வேரில் பழுத்த பலா புதினத்தில் சாதிய அரசியலின் உளச்சிக்கல்கள்

0

– முனைவர் கி. இராம்கணேஷ்

சு. சமுத்திரம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டவர். பல்வேறு காலகட்டங்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொண்டு போராட்டக் களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு போராடியவர். சமூகத்தில் தானும் தன்னைப் போன்ற பலரும் அனுபவித்த துன்பங்களையும் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் பொருண்மைகளாகக் கொண்டு புதினங்களில்; கருக்களை உருவாக்கி உருவங்களாக சமூக வீதிகளில் உலவ விட்டவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவராக விளங்குகிறார். சிறுவயதில் அனுபவித்த வறுமையும் அநியாயங்களும் இவரை எழுதத்தூண்டி சோஷலிசவாதியாக உருவெடுக்க வைத்தது. முற்போக்குச் சிந்தனை கொண்டு சாதிய அநீதிகளையும் சாமானியர்களின் வறுமையையும் ஆதிக்க வர்க்கத்தின் அடையாளங்களையும், பெண்ணடிமைத்தனத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுவதைத் தலைசிறந்த பணியாகக் கொண்டு காட்சிப்படுத்தியவர். புதினங்களில் பிரச்சினைகளைச் சொல்லித் தீர்வு காட்டுவதினும் மேலாக நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு போராட்டங்களில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு சொல்வதை மட்டுமே கடமையாகக் கொண்டு செயல்களில் ஈடுபடாதவர்களைப் போல் இல்லாமல் சொல்வதைச் செய்து காட்டி சமூகத்தினைச் சீர்திருத்த பல்வேறு வழிகளைக் கையாண்டவர். பல விமர்சனங்களை எழுப்பி, பல விமர்சனங்களுக்கு உள்ளானவர். இவரது புதினங்களின் வழி,  சாதிய அரசியலின் உளச்சிக்கல்களையும் வர்க்க முரண்பாடுகளையும் ஆராய்ந்து விளக்குவதாகக் கட்டுரை அமையவிருக்கிறது.

சு. சமுத்திரத்தின் வாழ்வும் பணியும் 

சு. சமுத்திரம் 1941-ஆம் ஆண்டு பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தன்னுடைய பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தவர். பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி, இறுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ் சேவைப்பிரிவிலும் செய்தி வாசிப்புப் பிரிவிலும் பணிபுரிந்தார். பிறர் இரசித்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுத்துலகில் பயணிக்காமல் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கிவளரத் தம் பங்களிப்பினைப் புதினங்கள், சிறுகதைகளின் வழி மேற்கொண்டார். 15 புதினங்கள், 8 குறும் புதினங்கள், 500 சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், நாடகம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது படைப்புகள்,“மார்க்சிய சிந்தனைக் களஞ்சியங்கள்”  எனக் கூறின் சாலப் பொருந்தும். நா.வானமாமலை, க. கைலாசபதி, தி.சு. நடராசன், தோதாத்திரி, தொ.மு.சி. இரகுநாதன், ராஜம் கிருஷ்ணண் போன்ற சிந்தனையாளர்களின் வரிசையில் இடம்பெற்றவர். பல்வேறு இடங்களில் தான் பணியாற்றிய அனுபவங்கள், தான் சந்தித்த மனிதர்கள், தன்னோடு பழகியவர்கள், சமூக அவலங்கள், அடிமட்ட மக்களின் பல்வேறு  துன்பங்கள் ஆகியவற்றை முன்னிறுத்திப் படைப்புகளை வெளியிட்டவர். கற்பனைக்கும் ஒப்பனைக்கும் இடம் தராமல்  உண்மைக்கு முதலிடம் கொடுத்து எழுதிய சிந்தனைவாதி.

திருநங்கைகளின் பிரச்சினை குறித்த  ‘வாடாமல்லி’, எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய ‘பாலைப்புறா’, தேவதாசி முறையைக் களைய வேண்டும் என்ற நோக்கில் ‘சாக்கம்மா’ போன்ற புரட்சிமிக்க புதினங்களைப் படைத்தவர். இவை மட்டும் அல்லாமல் பிறர் எழுதத் தயங்கும் கருத்துக்களையும் புதியகோணத்தில் புதினமாக்கிக் காட்டியுள்ளார். “என் எழுத்து ஏழ்மையின் வெற்றியாகாது; ஏழைகளின் வெற்றியாக வேண்டும்” என்ற போக்கிலிருந்து இம்மியளவு கூட மாறுபடாமல் செயல்பட்டவர். அரசியலில் நடக்கும் குளறுபடிகளைச் சிறிதும் தயக்கமின்றி ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தவர். இருப்பினும் கொள்கைகளிலிருந்து பின்வாங்காத ஒப்பற்ற மனிதர். பெருந்தலைவர் காமராசரிடம் பாராட்டுப் பெற்றவர். வலியவரிடமிருந்து எளியவரை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டவர் எனப் பல அடையாளங்களைக் கொண்டு திகழ்ந்தவர். மொத்தத்தில் இவரை  உப்புக்கரிக்கும் தண்ணீரையுடைய சமுத்திரம் போன்று பலரது கண்ணீரை உள்வாங்கிப் பொங்கிய சமுத்திரம் என்று கூறின் சாலப் பொருந்தும். 1974 முதல் எழுதத் தொடங்கியவர். பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவரின் ‘வேரில் பழுத்த பலா’ என்ற புதினத்திற்கு 1990ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகம் ‘தமிழன்னை விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது. சிறுகதைக்காக ‘இலக்கியச் சிந்தனைப் பரிசு’ பெற்றுள்ளார். இவரது மறைவுக்குப் பின் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டில் சென்னையில் நேர்ந்த  சாலைநேர்ச்சியொன்றில் காலமானார்.

வேரில் பழுத்த பலா

படைப்பாளி எதார்த்த உலகில் தான்கண்ட காட்சிகளைக் கருவாகக் கொண்டு எழுதும்போது படைப்பானது வெற்றி பெறும். ஒப்பனைப்படுத்தாமல் கண்டதைக் காட்சிப்படுத்தும் படைப்பு எழுத்துக்கு மேலும் வலுசேர்க்கும். அவ்வகையில் ‘வேரில் பழுத்த பலா’ என்ற நாவல் அரசாங்க அலுவலகமொன்றில் நடக்கும் சாதிய அரசியலைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைகிறது. மேலும் சாதிய அரசியலில் சிக்குண்டு தவிக்கும் பெண்ணொருத்தியின் உள்ளக் குமுறலையும் எதார்த்த உலகில் நின்று புதினம் விளக்குகிறது.

புதினத்தின் தலைமைப் பாத்திரமான சரவணன், முறைப்படி படித்துப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிகாரியானவன். கிராமப் பின்னணியில் வளர்ந்து, படித்து சென்னையில்  அரசு அலுவலகங்களுக்கான எழுது பொருட்களைத் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து அனுப்பி வைக்கும் அலுவலகத்தில் அவனது பணி அமைந்திருந்தது. இப்புதினத்தின் பல்வேறு திருப்புமுனைகள், உரையாடல்கள் பெரும்பான்மையாக நடக்கும் இடம் இவ்வலுவலகமே ஆகும். அதிகாரிப் பணியில் இருந்தாலும் உடைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவன். செய்யும் தொழில் கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் மனதைச் செலுத்தியவன். வேலைக்குச் செல்பவர்கள் எதிரே, கணவனை இழந்தவர்கள்முன் வரக்கூடாது என்ற மூடநம்பிக்கையை அறவே வெறுப்பவனாகப் படைக்கப்பட்டுள்ளான். கணவனை இழந்த பெண்ணான தன் அண்ணி எதிரே வந்தபோது கண்டித்த தாயிடம் அண்ணிக்கு ஆதரவாகப் பேசுகிறவன். மேலும் அண்ணி தனக்கு மற்றொரு தாயாக விளங்கி, தன் கல்விக்காகப் பாடுபட்டதை நினைத்துப் பார்ப்பவன். இதன்வழி செய்ந்நன்றி மறவாப் பண்புடையவனாக சரவணனைக் கருத முடிகிறது. அதிகாரிப் பணியில் இருப்பவர்கள் தாமதமாக அலுவலகத்திற்குச் சென்று வேலை நேரம் முடிவதற்கு முன்பாகவே கிளம்பி விடுவார்கள். ஆனால் சரவணன் இச்செயல்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டவனாகத் திகழ்ந்தவன்.  சரவணனிடம் நிர்வாக அதிகாரி ஒரு முறை, “சார் நீங்க … கெஜட்டட் ஆபிஸர்… உங்க அந்தஸ்துல இருக்குற அதிகாரிங்களுக்குக் குறிப்பிட்ட நேரத்துல வரணுமுன்னு ஆபிஸ் விதி கிடையாது… ஆனா நீங்க என்னடான்னா ஆபிஸ் டைமுக்கு முன்னாலேயே வந்துடறீங்க…” எனச் சொன்னபோது,“ கெஜட்டட் ஆபிசருக்கு நேரம் கிடையாதுன்னு ரூல்ஸ்ல சொல்றது எதுக்குன்னா, அவங்க ஆபிஸ் நேரத்துக்கு முன்னாலயும், பின்னாலயும் கூட வேலை பார்க்கணுமுன்னு அர்த்தப் படுத்திக்கணுமே தவிர, இதுக்கு இடையில், எப்போது வேணுமுன்னாலும் வரலாமுன்னு அர்த்தப்படுத்திக்கக் கூடாது…” எனக் கூறி அதிகாரி பதவிக்கான இலக்கணத்தினை எடுத்துக் கூறியவன். வெறும் வாய் வார்த்தைக்காக கூறாமல் சொன்னபடி நடந்து காட்டியவனாகக் குறிப்பிடலாம்.

சரவணனின் தாய், தங்கை வசந்தாவிற்குப் பரிந்துரை செய்து வேலை வாங்கிக் கொடுக்கக் கேட்டபோது மறுத்து, குறுக்கு வழியில் வேலை வாங்குவது நிலைக்காது எனக் கூறியதோடு, “நான், போட்டிப் பரீட்சை எழுதித் தேறி… வேலைக்கு வந்தேன். வேலைக்குன்னு பேனாவைத் தான் தொட்டேன். எவன் காலையும் தொடல… இவளுக்கும் தொடமாட்டேன்” என்கிறான். நேர்மையும் தன்மானமும் ஒருங்கே பெற்றதால் சரவணனின் பதில் இவ்விதம் வெளிப்படுகிறது. உழைப்பினால் கிடைக்கும் வெற்றியே நிரந்தரமானது என்பதைப் பூரணமாக நம்பியவன். சரவணன் ஒரு முறை வாகனத்தில் அவசரமாகச் சென்று கொண்டிருந்தபோது மஞ்சள் கோட்டைத் தாண்டியதற்காக போக்குவரத்துக் காவலரால் தடுத்து நிறுத்தப்பட்டான். அப்போது அந்தக் காவலர் வாகன ஓட்டிகளிடம்  வசை பாடியதையும் கையூட்டுப் பெற்றதையும் கண்டான். “ டயரிக் காகிதமோ… அசோகச் சக்கரம் பொறித்த காகிதமோ… அசோக சக்கரத்தில் மூன்று சிங்கங்கள் நிற்குதே சிங்கம் விடுமோ… ஜெயித்து விட்டது” எனப் படைப்பாளி  சரவணன் கதாபாத்திரத்தின் வழிக் கூறுவது எதார்த்த உலகில் நடப்பதை எள்ளலோடு விமர்சிப்பதாக அமைந்துள்ளது. காவலர் தன்னிடம் வந்து பேசியபோது,“இந்த சரவணன் கேஸுக்குப் போவானே தவிர… கேஷூக்கு போகமாட்டான்… உம்… எழுதறதை எழுதிட்டு, மெமோ கொடுங்க… எப்போ கோர்ட்டுக்கு வரணுமோ… அப்போ வாரேன்” எனச் சொன்னது அநியாயத்திற்கு எதிரான  கருத்தாய் வெளிப்படுகிறது. காசு கொடுக்கமுடியாத ஏழைகளைப் பார்த்து காவலர் திட்டியதைப் பார்த்து ,“கோளாறான சமூக அமைப்பில் ஏழைகள் தங்களோட தன்மானத்தை விலையாகக் கொடுத்தால்தான், சுதந்திரத்தோடு நடமாட முடியும்” என்பதிலிருந்து சமூக அவலங்களை உணரமுடிகிறது.

சரவணன்  உயர்பொறுப்பில் பணியாற்றும் அரசு அலுவலகத்தில்  சௌரிராஜன், உமா, பத்மா, ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஆட்டிப் படைக்கிறார்கள். இவர்களின் செயல்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டவள் அன்னம். முறைப்படி தேர்வெழுதி வந்தவள். அவள் தகுதிக்குரிய வேலையைக் கொடுக்காமல் சாதாரண வேலையைக் கொடுத்துத் திட்டி வேலை வாங்குகிறார்கள். எந்நேரமும் அவள் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவள் என்பதைச் சுட்டிக் காட்டிக் காலனிப் பொண்ணு எனச் சொல்லி அவள் திறமையை வெளிக்காட்ட விடாமல் மட்டம் தட்டுகிறவர்கள். மேலும் இதை அறியாத சரவணனிடம் வேலையை அன்னம் சரியாகச் செய்யவில்லை எனச் சொல்லி  மெமோ கொடுக்க காரணமாய் இருக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அலுவலகத்திற்காக வாங்கி காண்ட்ராக்டரிடம் தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்பவர்கள், அலுவலகத்தில் சரிவர வேலை செய்யாதவர்கள் , காண்ட்ராக்டரிடம் அலுவலக இரகசியங்களைச் சொல்பவர்கள் எனப் பல முகங்கள் கொண்ட வேடதாரிகள். இவர்களின் செயல்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வர அன்னத்தின் பங்களிப்பு ஓரிடத்தில் நிகழ்கிறது. அதுவும் வேலை போய்விடும் என்ற சூழலில் தன்னைத் தற்காத்துக் கொள்ள, அலுவலகத்தில் நடக்கும் சில அநியாயங்களுக்கு தான் காரணமில்லை என்பதை உணர்த்துவதாக அமைகின்றது. சாதி என்பது சதி செய்து பிறர் மனக் கதவைத் திறந்து அவர்களைச் சுட்டெரிக்கும் கொள்ளியாக உணர்த்தப்படுகிறது.

நேர்மையின் வடிவமான சரவணன் உண்மையறிந்து அன்னத்தின் தகுதிக்குரிய வேலையைக் கொடுக்கச் சொன்னபோது, அவள் திறமையற்றவள் எனப் பலவாறு சௌரிராஜனால் கூறப்படுகிறது. அப்போது சரவணன்,“ ஒங்களுக்கு ஹரிஜனப் பெண்ணுன்னால், ஒன்றும் தெரியாதுன்னு நினைக்கிற சட்டவிரோத சமூக விரோத சிந்தனை.” என்கிறான். இதன் வழி சாதியப் போக்குக்கு எதிர்ப்பைக் காட்டுவது புலப்படுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனக் கூறிய வள்ளுவரின் சிந்தனையைப் படித்தவர்களும் உணராதது வேதனையளிக்கிறது. மேலும்,“படித்த ஹரிஜனங்களோட திறமை. வெட்டியெடுக்கப்படாத தங்கம் மாதிரி…” எனச் சரவணன் கூறுவது தீண்டாமைக்கு எதிரான முழக்கமாகவும், தாழ்த்தப்பட்டவர்களின் திறமை வெளிக்கொணரப் படாததையும்  பொதுவுடைமைக் கருத்தையும் உணர்த்துகிறது. மேலும் தானும் ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவன் என சரவணன் கூறுவதின் வழி சௌரிராஜன் போன்ற சாதிவெறி கொண்டவர்களுக்கு சரியான சம்மட்டியடியான கருத்தாக இஃது விளங்குகிறது.

அன்னத்தை ஒரு நாள் மாலை ஏழு மணி வரைக்கும் இருக்கமுடியுமா எனச் சரவணன் கேட்டதை அறிந்த உமா, “இருக்கியான்னு கேட்டால், நீ படுக்கிறேன்னு சொல்லி இருப்பே” எனக் கேட்டது அவளை உளவியல் ரீதியாகப் புண்படுத்துவதாக அமைகிறது. மேலும் இஃது சொல்லம்பாய் மனதை ரணமாக்குகிறது. சாதியும் பெண்மையும் சேர்ந்து சமூக அநீதியை அன்னத்திற்குக் காட்டுகிறது. “பாவம் காலனிப் பொண்ணுனு பார்த்தா…” எனச் சொல்லிச் சொல்லியே அவளின் திறமை முடக்கப்படுகிறது. ஒரு சமயம் அலுவலக வேலையைச் சொல்லித் தரும்படி  உடன் பணியாற்றும் ஒருவனிடம் அன்னம் கேட்டபோது, அவன் அவ்வளவு பகிரங்கமாகவா கற்றுக் கொடுக்க முடியும் எனச் சொல்லி பெண்மைக்கு இன்னல் இழைப்பதை அறியமுடிகிறது. இஃது பணியாற்றும் இடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மேலும் சுயநலக் கூட்டம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் மற்றவர்களை மட்டம் தட்டவும் சாதியை ஆயுதமாகக் கொண்டிருப்பதைப் புதினம் உணர்த்துகிறது.

அரசு விதிமுறைகளை மீறிச் செயல்பட்டவர்களைக் கண்டித்தபோது, அஃது சரவணனுக்கு எதிரானதாக அமைகிறது. காண்ட்ராக்டர் மூலமாக நேர்மையின் உருவமான சரவணன் மீது மேலிடத்திற்குத் தவறான தகவல் பறக்கிறது. சரவணனிடம் பதில்கேட்டுக் கடிதமும் வருகிறது. ஆனால் சரவணன் எழுதும் கடிதங்களுக்கு எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. ஆளுகின்ற வர்க்கத்தின் சர்வாதிகாரப் போக்கை இச்செயல்பாடு காட்டுகிறது. இதற்குக் காரணமாக சரவணன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவன் என்பதால் இவ்விதம் நிகழ்கிறது எனலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்ததால் சரவணன், அன்னம் போன்றோரின் கருத்துகள் அலுவலகத்தைத் தாண்டிக் கூட செல்லவில்லை. நீதியின் குரல் ஒடுங்குகிறது. அநீதியின் குரல் அடக்குகிறது. உடல் உழைப்பு மேற்கொள்பவர்களைத் தாழ்ந்த சாதியாகக் கருதிய சமூகம் அவர்கள் படித்து முன்னேறினால் முட்டாள்களாகக் கருதுகிறது  என்பதைப் புதினம் பதிவு செய்துள்ளது.

ஒரு கட்டத்தில் சரவணன்  ஊழலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்தபோது சிலர் பயப்படுகின்றனர். அப்போது சௌரிராஜன் நடுங்கிக் கொண்டிருந்த அக்கௌண்டண்டைப் பார்த்து, தைரியமாய் இருக்கும்படிச் சைகை செய்து, ”இது யோக்கியன் பயப்பட வேண்டிய காலம்; நீ பயப்பட வேண்டாம் என்பதைக் காதில் போடப் போனார்” என இடம்பெற்றுள்ள செய்தி நீதியின் குரல்வளை வெட்டப்பட்டதையும் அநியாயத்தின் குரல் ஓங்கி ஒலிப்பதையும் காட்டுகிறது.  மேலிடத்திலிருந்து வந்த கடிதத்தில் தரமற்ற பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் வழங்கும்படியும் சென்ற ஒப்பந்த காலத்தில் திறம்பட செயல்பட்ட அந்நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும்படியும் எழுதியிருக்கிறது. இதைப் போன்ற  மேலிடத்தின் போக்குகள்  அவலத்திற்குரியதாகிறது. வெளியே சொல்ல முடியாத கவலைக்கு உள்ளான சரவணனுக்கு தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வுவதாக அமைகிறது. இனியும் பணி செய்தால் அசிங்கம் எனக் கருதி சரவணன் அன்னத்திடம் பணியிலிருந்து விலகக் கடிதம் தயாரிக்கச் சொன்னபோது, அன்னம் மறுத்துப் பலவாறு சொல்லிப் போராடத் துணிச்சல் தேவை என்பதாகக் கூறிப் புண்ணான சரவணன் உள்ளத்திற்கு மருந்தாகிறாள்.

அப்போதுதான், “அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில் அணில் கடித்த பழங்களையும் பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு இவ்வளவு நாளாய் இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய்விட்டதே” எனச் சரவணனுக்குத் தோன்றியது. மனதால் இணைந்த இருவரும் போராடவும் தயாராயினர் என்பதாகப் புதினம் நிறைவுறுகிறது.

சாதிய அரசியலின் உளச்சிக்கல்களைப் புலப்படுத்துவதாக இப்புதினம் அமைகிறது. திறமையும் தகுதியும் வளர்ந்தாலும் சாதிப் பேய் ஒழியாவிட்டால் நாட்டில் வாழ்பவர்கள் நன்னிலை எய்த இயலாது. சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் இத்தகைய இழிநிலை முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதை இப்புதினம் வலியுறுத்துகிறது.

‘வேரில் பழுத்த பலா’ புதினம் ஒடுக்கப்பட்டவர்கள் போராட்டக்களத்தில் குதித்தால் மட்டுமே வாழமுடியும் என்பதை விளக்கி நிற்கின்றது. திறமையற்றவர்களின் செயல்பாடே பிறரை அடிமைப்படுத்தக் காரணமாகிறது. மொத்தத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ளவும் பொதுவுடைமையை நிலைக்கச் செய்யவும் போராடிய சுதந்திரப் போராட்டமாக புதினம் படைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. எல்லோரும் மனிதர்கள் என்பதை உணர்ந்தால் மட்டுமே மனித சமுதாயம் தலைநிமிர்ந்து மனிதநேயமிக்கதாக உருவாக முடியும்… என்பதை சு.சமுத்திரம் தமது படைப்பின் வழி புலப்படுத்தியுள்ளார்.

குறிப்புதவி நூல்கள்

  1. வேரில் பழுத்த பலா- சு.சமுத்திரம்
  2. வாடாமல்லி – சு. சமுத்திரம்
  3. பாலைப்புறா – சு. சமுத்திரம்
  4. சாக்கம்மா – சு. சமுத்திரம்

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி – 642 107
அலைபேசி – 9715984239, 9677374239.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *