இன்னம்பூரானுடன் ஒரு இ-நேர்காணல்-2

11

இன்னம்பூரான் அவர்களுடன் மின்னஞ்சல் மூலம் நடத்தப்பட்ட நேர்காணல் பிரகாஷ் சுகுமாரன் அவர்களின் கேள்விகளுடன் தொடர்கிறது இங்கே.

சுகுமாரன்: ஆண் – பெண் சமநிலை சாத்தியமா? அது நடக்காமல் மனித ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்த முடியுமா ?

இன்னம்பூரான்: தன் கன்னி எழிலை அரங்கேற்றிய மாதவி,  மதுரை மன்னனை மண்டியிட வைத்த கண்ணகி, துறவின் தரமுயர்த்திய மணிமேகலை ~ அன்று.

முத்துலக்ஷ்மி ரெட்டி,  ருக்மணி லக்ஷ்மிபதி,  அசலாம்பிகை, ராமாமிருதம் அம்மாள் ~ நேற்று.

வச்சேத்திப் பழங்குடிப் பெண் தெய்வங்கள் ~ இன்று.

சுகுமாரன்: இ சார், படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?

இன்னம்பூரான்: 1.வச்சேத்தி குக்கிராமத்தில் படிக்காத மேதைகள் மீது படித்த அறிவிலிகள் நடத்திய அட்டூழியம் ஒரு நிலையில் உங்களுக்கு விடை தருகிறது.
2.படித்தவர்களுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. படிக்காதவர்களுக்கு இருந்த இடத்திலேயே சிறப்பு மங்கலாம். படிப்பில் திறன் அடக்கம். வேளாண்மை நுணுக்கங்கள் தெரிந்த விவசாயியும், அரிவாள் தீட்டும் கருமானும், மாட்டுத்தோல் உரிக்கும்   புலையனும், என் கணிப்பில் அவரவர் துறையில் படித்தவர்களே.  எழுத்து, கணக்கு, மொழி,   கலை ஆகியவை கல்வியின்/பயிற்சியின் வரவுகள். அவை வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும் உறுதிப் படுத்தும். படித்தவன், அதன் பயனாக, மேன்மை/ஆதாயம்/புகழ் அடைகிறான் எனலாம்.

சுகுமாரன்: உலக அளவில் பல நாடுகளில் பணியாற்றி, தொண்டுகள் செய்துள்ளீர்கள். இந்திய   மக்களுக்கும் மற்ற நாட்டு மக்களுக்கும் உள்ள முக்கியமான, அடிப்படை வேறுபாடு   என்ன ?

இன்னம்பூரான்: ஒன்றுமில்லை. ஆனால் ஒரு நெருடல். இந்தியர்களில் பலர் ஆஷாடபூதிகள். ஆஷாடபூதிகள் முடிந்தால், இதற்குப் பதிலாக: ‘மாயாவாதிகளாகப் பயணித்து, ‘உலகமே ஒரு நாடகமேடை’ என்ற படி இயங்குகிறார்கள். தெரியாமலா சொன்னார், மஹாகவி?,  ‘நடிப்புச் சுதேசிகள்’ என்று!

சுகுமாரன்: அரசுப் பணியில் இருப்பவர்களுக்கும், சராசரிக் குடிமகன்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இன்னம்பூரான்: ஒன்றுமில்லை. அரசுப் பணியோ, வணிகச் செயலோ, தன்னார்வத் தொண்டோ, சிண்டு யார் கையில்? என்பது தான் பாயிண்ட். அந்த அதிகார பலம் மனித இயல்பினால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. வச்சேத்தியில் கொடுமை இழைத்தவர்கள் சராசரி மனிதர்களே. அவர்கள் கையில் அதிகார பலம் என்ற சவுக்கு இருந்தது.

சுகுமாரன்: ‘நிலை தாண்டாத செக்கு மாடுகள் போல’ என்பதில் நிலை தாண்டாதது செக்கா?  மாடுகளா? அல்லது மாடுகளைப் பூட்டியுள்ள (சமூக) கயிறா?

இன்னம்பூரான்: செக்கு நிலையில் இருப்பது இயல்பு. மாடுகள் நிலை தாண்டவில்லை. அவை அடிமை. மாடுகளைப் பூட்டியது (சமூக) கயிறா? என்ற வினாவில் உவமை பிறழ்கிறது.

சுகுமாரன்: ஆசிய தணிக்கைத் துறை இதழின் ஆசிரியராக பணியாற்றி உள்ளதால் ஒரு கேள்வி. ‘தணிக்கைத் துறையின் கணக்கு வழக்குகள் எல்லாம் சுவைக்கு உதவாத சுரைக்காய்கள் போல’ என்பது என் கருத்து.  உங்கள் கருத்து ?

இன்னம்பூரான்: நான் உங்களுடன் ஒத்துப் போகிறேன். தணிக்கைத் துறையின் கணக்கு வழக்குகள் தம்மாத்தூண்டு, அந்தத் துறை தணிக்கை செய்யும் அரசு சார்ந்த மெகா கணக்கு வழக்குகளுடன் ஒப்பிடும் போது. நான் நிதி ஆலோசகராக பணி புரிந்த விதம், அத்துறைத் தலைவரான ஒரு ஐ.சீ.எஸ். அதிகாரிக்கு பிடிக்கவில்லை. ‘என்னுடைய வேலைக்கு வேட்டு வைத்தால், என்ன மிச்சமாகும்’ என்று ஆவணம் கொணரச் சொல்லி ஆணையிட்டார். நானும் திட்டத்தின் செலவில் 0.000001% சேமிப்பு என்று நிரூபித்தேன். சிரித்துக் கொண்டே, தன் அசட்டுத் தனத்தை கை விட்டவர், என் போஷகராக மாறி விட்டார்! கோடிக் கணக்கில் லாபம்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “இன்னம்பூரானுடன் ஒரு இ-நேர்காணல்-2

 1. உங்கள் பதிலில் இருந்து ஆண் – பெண் சமநிலை சாத்தியமில்லை என எடுத்துக் கொள்ளலாமா ?

 2. வேளாண்மை நுணுக்கங்கள் தெரிந்த விவசாயியும், அரிவாள் தீட்டும் கருமானும், மாட்டுத்தோல் உரிக்கும் புலையனும், என் கணிப்பில் அவரவர் துறையில் படித்தவர்களே//
  நன்றி. அருமையான முற்போக்கு சிந்தனை.

 3. ‘நடிப்புச் சுதேசிகள்//
  அருமை. தகுதிக்கு ஏற்ற பட்டம்..

 4. சிண்டு யார் கையில்? கையில் அதிகார பலம் என்ற சவுக்கு..//
  திருத்தவே முடியாத மனிதத்துக்கு நல்ல சவுக்கடி.

 5. செக்கு நிலையில் இருப்பது இயல்பு. மாடுகள் நிலை தாண்டவில்லை. அவை அடிமை//
  அடிமைகள்.. கயிறால் பிணைக்கப் பட்டுள்ளதால் தானே ?

  மாடுகளைப் பூட்டியது (சமூக) கயிறா? என்ற வினாவில் உவமை பிறழ்கிறது//
  மாடுகளை மனிதர்களுக்கு ஒப்பிட்டு, கயிறை கட்டுப்பாடுகள் அல்லது வரையறை எனக் கொண்டால், செக்கு சமூகமாகி விடுகிறதே..

 6. கோடிக் கணக்கில் லாபம்//
  நல்லவேளை நீங்கள் இருந்தீர்கள்.. பிழைத்தது. லாபம் அரசுக்குத்தானே ? 🙂

 7. நன்றி, ப்ரகாஷ்,
  ஆண் – பெண் சமநிலை சாத்தியமே. பெண்ணின் நிலைக்கு ஆண் உயரமுடியும். ஒரு பக்கம் நேற்றைய சமாதானத்திற்கான நோபல் பரிசுகளை காண்க. மற்றொரு பக்கம், தாய், இல்லத்தரசி, பெண்ணரசி, அத்தை போன்ற பெண்பாலர்களின் தன்னலமற்ற அணுகுமுறையை நோக்குக.

 8. நன்றி, ப்ரகாஷ்.
  படிப்பு என்றால், அறிவேற்றி, திறனேற்றி, தரமேற்றி, கலங்கரை விளக்கு ஏற்றுவதே. ஏட்டுப்படிப்பு யாவருக்கும் எளிதில், ஆரம்பக்கல்வியாவது இலவசமாகக் கிடைக்கவேண்டும். இந்த விஷயத்தில், இந்தியா தன்னை வஞ்சித்துக்கொண்டது.

 9. நன்றி, ப்ரகாஷ், நான் வீசியது கடுஞ்சொல். நாம் நல்வழிகளை எளிதில் கற்றுக்கொள்ளலாம். கொன்றேவேந்தனில் தொடங்கவும்.

 10. நன்றி, ப்ரகாஷ்,
  மின் தமிழில் ‘ தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்று 42 பதிவுகளும், வல்லமையில் ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்று 21 பதிவுகளும் உளன. அவற்றை படித்து விட்டு, உமது கருத்து மாறியதா, இல்லையா என்று சொல்லவும். லாபம் அரசுக்குத் தான் என்றும் புரியும். 
  நானும் விஷமக்காரன். உமது வினாவையே ‘பூமராங்க்’ செய்தேன்!
  பி.கு. கொஞ்சம் பொறுக்கலாம். வேறு யாராவது வினவுகிறார்களா/ என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *