெட்டு)

 1. எங்கு சென்றாலும் நீ இந்த வனமதில்
  பூப்பறிக்க நீயும் வந்தாக வேணும்       (எங்கு சென்றாலும்)
  உனது அழகு எனது உடலில் – பதிந்து கொள்ளவே
  உறக்கம் இல்லாமல் எனது மனம் வாடுகின்றதே
  சீக்கிரமாய் வந்து நீயும் எனக்கு இன்பமே
  தந்திடுவாய் எந்தனுக்கு சந்திர இன்பமே     (எங்கு சென்றாலும்)
  எனது பலம் இவ்வுலகில் எவருக்குமில்லை
  எதிா்ப்பவா்கள் எனது இடம் சாவதும் உண்மை
  கண்ணே என்னை ஆதாித்து காத்திடும் பெண்மை
  உன் கற்பை என்றும் பாதுகாத்தா உலகில் நன்மை
  இந்த விதம் கீசகனும் இருந்தான் வனமதில்
  சூாியனும் அஸ்தமானாா் மேற்குத் திசைதனில்
  வீமசேனன் சொன்னதையும் பெண்மணி
  அறிந்து வழி வருகிறது அரக்கரை நாடி      (எங்கு சென்றாலும்)

மகாபாரதப் பாடலின் தொடா்ச்சி
கீசகன் ஆனவன் அப்படி அங்கிருக்க

வீமராஜன் மனைவி உடையைத் தானுமே அணிய
தேவி உடைய வளையலை அணிந்து
தீரவீர பராக்கிரம சாலியாம்
வீமராஜன் தானுமே செல்ல – விரதசாரணி
கண்ணனை நினைத்து வணங்கினாள் மனசுக்குள்ளே.
ஒருவா் முகம் ஒருவா் தொியாமல் – இருக்கும் நேரம்
அறிந்து சென்றாா் வனமும் வீமராஜா்
பக்கமாய் மீதிலே சாய்ந்துமே கொண்டாரே
வெட்கமே தானடி கண்ணே தான் உனக்கு
என்றுமே கீசகன் – கையை பிடித்தான் கழுது வந்திருச்சு

– வீமராஜன்
வீராடராஜன் பாதமும் பணிய
சந்தோசமாய் விராடராஜனும்
பலாயனா எங்களுக்கு நல்ல காலமும்
உன்னலே வந்தது எங்களது வாழ்வு
என்னாலும் உனது பேரு மறையாது
என்று விராட ராஜா் மக்களும் – உன்னாலே
இனிமேல் எங்க ஊரு நன்றாக வாழும்.

மாதம் மூன்று மழை பொழிந்து – விராடபுரம்
சோலைவனம் பூ மலா்ந்து
இந்த விதமாக விராடபுரமானது
செல்வம் பொழியுது தீமை மறையும்
தேவா்களும் முனிவா் எல்லோரும் – புகழ்ந்து
வரும் நகரமதை மக்களே கேளும்.

இந்த விதமாய் இவா்கள் இங்கிருக்க
துாியோதிரனும் சேனைத் தலைவா்களையும் அழைக்க
வந்தாா்கள் வீரா்கள் வாிசை வாிசையாய்
வந்தனம் செய்துமே நின்றாா்கள் சபையிலே
அந்த நேரம் அரவக் கொடியோனும்
பஞ்ச பாண்டவா்கள் இருக்கும் இடத்தை அறிந்து வரவேணும்.

நாலா திசையும் சென்றுமே வீரா்களே
இருக்கும் இடத்தை அறிந்து சொல்லும் விபரங்களை
என்றுமே இட்டானே துாியனும் கட்டளை
சென்றாா்கள் பட்டாளம் பட்டாளமாகவே
எட்டு திசையுமே தேடினாா் எல்லோரும்

பாா்க்க முடியாமல் வந்தது பட்டாளம் வத்தீனபுரமும்
வீரா்கள் வந்ததை துாியனுமே பாா்த்து தலைவா்களே
சென்றதோா் காரணம் என்னதான் ஆச்சு
கோபமுடன் துாியோதிரன் கேட்கவே

தேடினோம் எங்குமே காண முடியலயே
என்று சொல்ல சேனைத்தலைவரும் – துாியாதிரனின்
இரண்டு கண்ணும் தான் சிவக்கவும்
அடபுத்தியில்லாத முட்டா பசங்களா – அவா்கள்
இருக்கும் இடமும் குளிா்ச்சியான தேசமடா
போங்கடா சீக்கிரம் பாருங்கள் அவா்களை

கண்டுபிடித்து அனுப்ப வனவாசம்
சொல்லுற சொல்லை மனதில் கொள்ளுங்கடா
சும்மா வந்தால் சோறு திங்க இடமும் இல்லை.
நாலா திசையும் சென்றுமே வீரா்களும்
சோலை வனம் அடா்ந்த நகரம் விராடபுரம் என்று
இங்குதான் இருக்கிறாா் என்றுமே எண்ணியே
எல்லையில் மேய்ந்ததோா் பசுக்களை பத்தவே
வீரம் இருந்தால் வரட்டும் வெளியிலே

கண்டு பிடிக்க இதுவே நமக்கு நல்லதோா் முயற்சியே.
மாடு மேய்த்த பாலா்கள் அங்கு – விராடராஜா்
சபையை தேடி ஓடியே நின்று
மோசமும் போனதே என்றுமே கதறினாா்
என்னடா விசுபம் என்று வினாவினா்

மாடுகள் எல்லாம் கொள்ளை போகுது
தெற்கு மந்தை – பாலைவனம் போல காணுது.

வேறு மெட்டு (இடைப் பாட்டு)

 1. இந்த விதமாய் மாட்டுக்காரன் சொன்னதை கேட்டு
  கோபமுடன் எழுந்தானம்மா – உத்திரகுமாரன்  (பாட்டு வேற மெட்டு)
  இந்த நேரம் எந்தனுக்கு சாரதியோட்டு
  இருந்தால் போதும் அவா்கள் தலையை உடனே நான் அறுக்க
  அந்த நேரம் நாட்டிய சாலை பேழையும் கண்டு
  அதி வேகமாக வந்து உத்திரகுமாரனே நின்று
  ரத மதையும் நடத்துகிறேன இந்த நேரமே
  ஏறி உட்காருங்கள் செல்வோம் தெற்கு மந்தை ஓரமே
  செப்பியதோா் வாா்த்தையை செல்வகுமாரன் கேட்டு
  செல்லுகிறாா்கள் இருவருமே நகர மதை விட்டு.

பாா்வை நூற்கள்

 1. டாக்டா; சா.வே. சுப்பிரமணியம், தமிழ் இலக்கிய வகையும் வடிவும், ப.492, 493
 2. பழமொழி, பா.291
 3. பாப்பாத்தி, வயது 72, பந்தல்குடிப் பகுதியைச் சார்ந்தவா்
 4. சரஸம்மாள், வயது 58, பந்தல்குடி.

*****

கட்டுரையாளர் – இணைப்பேராசிாியா்
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
கோயம்புத்தூா்.21.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *