Advertisements
ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

அன்பின் வழியது…

-மேகலா இராமமூர்த்தி

மனிதப் பண்புகளிலேயே மகத்தானது அன்பு எனும் அரும்பண்பாகும்.  ’ஆருயிர்க்கு உடம்போடு உள்ள தொடர்பானது அன்போடு பொருந்திவாழும் வாழ்க்கைக்கானதே’ என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் கருத்து.

அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.
(73)

விலங்காண்டியாய்த் தனித்துத் திரிந்துகொண்டிருந்த மனிதன், ஒரு குடும்ப அமைப்புக்குள் நுழைவதற்கு அடிப்படையாய் இருந்தது அன்பே!

குடும்பம் எனும் அமைப்பு தோற்றம் பெற்றபின், ”தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு” என்றிருந்த தன்னல அன்பானது பின்னர்ச் சமூகத்தின்பாலும், அங்குவாழும் மாந்தர்கள்பாலும் விரிந்து பொதுநல அன்பெனும் மாற்றங் கண்டது.

சக மனிதர்கள் படும் துயர்கண்டு துடித்த அந்த அன்புதான் அத்துயருக்கான மாற்றுத் தேடி அலைந்தது. மருத்துவக் கண்டுபிடிப்புகள் தொடங்கி சமூகச் சீர்திருத்தச் சிந்தனைவரை அனைத்திற்கும் அடிப்படையாய், ஆதாரமாய் அமைந்தது மாந்தநேயம் எனும் அன்பே!

தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றேயென்னும் தாயுள்ளத்தைத் தந்த அந்த அன்பே பின்பு ஆறறிவுயிர்கள் மட்டுமல்லாது ஐயறிவுயிர்கள் மீதும் அருளாய்க் கனிந்தது. ஆம், முதிர்ந்த அன்பில் முகிழ்க்கும் நல்லுணர்வையே அருளென்பர் அறிஞர்கள். ’அருளென்னும் அன்பீன் குழவி’ என்று அருளை அன்பின் குழந்தையாகவே உருவகப்படுத்துவார் வான்புகழ் வள்ளுவர்.

இந்த அருள்நிலையில் அகங்கனிந்திருந்த இராமலிங்க வள்ளலார்,

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் 
          வாடினேன் பசியினால் இளைத்தே 
     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த 
          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் 
     நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் 
          நேர்உறக் கண்டுளந் துடித்தேன் 
     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் 
          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்” 

என்று வாடியிருந்த பயிரையும், வறுமையாலும் பிணியாலும் நாடி தளர்ந்திருந்த உயிர்களையும் கண்டு துடிக்கும் தன் உள்ளத்தை இப்பாடலிலே நமக்குத் திறந்து காட்டுகின்றார்

அருட்பிரகாச வள்ளலார் மட்டுமல்லாது, துன்புற்றோரின் துயர் களையப் பொருட்கொடை நல்கிய அரச வள்ளல்களுங்கூட வரலாற்றிலும் நம் மனங்களிலும் அழியா இடம்பெற்று நிலைத்துவிட வில்லையா?

தான் வந்துகொண்டிருந்த காட்டுவழியிலே முல்லைக்கொடி ஒன்று காற்றிலே அலைப்புண்டு தவிப்பதைக் கண்டான் வேளிர் தலைவனான பாரி. அதுகண்டு, மாரிபோல் வரையாது வழங்கும் வள்ளலான அவன் உள்ளத்தில் அருள் சுரந்தது. உடனே தன் தேரை அந்தக் கொடிக்குப் பற்றுக்கோடாக அங்கேயே விட்டுச் சென்றான். சற்று சிந்தித்திருந்தால் அருகிலிருந்த மரக்கிளை எதையேனும் ஒடித்துக்கூட அவன் கொழுகொம்பாய் முல்லைக்கு நட்டிருக்கலாம். அந்த அவகாசத்தைக்கூட அவன் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. வாடிய கொடியைக் கண்டவுடனே வள்ளல் பெருமான்போல் அவனும் வாடினான். தேரைத் தந்து அதன் தவிப்பை உடனே போக்கினான்.

குளிரில் நடுங்கிய கான மஞ்ஞைக்குப் பேகன் போர்வை தந்ததும் ஈதொத்ததே. பேகனின் இச்செயலை அவன் நாட்டினர் சிலர் அப்போதே பகடி செய்தனர் போலும். அவர்களுக்குப் பதில்சொல்லும் விதமாய் அமைந்த பாடலொன்று புறநானூற்றில் உண்டு.

அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானைக் கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.
(புறம் – 142)

மழை பெய்யும்போது, நீர் பயன்படும் குளத்திலும் பொழிகின்றது; வயலிலும் பொழிகின்றது. ஒரு வகையிலும் பயன்படாத உவர் நிலத்திலும் பொழிகின்றது. அதுபோல் ஈர நெஞ்சத்தால் தக்கவர் தகாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் உதவி செய்தபோதிலும், வீர நெஞ்சத்தோடு போர்க்களம் புகுந்து எதிரிகளின் படைகளோடு போர்செய்யும் போதில் அந்த அறியாமையைப் பேகனிடம் காணமுடியாது. போர்க்களத்தில் இன்னாரைத் தாக்கவேண்டும், இன்னாரைத் தாக்கக்கூடாது என்ற தெளிவுடன் போர்செய்யும் மாவீரன் அவன். ஆகலின் பேகனிடம் போற்றுதற்குரிய கொடைமடம் உண்டே தவிர, பழித்தற்குரிய படைமடம் இல்லை என்று கூறி அவனுடைய ஈரத்தையும் வீரத்தையும் ஒருங்கே புகழ்வார் நற்றமிழ்ப் புலவர் பரணர்.

அன்பும் அருளும் ஆட்சிசெய்யும் இடத்தில் இவ்வாறு அறிவு சற்றே மடம்படுவதில் பிழையில்லை; மாறாகக் கொண்டாடத்தக்கதே என்பதே இவற்றின் வாயிலாய் நாமறியும் செய்தி!

இத்தகு அன்புமுதிர்ந்த, அருள்கனிந்த மனங்கொண்டோரே ஒப்பிலா இறையன்புக்கும் தம்மைப் பாத்திரர்களாக்கிக் கொள்ளமுடியும். காளத்தி வேடனான கண்ணப்பனைக் காட்டிலும் இதற்குத் தக்கதோர் சான்றுகாட்ட முடியுமா?

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ
(திருவாசகம்)

என்று மணிவாசக அடிகளும் விதந்தோதும் இறைப் பேரன்பினன் அல்லனோ அவன்!

அன்பு குறித்துத் திருமூல நாயனாரும் தம்முடைய தமிழ் மூவாயிரமான திருமந்திரத்தில் விரிவாய்ப் பேசுகின்றார். இறைவன் வேறு அன்பு வேறு என்றெண்ணிக்கொண்டு, அவன் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலையும் அறிவிலிகளைக் கண்டு கழிவிரக்கம் கொள்ளும் அவர்,

”அன்பும் சிவமும் வேறு வேறானவை எனும் தவறான எண்ணத்தைக் கைக்கொண்டுள்ள அறிவிலா மாந்தர்காள்! அன்புதான் சிவமாகின்றது. ஆகவே அனைத்துச் சீவன்களிடம் அன்பு செலுத்துங்கள். திரையற்ற உங்கள் சிந்தையுள், புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல, நுட்பமாய் மறைந்திருக்கும் சிவத்தை மெய்ஞ்ஞானம் எனும் அறிவொளியின் துணைகொண்டு தேடிக் கண்டடையுங்கள். பற்றற்ற அந்தப் பரம்பொருளின் இணையடிகளை அன்போடு பற்றுங்கள். பின்பு நீங்களே அன்புருவாய் – சிவமாய் அகிலத்தில் திகழ்வீர்கள் என்று அறிவு கொளுத்துகின்றார்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ
 தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. 
(திருமந்திரம் – 257)

இவ்வாறு தம் இல்லத்திலுள்ளோரிடத்துத் தொடங்கும் அன்பானது, ஆருயிர்கள் அனைத்தையும் நேசிக்கும் அன்பாய் அலர்ந்து, அதிலேயே இறையைக் காணும் முதிர்ச்சிபெற்ற அன்பாய் மலர்ந்து மணம் பரப்புமானால் மனி(த்)த பிறவியினும் உயர்ந்ததோர் பிறவி இம்மாநிலத்தில் இல்லை என்பது உண்மை!

**********************

துணைநூல்கள்:

 1. திருக்குறள் – மு.வரதராசனார் உரை
 2. திருமந்திரம் – இராமநாதப் பிள்ளை உரை
 3. புறநானூறு – ஔவை சு. துரைசாமிப் பிள்ளை உரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
 4. திருவருட்பா – திருவமுதத் திரட்டு – அருட்செல்வர் நா. மகாலிங்கனார் வெளியீடு

 

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (2)

 1. Avatar

  அன்பு எப்படி அருளாகிறது என்பதனை விளக்கிய கட்டுரை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  திருமதி ராதா

 2. Avatar

  அன்பு இருக்கும் இடம்
  அமைதிப்பூஞ்சோலை..
  அது அனைத்திற்கும்
  அள்ளித்தரும் அமுதென்று
  அழகுற விளம்பிட்ட
  அருமைத் தங்கை வாழ்க!!
  ….ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…

Comment here