இரங்கற்பா – கலைஞர் கருணாநிதி யெனும்……
கலைஞர் கருணாநிதி யெனும்……
உதய சூரியன் மறைந்து விட்டது தமிழ்
இதய காவியம் இறந்து விட்டது
பதிய வைத்தவை படர்ந்து வளர்ந்தவை
விதியெனும் சொலில் நழுவி விட்டது
சென்னை யென்பதும் கோட்டையின் பலம்
இன்று நமக்கென கிடைத்ததெப்படி
செம்மொழி யெனும் சிறப்பு கிட்டிட
தம்மொழிக்குமோர் வாய்ப்பதெப்படி
சாதியிலை யினும் சாற்றும் பெருந்தகை
வானப்பாதைக்கு சென்றதெப்படி
மீதியிலை யெனும் போர்க்களங்களில்
வாகை சூடியே வாழ்ந்ததெப்படி
கறுப்பில் தெரிவதை சிகப்பில் தோய்ந்திட
கவிதை வசனமாய் கொடுத்ததெப்படி
வெறுப்பில்லாமல் தமிழ் விரதமிருந்தவன்
விருப்பமுடன் விண்விழைந்ததெப்படி
புதையலாய் தமிழ் அகத்தின் முளைத்தவன்
புதைந்து பெட்டியில் போனதெப்படி
நிலையிலாது இவ்வுலகம் மென்றென
அலைகள் மடியினில் அயர்ந்ததெப்படி
தலையிலாது வெறும் சிலையிலாது
கலைஞரெனுமுன் பெயரழியாது!
சிதையிலாது துயர் வதையிலாது
சென்ற பின்னுமுன் புகழ் அழியாது! – சீர்
வினையிலாது பெறும் மதிப்பிலாது
வாழும் வாழ்வதூஉம் பயனிலாதெனப்
பிழையிலாது இப்பிறந்தமண்ணிலே
நிகழ்ந்த சரிதமும் நிலைத்து வாழுமே!!