கவிஞர் விந்தனின் படைப்புலகம் – 1
-முனைவர் நா.பிரபு
சுயமரியாதை எழுத்தாளர் விந்தன் அவர்கள் தம் எழுத்துலக வாழ்வில் பல்வேறு தடங்களில் பயணித்தவர். அஃதாவது நாவல்கள், சிறுகதைகள், குட்டிக்கதைகள், கவிதைகள், திரையிசைப்பாடல்கள், கட்டுரைகள் எனப் பன்முக ஆளுமையோடு விளங்கியவர். சிறந்த எழுத்தாளனாகவும் கவிஞனாகவும் தன்னை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்ட விந்தனின் படைப்புகளை இக் கட்டுரை ஆய்கின்றது.
நாவல்கள்
விந்தன், கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, காதலும் கல்யாணமும், சுயம்வரம், தெருவிளக்கு ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் ‘தெருவிளக்கு’ முற்றுப்பெறவில்லை. விந்தன் அவர்கள் சில நாவல்களை மட்டுமே எழுதி இருப்பினும் அவை அனைத்தும் சமுதாயத்தில் எழுச்சிகளையும் எண்ணக் கிளர்ச்சிகளையும் உண்டாக்கியன.
கண் திறக்குமா?
அரசியல் சார்பற்ற இலக்கியவாதியாக விளங்கிய விந்தன், ஒரு பேரியக்கத்தின் பெயரால் நடைபெற்ற மோசடிகளைக் காணப்பொறுக்காமல் தவறுகளைச் சுட்டி சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பும் பணியில் பெரிதும் தம்மை ஆட்படுத்திக்கொண்ட பொன்னி இதழில் ‘நக்கீரன்’ என்னும் புனைபெயரில் எழுதிய நாவல் கண் திறக்குமா?.
“தவறுகளை வெளியே நிறுத்திக் கதவைத் தாழிடுவாயானால், உண்மையும் வெளியே நின்றுவிடும்!” என்னும் மகாகவியின் சிந்தனையோடு தொடங்கும் இந்நாவலில் தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தம் தங்கை மற்றும் உடமைகளை எல்லாம் இழந்து நிற்கும் செல்வம், போலியான அரசியலும் பொய்யான தத்துவங்களும் நாட்டில் வரவேற்கப்படுவதைக் கண்டு வேதனையுற்று இறுதியில் பொய்யெல்லாம் மெய்யென்றும், போலியெல்லாம் உண்மை என்றும் நம்பி அதற்குத் தம்மையே ஈடுபடுத்திக்கொள்வதாகக் காட்டியுள்ளார்.
ஏழை எளிய பெண்களின் கற்பைச் சூறையாடிய கயவன் சிவகுமார், ஒரு நாள் வீராங்கனை ஒருத்தியால் கொலை செய்யப்பட்டதும் சிவகுமார் இந்த தேசத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்தான் என்று செல்லுமிடமெல்லம் பரப்புரை மேற்கொண்டு தன் மகனைத் தியாகியாக்க நினைக்கும் ‘பாரிஸ்டர் பரந்தாமன்’ செயல்களையும் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்நாவலில் காந்தியின் பெயரால், பணத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை, மோசடிகளைக் கண்டும் காணாமல் கண்மூடிக் கிடக்கும் சமூகமே! உன் கண் திறக்குமா? என்று கேட்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது.
இந்நாவலில் சூத்திரர்-பார்ப்பனர் பேதத்தை இவ்வாறு காட்டுகிறார்: “அப்பொழுதெல்லாம் இவனுக்கு நான் சூத்திரச்சி என்றும் இவனுடைய அப்பா பிராமணரென்றும் தெரியாது. ஆகவே, எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் என்னுடன் பழகுவான். அதெல்லாம் அந்தக்காலம். இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இருக்க முடியுமா?” என்றாள் செங்கமலத்தின் தாயார் பாலுவை நோக்கி.
“ஏன் முடியாது சித்தி? நிச்சயம் முடியும்!” என்றான் பாலு.
“எப்படி முடியும்? புனிதம் மிக்க உங்கள் மனுதர்மம் அதற்கு இடம் கொடுக்காதே!” என்றேன் நான் சிரித்துக் கொண்டே.
“மனுதர்மமாவது, மண்ணாங்கட்டியாவது?” என்னைப் பற்றி நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். மனித தர்மத்தைத் தவிர வேறொரு தர்மத்தையும் நான் ஒப்புக்கொள்வதில்லை” என்றான் பாலு ஆவேசத்துடன்.
“நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கவில்லை. சட்டம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அழகான உலகத்தில் எந்தக் காலத்திலாவது மனுதர்மராஜன் என்றொரு புண்ணியவான் இருந்தானோ இல்லையோ, அவன் பெயரால் ‘இந்து’ லா (Hindu Law) என்றொரு சட்டம் மட்டும் இன்றுவரை இருப்பது உண்மை. அந்தச் சனியன் பிடித்த சட்டம் இல்லாமலிருந்தால் உன் சித்திக்கு இந்தக் கதி வந்திருக்குமா? என்றேன் நான்.
பிராமணப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்ட சூத்திரன் இறந்துவிட்டால் அந்தச் சூத்திரனின் சொத்தில் பங்குகொள்ள அந்தப் பிராமணத்திக்கு உரிமையுண்டாம். ஆனால்…சூத்திரப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்ட பிராமணன் இறந்து விட்டால், அவனுடைய சொத்தில் பங்கு பெறச் சூத்திரப் பெண்ணுக்கு உரிமை இல்லையாம்” எனக் காட்டுவதன் மூலம் இந்து திருமண சட்டம் சூத்திரர்களுக்கு எதிரானது என்பதைக் காட்டி விமர்சிக்கின்றார்.
“எதை எழுதினாலும் அதில் உயிர் இருக்க வேண்டும்; உணர்ச்சி இருக்க வேண்டும் என்பது, நான் எழுத ஆரம்பித்தபோதே எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை. இவை இரண்டும் இல்லாமல் எழுதுவதில்தான் என்ன பயன்?” (நாவல் பிறக்கிறது, கட்டுரை) என்று கேள்வி எழுப்பும் விந்தன், தம் முதல் நாவலான கண் திறக்குமா? கதையை உணர்ச்சியோடும் துடிப்போடும் எழுதியுள்ளார்.
பாலும் பாவையும்
1950–இல் கல்கி இதழில் தொடராக வெளிவந்த இந்நாவல் பிற்காலத்தில் விந்தனை ‘பாலும் பாவையும் விந்தன்’ என அடையாளாப்படுத்துமளவிற்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. பாலும் பாவையும் என்னும் நாவல் ‘அகல்யா’ என்னும் பாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. இக்கதையில் வரும் அகல்யா இந்திரன் என்பவனைக் காதலிக்கிறாள். அவனும் அவளைக் காதலித்து ஏமாற்றுகிறான். அவனிடம் தன்னை இழந்த அகல்யா ஒரு சூழலில் கனகலிங்கம் என்பவனைச் சந்தித்து அவனைக் காதலிக்கிறாள். அகல்யாவின் சித்தப்பா செய்த சூழ்ச்சியால் கனகலிங்கம் கொல்லப்படுகிறான். இந்நிலையில் அகல்யாவிற்கு தசரதகுமாரன் என்பவன் அடைக்கலம் தந்து அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அப்பொழுது வேலைக்காரன் ‘நீங்கள் வரத் தாமதமானதால் பால் கெட்டுவிட்டது’ எனக் கூறுகிறான். அதைகேட்ட தசரதகுமாரன் பாலும் பாவையும் கெட்டால் பயன்படாது என அகல்யாவைக் கைவிடுகிறான். கெட்டுப்போன பாலும் பாவையும் ஒன்றா? என நினைத்துக்கொண்டு, இந்த மனிதர்களைவிட இந்தச் சமூகத்தைவிட ஆயிரமாயிரம் மடங்கு பெரியதும் பரந்து விரிந்ததுமான கடல், யார் கைவிட்டாலும் அது தன்னைக் கைவிடாது; யார் கதவைச் சாத்தினாலும் அது கதவைச் சாத்தாது என்கிற எண்ணம் அகல்யாவிற்குப் பளிச்சிடவே அவள் கடலை நோக்கி ஓடுகிறாள். கடல், கெட்டுப்போனவள் என்று நெட்டித் தள்ளவில்லை. ஓடிப்போனவள் என்று ஒதுக்கிவிடவில்லை; பழியைச் சுமந்தவள், பாதிக்கப்பட்டவள் என்னும் பரிவோடும் பாசத்தோடும் வங்கக் கடல் அகல்யாவை வாரியணைத்துக் கொண்டது.
“நல்லவர்கள் வாழ்வதில்லை
நானிலத்தின் தீர்ப்பு” என்று முடித்துள்ளார்.
இந்நாவலில் விந்தன் “கடவுளைத் துணைக்கு அழைப்பவர்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்களெல்லாம் யார் என்று நினைக்கிறீர்கள்? அவர்களில் பெரும்பாலோர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பவர்கள். தோலிருக்கச் சுளை விழுங்கிகள். கன்னக்கோல் திருடர்கள். தூங்கும்போது கழுத்தை அறுப்பவர்கள், படுமோசக்காரர்கள், பாவிகள், நயவஞ்சகர்கள் ஆகியவர்கள்தான்” என்று கனகலிங்கம் அகல்யாவிடம் கூறுவதாக ஓர் உரையாடலை அமைத்துள்ளார். “பொழுதை வீணாகப் போக்காதே, அப்படிப் போக்குவதாயிருந்தால் எந்தச் சமயத்திலும் உன்னைக் கைவிடாத நண்பர்களான புத்தகங்களைப் படிப்பதில் போக்கு” என்று பிறிதொரு சூழலில் கனகலிங்கம் அகல்யாவுக்குக் கடிதம் எழுதி வைத்திருப்பான். காதலனால் கைவிடப்பட்ட அகல்யாவிற்கு, எந்தச் சமயத்திலும் ‘உன்னைக் கைவிடாத நண்பர்கள்’ என்று புத்தகங்களைச் சுட்டுகிறார்.
இலங்கைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கைலாசபதி அவர்கள் பாலும் பாவையும் நாவல் பற்றிப் பதிவுசெய்துள்ள கருத்து இந்நாவலின் சிறப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கதாகும். “பாலும் பாவையும் ஆசிரியர் வேண்டுமென்றே இராமாயணப் பாத்திரங்களையும் கதா சம்பவங்களையும் குறிப்பிடுகிறார். இதனால் இதிகாசமும் நவீன கதையும் ஒன்றையொன்று ஒட்டவும் வெட்டவும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆசிரியர் பழைய கருத்துக்களைக் கொள்ளும்போதும், தள்ளும்போதும் நின்று நாம் கவனிக்குமாறு இசைவுப்பொருத்தங்களை உணர்த்திக்கொள்கிறார்.” என்று தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.
“பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றியே பெரும்பாலும் கதை எழுதிக் கொண்டு வந்த தாங்கள், காதலைப் பற்றி ஏன் எழுத வேண்டும்?” என்று பெண் வாசகர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு, “காதல் தோல்வியுறுவதற்குக்கூடக் காரணம் பொருளாதார நிலைதான்; அதைத்தான் இந்தக் கதையில் வரும் கனகலிங்கம் அகல்யாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான்” என்று விந்தன் முன்னுரையில் சொல்லியிருப்பது, ஏதோ சமாதானத்திற்காகச் சொன்னதுபோல் இல்லாமல் மிகுந்த பொறுப்புடனும் சமூக நோக்குடனும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதையே இந்நாவல் உணர்த்துகின்றது. மேலும், “பெண்குலத்தை மாசுபடுத்துவதற்காக நான் இந்தக் கதையை எழுதவில்லை; தூய்மைப்படுத்துவதற்காகவே எழுதியிருக்கிறேன். இந்தக் கதையில் வரும் அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை. அவள் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிடும்போது மட்டும் எனக்கு அந்த இனத்தின் மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டியிருக்கிறேன் -அவ்வளவுதான்” இத்தகைய அழுத்தமானக் கருத்துக்களைக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“கெளரவம் தகுதியைப் பொறுத்தது. அது நம்மைத் தேடிக்கொண்டு வரவேண்டுமே தவிர நாம் அதைத் தேடிக்கொண்டு செல்லக்கூடாது. அப்படித் தேடிச்சென்று அடையும் கெளரவம் நிலைக்கவும் நிலைக்காது. பொன்னுக்கும், பொருளுக்கும் உள்ள மதிப்பு இந்தக் காலத்தில் பெண்ணுக்கு ஏன், அவள் கற்புக்குக்கூட இல்லைதான்” (பாலும் பாவையும்) என்று கருதியவர் விந்தன். அதனை இந்நாவலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
அன்பு அலறுகிறது
1957 ஆம் ஆண்டு ‘அமுத சுரபி’ இதழில் ‘அன்பு அலறுகிறது’ என்னும் தொடர்கதையை எழுதினார். “பிறர்மனை நோக்காத பேராண்மை – சான்றோர்க்கு அறனன்றோ ஆன்ற ஒழுக்கு” என்னும் குறளைக், கேட்டும் படித்தும் அறியாத பாமரர்கள் – ஏழை எளியவர்கள் ‘பிறர்மனை நோக்காத பேராண்மை’யாளர்களாக வாழ்ந்துவந்த போதிலும், படித்தவர்கள் அதிலும் தமிழைப் படித்தவர்கள் குறளுக்குப் புதிய புதிய உரைகளைக் கண்டுபிடித்தார்கள்! எப்படி? ‘பிறர்மனை நோக்குதலே பேராண்மை!’ என்னும் போக்கில்!
இத்தகைய புதுமைகளும் புரட்சிகளும் புற்றீசல்கள் போல் பெருகி வளர்ந்து தமிழர்களின் வாழ்க்கையை, பண்பாட்டைச் சீர்திருத்தம் என்கிற பேரால் சீரழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், இருபது வயது நிறைந்த லலிதாவுக்கும், அறுபது வயது நிறைந்த பணக்காரருக்கும் திருமணம் நடக்கிறது; அதுவும் இரண்டாம் தாரம் என்கிற சமூக முத்திரையோடு. தாய் – தந்தையை இழந்து அத்தையின் ஆதரவில் வளர்ந்த லலிதா, தனக்கு வாய்த்த இரண்டாந்தாரத் திருமணத்தை மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறாள்.
இவளின் திருமணத்தையும், வயோதிகக் கணவரையும் கண்டு அனுதாபப்பட்ட ‘சிநேகிதி’களுக்காக இவள் ரொம்பவும் அனுதாபப்படுகிறாள்! ஏனெனில், வாழ்க்கைக்கு உயிர்போன்ற அன்பே பெரிதென்றும், அத்தகைய அன்பு எங்குக் கிடைத்தாலும் சரி அதற்கு வாலிபம், வயோதிகம் என்கிற வேறுபாடு கிடையாது என்றும் மெய்யாகவும் நம்புகிறாள். ஆம், அந்த அளவிற்கு வயோதிகக் கணவர் அவள் பேரில் அன்பைப் பொழிகிறார்; அந்தரங்கச் சுத்தியோடு நடந்துகொள்கிறார்.
ஆனால், முதலிரவோடு அந்த முழு நிலவுக் காட்சி முடிந்து விடுகிறது! அடுத்து ஒரே இருட்டு. எதிர்பாராமல் ஏற்படுகிறது. ஒரு விபத்து! அந்த விபத்தில், ‘ஆண்மை’யை இழந்து விடுகிறார் வயோதிகர்; அத்துடன் அவள் மெய்யாக நம்பிய ‘அன்பு அலறுகிறது!’
எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் தன் கணவர் ‘ஆண்மை’யை மட்டும்தான் இழந்தார் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவரோ சகல பண்புகளையும் இழந்து மிச்சச் சொச்சம் ஏதும் இல்லாதவராய்ப் பேச ஆரம்பித்தார். அதற்கு முன்னுதராணமாகத் தம் மனைவியை எவனுக்காவது தாரை வார்த்துக் கொடுத்திட வேண்டும் என்கிற முடிவுதான்!
இந்தப் ‘புரட்சி’கரமான முடிவிற்கு எழுத்தாளன் ஒருவன் துணைசேர்கிறான்; அவளுக்கு அத்தான் முறையான மற்றொருவனும் அவளைச் சுற்றி வருகிறான். கடைசியில் அந்தப் பணக்கார வயோதிகன் தன் மனைவியை எழுத்தாளனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்குப் பயணமாகி விடுகிறார்!
கணவனின் முடிவைக் கேட்டு அவள் உள்ளம் அலறுகிறது! எழுத்தாளனும், அத்தானும் ஒவ்வொரு நிமிடமும் போட்டி போட்டுக் கொண்டு அவளை அடைவதற்கும், அந்தஸ்தை அனுபவிப்பதற்கும் ‘தெருச்சண்டை’ போட்டுக் கொள்வதைக் காணப் பொறுக்க முடியாமல் ஊருக்குப் புறப்பட்டுப் போகிறாள்.
முடிவில் ‘பிறன்மனை நோக்குதலே பேராண்மை….!’ என்னும் வெறியோடு வாழும் மனிதர்களை வெறுத்து, அவர்கள் எதைச் செய்தாலும் ‘அன்பு’ என்றும் பண்பு என்றும் மூடிமறைக்கும் சமூகத்தைத் துறந்து, தன் உயிரை முடித்துக் கொள்ளத் துணிகிறாள். அதற்கு முன்… எவரும் ‘அன்புப் பணி’ செய்யாமல் அமைதியாகயிருப்பவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் பரிசு அளிப்பதாகவும், அதற்குத் தன்னுடைய சொத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்து இவ்வுலகத்தை விட்டு விடுதலை பெறுகிறாள். அவளுடைய முடிவைக் கண்டு ‘சிநேகிதி’ அலறுகிறாள்; அன்பு அலறுவது போல்!
காதலும் கல்யாணமும்
தினத்தந்தி நிறுவனத்தின் ‘இராணி’ இதழில் ‘கனவிலே வந்த கன்னி’ என்னும் தலைப்பில் தொடர்கதையை எழுதினார். அக்கதையை ‘காதலும் கல்யாணமும்’ என்னும் தலைப்பில் க.நா.சுப்பிரமணியம் முன்னுரையுடன் காவேரி புத்தக நிலையம் 1965 ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளது. விந்தன் எழுதிய நாவல்களில் அதிகப் பக்கங்களைக் கொண்டது இந்நாவல்.
மோகன் என்கிற திருமணமாகாத இளைஞன், ‘கனவு காண்பது என் வாழ்க்கை’ என்கிற மாதிரி பருவ வயதுக் கனவுகளிலே உழன்று கொண்டிருக்கிறான். ஒரு கனவுக் கன்னி அவனுடைய கனவுகளில் வந்து அவனைத் தொடர்ந்து சீண்டியபடி இருக்கிறாள். கனவில் வரும் அதே சாயலுள்ள பெண்ணை ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் மோகன் பார்க்கிறான். அவள் பெயர் பாமா. பிறகென்ன, அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான். முதலில் முரண்டு பிடிக்கும் அவள் எல்லாக் காதல் கதைகளின் இலக்கணத்தை மீறியா நடந்து கொள்ளப் போகிறாள்? காதலிக்கிறாள். இடையில் வழக்கம்போல பல பிரச்சினைகள். இறுதியில் திருமணம் நடைபெறுவதாக முடிகிறது.
“கலைஞன் என்பவன் தன் நாட்டைப் பற்றிய உணர்வுடனும், தன்னுடைய சமுதாயத்தின் செவியாகக், கண்ணாக, நெஞ்சமாக விளங்குபவன். தான் வாழும் காலத்தில் உண்மைகளை எடுத்துக் கூறுபவன்தான் கலைஞன்” (விந்தன், ப.76) என்னும் மார்க்சிம் கார்க்கியின் வாசகத்தில் பற்றுக் கொண்டிருந்த விந்தன், தான் வாழும் காலத்தின் உண்மைகளை, அவ் உண்மைகளை மறைக்க போலியாய் நடத்தப்பட்டப் போராட்டங்களை எப்பொழுதும் தம் எழுத்துக்களின் வழியே வெளிப்படுத்த தயங்கியதில்லை என்பதற்கு இந்நாவலே சான்றாகும். “வாழ்க்கையின் பலப் பிரச்சனைகளுக்கிடையே பிறந்தும் வளரமுடியாத என் நாவல்களை சர்வ வல்லமையுள்ள காசால்தான் காப்பாற்ற முடியுமா? கடவுளே உன்னால் காப்பாற்ற முடியாதா?” என்று விந்தன் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலச்சூழலில் எழுதப்பட்ட இந்நாவலில், சர்வ வல்லமையுள்ள பணத்தால்தான் எதையும் சாதிக்கவும் மூடி மறைக்கவும் முடியும் என்பதை மிகவும் ஆதாரப்பூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
மனிதன் மாறவில்லை
1961 –இல் ‘அமுதசுரபி’ இதழில் ‘மனிதன் மாறவில்லை’ என்னும் தொடரை எழுதினார். இத்தொடர் பலரின் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளானது. காரணம் வள்ளுவரின் பெயரைச்சொல்லி வளமாக வாழும் தமிழ்ப்பேராசிரியர் ஒருவரின் மறுப்பக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று பலராலும் பேசப்பட்டதேயாகும்.
‘மனிதன் மாறவில்லை’ ராமமூர்த்தி என்னும் விரிவுரையாளரையும் அவருடைய பேராசிரியர் நெடுமாறனாரையும் முன்னிறுத்தி புனையப்பட்டுள்ளது. ராமமூர்த்தியின் வீட்டுவாசலில், பெற்றவர் யாரென்றே தெரியாமல் கிடத்தப்படும் குழந்தையிலிருந்து ஒரு கமுக்க உத்தியுடன் கதையை நகர்த்துகிறார்.
இந்நாவலில் விந்தன் பொதுவுடைமைக் கொள்கையுடையவராகவும் போலிப் பகுத்தறிவை விமர்சிப்பவராகவும் காட்சியளிக்கிறார். அதாவது டாக்டர் நெடுமாறனார், ராமமூர்த்தியிடம் “எல்லாம் அந்தக் குருச்சேவ்வால் வந்த வினை. செத்த பிறகும் தன்னுடைய செல்வாக்குக்குத் தடையாயிருந்து வந்த ஸ்டாலின் புகழை மறைப்பதற்காக ‘தனிநபர் வழிபாடு கூடாது’ என்று அவன் புதிய இயக்கத்தை தொடங்கி வைத்தாலும் தொடங்கி வைத்தான், மாணவர் உலகம் இப்போதெல்லாம் யார் எதைச் சொன்னாலும் எடை போட்டுப் பார்க்கவும், எதிர்க்கேள்வி கேட்கவும் தொடங்கிவிட்டது” (மனிதன் மாறவில்லை, ப.37) இவ்வாறு கூறுவதாக அமைத்துள்ளார்.
மேலும், இக்கதையில் வரும் நறுமணத்திற்கும் கிழவனுக்கும் நடக்கும் உரையாடலிலும் பொதுவுடைமையை வலியுறுத்துகிறார்.
“ஏன் தாத்தா, நீங்கள் படிக்கவில்லை என்றாலும் தாழம்பூவைப் படிக்க வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே?”
“அந்தக் குற்றத்தை நான் செய்யவில்லை அம்மா. செய்தவன் அவளுடைய அத்தான்.”
“அத்தான் வேறு இருக்கிறாரா, தாழம்பூவுக்கு?”
“இருக்கிறார், இருக்கிறார்.”
“என்ன வேலை அவருக்கு”
“வேலையா, இப்பொழுது ஒன்றுமில்லை. ஏதோ திராவிட நாடாமே, அது கிடைத்தால்தான் அவருக்கு வேலை கிடைக்குமாம்”
“அதுவரை தின்னச் சோறு?”
“திராவிட நாடு கிடைத்தால்தானாம்”
“கட்டத் துணி?”
“அதற்கும் திராவிட நாட்டைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்”
“இருக்க இடம்?”
“திராவிட நாடு கிடைக்கிற வரை, எங்கே கிடைக்கிறதோ, அங்கே”
“அப்படியானால் இப்போது….”
“எப்படி உயிர்வாழ்கிறார் என்று கேட்கிறாயா? அவருடைய கைகள் செய்யவேண்டிய வேலையையும் சேர்த்து இந்தக் கைகளே செய்கின்றன. அதனால் அவரைப் பொறுத்தவரை திராவிட நாட்டுக்கு அப்படியொன்றும் அவசரமில்லை” (மனிதன் மாறவில்லை, ப.56,57).
வாழ்க்கை என்னும் தளத்தில் நடந்து முடிந்த கதைகளை எடுத்துக்கொண்டு அதற்கு இல்லாத பண்புகளெல்லாம் இருப்பதாகச் சொல்லி யாரையும் ஏமாற்றுவதில்லை; தன்னையும் ஏமாற்றிக்கொள்வதில்லை. மாறாக நடந்துகொண்டிருக்கின்ற கதைகள் – வாழ்க்கையைத் தேர்வுசெய்து அதில் காணப்படும் பண்பற்ற அதிலும் குறிப்பாக தமிழர்தம் மரபிற்கு அப்பாற்பட்ட செயல்களைச் சிறிதும் அஞ்சாமல் எடுத்துரைத்து பலரின் தூற்றுதலுக்கு உட்பட்டு இன்னலுற்றபோதும் விந்தன் தன் பண்பை, பழக்கத்தை, தன் பாடுபொருளை மாற்றவில்லை என்பதற்கு ‘மனிதன் மாறவில்லை’ நாவல் சிறந்த சான்றாகும்.
சுயம்வரம்
இந்த நாவலின் முன்னுரையில் விந்தன் கூறுகிறார்: “இது டீன் ஏஜர்களுக்கு எழுதப்பட்ட நாவல்தான் என்றாலும், இதில் வரும் ஆனந்தனைப் போலவோ அருணாவைப் போலவோ வேறு யாரும் ஆகிவிடக்கூடாது என்பதே என் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுவாகத்தான் இப்போதும் இருக்கும் என்பது என் நம்பிக்கை.
பெண்களை பல வகையிலும் தெய்வமாகப் போற்றி வந்தது இந்த நாடு; ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!’ என்று பாரதியைப் பொங்கியெழுந்து பாடச்செய்தது இந்த நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை வெறும் ‘போகப்பொருள்’களாகக் கருதி, அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், ஒளிந்துகொள்ளாமலும் சில ஆண்கள் கவர்ச்சிகரமாக, வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் கதைகள் அவற்றைக் கூசாமல் வெளியிடும் ஏடுகள் – கண்ணராவி, கண்ணராவி!
அந்த ரகத்தில் சேராத இந்த நாவலை அவர்கள் சொல்லும் ‘டீன்ஏஜர்’சாரும் படிக்கலாம்.” (சுயம்வரம், முன்னுரை) இன்றைய தமிழ் எழுத்து மரபில் படைக்கப்படும் படைப்புகளை யார் வாசிக்கின்றார்களோ இல்லையோ படைப்பாளனின் மனைவி மக்கள்கூட வாசிக்க முடியாத நிலையில் பெண்களை இழிவாக எழுதும் சூழலில் “இந்நாவலை எவரும் படிக்கலாம்” என்று விந்தன் உறுதிபடக்கூறுவதிலிருந்து அவர் எழுத்தின் கண்ணியம் புலப்படுகிறது.
[தொடரும்]
*****
துணைநின்ற நூல்கள்
- அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
- அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
- பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
- பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
- பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
- பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
- பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
- வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
- விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
- விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
- விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
- விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
- ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030
இதழ்கள்
- குங்குமம், மார்ச்-1994
- தினமணி, வெள்ளிமணி,10.1987
- மனிதன்,08.1954
*****
கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
திருவண்ணாமலை 606603
கைப்பேசி: 9786863839
மின்னஞ்சல்: drnprabu@gmail.com
பாராட்டுகள்!