பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.09.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

13 thoughts on “படக்கவிதைப் போட்டி – 178

 1. மண்ணில் தெரியுது வானம்.

  வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை
  வானில் வரைந்தவர் யார்?
  மண்ணில் அதன்நிழல் நீரில் விழும்படி
  மாண்புறச் செய்தது யார்?
  கண்ணைக் கவர்கிற காட்சியின் மாட்சியைக்
  காட்டி மறைப்பவர் யார்?
  எண்ணில் அவரிங்கு எங்கும் நிறைந்துளார்
  என்பதை யாரறி வார்?

  அ.இராஜகோபாலன்

 2. உதயமா ?, இல்லை
  ஒருநாளின் முடிவா?
  கருமையும் வெளுப்பு
  இருளும் ஒளியுமாய்
  நிறம் கடந்த காதல்
  நிழலற்று நிற்கிறது

 3.      அகிலத்தின் ஆன்மா!!
       _______________________
  அதிகாலை வரவோ?
  அந்திவேளைமறைவோ?
  அழகிய கிரகணங்களால்
  அரும்பிடும் வெளிச்சம்
  அகிலத்தின் இயக்கம்!!
  அனைத்தையும் படைத்து
  அரவணைக்கும் பேரொளி!
  அணுவளவும்‌ பிசகாமல்
  அடிவானில் எழுந்து வந்து
  அள்ளித்தரும் ஆற்றலின்
  அற்புதத்துக்கிணையேது??
  அடிநாதமாய் பூமிப்பந்தை
  அசைவிக்கும் கதிரவனே
  அப்பட்டமான இறைரூபம்!!
  அலைகடல் ஓரம் நின்று
  அவன் எழிலை தரிசிப்பது
  அளவில்லாப் பேரானந்தம்!!
  அனுபவிக்கும் போதுதான்
  அதன் அர்த்தம் புரியும்!!
  அண்டசராசரம் முழுதையும்
  அவதானிப்பவனை எண்ணி
  அடிபணியும்பிரார்த்தனையில்
  அந்த ஆதவனைசரணடைந்து
  அளப்பரிய வளம் பெறுவோம்!!!
  (ஏ.ஆர்.முருகன்..மயிலம்பாடி
  பவானி.. ஈரோடு..9442637264)

     

 4. “கடல்”

  கடலால் சூழ்ந்த கலையுலகம்
  ……….கணக்கே இலாத ஆழமுண்டு.!
  அடக்க மிருந்தும் ஆபத்தாம்
  ……….ஆர்ப்ப ரிக்கும் அதனலையே.!
  இடமும் கொடுத்து ஏகமாக
  ……….ஈந்த ருளுமே உணவையுமே.!
  கடல்வி ளையும் அமுதங்கள்
  ……….கொடுப்ப தாலே வள்ளலாமே.!

  கம்பு கொண்டு தள்ளுகின்ற
  ……….கட்டு மரமும் கடலினுள்ளே.!
  அம்பு போன்று சீறுகின்ற
  ……….அலைகள் நடுவே மீனவர்கள்.!
  வெம்பு மனமும் கொந்தளிக்க
  ……….வேத னையை உண்டாக்கும்.!
  தெம்பு வேண்டும் கடல்சார்ந்து
  ……….தம்மு யிரையும் காப்பதற்கே.!

  ஓடும் கப்பல் கடல்நடுவே
  ……….ஓடி ஆடும் ஒர்வாழ்க்கை.!
  ஆடும் ஓடம் அதிலுண்டு
  ……….அடுத்த நொடிநிச் சயமில்லை.!
  பாடும் பாட்டும் பண்ணாகும்
  ……….படும் துன்பம் அளவில்லை.!
  தேடும் மீன்கள் அதிகளவில்
  ……….திண்டா டியபின் கிடைக்குமாமே.!

  =============================
  அறுசீர் ஆசிரிய விருத்தம்
  மா = மா= காய்
  =============================
  குறிப்பு:: மீனவர்களின் துயரை நினைவு கொளும் விதமாகப் புனைந்தது

  “பாண்டிச்சேரி கவிமன்றம்” நடத்திய மாபெரும் கவிதைப் போட்டியில் இருநூற்றைம்பது கவிதைகள் இடம்பெற்றதாக அறிவித்து இருந்தார்கள். இப்போட்டியில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பங்கு பெற்ற அருங்கவிஞர்களுக்கிடையே, நாம் எழுதிய இக்கவிதை ஐந்தாவது இடத்தில் “சொல்லாடல்” பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

  வல்லமை படக்கவிதைப் போட்டிக்கு, இக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

 5. சந்திப்பு…

  இதயம் இணைந்த காதலர்கள்
  இணைந்தே வந்த கடற்கரையில்
  உதய நேரக் கதிரவனும்
  உவந்தே வந்தான் இணைகாண,
  புதிதாய் வாழ்வைத் தொடங்குமிவர்
  பகலவன் வரவில் மகிழ்கின்றார்,
  சதிபதி யிவர்களை வாழ்த்தியேதான்
  சிவந்தது வானின் முகமதுவே…!

  செண்பக ஜெகதீசன்…

 6. குழப்பம்
  ==========

  தூரத்தில் சூரியன்
  அருகினில் நிலவு
  எதை ரசிப்பது
  குழப்பத்தில் அவன்.
  ____________________________

  கண்ணாடி
  *************

  அடி பெண்ணே
  சூரியனுக்கு நீர்தான்
  கண்ணாடி
  அந்த சந்திரனுக்கு
  நீதான் கண்ணாடியோ
  ஆம் உன்முகத்தில்
  நிலவு தெரிகிறதே.
  _____________________________

  உறுதி
  ********

  நீலக்கடலில்
  குளித்த பிறகும்
  நிறம் மாறவில்லை
  சூரியன்.
  _______________________________

  சுடும் நிலா
  *************

  உன்னருகில் சந்திரனை
  வைத்துக்கொண்டே
  விண்வெளியின்
  சூரியனை விரும்பி
  படம் எடுக்கின்றாயே
  அந்தச் சூரியனைவிடவா
  சுடுகின்றாள் உந்தன் நிலா.
  _________________________________

  விடாமுயற்சி
  ***************

  நேற்றுமாலை
  மேகக்கூட்டம் அழைத்துச்சென்று
  மேற்கில் புதைத்தன
  இன்றுகாலை
  அதன் சோகம் மனதில் சிறிதுமின்றி
  கிழக்கில் உதித்தது.
  ______________________________________________

  -வசந்திமணாளன்.

 7. செம்பொற் சோதி

  அந்திச் சிவப்பழகா அதிகாலைச் சூரியனா
  செந்தீ உமிழுகின்ற சிவனது நெற்றிக் கண்ணா
  பரிதியாய் அடிவானத்தில் பளிச்சிடும் செம்பொற் சோதி
  விரிதழலன்ன முன்னே விளங்கிடும் காட்சியென்னே?

  புவியினில் மாந்தர் செய்யும் புன்மைசேர் செயல்கட்காக
  ரவியவன் சினக்கின்றானா? ரம்மியமூட்டி மண்ணை
  அன்பொடு நோக்கும் நோக்கா அல்லது வெறுக்கும் போக்கா
  இன்பமாய் வாழ்வீரென்றே எமக்கவன் அளிக்கும் வாக்கா

  மேழியர் போற்றும் செய்ய விரிகதிர் தொலை தூரத்து
  ஆழியின் விளிம்பிற் தோன்றும் அற்புதக் காட்சியோடு
  ஆழியினீரமண்ணில் ஆதவன் விம்பம் வந்து
  வீழ்வதும் அழகுக் காட்சி விரைந்தததை இருவர் சேர்ந்து
  தோழமையோடு நின்று சொடுக்கியே கமராவுக்குள்,
  வீழவைக்கின்ற காட்சி மேலும் பேரழகு அந்தத்
  தோழரின் பின்னே மெல்லத் தொடர்ந்தொரு படஞ்செய்திட்டார்.
  வாழ்வினில் இன்பஞ்சேர்க்கும் வழிகளிலிதுவு மொன்றே.
  (மேழியர்-உழவர், சொடுக்கினர்- கிளிக் செய்தனர்)

 8. கடற்கரையில் காதலர்கள் உற்சாகத்துடன் காணொலி எடுத்து மகிழும்போது, அதைக் காணுகின்ற கவிஞனுக்கும் பலவாறு கவிதைகள் எழுதத் தோன்றாதா..

  இதோ ஒரு வெண்பா

  கவிஞனின் காதல்
  =================

  கவிதை எழுதக் கருவாக வந்தாய்.!
  கவிஞரின் நெஞ்சைக் குலைத்தாய்.! – புவிதனில்.!
  உன்னழக் கின்னொர் உவமையும் இல்லையே.!
  நின்னையே சுற்றுமே நெஞ்சு.!

  ==================
  *நேரிசை வெண்பா*

 9. அன்பான காதலர்கள் கடற்கரையில் அலைகளையும் அருங்காட்ச்சியையும் படமெடுக்கிறார்கள்.

  ===================================
  அன்பான காதலர்கள் அங்கே படமெடுக்க
  இன்பமாய் இன்று இணைந்தார்கள் – அன்பால்
  எவரும் எதைச்செய்ய எத்தனித் தாலும்
  எவருக்கும் வெற்றி எளிது.!
  ======================================

  இரு விகற்ப நேரிசை வெண்பா

 10. இரு விகற்ப நேரிசை வெண்பா
  ===========================

  அலைகடல் ஆர்பரிக்கும் அற்புதக் காட்சி
  அலைபேசி உள்ளே அமர்ந்து – தலைமுறை
  போற்றுகின்ற நல்ல படமாய் அமைந்தது
  மாற்றம் விரும்பும் மனது

  ===========================

 11. *குளிரும் சூரியன்*
  உந்தன் வெப்பத்தை உலகுக்கு கொடுத்து
  உன்னை குளிர்விக்க உட்கடல் சென்றாயோ
  நீ மட்டும் எப்படி மேற்கில் மறைந்து
  கிழக்கில் உதிக்கிறாய் உறங்கும்
  வேளையில் இடம் மாறிச் சென்றாயோ
  வெப்பத்தின் பிடியில் நீரும் தனது நிலையை
  இழக்கும் கடலில் ஏதும் மாற்றம் இல்லையே
  உந்தன் ஜாலம் என்னிடம் மட்டுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *