வல்லமையின் சுதந்திர தின வாழ்த்துகள்!

0

பவள சங்கரி

பவள சங்கரி

நான் எனது சுதந்திரத்தை விரும்பும்பொழுது எப்படி என்னால் உங்களுடைய சுதந்திரத்தை எதிர்க்க முடியும்? – மகாத்மா காந்தியடிகள்

இன்று 72 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். உண்மையில் நாம் எந்ததெந்தத் துறையில் சுதந்திரம் அடைந்திருக்கிறோம். பொருளாதாரத் தன்னிறைவும், பொருளாதார சுதந்திரமும் அடைந்து விட்டோமா என்றால் இல்லை என்றுதான்இன்றும் வேதனையுடன் கூற முடிகின்றது. ஏனைய மற்ற நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வாழும் நிலைமையால் பொருளாதாரச் சுதந்திரத்தை இழந்து நிற்க வேண்டியுள்ளது. நாட்டின் முதுகெலும்பான கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் மிகப்பெரும் மோசடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். 200 க்கும் மேற்பட்ட கல்லூரிகளும், பத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும் மோசடியாய் இயங்கிக் கொண்டு, இத்தனை ஆண்டுக் காலங்களாக பல ஆயிரம் மாணவச் செல்வங்களின், நம் நாட்டின் வருங்காலத் தூண்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியிருக்கின்றனர். வானளாவிய கட்டிடங்கள் மட்டுமே வெற்றியின் சின்னம் என்று கருதிக்கொண்டு, உலகத்தரம் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கச் செய்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாலந்தா போன்ற உலகத் தரம் வாய்ந்த பல பல்கலைக்கழகங்கள் நம் இந்தியாவில் இருந்துள்ளன என்பதை எவரும் மறுக்கவியலாது. வழிகாட்ட வேண்டியவர்களே வழி தவறி நடந்துகொண்டால் நாட்டின் எதிர்காலம் குறித்து கவலைகொள்ளாமல் இருக்க முடியவில்லை. 71 ஆண்டுகள் கடந்த பின்பும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தெருவில் இறங்கிப் போராடும் நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறோம். சற்றும் வளர்ச்சியடையாத, அடிப்படைத் தேவைகள்கூட பூர்த்தியாகாத பல மாநிலங்கள் இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. பெண்களும், பெண் குழந்தைகளும் விற்கப்படும் நிலையும், பாதுகாப்பற்ற சூழலில் உழலும் பெண் குழந்தைகளுக்கு விடிவு காலம் எப்போது என்று விசும்பி குரல் கொடுக்கும் நிலையிலேயே இருக்கிறோம் என்ற எண்ணத்தை மறைக்க முடியவில்லை. கல்விச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா என்று கேள்விப்பட்ட நாம்தான் இன்று இளம் பெண்களின் வன் புணர்ச்சி சுற்றுலாக்களும் இயங்கி வருவது பற்றி கேள்விப்படுவது வேதனையின் உச்சம்.

இந்தியர்கள் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையில் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இன்று நமது இந்தியப் பொருளாதாரமே ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியின் மீதுதான் கட்டமைக்கப்படுவதைக் காண்கிறோம். எத்தனையோ, விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், பிறந்து வளர்ந்து தாம் பிறந்த நாட்டிற்கும், தமக்கும் பெருமையை சேர்த்துக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலைக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் என்று பள்ளு பாடவும், விண்ணிலே ஆட்சி செய்வோம் என்று கற்பனை கதையும் வேண்டியதில்லை. நிலவில் பாட்டி வடை சுட்ட கதையும் இனி நமக்குத் தேவையில்லை. சூரியனுக்கே விண்கலம் அனுப்பிவிட்ட இந்த காலத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை செலுத்தாமல் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறோம். அந்தப்பணியில் ஈடுபட்டிருந்த நமது தலைசிறந்த விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாத்துரை அவர்களுக்கு பணி நீட்டிப்பும் வழங்கப்படவில்லை. உண்மையான வளர்ச்சி அடைய ஒரே வழி கட்சிப் பாகுபாடு, அரசியல், சமுதாய பாகுபாடு இன்றி அனைவருக்கும் பணியாற்றும் முழுமையான வாய்ப்பு அளிப்பதும், வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு முழுமையாக வாய்ப்புகளை வழங்குவதும்தான் உண்மையான சுதந்திரம். பொருளாதாரத்தில் தன்னிறைவும், கல்வியில் உயரிய வளர்ச்சியும், பெண்கள் பாதுகாப்பும், தாழ்த்தப்ப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியிலும் அக்கறை காட்டுவதே உண்மையான சுதந்திரம் ஆகும். சட்டையில் கொடியும், வாயில் இனிப்பும் மட்டும் நமது வளர்ச்சியன்று. வாழ்விலே இனிமையும், வளர்ச்சியில் சுதந்திரமும் காண்பதே உண்மையான சுதந்திரம்! அனைவரும் ஒன்று கூடி இந்தக் குறிக்கோள்களை அடைய பாடுபடுவோம்! அந்த எண்ணம் உருவாவதே உண்மையான சுதந்திரத்தின் கொண்டாட்டம்!

 

வாழ்க, வளர்க இந்தியா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.