தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

0

பேரா.பெஞ்சமின் லெபோ

பகுதி -6   அ :அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா?

இதுவரை வந்த பகுதிகளில், அது தவறு, அது ஏன் தவறு, அதன் திருத்தம் என்ற முறையில் கட்டுரைகள்  அமைந்திருந்தன. இந்த முறை இதனை மாற்றி இது தவறு  இல்லை ; ஏன் தவறு இல்லை…என்று  விளக்கம் தரவேண்டி  உள்ளது.  கரணியம், சிங்கப்பூரில் இருந்து இளங்குமரன் என்ற அன்பர்,

‘நான் உணவருந்தினேன் ; கடைக்குச் சென்று உணவருந்திவிட்டு வெளியே சென்றோம்….,உணவருந்தும் நேரம்….

இதில் அருந்துதல் என்ற பயன்பாடு சரியா? தவறா? விளக்கவும்.’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்

பயன்பாடு சரியா? தவறா?’ என்று மட்டும் கேட்டு இருந்தால், பயன்பாடு சரியே என்று சொல்லி நிறுத்திவிடலாம். அவரோ, ‘விளக்கவும்’ என அன்பு ஆணை இட்டுவிட்டாரே! அதனால் இந்த விளக்கம். இந்த வாரம் எழுத  நினைத்ததைத் தள்ளி வைத்து இதனைப் பார்ப்போமே!

தவற்றைச் சரியே  எனச்  சாதிப்போர்  உள்ளனர். அவர் போலவே, சரியானவற்றையும் தவறு எனச் சொல்பவரும் உளர். அவர் போல உள்ள ஒருவர், நண்பரிடம் ‘அருந்துதல் என்ற பயன்பாடு சரி இல்லை’ என கூறி இருக்கக்கூடும்.

கரணியம் என்ன என்பதை நண்பரும் சொல்லவில்லை ; அவரும் கூறவில்லை . ஆனால்  உய்த்து உணரலாம். இப்போதுள்ள வழக்கில் ‘அருந்துதல்’ எனபது குடி வகை (பெருங்  ‘குடி’ மக்கள் இதனை ‘அந்தக் குடி’ வகை என எண்ண வேண்டா!), என்ற பொருளில் மட்டுமே வரும் என்னும் எண்ணமாக இருக்கலாம். இது தவறான கருத்து. எனவே தான்  இந்தப் பகுதியில் இந்த விளக்கம்.

இங்கே இன்னொரு கருத்தையும் சொல்லிவிடுதல் நன்று. பலரும் இப்பகுதியை இலக்கண வகுப்பாகக் கருதுகிறார்கள்.  அது உங்கள் விருப்பம். ஆனால் என் நோக்கம் தமிழ் இலக்கணத்தைச்  சொல்லிக்கொடுப்பது  இல்லை.

தமிழில் தவழ்ந்து  வரும் தவறுகளைச் (கவனிக்கவும் : தவறுகளைஎன்பதுதான் சரி ;’ தவற்றுகளை’ அல்ல!) சுட்டிக் காட்டித் திருத்துவதே! அதற்குத் தேவையான பிற்புலம், அடிப்படை, … தேவைப்படும்போது மட்டுமே இலக்கணத்தை இழுக்கிறேன். கூடுமான வரை நூற்பாக்களைத் தவிர்க்கிறேன்.

‘அருந்துதல் என்ற பயன்பாடு’ சரியானதே! இதன்பொருள் பற்றி அதாவது பயன்பாடு பற்றி அவ்வப் போது காண்போம். நல்ல தமிழ்ச் சொல் இது  (கெட்ட தழிழ்ச் சொல்லும் உண்டோ? !!!). சொல்லொன்று தூய  தமிழ்ச் சொல்லா எனக் காண எளிய  வழி ஒன்று உள்ளது. (பெரும்பாலான இடங்களில் இது பொருந்தும்). அச்சொல்லுக்கு எதுகைகள் உண்டா எனப் பாருங்கள்.  நிறைய எதுகைச் சொற்கள் கிடைக்குமானால் அச்சொல் தமிழ்ச் சொல்லே    என
உறுதியாகக் கூறலாம்.  அருந்து , அருந்துதல்,….இவற்றுக்கு எதுகைகள் தேடிப்பாருங்களேன்  :

அருந்து, மருந்து, விருந்து, பொருந்து, இருந்து, பருந்து….ஆகவே அருந்து, அருந்துதல் .. நல்ல தமிழ்ச் சொற்களே! இது தமிழ்ச் சொல்லா இல்லையா என்பதில் சிக்கல் இல்லை ; நண்பர்,  அவர் நண்பர் கேட்பதும் அது இல்லை. அதன் பயன்பாடு பற்றித்தான் வினா. இந்தச் சொல் (அருந்து…) பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா? இருக்கிறது! இடைக்கால இலக்கியம், ஏன்,  தற்கால இலக்கியத்திலும்  பேச்சு வழக்கிலும் கூட இருக்கிறது.

எந்த  இலக்கியத்தில் எனன பயன்பாட்டில் வருகிறது எனச் சில இலக்கியங்கள் வழியே காண்போம். 

நமக்கு நன்கு தெரிந்த ,பழக்கமான  இலக்கியம் திருக்குறள் தானே ! அதில் இச்சொல் உளதா? இதோ அக்குறள் :

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’ (குறள் 942 ).

இச்சொல் எனன பொருளில் (பயன்பாட்டில்) இங்கே வருகிறது? உண்பது என்ற (பொதுப்) பொருளில் அல்லவா ?  ‘உணலினும், உண்டது (குறள் :1326 ), உண்பர் (1311 ) என ‘உண்’ என்னும் சொல்லை பயன்படுத்தும்  வள்ளுவர் அதே பொதுப் பொருளில் ‘அருந்தியது’ என்கிறார். ஆகவே இக்கால வழக்கிலும் இச்சொல் உண்ணுதல் என்ற பொதுப்  பொருளில் வருகிறது.

எனவே தண்ணீர் ‘அருந்தினாள்’ எனபது எவ்வளவு சரியோ அது போலவே உணவு ‘அருந்தினாள்’ எனபதும்.
ஆகவே, ‘
‘நான் உணவருந்தினேன் ; கடைக்குச் சென்று உணவருந்திவிட்டு வெளியே சென்றோம்….,உணவருந்தும் நேரம்….’
போன்றவை சரியே!

‘தண்ணீர் ‘அருந்தினாள்’ – இங்கே, நீர்மப் பொருளைக் குடித்தல் என்ற சிறப்புப் பயன்பாடு. ‘உணவு அருந்தினாள்’   –  இங்கே உண்ணல என்ற பொதுப் பயன்பாடு.
உண்ணல என்ற செயலை விளக்க நால் வகைச் சொற்கள் உள்ளன : ‘உண்பன தின்பன பருகுவன நக்குவன’. இதனைச் சேனாவரையனார் (தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவ்ருள் ஒருவர்) குறிப்பிடுகிறார். ஐந்து வகை எனச் சூடாமணி நிகண்டு  கூறும்.

‘”பல்லினால் கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் மற்றும்
மெல்லவே சுவைத்தலாகும் வினவில்ஐந் துணவு தாமே”

ஐந்தாக இருந்த இவற்றை மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், 29  -ஆகப் பெருக்கிக்  காட்டுவார்.
(காண்க : ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’ : பக்கம் 54 : 43 . உட்கொள்ளும் வகைகள்).

சேனாவரையர் உரையிலோ நிகண்டுவிலோ ‘அருந்துதல்’ என்ற சொல் இல்லையே  தவிர அதே (சிறப்புப்) பொருளில்தான் ‘பருகுவன’ ‘பருகல்’ என்ற சொற்கள் இடம் பெறுகின்றன. இந்தச் சொற்கள் நன்னூலார் காலத்தில் இருந்து வழங்கி இருத்தல் கூடும். நன்னூல் பொதுப் பாயிரம்  பாடங்  கேட்டலின் வரலாற்றில் ‘பருகுவன் அன்னஆர்  வத்த னாகி’ என வருவது காண்க.

பாவாணர் இவ்விரு சொற்களையும் குறிப்பிடுகிறார், சிறிது  பொருள் வேறுபாட்டுடன் :
அருந்துதல்’ = சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல் ;
பருகுதல் :   = கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்.

பாவாணர் குறிப்பிடும் அத்தனைச்  சொற்களும் உண்ணல என்ற பொதுப் பொருளை உணர்த்தினாலும் சிறப்புப் பொருளாக உண்பதின் வெவேறு நிலைகளை உணர்த்துகின்றன. வள்ளுவர் காலத்தில் ‘உண்பது’  என்பதைப்  பொதுவாக உணர்த்திய ‘அருந்துதல்’ நம் காலத்தில் சிறிது சிறிதாய்த் தின்னுதலையும் உணர்த்துகிறது ; குடிப்பதையும் உணர்த்துகிறது. எனவே எப்படி பார்த்தாலும் சிங்கப்பூர்  நண்பர் குறிப்பிட்ட
‘நான் உணவருந்தினேன் ; கடைக்குச் சென்று உணவருந்திவிட்டு வெளியே சென்றோம்….,உணவருந்தும் நேரம்.’...
போன்றவற்றில் வரும் ‘அருந்தலின்’ பயன்பாடு மிகச் சரியே.
 

அடுத்து இச் சொல்லின்  இலக்கியப் பயன்பாட்டை அடுத்த  பகுதியில் காண்போமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *