-முனைவர் த. ஆதித்தன்

மிகவும் தொன்மையான காலம் தொட்டே சுவடிகளின் பயன்பாட்டினை அறிந்தவர்களாகத் தமிழர்கள் திகழ்ந்துள்ளனர்.  அச்சுவடிகளுக்கு அழிவோ, சிதைவோ வராதவாறு பாதுகாப்பதற்குரிய செயல்முறைகள் குறித்தும் நன்கு ஆராய்ந்து முடிவுகளைக் கண்டுள்ளனர்.  அறிவியல் பூர்வமான பாதுகாப்பு நெறிமுறைகளையும் அக்காலத்திலேயே மரபுவழியாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.  அம்மரபுவழிச் சுவடிப் பாதுகாப்பு நெறிமுறைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

மரபுவழிப் பாதுகாப்புக் குறித்து ப.பெருமாள், “தொன்று தொட்டு காலங்காலமாகச் செய்யப்பட்டுவரும் பாதுகாப்பு முறைகளை மரபுவழிப் பாதுகாப்பு என்பர்.  சுவடிகள் இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளால் அழிவதைத் தடுக்க பல முறைகளை நம் முன்னோர்கள் கடைப்பிடித்துள்ளனர். அவற்றில் முக்கியமாகச் சுவடிகள் வைக்குமிடம், கையாளும் முறை, பூஞ்சை மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாத்தல், காலமுறை கண்காணித்தல், செப்பனிடுதல் மற்றும் படியெடுத்தல் போன்றவை மரபுவழிப் பாதுகாப்பு முறைகளாகும்”1 என்கிறார்.

சுவடிகளைப் பாதுகாப்பதில் அவற்றை வைக்கும் இடங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன.  மரப்பெட்டி, ஜாடி போன்றவற்றில் சுவடிகளை வைப்பது பழங்காலந்தொட்டே மரபாக உள்ளது.  அதே போன்று கோயில், பூமிக் கடியில் உள்ள நிலவறை போன்ற இடங்களில் சுவடிகளைப் பாதுகாத்து வைக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

சுவடிகள் வெப்பமாற்றம், ஒளி, தூசு போன்றவற்றால் எளிதில் பாதிப்படையும். வெப்பமாற்றத்தில் இருந்து சுவடிகளைக் காப்பற்ற காற்றின் ஈரப்பதத்தினை ஒரே சீராகப் பராமரிக்க வேண்டும்.  குறிப்பிட்ட நிலையில் இருந்து வெப்பம் மிகவும் குறையும் போதும் கூடும்போதும் சுருங்கி விரியும்.  அது நம் கண்களுக்குப் புலனாகாமல் இருக்கலாம்.  இருந்தாலும் நாளடைவில் அது சுவடிகளைப் பெரிதும் பாதிக்கும்.  எனவே முடிந்த அளவு அவற்றைப் பாதுகாக்கப் பழங்காலத்தில் இருந்தே பலமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

ஈரப்பதத்தில் இருந்தும் பூஞ்சை மற்றும் பூச்சிகளின் பாதுகாப்பில் இருந்தும் சுவடிகளைப் பாதுகாக்க மஞ்சள், சிவப்பு அல்லது காவித் துணிகளில் அவற்றைக் கட்டிவைக்கும் வழக்கம் இருந்துள்ளது. சுவடிப் பாதுகாப்புக் குறித்து மோ.கோ.கோவைமணி, “சுவடிகளைப் பாதிக்கும் காரணிகளான  தூசு, ஒளி, காற்றில் உள்ள ஈரம் மற்றும் வெப்பத்தினால் சேதமடையக்  கூடாது என்ற எண்ணத்தால் துணிகளில் கட்டிவைத்துள்ளனர்.  முக்கியமாகப் பட்டு மற்றும் பருத்தித் துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  பூஞ்சை மற்றும் பூச்சிகளின் பாதிப்பு ஏற்படா வண்ணம் மஞ்சள் அல்லது சிவப்பு வண்ணத்துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  சில முக்கிய சுவடிகளைத் துணிகள் மட்டுமின்றி மான் தோலினால் சுற்றிவைத்தும், மற்ற மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட பைகளில் வைத்தும் பாதுகாத்துள்ளனர் 2  என்கிறார்.

எகிப்து, கிரேக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட மூடிகளுடன் உள்ள ஜாடிகள் ஆரம்பகாலச் சுவடிப் பராமரிப்பில் முதன்மை இடத்தினைப் பெற்றுள்ளன.      நமது நாட்டில் கோயில் கோபுரங்களிலும், கர்ப்பக்கிருக மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கம் பரண் போன்ற பகுதிகளிலும் சுவடிகளைப் பாதுகாத்து வந்துள்ளனர்.  வீடுகளிலும் பூஜையறையில் வைத்துப் பாதுகாக்கும் பழக்கமும் இருந்துள்ளதாக முனைவர் ப. பெருமாள் குறிப்பிடுகிறார்.3 இதன்மூலம் பூஜை செய்யும் பொழுது ஏற்றப்படும் கற்பூரம் மற்றும் தூபம் ஆகியவற்றால் உண்டாகும் புகை அவ்வறையில் வைக்கப்பட்டிருக்கும் சுவடிகளுக்கு ஒரு வகையில் பாதுகாப்பைத் தருகின்றது.  மேலும் சுவடிகளை முக்கிய பூஜை தினங்களில் பிரித்துப் படித்துக் கட்டி வைப்பதினாலும் ஓரளவு சுவடிகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன  எனவும் அவர் கூறுகிறார்.

ஆரம்ப காலங்களில் மூங்கில் மரம் அதிகமாக வளரும் இடங்களில் அவற்றிலான குழாய்களில் சுவடிகளை வைத்துப் பராமரிக்கும் பழக்கம் இருந்துள்ளதையும் அறிய முடிகிறது.

வட இந்தியாவில் உள்ள சில கோயில்களில் உள்ள உள்பிரகாரங்களில் பிரமிட் போன்ற சிறு அறைகளை ஏற்படுத்தி அங்கு சுவடிகளைப் பாதுகாத்து வந்துள்ளனர் எனவும் அதனை இறந்த சமாதி என அழைப்பர் எனவும் சுவடி ஆய்வளார்கள் குறிப்பிடுகின்றனர்.

சுவடிகளின் முக்கியத்துவத்தை நம்மவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இறைத் தன்மையைப் பொருத்தியுள்ளனர் நம்முன்னோர் இதனை, “நம் முன்னோர்கள் பிற்காலச் சந்ததியினருக்குச் சுவடிகளின் முக்கியத்துவத்தை அறிவிக்க தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, பிரம்மா, ஹயக்கிரிவர் போன்ற கல்விக்கான கடவுளர்களின் கைகளிலும், திருவள்ளுவர், அவ்வையார், மாணிக்கவாசகர் போன்ற பெரும் புலவர்களின் கைகளிலும் சுவடி வைத்திருப்பதைப் போன்று உருவாக்கியுள்ளனர்.  சுவடிகள் சேதமுறா வண்ணம் ஒரு குழந்தை போன்று கையாண்டுள்ளனர்.  மேலும் அதனைப் படிக்க ஞானபீடம் என்றழைக்கப்படும் சுவடித் தாங்கி அல்லது சிக்குப் பலகை வைத்துப் படிக்கும் பழக்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.”4 என மோ.கோ. கோவைமணி கூறுவதன் மூலம் அறியலாம்.

சுவடிகளைக் கையாளும் முறையும், சுத்தம் செய்யும் முறையும் பாதுகாப்பில் முதன்மை இடம்பெறுகின்றன. பூஞ்சை, பூச்சி, தூசு போன்றவற்றால் சுவடிகள் பாதிக்கப்படுவதில் இருந்து காக்க முறையான தூய்மைப்படுத்துதல் அவசியமாகும்.  மெல்லிய தூரிகை, மென்மையான துணி அல்லது பஞ்சு போன்றவற்றால் சுவடிகளைச் சுத்தம்செய்வது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு தூய்மைசெய்யப்பட்ட சுவடிகளில் உள்ள நீர்த்தன்மை வெப்பமாறுபாட்டால் வெளியேறி விடுவதுண்டு.  அவ்வாறு நீர்த்தன்மை வெளியேறி விடும்போது அவை உடையக்கூடும், எனவே அப்பாதிப்பில் இருந்து காக்க எண்ணெய் பூசப்படும்.  இத்தகைய எண்ணெய்ப் பூச்சிற்குத் தொடர்ந்து ஒரே வகையான எண்ணெய்களைப் பயன்படுத்தி வந்தால் பூச்சிகள் அதற்கு பழக்கப்பட்டுவிடும்.  எண்ணெய்ப் பூச்சையும் தாண்டிப் பூச்சிகள் தாக்கக்கூடும்.  எனவே ஒவ்வொருமுறை புதிதாக சுத்தம்செய்து எண்ணெய்ப் பூச்சுச் செய்யும்போதும் புதிய வகை எண்ணெய் பயன்படுத்துவது அவசியமாகிறது.

சுவடிகளைப் பாதுகாத்து வைக்கும் அறைகளில் பல்வேறு வகையான பூச்சி எதிர்ப்பு மணம் (வாசனை) கொண்ட பொருள்களை வைக்கும் வழக்கம் உள்ளது.  வேப்ப மரத்தின் உலர்ந்த இலை, பூ, கொட்டை போன்றவையும், நொச்சி இலை, புங்க மர இலை, கிராம்பு, கற்பூரம், வெட்டிவேர், மிளகு, இலவங்கம், மஞ்சள், கருஞ்சீரகம் போன்றவையும் பூச்சி எதிர்ப்புப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பொடித்து முடிச்சுகளாகத் துணிகளில் கட்டி சுவடி அறைகளில் வைக்கும்போது அதில் எழும் மணம் பூச்சிகளை எதிர்த்து அழிக்கும் என்பர். பாம்பானது தமது உடலில் இருந்து கழற்றிய தோலை பாம்புச்சட்டை என்பர்.  அதனைச் சுவடி அறைகளில் வைத்தால் பூச்சிகள் வராது என்கிறார் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பணியாற்றிய மோடி அறிஞர் அ. பாலசுப்ரமணியன்.  மேலும் அவர் மயில் இறகுகளில் இருந்து எடுக்கப்படும் அதன் முடிகளைப் புத்தகங்களுள் வைப்பதும் ஒரு பாதுகாப்பு முறையே என்கிறார். மயில் இறகுக்கும் பூச்சிகளை விரட்டும் பண்பு உண்டு என்பது அவர் கருத்து.

இவ்வாறு காலம் காலமாகப் பல்வேறு உத்திகளைக் கையாண்டு சுவடிகளைப் பாதுகாத்து வந்துள்ளனர்.  சுவடிப் பாதுகாப்பில் இயற்கை சார்ந்து பல பொருள்களைப் பயன்படுத்தியதில் நாம் உலகிற்கே முன்னோடி எனலாம்.

அம்முறைகளை அறிவியல் ரீதியாக ஆய்வுகளுக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை உலகிற்கு வழங்குதல் வேண்டும்.  அவ்வாறு செய்யும் பொழுது நம்பெருமையினை மீண்டும் உலகிற்கு உணர்த்தலாம். மேலும்  புதிய அறிவியல் ரீதியிலான முடிவுகளும் கிடைக்கக்கூடும்.

சான்றெண் விளக்கம்:

  1. பெருமாள் ப. , சுவடிப் பாதுகாப்பு வரலாறு, கோவிலூர் மடாலாயம், கோவிலூர் – 630 307., இரண்டாம் பதிப்பு: மார்ச் 2014, பக்கம் எண்:119-120.
  2. கோவைமணி. மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூ- 613 010, ,இரண்டாம் பதிப்பு செப்டம்பர் 2016. பக்கம் எண்:143.
  3. பெருமாள், ப., சுவடிப்பாதுகாப்பு வரலாறு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் – 630 307, இரண்டாம் பதிப்பு, மார்ச் 2014, பக்கம் எண்
  4. கோவைமணி. மோ.கோ., ஓலைச்சுவடியியல், பாமொழி பதிப்பகம், பாரதிநகர், தமிழ்ப் பல்கலைக்கழக அஞ்சல், தஞ்சாவூ- 613 010, ,இரண்டாம் பதிப்பு செப்டம்பர் 2016. பக்கம் எண்:148.

*****

கட்டுரையாளர் – இணைப் பேராசிரியர்,
அரிய கையெழுத்துச் சுவடித்துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் 613 010
கைப்பேசி:9841152393
Email:kumaritathithan@gmail.com

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மரபுவழிச் சுவடிப் பாதுகாப்பு

  1. தற்கால மாணவர்கள் சுவடிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அதை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவும் இவ்வாய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.
    மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *