கூடங்குளம் போராட்டம்: அவிந்த கதிரியக்கம்

2

வி.டில்லிபாபு

கூடங்குளம் அணு உலைக்கெதிராக இடிந்தகரையில் நிகழ்ந்த பொதுமக்களின் தொடர் போராட்டம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

அணு உலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன் வைக்கப்படும் கருத்துகளாக ஊடகங்களின் வாயிலாக அறியப் படுபவைகளை எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வாதம், உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்கவில்லை மற்றும் திட்டம் தொடர்புடைய பாதுகாப்பு ஆய்வு, சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட அறிக்கைகள் பகிரப் படவில்லை. இதை அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான தொடர்புச் சிக்கல் எனத் தெளியலாமேயன்றி, திட்டத்தின் பாதுகாப்புக் குறைபாடாகக் கருதுவதற்கில்லை.

இரண்டாவது வாதம், அணு உலை அமைவிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் நெருக்கம் அல்லது வசிப்பிடம் குறித்த பாதுகாப்பு வரையறைகள் பின்பற்றப் படவில்லை. பாதுகாப்பு வரைமுறைகள் இவ்வளவு சுலபமாக மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு போராடுவதற்கான காரணியாகும்போது, சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இது புரியாமல் போவதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இங்கும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான தொடர்புச் சிக்கல் தான் மக்களிடம் பல அனுமானங்களை உலவ விட்டிருக்கும் என நம்ப இடமிருக்கிறது.

மூன்றாவதாக, அணு உலைக் கட்டிடங்களின் தரம்,  ரஷ்யாவிலிருந்து தாறுமாறாக வந்த உதிரிப் பாகங்கள், நிர்வாகக் குளறுபடிகள் உள்ளிட்டவை குறித்த வாதம்.  இது ஒரு பொத்தாம் பொதுவான அடிப்படையற்ற வாதமாகத்தான் தெரிகிறது. அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு இவ்வளவு அக்கறையிருக்கிறதே என ஆச்சரிப்படும் அதே நேரத்தில், கட்டிடங்கள் மற்றும் உதிரிப் பாகங்களின் தரத்தை பரிசோதிக்கும் பணியை தகுதியான நிபுணர்களிடம் விட்டு விடுவது நல்லது. ஏனெனில், இது இந்தியாவின் முதல் அணுமின் நிலையமல்ல, ஏற்கனவே இருபது அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன.

நான்காவது, மீனவர்களின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் பாதிப்பது தொடர்பான வாதம். கூடங்குளம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள மீனவர்கள் குழு,  ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதிக்கருகிலுள்ள அணுமின் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு எவ்வாறு மீனவர்களின் நலன்கள் பாதுகாக்கப் படுகின்றன என்பது நேரடியாக  நிரூபிக்கப் பட்டது என்கிறார் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் காசிநாதன் பாலாஜி. அணுமின் நிலையங்கள், கடற்கரை அல்லது ஆற்றங்கரைகளில் அமைக்கப் படுவது உலையைக் குளிர்விக்க இந்நீராதாரங்கள் பயன்படும் என்பதால் தான்.

ஐந்தாவது, நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் அணுமின் நிலையப் பாதுகாப்பு குறித்த வாதம். ஜப்பானை விட இந்தியா குறைந்த நிலநடுக்க ஆபத்தில் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஜப்பானில் ஆண்டிற்கு ஏறக்குறைய 1500 நிலநடுக்கங்கள் உணரப் படுகின்றன. இந்தியாவும் நிலநடுக்க ஆபத்தின் அடிப்படையில், நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. நிலநடுக்க ஆபத்துக் குறைந்த, II மற்றும் III ஆம் பகுதிகளிலேயே அணு மின் நிலையங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. கூடங்குளம், நிலநடுக்க ஆபத்து மிகக் குறைந்த பகுதியாகும். இவையெல்லாம் தகவல் சார்ந்த கணிப்புகளே, ‘நில நடுக்கமில்லா ஆட்சி’ என்றெல்லாம் யாராலும் உத்தரவாதம் கொடுக்கக் கூடுமோ.

சுனாமிக்குப் பெயர் வைத்து, அதோடு அடிக்கடி கைகுலுக்கி வாழும் ஜப்பான், உலகின் மூன்றாவது பெரிய அணு மின்சார நாடு. சுனாமிப் பாதிப்பிலிருந்து காக்க, 7.5 மீட்டர் உயரத்திற்கு மேல் அணு மின் நிலையத்தின் முக்கிய கட்டமைப்புகள் அமைக்கப் பட்டிருப்பதாக  கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனர் தெரிவித்த கருத்து, ஊடகங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. ஜப்பானில் அணு மின் நிலையங்கள் தனியாரால் நடத்தப் படுகின்றன. இந்தியாவில், அணு மின் நிலையங்கள் அனைத்தும் மத்திய அரசினால் நடத்தப் படுபவை. எனவே, மக்களின் நல்வாழ்வில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று நம்ப இடமிருக்கிறது.  அணு உலைக் கழிவுகளைக் கையாள்வதிலும், இழப்பீடுகள் குறித்த பயங்களுக்கும் மேற்கூறிய பதிலே போதுமானது. (யூனியன் கார்பைடு ஒரு தனியார் நிறுவனம், போபால்-கூடங்குளம் ஒப்பீடு சரியல்ல).

ஆறாவது, தீவிரவாத அச்சம். ரயில் நிலையங்களும், நீதி மன்றங்களும் தீவிரவாதத்தின் இலக்குகளாகிய முன்னுதாரணமுண்டு. இந்த வாதம் அணு மின் நிலையம் மட்டும் சார்ந்ததல்ல.

ஏழாவது, அணு மின் நிலையத்திற்கு வரிப்பணம் வீணடிக்கப்படுவதைக் குறித்த வாதம். இதுவும் ஒரு பொதுவான வாதம், கூடங்குளம் மட்டும் சார்ந்தல்ல.  கிரிக்கெட் போட்டிக்கான பாதுகாப்பு, புதிய சட்டமன்றக் கட்டிடம், விவாதங்களில்லாத மக்கள் மன்றங்களை நடத்தும் செலவு போன்றவற்றிற்கும் இவ்வாதம் பொருந்தும்.

எட்டாவது, சில உலக நாடுகள், அணு மின் நிலையங்களை மூடும் முடிவெடுத்த நிலையில், ஏன் கூடங்குளத்தில் புதிய அணு மின் நிலையம்? கூடங்குளத்தில் அணு உலைப் பணிகள் துவங்கப்பட்டு  ஏறக்குறைய பத்தாண்டுகளாகின்றன. சில  நாடுகளின் அணு உலை மூடும் முடிவு சமீபத்தியது. ஜெர்மனி 2022-ஆம் ஆண்டுக்குள் அணு உலைகளை மூட முடிவெடுத்திருக்கிறது. அதாவது, இன்னும் பத்தாண்டுகள் அணு உலைகளை இயக்க இருக்கிறது . ஜெர்மனி போன்ற முன்னேறிய நாட்டிற்கே, மாற்று ஏற்பாடுகளைச் செய்யப் பத்தாண்டுகள் தேவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அணுமின் உற்பத்தியில் முதலிரண்டிடம் வகிக்கிற அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் அணு உலைகளை மூடி விடவில்லை. ஜப்பானின் புவியியல் அமைவிட ஆபத்தும், சமீபத்திய அழிவுகளும் அந்நாட்டை அணுமின் நிலையங்களுக்கெதிரான முடிவை எடுக்கச் செய்திருக்கின்றன. ஜப்பானின் செழித்த பொருளாதார நிலை, வேறு மாற்றுச் சக்தி ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய உதவும். ஆனால் இந்தியா?.

ஆக, இடிந்தகரையில் போராடும் மக்களுக்கு அரசு செய்ய வேண்டியதெல்லாம், அணுமின் நிலையத் திட்டம் குறித்த பயங்களையும், அனுமானங்களையும் போக்கும் விதமாக உண்மைத் தகவல்களை தெரியப் படுத்தி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதேயாகும். மக்களாட்சியில் மக்கள் நலன்கள் காக்கப்பட வேண்டிய அதே நேரத்தில், தற்காலிகப் பிரச்சனைகளுக்கு நிரந்தத் தீர்வு காண்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கூடங்குளம் போராட்டம்: அவிந்த கதிரியக்கம்

  1. கடந்த பத்தாண்டுகளாக அணுமின்நிலையம் துவக்கி கட்டப்படும் போது தெரியாத விஷயங்கள் இப்போது இவர்களுக்கு தெரிகிறது என்றால் இதன் பின்னனி என்ன என்பதை மதிய/மாநில அரசுகள் முதலில் கண்டுபிடித்து அந்த பிரச்சனைகளை விளக்கமாக மக்களிடம் கூறி முதலில் பகுதி மக்களை நம்பிக்கையின் பக்கத்துக்கு வரவைக்க வேண்டும். உங்களது கட்டுரையில் மிகவும் தெளிவாக அனைத்து விபரங்களும் இருக்கின்றது. முடிந்தால் இதை பிட் நோட்டீஸ் ஆக போட்டு பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யலாம். கண்டிப்பாக தற்காலிக பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக நிரந்தர தீர்வு காண முடியாது. அது அவ்வப்போது வந்து போய் கொண்டிருப்பது சகஜம்தான். அணு மின் நிலையம் வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு உடனடியாக மின்சார இணைப்பை
    துண்டித்து விட்டால் அவர்களுக்கு மின்சாரதேவையின் அவசியமும் புரியும். ஆபத்தான மின்சாரத்தை தினமும் பாதுகாப்புடன் வீடுகளில் உபயோகிக்கும் நிலையில் அந்த மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடம் எவ்வளவு பாது காப்புடன் இருக்கும் என்பதை
    இப்பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேவையில்லாமல் குழப்பத்தை உண்டுபண்ணும் ஒருசில சுயநல அரசியல்வாதிகளை
    “இனங்கண்டு” அவர்களை மாநிலம் மாநிலம் கடத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.