திருடி விட்டான்
சத்தியமணி
திருடி விட்டான் ஒருவன் நெஞ்சத்தினை
திருடும் காதலில் வஞ்சத்தினை
கேட்டால் தருவேனே உள்ளத்தினை – கண்ணா
திரும்ப தரவேண்டாம் கள்ளத்தினை
மருளும் மான் விழிகள் உனைப் பார்த்து
மயங்கும் போதுனக்கு கலக்கமென்ன
அருளும் தேன் மொழிகள் எனைப் பார்த்து
அள்ளி பொழிவதற்கு தயக்கமென்ன
விரையும் யமுனை நதி பெருக்கெடுப்பில்
விழையும் உன்னாட்டம்! அரங்கேற்று !!
உறையும் வரையில் எனை உறவாடி
உடைகளாகி யெனை அழகேற்று !!
விரும்ப விரும்ப குழல் இசைப்பிரித்து
விருந்து கொடுக்கும் இதழ் மதுகொடுத்து
திரும்ப திரும்ப மனம் துதிகொடுத்து
அருந்த விழையும் திறன் துளிர்விடுத்து
அரும்ப அரும்ப மலர் மணம்பிறந்து
ஆரமாகும் அவன் மனம்திறந்து
நிறம்ப வழியும் இன்ப முகில்பொழிந்து
நீலவான மதில் நினைவிழந்து