========================

திருச்சி புலவர்  இராமமூர்த்தி

—————————————————-

 

சிவபெருமான்  என்ற பரம்பொருள்  சொரூபம் , தடத்தம்  என்ற இருநிலைகளில் இருப்பார். அவற்றுள்  சொரூபம்  என்பது  உலகத்தாரால்  உணர்ந்து  கொள்வதற்கு  அரிய உயர்நிலை.  அருவம்  உருவம்  அருவுருவம்  என்ற வடிவங்களுடன் எங்கும் நீங்காமல் உறைபவன் சிவன்.அவ்வாறு எங்கும்  உறைகின்றார்  சிவபெருமான்  என்று அனைவரும் வழி படும் போது, பெருமானே  நீ   ஒளித்திருமேனி  தாங்கி அருட்பெருஞ்ஜோதியாய் விளங்கி  அருவமும் இல்லை,  உருவமும்இல்லை  அருவுருவமும் நான் கொள்ளவில்லை என்று விளங்குகிறாய்!அதனை    ”ஒருநாமம்  ஓர் உருவம்  ஒன்றும் இலார்க்கு ” என்று மணிவாசகர் அடையாளம் காட்டுகிறார்.

இவ்வாறு  இறைவன் அருவவடிவத்துடன்  புலன்களுக்கு  எட்டாமல்  ”உலகெலாம்  உணர்ந்து ஓதற்கரியவனாகவும்”,  உருவத்திருமேனி கொண்டு, ”நிலவுலாவிய நீர்மலி வேணியனாகவும், அருவுருவத் திருமேனி கொண்டு ‘சிவலிங்க வடிவிலும்,   மூன்று வகையிலும் ‘அலகில் சோதியனாகவும்” விளங்குவதைச் சேக்கிழார் பெருமான், திருத் தொண்டர்  புராணத்தில் குறிப்பிட்டருளுகிறார், ‘’அலகில்சோதியன்’’ என்பதனால்,  சிவபிரானின் வெளிப்பட்ட நிலையில்  ஒடுங்கிய சிவ இயல்பும்,‘’அம்பலத்தாடுவான்’’ என்பதனால் அவனது வெளிப்பட்ட அதிகார சிவ இயல்பும் , ‘’நிலவுலாவிய நீர் மலி வேணியன் என்பதனால்  வெளிப்பட்ட சிவபிரான் அனைத்துயிர்க்கும்  இன்பந்தரும் சிவ இயல்பும் கொண்டு விளங்குவதைச்  சைவ சித்தாந்தம் விளக்குகிறது.   .

அச்சிவபிரானின்  சடையில் தங்கிய கங்கையைத்  தென்னாட்டின் காவிரியுடன் ஒப்பிட்டுச் சேக்கிழார் பாடுகிறார். பெருமை மிக்க தென்திசையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தோன்றிய சிறப்பினைக்  கூறும்போது,  கங்கைக்கு நிகரானது காவிரி என்று பாடுகிறார். அப்பாடலில்  காவிரியாறு  தான்  தோன்றிய சைய மலைத் தொடரில்  நிலவு திகழும் முடியாகிய  சிகரத்தின்   உச்சியில்  , வெண்மையான  நுரையுடன் அருவியாகிப் பொங்கிக் கீழ் நோக்கிப் பாய்ந்து மோதிப் புனிதம் மிக்க பொன்னி நதியாகித் தென்னாடெங்கும்   பாய்கிறது எனப் பாடுகிறார்.  அதனை,

‘’திங்கள்சூ  டிய முடிச்  சிகரத்து   உச்சியில்

பொங்குவெண்   தலை நுரை   பொருது  போதலால்’’

எனப்பாடுகிறார்.    இந்தப் பாடற்பகுதிக்கு ,  கங்கை  யாறு  தான் தோன்றிய இமய மலைச் சிகரமாகிய முடியில், வானத்திலிருந்து வெள்ளிய நுரை பொங்கும் நதியாகப் பாய்ந்து மோதிப்  பின்  மெதுவாக வழிந்து வடதிசையில் புனித நதியாகப்  பாய்கிறது  என்றும் பொருள் கொள்ளலாம்.  மேலும் சேக்கிழார்,

‘’எங்கள் நாயகன் முடி மிசை  நின்று ஏய்ந்து இழி கங்கை !’’ எனப்  பாடுகிறார். இதற்கு ’இந்த கங்கை எங்கள் இறைவனாம் சிவபிரானின்  சடைமுடியில் பாய்ந்து ஓர் ஓரத்தில் தேங்கி, புனித நதி என்ற சிறப்புடன் பாய்கிறது  என்பது பொருள்.  இந்த கங்கையே  அகத்திய முனிவரின் கமண்டலத்தில் அடங்கியது.  தேவேந்திரன் சீர்காழியில் அமைத்த நந்தவனத்தில் பாய்வதற்காக,  விநாயகன் காக வடிவெடுத்து அக்கமண்டலத்தைக் கவிழ்த்தமையால் காவிரியாகிப் பெருகியது. இதனைக்  கந்தபுராணம் விரிவாகப் பாடுகிறது. இதனைப் பிரபுலிங்க லீலை ,

‘’சுரகு    லாதிபன்     தூய்மலர்    நந்தனம்

பெருக   வார்கடல்   பெய்தவ   யிற்றினோன்

கரக      நீரைக்       கவிழ்த்த     மதகரி

சரணம்   நாளும்  தலைக்கணி  யாக்குவாம்!’’

என்று பாடுகிறது. ஆகவே   கங்கையே  காவிரி, காவிரியே  கங்கை என்று இருபொருள் பட  இப்பாடல் அமைந்துள்ளது.  கம்பரும் காவிரி நாடன்ன கழனி நாடு  என்று கோசல நாட்டைப்  பாடுகிறார்.

இவ்வாறு  வடதிசைக்  கைலையில்  தோன்றிய சுந்தர மூர்த்தி சுவாமிகள் தென்திசையில் தோன்றித்  தம் பாடல்களால் சைவ சமயத்தை வளர்த்தார்.  அவ்வாறே வடதிசை கங்கையும் காவிரிக்கு நிகராகத்  தென்னாட்டில்  பாய்ந்து, வளம் செய்கிறது என்ற கருத்தில்  சேக்கிழார் பாடிய பாடல் ,

‘’திங்கள்சூ         டியமுடிச்        சிகரத்         துச்சியில்

  பொங்குவெண்   டலைநுரை  பொருது  போதலால்

  எங்கணா     யகன்முடி     மிசைநின்     றேய்ந்திழி

   கங்கையாம்   பொன்னியாங்  கன்னி  நீத்தமே!’’

நயத்துடன்  விளங்குகிறது,

Leave a Reply

Your email address will not be published.