-க. குலோத்துங்கன்

கட்டுரை வரைவதனைக் கலையாக வளர்த்தனர் மேலை நாட்டினர். அடிசன் ஸ்டீல்  ஹாஸ்லிட், லாம்ப் போன்றோர்கள் சான்றாவர். தமிழில் கலைபயில தெளிவும், கட்டுக்கோப்பும் செறிவும் மிக்க கட்டுரைகளைப் பலர் வடித்தனர். மறைமலையடிகள் (சிந்தனைக் கட்டுரைகள், அறிவுக்கொத்து) திரு.வி.க (தமிழ்ச்சோலை) பண்டிதமணி (உரைநடைக் கோவை) டாக்டர் வ.சு.ப. மாணிக்கம் (எந்தச் சிலம்பு), சி.பா (கட்டுரை வளம்) கி.வா.ஜ (கன்னித் தமிழ், முல்லை), கல்கி, புதுமைப்பித்தன், அண்ணா போன்றோர்கள் கட்டுரைத் தமிழ் வளர்த்தவர்களாவர். இவர்களின் வரிசையில் நாஞ்சில் நாடன் பதினோரு கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். கட்டுரை இலக்கியம் மூலம் தன் சிந்தனைகளைச் சூழலோடு பொருத்திப் புரிந்துகொள்ளச் செய்கிறார். இவரின் பனுவல் போற்றுதும் (தமிழினி பதிப்பகம்- டிசம்பர் 2011) என்ற கட்டுரை நூல் இங்கு ஆய்வுப் பொருண்மையாகக் கையாளப்பட்டுள்ளது.

நாஞ்சில் நாடன் தம் கட்டுரைகள்வழிப் பல சமூகக் கருத்துக்களையும், மொழி சார்ந்த தீர்வுகளையும் அறியப்படாத பல படைப்பாளிகளை அறிமுகம் செய்வதையும் இளைய படைப்புலக வாசகர்களை தேடச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு எழுதிவருகிறார். பனுவல் போற்றுதும் என்ற  கட்டுரை நூலில் இருபத்தியோரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள்வழிப் பல்வேறு நூல்களை அறிமுகம் செய்கின்றார். பழந்தமிழ் இலக்கியம் முதல் புதுக்கவிதை வரையிலான பாடல்களை மேற்கோளாகவும் அறிமுகப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

சங்க இலக்கியத் தாவரங்கள் – தமிழினி, டிசம்பர் 2010.
தமிழரும் தாவரமும்  – தமிழினி, டிசம்பர் 2010.
எனக்கும் என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு – சொல்வனம், ஜீலை 2010.
செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல்திரட்டு – சொல்வனம், ஜீலை 2010.
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப – தமிழினி, டிசம்பர் 2010.
குணங்குடியார் பாடற்கோவை – சொல்வனம், அக்டோபர் 2010.
நெடுஞ்சாலை – தமிழினி, டிசம்பர் 2010.
காப்பிய இமயம் – தமிழினி, செப்டம்பர் 2010.
நினைவுகளின் சுவட்டில் – சொல்வனம், டிசம்பர் 2010.
சீதக் குளிர் ஆடி – ‘இரவு’ நூல் டிசம்பர் 2010.
ஐம்பதாண்டுத் தமிழ்நாவல் – தில்லித் தமிழ்ச்சங்கம் நடத்திய நவீனத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை, டிசம்பர் 2010.
செந்தமிழ்க் காப்பியங்கள் – தமிழினி, ஆகஸ்டு 2011.
மொழி என்னும் அரண்  – உயிர் எழுத்து, செப்டம்பர் 2011.
கருப்பு எனப்படுவது – தமிழினி, நவம்பர் 2011.
துருப்பிடித்த வேலைத் தூர எறி! – விருதுநகரில் 16.09.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில மாநாட்டில் ஆற்றிய துவக்கவுரை.
திகம்பரம் எனில் அம்மணம் – திகம்பரம் கட்டுரைத் தொகுப்பின் முன்னுரை, டிசம்பர் 2010.
சூரல் பம்பிய சிறு கான் யாறே – சொல்வனம், மார்ச் 2011.
சாகித்ய அகாதமி விருது ஏற்புரை –
நானும் விகடனும் – ஆனந்த விகடன், ஜீன் 2011.
சிறியன சிந்தியாதான் – சிற்பி பவள விழா மலர், ஜீலை 2011.
சிறுமீன் சினையினும் நுண்ணிது – ‘மரம்’ நூல் தொகுப்பு, டிசம்பர் 2011.
மேற்காணும் கட்டுரையின் அறிமுகங்களைக் காண்போம்.

சங்க  இலக்கியத் தாவரங்கள் எனும் கட்டுரையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வெளியீட்டு எண்.73, 1987- இல் வெளியிட்ட சங்க இலக்கியத் தாவரங்கள் என்ற நூலை அறிமுகம் செய்துள்ளார். இந்நூல் 23 ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யாமல் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலில் சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுவதாகவும், இவை 150 தாவரங்களையே குறிப்பிடுவதாகவும் இவற்றின் இலக்கியப் பெயர், வேறு பெயர், உலக வழக்குப் பெயர், தாவரக் குடும்பம், தாவரப் பெயர், ஆங்கிலப் பெயர் எனும் அனைத்துத் தகவல்களும் தருவதாக குறிப்பிடுகிறார். (முனைவர் கு. சீநிவாசன், தொல் அறிவியல்துறை).

தமிழரும் தாவரமும் என்ற கட்டுரையில் பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத்தலைவர், எழுதிய பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2007இல் வெளியிட்ட தமிழரும் தாவரமும் என்ற நூலை அறிமுகம் செய்துள்ளார். இந்நூலில் தாவரங்களைத் தொல்காப்பியத் தாவரங்கள், சங்ககாலத் தாவரங்கள், சங்க மருவியகாலத் தாவரங்கள், பக்தி காலம் கி.பி.600 முதல் கி.பி.1750 வரை, நாயக்கர்காலம் எனக் குறிப்பிடுள்ள தாவரங்கள் என விரிவான அட்டவணை இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு எனும் கட்டுரையில் திரு.வேங்கடராம சாஸ்திரிகள் தொகுத்த செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள், (2002) ஸ்ரீ ஆனந்த நிகேதன், ஸ்ரீ ஞானானந்த தபோவனம், விழுப்புரம் மாவட்டம் என்ற நூலை அறிமுகம் செய்கிறார். இந்நூலில் ஆவுடையக்காள் வசதியான குடும்பத்து, செங்கோட்டை ஆற்றங்கரைத் தெருவில் பிறந்தவர். பாவாடை கட்டத் தெரியாத வயதில் கல்யாணம் ஆயிற்று, மஞ்சள் கயிற்றின் மணம் மாறுமுன் விதவை ஆகிறார். ஊர் வம்பை எதிர்த்து நின்று கல்வி கற்றார். பருவம் அடைந்ததும் தலை முண்டிதம் செய்யப்பட்டு வெள்ளாடை அணிந்து, கைம்மை நோன்பு. ஸ்ரீ வெங்கடேச ஐயாவாள்  ஆசியால் ஞானம் பெறுகிறார் என ஆவுடையக்காளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப எனும் கட்டுரையில் ‘மீன்கள் அன்றும் இன்றும்’ முனைவர் ச. பரிமளா, தமிழ்ப் பல்கலைக்கழகம் (1991) என்ற நூலை அறிமுகம் செய்கிறார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் மீன் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவராவார். மற்றொரு நூலான ‘சங்க நூல்களில் மீன்கள்’ எனும் பி.எல்.சாமி எழுதிய நூலினையும் அறிமுகப்படுத்துகிறார், மேலும் பள்ளு இலக்கியங்களில் குறிப்பிட்டிருக்கும் மீன்களின் எண்ணிக்கைப் பட்டியலையும் தருகிறார்.

தென்காசைப் பள்ளு – 26
பொய்கைப் பள்ளு -10
பள்ளுப் பிரபந்தம் – 11
குருகூர்ப் பள்ளு – 22
கண்ணுடையம்மன் பள்ளு – 8
செண்பகராமன் பள்ளு – 1
திருவாரூர்ப் பள்ளு – 20
முக்கூடற் பள்ளு -38
வையாபுரிப் பள்ளு -34
திருமலை முருகன் பள்ளு -34
சிவசயிலப் பள்ளு -38
தண்டிகைக் கனகராயன் பள்ளு -37
கதிரை மலைப் பள்ளு -36
பறாளை விநாயகர் பள்ளு -68
கட்டி மகிபன் பள்ளு -28
என தமது ஆய்வின் முடிவுகளைக் கூறுகிறார் நாஞ்சில் நாடன்.

குணங்குடியார் பாடற்கோவை எனும் கட்டுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டிச் சிவகங்கை அகரம் வெளியீடாக 1980–ஆம் ஆண்டு வெளிவந்த ‘குணங்குடியார் பாடற்கோவை’ என்ற நூலை அறிமுகம் செய்கிறார். இப்பதிவிற்குப் பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் சிறப்புப் பதிப்பும், குறிப்பும் அளித்துள்ளதையும் பதிவு செய்கிறார். அடுத்த கட்டுரையான நெடுஞ்சாலையில் கண்மணி குணசேகரன் எழுதிய ‘நெடுஞ்சாலை’ நாவலை அறிமுகம் செய்கிறார். கண்மணியின் முதல் நாவல் ‘அஞ்சலை’ தமிழ்ப் பெண்களின் அவலங்கள் பேசும் நாவலாகும். இரண்டாவது நாவல் கோரை ஆகும். மூன்றாவது நாவலான ‘நெடுஞ்சாலை’ நாவலைக் குறிப்பிடுகிறார். இந்நாவலில் அரசு போக்குவரத்துக் கழகம் ஒன்றில் தற்காலிகப் பணியாற்றும் மூன்று இளைஞர்களின் பாடுகளை சித்தரிக்கிறார் என்றும் கண்மணி எழுத்தில் எந்தத் துன்பத்திலும் இக்கட்டிலும் குபுக்கென்று கொப்பளித்து வரும் நகைச்சுவை உண்டு என்பதையும் குறிப்பிடுகிறார். காப்பிய இமயம் என்ற கட்டுரையில் வால்மீகி இராமாயணம், கம்பரின் இராமாவதாரம், துளசிதாசரின் இராமசரித மானசம், அத்யாத்ம இராமாயணம், காளிதாசரின் ரகுவம்சம் ஆகிய நூல்களை மூலமொழியில் கற்றுத் தேர்ந்து பேரறிஞர் என்.வி. நாயுடு என அறியப்பட்டவர் அவ்வப்போது எழுதி வைத்த கட்டுரைகளும் குறிப்புகளுமே ‘காப்பிய இமயம்’ எனும் நூலாகும். அவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்துப் பதிப்பித்தார்கள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி, அருள்நிதி, இராம. இருதப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடாக 2000ஆம் ஆண்டு வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். மேலும் வ.வே.சு.ஐயரின் ‘Kamban – A Study’ எனும் நூல் உலக அரங்கில் கம்பராமாயணத்தைப் பெருமைக்குரியதாக நிறுவும் முயற்சியில் முனைந்ததைப் போல, ‘காப்பிய இமயம்’ எனுமிந்த நூலும் கம்பராமயணத்தைக் காப்பியங்களில் உன்னதமானது என நிறுவ முயல்வதாகக் கூறுகிறார். மேலும் இக்கட்டுரைத் தொகுப்பு நூல் முழுவதும் பல்வேறு நூல்களை அறிமுகப்படுத்துகிறார். பாதசாரியின் மூன்றாவது புத்தகம் அன்பின் வழியது உயிர் நிழல், வெங்கட்சாமிநாதனின் நினைவுகளின் சுவட்டில், கலாப்பிரியாவின் ‘தன் வரலாற்றுக் கட்டுரைகள்’ ஆ.மாதவனின் ‘கிருஷ்ணப் பருந்து’ என நினைவுகளின் சுவட்டில் என்ற கட்டுரையில் அறிமுகம் செய்கிறார். ஐம்பதாண்டு காலத்தமிழ் நாவல் எனும் கட்டுரையில் நாவல் இலக்கியத்தில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான காலகட்ட நாவல்களை அறிமுகப்படுத்துகிறார். தமிழில் நாவல்களானது 1890 முதல் 1925 வரை 1089 நாவல்கள் எழுதப்பட்டன என்ற தகவலையும் கூறுகிறார். இதில் கல்கி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, அகிலன், அநுத்தமா, லக்ஷ்மி, ஜெயகாந்தன், க.நா.சு, ராகம் கிருஷ்ணன், பூமா வாசுகீ, கண்மணி குணசேகரன், எஸ்.செந்தில் குமார், பாமா, சு. வெங்கடேசன், பா.வெங்கடேசன், தி. ஜானகிராமன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், அசோகமித்திரன்,  சா. கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, நீல.பத்மநாபன், ஆ.மாதவன், நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், ஐசக் அருமைநாதன், பொன்னீலன், தோப்பில் முகம்மது மீரான், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், பா. விசாலம், ஜோடி குரூஸ், பூமணி, கோணங்கி, P.A. கிருஷ்ணன், கு. அழகிரிசாமி, டி. செல்வராஜ், கு. சின்னப்ப பாரதி, பெருமாள் முருகன், ராஜ்கெளதமன், யுவன், சிவகாமி, இமயம், தமிழ்ச்செல்வி, சல்மா எனப் பல்வேறு ஆளுமைகளையும் அவர்களின் படைப்புகளையும் அறிமுகப்படுத்துகிறார். 1875 முதல் 2015 வரையிலான 140 ஆண்டுகால நாவல் வரிசையினைப் பட்டியலிடும் பணியைப் பற்றியும் இன்னும் பல நாவல்கள் நம் மொழியில் எழுதப்படுமா? என்ற வினாவுடனும் கட்டுரையினை முடிக்கின்றனர்.

இவ்வாறு ‘பனுவல் போற்றதும்’ என்ற கட்டுரை நூலில் பல்வேறு அரிய படைப்புகளையும், ஆராய்ச்சி நூல்களையும் மேற்கோள்களாக நமக்கு அறிமுகம் செய்வதுடன் அந்நூல்கள் எங்கு எவரால் பதிப்பிக்கப்பட்டன என்பது குறித்தும் பதிவு செய்துள்ளார். இன்னும் பல நூல்களையும் இக்கட்டுரைத் தொகுப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தமது கட்டுரைகள் அனைத்திலும் மேற்கோள்களை மிகுதியாக கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*****

துணைநூல்:
பனுவல் போற்றுதும் – நாஞ்சில் நாடன், தமிழினி பதிப்பகம்

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்),
தமிழ்த்துறை,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,
வேலூர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *