கட்டுரையாளர், பேரா. நாகராசன் அவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பல மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்கியுள்ள  ஆகச்சிறந்த ஆய்வறிஞர். தமது நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை ஆய்வாளர்களின் தெளிவான சிந்தையை ஊக்குவிக்கும் வகையில் மிக செம்மையாக வழங்கியுள்ளார். பேராசிரியர் ஆழ்ந்த அனுபவ ஞானம் பெற்ற வரலாறை அவர்தம் மொழியாகவே இங்கு காணலாம்..

ஆசிரியர்

 

1. இணையமும் காப்புரிமையும்

 

காப்புரிமைச் சட்டம் என்பது அச்சு ஊடகப் படைப்புகளுக்காக, படைப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு சட்டப் பாதுகாப்பு. ஒரு படைப்பாளனின் எழுத்துவடிவில் உருவான புதிய கருத்தை மற்றவர்கள் திருடி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்க இந்த காப்புரிமை பயன்பட்டது.

காப்புரிமை பற்றிய சரியான தகவல் ஆங்கிலத்தில் கீழே காணவும்:

According to The Indian Copyright Act, 1957 (Chapter V Section 25), Anonymous works, photographs, cinematographic works, sound recordings, government works, and works of corporate authorship or of international organizations enter the public domain 60 years after the date on which they were first published, counted from the beginning of the following calendar year (ie. as of 2018, works published prior to 1 January 1958 are considered public domain). Posthumous works (other than those above) enter the public domain after 60 years from publication date. Any other kind of work enters the public domain 60 years after the author’s death. Text of laws, judicial opinions, and other government reports are free from copyright. Photographs created before 1958 are in the public domain 50 years after creation, as per the Copyright Act 1911.

இந்த சட்ட சரத்தின்படி 1958 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அச்சு ஊடகப் பதிப்புகள் பொது வெளியில் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற உரிமையுடன் விளங்குவதைக் காணலாம். இந்த சரத்து அச்சில் வெளியானத் தகவல் மற்றும் செய்திகளுக்கு மட்டும் பொருந்தும்.

இணைய வெளியில் வெளியாகும் எழுத்து, ஒலி, ஒளி மற்றும் புகைப்படச் செய்திகள் ஆகியவற்றின் தகவல்கள், மற்றவர்கள் எடுத்துக் கையாளப்படுவதைத் தடை செய்யும் வகையில் அமையவில்லை. இணையம் ஒரு பொது வெளி அங்கு பதியப்படும் கருத்துகளைப் பாதுகாக்க டிஜிட்டல் மேனேஜ்மென்ட் ரைட்ஸ் என்ற பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொள்வதே தற்காப்புக்கான வழி.

இணையவெளி இணைய வழி ஆய்வுக் கட்டுரைகள் இணையத்தில் கிட்டும் எண்ணிம வடிவில் உள்ள ஆவணங்களையும் கருவூலங்களையும் மேற்கோள் காட்டுவதில் காப்புரிமைச் சட்டம் தலையிட வாய்ப்பில்லை எனலாம்.

தமிழர்களின் தொல்லியல், மரபியல் சமூகவியல் மற்றும் வாழ்வியல் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் இணைய வெளியில் உள்ளன. அவை அனைத்தும் காப்புரிமைச் சரத்துக்குள் வராத ஆவணங்கள். எனவே அவற்றைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை.

எந்தவிதமான தனிப் படைப்பும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பொது வெளியில் கட்டற்ற பயன்பாட்டுக்கு உரியதாக உரிமை பெற்றுவிடும். ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதும்போது எது தன் சொந்தக் கருத்து சொந்த எழுத்து என்பதை நிறுவ, தான் ஆதாரமாக மேற்கோள் காட்டிய ஆவணங்கள் பற்றிய குறிப்பை வெளியிடுவது முறையானது. கட்டுரையின் உள்ளே அடிக்குறிப்புகளாகவும் கட்டுரையின் இறுதியில் ஆதார ஆவணக் குறிப்புப் பட்டியலாகவும் கட்டாயம் குறிப்பு எழுத வேண்டும்.

இணையத்தில் அவ்வாறு அளிக்கப்படும் தொகுப்பு வெப்ளியோகிராஃபி என்றழைக்கப்படும். இணையத்தில் எங்கு காணக்கிடைக்கும் என்ற உசாத்துணையுடன் இணையத்தில் தேடிய நாள் பற்றிய குறிப்பையும் இட வேண்டும். இது தொடர்பான மேலதிகத் தகவல் இணையத்தில் அமெரிக்கன் சைக்காலஜிகள் அசோசியேஷன் இணையதளத்தில் ஆவணமாகக் கிடைக்கும் அதைத் தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும்.

 

2. அறிதலும் ஆய்வும்

 

அறிதல் நால்வகைப்படும். அவையாவன:

1 முன்னோர்களின் தொன்று தொட்டு பின்பற்றப்பட்ட பழக்க வழக்கம்
2. சான்றோர்களின் காலத்தால் அழிக்க முடியாத சிந்தனைகள்
3. உள் மனதில் உருவாகும் எண்ணங்களின் வெளிப்பாடுகள்
4. அறிவியல் கருத்து வளங்கள்

மேலை நாட்டினர் அறிவியல் மூலம் நிறுவப்படும் கருத்துகளை, தரம் மிக்க நம்பகத்தன்மை மிக்க தகவல் களஞ்சியம் என்று கருதுகின்றனர். வெறுப்பு விருப்பின்றி சுயச் சார்பில்லாமல் சுற்றுச் சூழலில் உள்ள நிகழ்வுகளைத் தரவுகளாகத் திரட்டி அலசி ஆய்வதே அறிதலின் நோக்கம் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலே சுட்டப்பட்ட மற்ற மூன்று அறிதல் முறைகளும் ஏற்புடையதல்ல என்பது அவர்களின் தீர்க்கமான முடிவு.

ஆனால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்வியலையும் மரபுகளையும் வாய் மொழியாகவும் இலக்கியமாகவும் படைத்துள்ளனர், அவற்றில் ஏராளமான கருத்துக் குவியல்கள் நிறைந்துள்ளன.

அந்தக் கருத்து வளங்கள் இணைய வெளியில் எழுத்து வடிவிலும் ஒலி ஒளி மற்றும் காணொளி வடிவிலும் தரவுகளாகக் கிடைக்கின்றன. பல்லூடக வடிவில் பொதுக் கருத்தாக பரவியுள்ள அந்தத் தரவுகளை அறிதல், ஆய்வின் முதல் நோக்கமாகும்

ஏட்டில் எழுதாக் கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து என்று எழுத்து வடிவுக்கு அப்பால் உள்ள தகவல்களை ஆய்வு செய்து ஆய்வுக் கருத்துகளை வெளியிடுவதே இணைய ஆய்விதழ்களின் கடமையாகும்

முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் அச்சில் பதிவிடாமல் வாய்மொழியாக சீர் சடங்கு பாரம்பரியம் என்று தொன்று தொட்டுத் தொடரும் வழக்கங்களை இணைய வெளியில் தேடுவதும் தொகுப்பதும் இணைய ஆய்வாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

ஆவி வழிபாடு முன்னோர்களைப் போற்றும் வீர வணக்கம் உள்ளத்துள் உருவாகும் வழிபாட்டுச் சிந்தனைகளின் வெளிப்பாடு என மேலை நாட்டு அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்து வளங்கள் தமிழில் நிறைந்துள்ளன. அவை எல்லாம் இணைய ஆவணங்களாக எண்ணிம வடிவில் உள்ளன.

உயர் கல்வியில் ஆய்வுத் துறை வளர்ச்சிக்கு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிரிதம் மட்டுமே ஆய்வுக்குரிய மொழிகள் என்று தீர்மானித்து தமிழ் மொழி ஆய்வுக்குகந்த மொழி அல்ல என்றும் அம்மொழியில் ஆய்வும் அறிவியலும் படைக்க வழி இல்லை என்றும் கருதியது. கீழ்த்திசை ஆய்வுகளுக்கு என்று ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்தபோதும் உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வு அங்கே நடந்தாலும் தமிழுக்கு இடம் இல்லை என்ற நிலை நீடித்தது.

பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை என்ற நிலை ஒரு ஆங்கிலேயப் போர் வீரனின் விதவை தமிழுக்கு என்று கொடுத்த கொடையைக் கொண்டே அமைக்கப்பட்டது. படிப்படியாக பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு முனைவர் பட்டப்படிப்பு என்று தமிழ் முன்னேறினாலும் தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று பல்கலைக்கழக விதி வலியுறுத்தியது.

தமிழில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கான உலகத் தரம் வாய்ந்த ஆய்வு இதழ்கள் தமிழகத்தில் செயல்படவில்லை. தமிழ் ஆய்வாளர்களுக்கு ஆங்கிலப்புலமை இல்லாமையால் உலக அளவிலான உயர்வான ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட இயலவில்லை.

இன்றைய நிலையில் இணைய ஆய்விதழ்கள் அச்சு மட்டும் அல்லாது பல்லூடக வடிவில் வளங்களைத் திரட்டியும் தொகுத்தும் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட வாய்ப்பளிப்பது பெருமைக்குரியதாகும். தமிழ் ஆய்வுகள் தமிழில் இணைய வெளியில் வெளியிடுவதன் மூலம் தமிழர்களின் அறிவுப்புலம் உலக அளவில் பரவுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேலை நாட்டு ஆய்வுப்பார்வை என்று தமிழ் ஆய்வைச் சுருக்கிக் கொள்ளாமல் தமிழ் ஆய்வாளர்கள் தமிழர்களின் முழுமையான அறிவுப்புலத்தை ஆய்வுலகத்துக்கு எடுத்துச் செல்ல இயலும்.

 

3. சட்ட வரைவும் கட்டமைப்பும்

 

ஆய்வுப் பணி என்பது ஒரு திட்டமிட்ட செயல். அறிவுலகம் எண்ணற்ற தகவல்களை அன்றாடம் உருவாக்கி அவற்றைப் புலங்களாகப் பகுத்துத் தொகுத்துவரும் நிலையில் முதலில் ஆய்வு எந்தப் புலத்தில் / புலங்களில் மேற்கொள்ள வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ் ஆய்வுகள் வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்து அமைவது பொருத்தமாக இருக்கும். ஆய்வாளர் இந்தப் புலங்களில் அதுவரை நிகழ்ந்த ஆய்வுகளின் தொகுப்பை அலசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட தலைப்புகளையும் ஆய்வுக்குப் பயன்பட்ட ஆய்வு முறைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

வரலாற்று ஆய்வுகள் காலப் பாகுபாட்டு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டும் தேர்வு செய்து ஆய்வு அக்காலகட்டத்துள் அமைவதாக இருக்க வேண்டும். மேலைநாட்டு நிகழ்வுகள் நீண்ட தொடராக நேர்கோட்டுப் பாதையில் அமைந்துள்ளதுபோல் தமிழக வரலாறு அமையவில்லை. அறுபதாண்டுக்கு ஒரு முறை சுழலும் சக்கர வடிவிலான வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்து கால நிர்ணயம் செய்வது எளிதான காரியம் அல்ல. எனினும் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் பல காலகட்டத்தை நிறுவியுள்ளனர். ஒவ்வொரு ஆய்வாளரும் அவர்கள் அனுமானத்திற்கேற்ப வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை நிறுவியுள்ளனர். அதன் காரணமாகவே சங்க காலம் என்பது கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரை குறிப்பிடப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆய்வாளர் தன் ஆய்வுக்குரிய காலம் என்ன என்பதையும் அக்காலகட்டம் எந்த ஆய்வாளரின் காலப்பகுப்புக்கு உட்பட்டது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புக்குத் தொடர்பான அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கான ஆவணங்களை ஆய்வாளர் முதலில் திரட்ட வேண்டும். ஆவணங்கள் பல வடிவங்களிலும் பலதரம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஆவணங்களின் நம்பகத் தன்மையை உள்ளுறை மற்றும் வெளிப்புற விமர்சனங்கள் மூலம், விலக்குவது விலக்கி நம்பகத் தன்மை மிக்க ஆவணங்களை ஆய்வுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

ஆய்வாளர் ஆய்வுக்கான கேள்வியை எழுப்பி ஆவணங்கள் மூலம் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறான கேள்விகள் வழக்கில் நின்று நிலவும் வரலாற்றுத் தகவல்களைத் தகவில என்று நிறுவுவதாக அமைதல் வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வரலாற்று ஆய்வின் அடிப்படை.. சரியான காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் தகவல் புதிய தரவுகளால் தகவில என்று நிறுவுதல் மூலம் தமிழக வரலாற்று நிகழ்வுகளில் உள்ள தொன்மங்களும் புனைவுகளும் பிழைகளும் களையப்படும்.

இவ்வாறில்லாமல் ஆய்வின் மூலம் ஒரு புதிய தகவலை ஆவணச் சான்று மூலம் நிறுவுதல் அனுமானத்தைத் தோற்றுவிக்கும் ஆய்வாக அமையும். வரலாறு என்பது அரசவை வரலாறாக எழுத்து வடிவில் இருக்கும் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. அதில் ஆய்வாளர் பார்வையும் கோணமும் உள்ளடங்கி நிற்கும். ஆய்வுப்பொருளாக அமைந்தவர்களில் பார்வையும் கோணமும் அதில் இருப்பதில்லை. வாய்மொழி வரலாறு வரலாற்று நிகழ்வுகளை ஆய்வுப் பொருளானவர்களின் பார்வையில் அவர்கள் கோணத்தில் வெளிப்படுத்துவதாக அமையும்.

வரலாற்று ஆய்வாளர்கள் சட்ட வரைவில்லாத கட்டமைப்பில்லாத ஆய்வைத் தொடங்கினால் அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து திரிய வேண்டியதிருக்கும் அவர்களின் ஆய்வு முடிவுகள் சமகால ஆய்வாளர்களின் கழுகுப் பார்வைக்கு இரையாகிவிடும்.

 

4. சுய சிந்தனையும் அறிவியல் இயக்கமும்

 

மேலை நாட்டுச் சமூகம் விக்டோரியப் பேரரசியின் ஆட்சிக் காலம் வரை சமய நம்பிக்கைக்குள் சிக்கி மக்கள் அறிவார்ந்த சிந்தனையைப் பயன்படுத்தாமல் மத குருமார்களின் கட்டுக்குள் வாழ்ந்ததை மேலை நாட்டு சமூக வரலாறு படம்பிடித்துக் காட்டும்.. விக்டோரியப் பேரரசியின் காலத்தில் அறிவியல் மறுமலர்ச்சி ஏற்பட்டதை வரலாறு சுட்டும்.

ஆனால் தமிழர்களின் சமூக வரலாறு முற்றிலும் வேறுபட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த சமுதாயமாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு புறம் ஆவி வழிபாடு முன்னோர் வழிபாடு என்றிருந்தாலும் இன்னொருபுறம் சுய சிந்தனையாலும் பட்டறிவாலும் இயற்கையுடன் இணைந்து வாழும் கலையை உருவாக்கிக் கொண்டு. அச்சுறுத்தும் இயற்கைக்கு அஞ்சாமல் இயற்கையின் சக்தியை வாழ்வின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது.

காற்றின் திசை வேகம் அலைகளின் போக்கு போன்றவற்றைப் பட்டறிவால் அறிந்து தன்னைச் சுற்றியிருந்த முக்கடல் மூலம் மேற்கிலும் கிழக்கிலும் தன் வணிகத்தைப் பெருக்கிக் கொண்டான் மனிதன். அவைதீக சமயங்களான தமிழ்ச் சமணம் தமிழ் புத்தம் வழியாக முன்னோர் வழிபாட்டுடன் அறிவிற் சிறந்த ஆன்றோர்களின் துணைகொண்டு அருளும் அறிவும் இணக்கமாகச் செயல்படும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான்.

நீதி நெறியோடு காதல் வீரம் அன்பு அருள் போன்ற நுண்ணிய உள்மனச் சிந்தனைகளுக்கு ஊடக வடிவத்தை உருவாக்கி திறன் வாய்ந்த கலைஞர்கள் மூலம் சமுதாயம் முழுமைக்கும் பரப்புரை செய்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ்ச் சமுதாயம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக இருக்குமாறு கட்டமைத்துக் கொண்டனர்.

சுற்றியுள்ள சூழலையும் இயற்கையையும் புறக்கண்ணால் ஆய்ந்து கண்ட காட்சிகளுக்கு வடிவம் கொடுத்தனர். மொழி என்னும் கருவியின் மூலமும் நுண்கலைகள் மூலமும் மனத்தகத்தே நோன்றிய நுண் உணர்வுகளுக்கும் அவனால் வடிவம் கொடுக்க முடிந்தது. இடைக்காலத்தில் வைதீக ஆன்மீகச் சிந்தனைகள் மேலெழுந்து தமிழரின் சுய சிந்தனை மற்றும் பட்டறிவின் வெளிப்பாடுகளை அழுத்தி மறைத்த நிலையில் தமிழர்களின் வரலாறு ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே விளங்கியது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலை நாட்டு அறிஞர்களில் சிலர் கிறித்துவக் குருமார்கள் மற்றும் அவர்கள் நடத்திய திருச்சபை மக்களை அறிவுப்பாதையில் முன்னேறவிடாமல் தடுப்பதாகக் கூறி அறிவுப் புரட்சிக்கான இயக்கங்களை உருவாக்கினர். அதை அடியொற்றி சென்னையிலும் அறிஞர்கள் வைதீகச் சமயம் மக்களை இருட்டில் வைக்கும் வேலையில் ஈடுபட்டுத் தமிழன் தன் உண்மை வரலாற்றை அறிந்துகொள்ள விடாமல் தடுக்கிறது என்று ஒரு எதிர்ப்பியக்கத்தை உருவாக்கினர்.
சுய சிந்தனையாளர் சங்கம் தமிழர்களின் கடந்த காலச் சிறப்பு எவ்வாறு சமய ஆதிக்க சக்திகளால் மறைக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்து தமிழர் சிந்தனை சுய சிந்தனையாக உருவெடுத்து தமிழர்களின் அறிவியல் படைப்புகளை மீட்டெடுக்க வலியுறுத்தினர்.

மேலை நாட்டு அறிவியல் ஆய்வு முறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து பொருத்தமான ஆய்வு நெறிகள் மூலம் தமிழர்களின் வரலாறு வாழ்வியல் மரபியலை மீட்டெடுக்க வேண்டும்.

இது தொடர்பான சில உசாத்துணைகள் கீழே காண்க:

https://keetru.com/index.php/2009-10-07-12-27-44/maatruveli-mar-2014/26890-2014-07-28-11-24-03

https://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5316513.ece

 

5. சங்க காலமும் சம காலமும்

 

தமிழர்கள் பெருமையுடன் குறிக்கும் சங்க காலம் என்ற கருத்துருவில் சங்கம் என்ற சொல் சமணத்தின் தாக்கத்தால் உருவான ஒன்று. சமணர்கள் ஆசிரியர்களாக விளங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனைகளைத் திரட்டியும் பரப்பியும் பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

செந்தமிழ்நாடு என்றழைக்கப்பட்ட பாண்டிய நாட்டில் அமைந்திருந்த சம கால சம தள சம தகுதி படைத்த சான்றோர்களின் அமைப்பே சங்கம் என்றழைக்கப்பட்டது. தனியர்களின் படைப்புகள் சமூகத்தின் பொதுநிலைக் கருவூலமாக ஏற்றவை என்ற தர நிர்ணயம் இந்த சங்கத்தால் செயல்படுத்தப்பட்டது. ஒரு புதிய படைப்பு சங்கத்தின் முன் வைக்கப்பட்டு அவர்களால் திறனாய்வு செய்யப்பட்டு தரம் மிக்க படைப்புகளைத் தமிழின் கருத்துக் கருவூலங்களாக ஏற்கப்பட்டு மக்களிடையே பரவலாக்கப்பட்டது.

சமகாலத்தில் அறிவுலகம் இதே முறையைப் பின்பற்றுவதைக் காணலாம். ஒவ்வொரு புலத்துக்கும் என்று அறிவுசால் உறுப்பினர்களைக்கொண்ட சங்கம் இயங்குவதையும் அவை ஆய்விதழ்களை நடத்துவதையும் நாம் காணலாம். சங்க காலத் தமிழ்ச் சங்கம் போன்றே இவர்களும் தனியர்களின் முனைப்பால் உருவான ஆய்வுக் கட்டுரைகளை அத்தளத்தில் புலமையும் சான்றாண்மையும் மிக்கவர்களுக்கு அனுப்பி ஆய்வுக் கட்டுரையின் நிறை குறைகளை அலசி தர நிர்ணயம் செய்யுமாறு வேண்டி அவர்களின் கருத்தின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள்.

இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை இதுபோன்ற தரமதிப்பீட்டுக்குப்பின் வெளியிடும் ஆய்விதழ்களில் வெளியிடுவதே சிறப்பான ஆய்வு முனைப்பாக அமையும்.

இணையத் தோற்றம் வளர்ச்சிக்குப்பின் உலகெங்கும் உள்ள சமகால சமதள சம தகுதி வாய்ந்த அறிஞர்களைத் தொடர்புகொள்வது எளிதாக்கப்பட்ட நிலையில் இதழாசிரியர் அல்லது அவரால் நியமனம் பெற்ற ஒரு சிறு குழுவின் முடிவால் ஆய்வுத்தரம் இறுதி செய்யப்படாமல் பரவலாகப் பலரின் உற்று நோக்கலுக்கும் தீர்ந்த முடிவுக்குப் பின்னர் வெளியிடப்படுவது தமிழ் ஆய்வின் தரத்தைப் பல மடங்கு உயர்த்திப்பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

6. கருத்தும் தகவலும்

 

கருத்து தனியரின் பார்வை. தகவல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வை. ஐம்புலன்களையும் கொண்டு ஐம்பொறிகளாலும் புற உலகைக் காணும்போது கருத்து மனிதனுக்கு மனிதன் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறும் தன்மைகொண்டது. ஒருவரே தன் கருத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் உண்டு. புற உலகை உற்று நோக்கலில் பயிற்சியில்லாத ஐம்பொறிப் பார்வை உண்மைக்கு மாறாகவும் அமைவதுண்டு. நிலவைக் கண்டதும் அல்லி மலர்வதாகக் கவிதை பாடலாம். நிலவு தோன்றாத இரவிலும் அல்லி மலர்வது அறிவுப் பார்வை. கதிரவன் உதிப்பதும் மறைவதும் அன்றாடம் காணும் காட்சி. பூகோளவியல் கதிரவன் எழுவதும் இல்லை மறைவதும் இல்லை என்ற அறிவியல் பார்வையைப் பள்ளிப் பருவத்திலேயே வழங்குகின்றது.

தனியரின் கருத்துகளை சரி என்றும் தவறென்றும் நிறுவ இயலாது. ஒருவரின் கருத்து தவறு என்று எந்நாளும் நிறுவ இயலாது. கருத்து மாறும் தன்மை கொண்டது. தோற்ற மயக்கமும் காட்சிப் பிழையும் கருத்தில் இருக்கும் நிலையில் விருப்பு வெறுப்பற்ற பயிற்சி பெற்ற ஒருவர் தரவுகளின் அடிப்படையில் முன்வைப்பது தகவல். தகவலை யார் வேண்டுமானாலும் சோதனை செய்து அதன் நம்பகத்தன்மையை நிறுவ முடியும். புதிய தரவுகள் அடிப்படையில் தகவல் தொடர் மாற்றம் பெறும்.

வழக்கில் உள்ள பல செய்திகளைப் புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவ முடியும். ரோம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பது வரலாற்றுச் செய்தி. வாடிகன் நூலக ஆவணங்களின் தரவுகள் பிடில் என்ற இசைக்கருவி நீரோ மன்னன் காலத்துக்குப் பின்னரே வடிவமைக்கப்பட்டது என்ற தகவலை முன்வைத்து வரலாற்றுச் செய்தி பிழையானது என்று நிறுவியது.

கருத்துகள் எண்ணற்றவை. ஆனால் மனிதனின் தகவல் கையாளும் சக்தி மிகவும் குறைவானதாகும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது அறிவியல். தேவைக்கு அதிகமான கருத்துகளைச் சுருக்கித் தகவலாக மாற்றுவது ஆய்வாளர்களின் பணி. தனியனின் ஐம்பொறிகளின்மீது சுற்றுச் சூழலின் தாக்கம் மனிதனிடம் எண்ணற்ற கருத்துகளை உருவாக்க வல்லது. கருத்துகளைச் சுருக்கி சரியான செய்திகளைச் சீர்தூக்கி தகவல் ஆய்வாளர்களால் உருவாக்கப்படுகின்றது. திரட்டப்படும் தகவல் தொடரடையாக மாற்றப்பட்டு கோட்பாடுகளாக உருவாக்கப்படும். தொடர்புடைய கோட்பாடுகளின் தொகுப்பு இயற்கையின் செயல்பாடுகளை விளக்கும் விதிகளாக அமைகின்றன.

ஆய்வாளர்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் செய்திகளை முன்வைத்து தரவுகள் மூலம் அவற்றைத் தகவலாக மாற்றம் செய்கின்றனர். இந்தத் தகவல் தொகுப்பே ஆய்வுமூலம் நிறுவப்படும் தகவல் தளமாக அமையும். புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவப்படாதவரையில் அந்தத் தகவல் நின்று நிலவும். புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவப்பட்டால் அத்தகவல் ஆய்வுலகப் பார்வையிலிருந்து மறையும்.

 

7. சிந்தனையும் கருத்துருவும்

 

விலங்கினங்களையும் மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுவது சிந்தனை. விழித்திருக்கும்போதும், கனவுடன் கலந்த உறக்கத்தின் போதும், மனித மனம் இடைவிடாது சிந்திக்கின்றது. அறிதுயிலாயினும் அல்லது நீடு துயிலாயினும் சிந்தனை ஓட்டம் தடைப்படுவதில்லை. ஐம்பொறிகளால் உள்வாங்கப்பட்ட வெளிப்புறச் சமிக்ஞைகளையும் உள் மனத்தில் பெருக்கெடுத்தோடும் நுண்ணிய எண்ணங்களையும் மூளையால் தொடர்ந்து அலசுகின்றது. இந்தச் செயல்பாடு மனிதனை கணக்கற்ற கருத்துகளை உள் வாங்கவும் வெளிப்படுத்தவும் உதவுகிறது.

அகத்தில் தாக்கம் ஏற்படுத்திய சிந்தனைகள் வார்த்தைகள் மற்றும் பல்லூடக வழியாகப் பரிமாற்றம் செய்ய ஏதுவான சிந்தனைகளை மனிதன் எழுத்தாலும் வாய்மொழியாலும் பரப்புரை செய்கிறான். வார்த்தைகளால் வர்ணிக்கக் கூடிய விளக்கக் கூடிய உள்மனச் சிந்தனைகள் கருத்துருவாக வடிவம் பெறுகிறது. பாசம், பக்தி, அருள் போன்று நுண்ணிய கருத்துருக்களும் புற உலகில் கண்ணால் கண்டு காதால் கேட்டு உய்த்துணரவல்ல ஐம்பொறிகளுக்கு வசப்படும் கருத்துருக்களும் சமூக வெளியில் பரவும்.

விலங்குகள் அனைத்துக்கும் வாழ்க்கையை நடத்தத் தேவையான அறநெறி நீதி நெறி உண்டு. மீன் இனத்தில் பெரிய மீன் சின்ன மீனை வாயால் கவ்வலாம். ஆனால் சின்ன மீன் பெரிய மீனைக் கவ்வக்கூடாது. பெரிய குரங்கு சிறிய குரங்கைக் கடிக்கலாம்.. ஆனால் சிறிய குரங்கு பெரிய குரங்கைக் கடிக்கக் கூடாது அதுபோல் சேவல் கோழியைத் துரத்திக் கொத்தலாம். ஆனால் கோழி சேவலைக் கொத்தக்கூடாது.

மனிதன் சிந்தனையால் காலத்துக்குக் காலம் வாழ்வுக்கு அடிப்படையான அறநெறிகளை உருவாக்கிக் கொள்கிறான். அவற்றில் ஒன்று ஆய்வுக்கான அறநெறி. ஆய்வுக்கான அறநெறி – தெரிந்திருப்பது தெரியாமல் இருப்பதைவிட உகந்தது. உனக்குத் தெரிந்ததை மற்றவர்கள் தெரிந்துகொள்ளச் செய் என்பதாகும். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கருத்துருக்களை எடுத்துச் சொல்லும்போது கற்றல் நிகழ்கின்றது. ஆசிரியர் மாணவன் குரு சீடன் என்ற உறவும் மலர்கின்றது. மரபணுக்களால் ஒரு தலைமுறையிலிந்து மற்றொரு தலைமுறைக்கு பகிர்மானம் செய்யப்படும் பண்புக் கூறுகளுக்கு அப்பால் மூளையில் இருந்து மற்ற மூலைகளுக்கு பகிரப்படும் கருத்துருக்களின் தொகுப்பு மனிதனை சிந்தனை செய்யும் விலங்காக மாற்றும்.

வாய்மொழியாகவும் இசை நாடகம் ஆகிய வடிவங்களிலும் ஒரு குழுமத்தின் அறிவு வளங்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக பகிரப்படுகின்றது. வாய்மொழிப் பரப்புக்கு தகவலை மூளைக்குள் சேமிக்கும் நினைவுத் திறன் அவசியம். ஒரு லட்சம் வேத மந்திரங்களை அட்சரம் பிசகாமல் ஒப்புவிக்கும் திறன் குருவிடமிருந்து சீடனுக்குச் சென்றடைகிறது. இதன் காரணமாகவே பல்லாயிரயம் ஆண்டுகளுக்கு முன் உருவான வேத வளங்கள் மாற்றம் இன்றி பல தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. பாரம்பரியம், பண்பாடு, மரபு போன்றவை குழுக்களில் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பரவிவிருகின்றது.

குழுக்களாக ஆதிக்குடிகளாக வாழ்ந்த தமிழர்கள் தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு மக்களுக்கு கதை சொல்லல், சிற்பம், ஓவியம், கல்வெட்டு செப்புப் பட்டயம், ஓலைச் சுவடிகள் எனப்பல ஊடகப் பதிப்புச் சாதனங்கள் மூலம் பதிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். வாய்மொழி வழக்கில் மறைந்து நிற்கும் வளங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்ற்றுக்கு வடிவம் கொடுத்து கால ஓட்டத்தால் மறையாமல் காப்பது ஆய்வின் நோக்கமாகும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்மொழியாக விளங்கிய வைதீகச் சிந்தனைகளை வியாசர் தொகுத்ததும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தென் தமிழ்நாட்டில் ஆடல் மகளிரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நாயக நாயகிப் பாடல்கள் திராவிட வேதமாகத் தொகுக்கப்பட்டதும் எடுத்துக் காட்டுகளாக அமையும்.

அகச் சிந்தனைகளாலும் புற வெளியை ஐம்பொறிகளால் தேடுவதாலும் உருவாகும் கருத்துருக்களே ஆய்வுக்கான அடிப்படைக் கருப்பொருளாக அமையும். காலப் போக்கில் கருத்துருக்கள் பெற்ற மாற்றம் புதிய கருத்துருக்களின் தோற்றம் ஆகியவற்றைத் தேடித் தொகுப்பது ஆய்வாளர்கள் பணியாகும்.

ஒத்த கருத்துக்களை அலசி நிரலிட்டு தொகுத்தால் அவையே கருதுகோளாக வடிவம் பெறும். இணைய வளர்ச்சிக்குப்பின் விக்கிப் பீடியா ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கத் தேவையான கருதுகோள்களை எளிதில் கிட்டும்வண்ணம் செயல்படுத்திவருகின்றது. அச்சு ஊடகத்துக்கும் இணையத்திற்கும் நிறைய வேறுபாடுள்ளது. இணையம் பொது வெளி. கருத்துகளை வெளியிடத் தடைகள் அதிகம் இல்லை. புத்தக உலகம் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது. ஒரு நூலைப் படைத்து வெளியிடுவது இணையத்தில் எளிது புத்தக உலகில் எளிதல்ல. புத்தகத்தைப் படிப்போர் உடனே விமரிசனம் செய்ய இயலாது ஆசிரியன் படிப்போர் வளையத்துக்கு அப்பாற்பட்டு இருந்து விமரிசனங்களுக்கு அதிகம் அவதிப்படாது தற்காத்துக்கொள்ள முடியும். இணையம் அதற்கு நேர் மாறானது.

இணையத்தில் மின் நூலகங்கள் கடந்தகாலச் சிந்தனை வளங்களை பல்லூடக வடிவில் எளிதில் கிடைக்குமாறு வாய்ப்பை அளித்துள்ளது. நூற்றாண்டுக் காலத்துக்கும் பழமையான நூல்களும் மற்ற ஆவணங்களும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும்.

இணைய வெளியில் ஆய்வு செய்பவர்கள் விரைவாகவும் திறம்படவும் செயல்படக் கிட்டியுள்ள வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

8 . காடும் மரமும்

 

காட்டைப் பார்க்கும்போது மரத்தை எண்ண முடியுமா? மரத்தை எண்ணும்போது காட்டை முழுமையாகக் காண முடியுமா? இந்தப் புதிர் ஆய்வின் இரு பெரும் பிரிவுகளை வெளிக்கொணர வல்லது..

ஆய்வுப்புலத்தில் நிறுவப்பட்டு நின்று நிலவும் கோட்பாடுகளையும் விதிகளையும் பருப்பொருள் அலகீடுகளால் கணக்கீடு செய்ய இயலாத கருத்துருக்களையும் ஆய்வு செய்வது ஏரண அடிப்படையில் தர்க்கவாத அடிப்படையில் செய்யப்படும் ஆய்வு என்ற ஒரு வகை. ஐம்பொறிகளைப் பயன்படுத்தி அளவிட்டுத் தரவுகளை உருவாக்காமல் ஏரணத்தின் அடிப்படையில் செயல்படும் ஆய்வு வழக்கில் உள்ள நிறுவப்பட்ட நம்பகத்தன்மை மிக்க விதிகளை தர்க்கரீதியாக அலசி புதிய தகவலை நிறுவும் முறையாகும்.

ஒரு அன்றாட நிகழ்வை எடுத்து இம்முறையை விளக்கலாம்.

சென்னை மாநகரில் ஒரே எண்ணிக்கை தலைமுடியுள்ள இருவர் உள்ளதை எவ்வாறு நிறுவுவது? ஒவ்வொருவரின் தலைமுடியையும் எண்ணி விடை காண்பது இயலாத காரியம். இதற்கான விடையை ஏரண அடிப்படையில் நிறுவலாம்.

 

 ஒருவரின் தலை முடியைவிட அதிகமானவர்கள் சென்னையில் வசிக்கிறார்கள் என்பது ஒரு ஏரண அடிப்படையில் நிறுவப்பட்ட தகவல்.. இந்த அடிப்படையில் நம் அலசலுக்காக ஒருவரின் தலைமுடியின் எண்ணிக்கை ஐம்பது என்று கருதினால் சென்னை மக்களின் எண்ணிக்கை ஐம்பத்தி ஒன்று என்றாகும் அல்லவா. இந்த ஐம்பத்தியொருவர்களில் எவருமே தலையில் முடியே இல்லாத சொட்டையர்களை உள்ளடக்கவில்லை என்ற நிலையில் முதலாமவருக்கு ஒரு முடி இரண்டாமவருக்கு இரண்டு முடிகள் என்று எண்ணிக்கையிடலாம். ஐம்பதுபேருக்கு ஐம்பது முடிகள் என்ற நிலையில் ஒருவர் கணக்கீட்டுக்கு வெளியே இருப்பார். அவருக்கு இந்த ஐம்பதில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் முடி இருக்கும் என்று கருதினால் சென்னையில் ஒரே எண்ணிக்கையில் தலை முடியுள்ள இருவர் உள்ளனர் என்பதை ஆய்வாளர் தன் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு சிந்திப்பதில் இருந்து தப்பிக்க வைக்கும் ஆய்வாக அமையும் .

இதே தலைப்பில் ஒரு மானிடவியல் ஆய்வாளர் உலகெங்கும் உள்ள 720 குழுக்களைத் தனித்தனியாக ஆய்வு செய்து சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

 

1. கட்டுப்பாடுமிக்க அமைப்புகளில் வாழும் மனிதர்களின் முடி குறுக்கி வெட்டப்பட்டிருக்கும். எ. கா. ராணுவ வீரர்கள் கைதிகள்.

2. நீண்ட முடி வளர்ப்போர் -மேல்நாட்டறிஞர்கள், விதிகளைப் புறந்தள்ளும் இளைஞர்கள், பெண்கள்.

3. நீண்டமுடி வாழும் சமூகத்திலிருந்து ஒதுங்கி நிற்பதையும் குறுகிய முடி சமுதாயத்தை ஒட்டி வாழ்வதையும் குறிக்கும்.

4. சந்நியாசிகள் ஃபக்கீர்கள் நீண்டமுடியுடன் சமுதாயத்தை விலக்கி வாழ்வதைக் குறிக்கும். சடாமுடியும் மழித்த தலையும் அவர்களைச் சமுதாயத்திற்கு அப்பால் வாழ்பவர்களாக விளக்கும்.

5. நாரதபரிவர்ச்சக உபநிஷத் குடுமி பாலுணர்வைக் கட்டுப்படுத்தி வாழ்வோரைக் குறிக்கும் என்றும் மழித்த தலை கற்பு வாழ்வைக் குறிப்பதாகவும் சடாமுடி உலக வாழ்வை வெறுத்து ஒதுக்கியவர்களையும் சுட்டுவதாகக் குறிப்பிடும்.

இவ்வாறு சிறு பிரிவுகளாகப் பிரித்து ஐம்பொறியால் உற்றுநோக்கி அலகீடுகளால் அளவிட்டு நிறுவும் தகவல் இரண்டாவது ஆய்வு வகையாக அமயும் இது மரத்தை எண்ணி காட்டைக் காண்பதைப் போன்றது.
ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும்போது இந்த இரண்டு முறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளலாம்.

 

9. எடுக்கவோ கோர்க்கவோ

 

தமிழர்களின் வரலாறு மற்றும் சமூகவியல் ஆய்வுத்தளத்தில் எண்ணற்ற கருத்துருக்கள் இணைய வெளியில் எண்ணிம வடிவிவில் கிட்டுகின்றன.

முதல்பணி அவற்றைத் தேடுபொறி மூலம் தேடி பட்டியலிடுதல். கருத்துருக்கள் எழுத்துவடிவில் மட்டுமின்றி படமாகவும் படக்காட்சியாகவும் ஒலி வடிவாகவும் கிடைக்கும். சிதறிக்கிடக்கும் மணிகளைத் தேடி எடுக்க வேண்டும். உள்ளத்தில் தோற்றக் காட்சியாகவும் புறத்தில் ஊடக வடிவிலும் காணக்கிடைக்கும் கருத்துருக்களை எளிய தெளிவான மிகைபடல் கலக்காமல் சரியான சொற்களைப் பயன்படுத்தி விவரிக்க வேண்டும். விவரணை அடிப்படையில் அவை தெளிவான பிரிவுகளில் பகுக்கப்படவேண்டும். ஒரு கருதுகோள் அல்லது அனுமான அடிப்படையில் அவை பல்வேறு விதங்களில் தொகுக்கப்பட வேண்டும்.

எடுத்துக் காட்டாக ஒரு மானுடவியல் அறிஞர் தாங்கள் நூறு விழுக்காடு தனித்தன்மைமிக்க அமெரிக்கர்கள் என்று தற்பெருமை பேசுவோரின் முகத்திரையைக் கிழிக்கும் வண்ணம் அன்றாட வாழ்வில் எவ்வளவு கலப்புகள் அமெரிக்கச் சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன என்பதைக் கட்டுரையாக வடித்தார். ( தமிழகத்திலும் தனித்தமிழ் பேசுவோர் தெளிய இதுபோன்ற ஆய்வுகள் உதவும்.

 

உசாத்துணை கீழே காண்க:
http://www.expat.or.id/info/expatstories.html

 

அதுபோன்றே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகக் கோவில்களில் உள்ள இறையுருக்களின் பீடம் நின்ற அமர்ந்த கோலம் முத்திரைகள் ஆயுதங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு அடிப்படையில் கோர்க்கப்பட்டுள்ளதைக் கீழே கொடுத்துள்ள படங்களில் காணலாம்.

 

10 . எண்ணும் எண்ணிமமும்

 

 

பழந்தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கிய காரணத்தால் அவர்கள் எழுத்துடன் எண்ணையும் போற்றி வளர்த்தனர். பெரிய மதிப்பையும் ஒன்றுக்கும் குறைவான சிறிய மதிப்பையும் அளவிடத் தேவையான குறியீடுகளை அவர்கள் பயன்படுத்தினர். தமிழர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான கணிதக் குறியீடுகள் கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் பரவியது. வணிகர்கள் என்ற நிலையில் மதிப்பில்லாத சூன்யத்துக்கான சுழியை அவர்கள் பயன்படுத்தியதில்லை. நூறு ஆயிரம் பத்தாயிரம் என்று குறியீடுகளை உருவாக்கியவர்கள் சுழியத்தைப் பயன்படுத்தியதில்லை. பிற்கால புத்த வைதீக சமயங்கள் சூன்யத்தையும் மாயையும் பாழ் நிலையையும் குறிக்க சுழியத்தைப் பயன்படுத்தினர்.

ஃபிரஞ்ச் கணித மேதை புதிய கணக்கிடும் கணித முறையைக் கண்டுபிடிக்க முனைந்து இரண்டு எண் குறியீடுகளை மட்டும் வைத்து கணக்கிடும் முறையை உருவாக்க நினைத்தவர் தமிழ்க் கணித முறையில் உள்ள எண் குறியீடு ஒன்றையும் சமஸ்கிருதப் பயன்பாட்டில் உள்ள சூன்யத்தைக் குறியிடும் சுழியையும் இரண்டு எண் குறியீடுகளாகப் பயன்படுத்தினார்.

பிற்காலத்தில் கணக்கிடும் கருவியைப் பயன்படுத்த முனைந்த அறிஞர்கள் சிக்கலற்ற எளிதான இருநிலை எண் குறியீட்டைப் பயன்படுத்தி கணினியை உருவாக்கினர். கணினிக்கு மனித மொழி தெரியாத நிலையில் கணினிக்கு ஏற்ற குறியீடுகளாக மொழியின் எழுத்துகளைக் குறியீடாக்க முனைந்தனர். கணினி எண் அடிப்படையில் இயங்கினாலும் தேவையை உணர்ந்து ஆங்கில எழுத்துகளுக்கும் எண்ணிமக் குறியீடுகளை உருவாக்கினர். இவ்வாறு எண்ணிமக் குறியீடுகள் வழியாகவே ஆங்கில எண்ணும் எழுத்தும் மின்னியல் வடிவம் பெற்றது.

மேல்நாட்டில் உருவாக்கப்பட்ட கணினிகள் ஆங்கில மொழிக்கு மட்டுமே எண்ணிம வடிவம் உருவாக்கியதால் கணினியின் இயக்கம் பெரும்பாலும் ரோமானிய மொழிக் குடும்பத்துக்கு ஏற்றவாறு செயல்பட்டது. பின்னர் மற்ற மொழிகளின் எண்ணும் எழுத்தும் எண்ணிம வடிவம் பெற்று அம்மொழிகளின் வழங்கள் கணினியில் உள்ளீடு செய்யவும் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள எண்ணிம வளங்களை இயற்கை மொழியில் மாற்றி கணினித் திரையிலும் காகிதத்திலும் வெளிப்படுத்தினர்.

இணைய வளர்ச்சியில் தமிழ் வளங்கள் அதிகமாக எண்ணிம வடிவம் பெற்றது. கணினியில் ஒரு தளம் மட்டுமே இயங்கும் வண்ணம் யூனிகோட் ஒருங்குறியீடு வளர்ச்சியடைந்து தமிழ் மொழியின் பல்லூடக வளங்கள் அனைத்தும் எண்ணிம வடிவில் கிட்டும் வாய்ப்பு உருவானது. எண்ணிம வளங்கள் மின்னியல் வடிவங்களில் தோன்றியதன் அடிப்படையில் தமிழ் ஆய்வு எண்ணிமத்துக்கு மாற்றம் பெற்று புதிய தளம் உருவானது

இன்று தமிழ் ஆய்வாளர்கள் கணினியைப் பயன்படுத்தி மின்னியலில் அதி அற்புதமான முன்னேற்றங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்யும் எண்ணிம மனிதவியல் என்ற புதிய துறையை உருவாக்கியுள்ளனர்.

எண்ணிம மனிதவியலை விளக்க கீழ்க்காணும் விளக்கம் உதவும்!

எண்ணிம மனிதவியல் (Digital Humanities) என்பது மனிதவியல், கணினியியல் துறைகள் இணைந்த ஒரு கல்விப் புலம் ஆகும். இத்துறை மரபுசார் சமூக அறிவியல் துறைகளை (சமூகவியல், மானுடவியல், தொல்பொருளியல், மொழியியல், பண்பாட்டியல்) கணினியியல் கருவிகள், குறிப்பாக தகவல் அறிவியல் கருவினைப் (தரவு காட்சிப்படுத்தல், தகவல் மீட்டெடுப்பு, தரவு அகழ்வு, புள்ளியியல்) பயன்படுத்தி அணுகும் முறைமை ஆகும். எண்ணிமச் சேகரிப்புகளை தொகுப்பதிலிருந்து, பெரும் பண்பாட்டுத் தரவுகளை அகழ்வது வரை என இத்துறையின் அக்கறைகள் விரிவானது.

தமிழ் ஆய்வாளர்கள் இந்தப் புதிய துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது இன்றியமையாத ஒன்று.
தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *