வல்லமை – சிந்தனை, செயல், முன்னேற்றம் – தலையங்கம்
பவள சங்கரி
நீதி பரிபாலனம்!
சோழநாட்டின், திருவாரூர் கோவிலின் இடது புறத்தில் வடக்கு மட விளாகத்தில் இருக்கும் , ஒரு புராதனச் சின்னமான கல்தேர் மண்டபம் பார்த்திருக்கிறீர்களா? தேர்க்காலில் ஒரு கன்றை ஏற்றிக் கொன்ற தம் மகனை அதே தேர்க்காலில் ஏற்றிக் கொல்ல கட்டளையிட்ட மன்னன் மனுநீதிச் சோழனின் நீதி பரிபாலனத்தை பறை சாற்றும் வரலாற்றுச் சின்னம் தான் அந்த கல்தேர். கி.பி. 1123-ம் ஆண்டு விக்கிரம சோழனால் அமைக்கப்பட் ட திருவாரூர் கோயிலின் இரண்டாவது பிரகாரத்தின் தென்புற மதிலில் உள்ள கல்வெட்டே அதற்கான ஆதாரம். அந்தக் கல்வெட்டின் செய்தியின்படி, மனுநீதிச் சோழனின் அமைச்சராக இருந்தவர் உபயகுலா மலன். அரசன் தம் மகனைக் கொல்லுமாறு , அமைச்சருக்கு ஆணையிட, சிறந்த சிவ பக்தனும், நல்ல குண நலனும் கொண்ட அரச குமாரன் பிரிய விருத்தனைக் கொல்ல மனமின்றி தம்மையே வாளால் மாய்த்துக் கொண்ட நல் மனிதர்…….
இப்படி நீதியை நிலை நாட்டிய மன்னர்கள் ஆண்ட நம் நாட்டில் இன்று நடப்பது என்ன என்பது நாம் அறிந்ததே. பெரிய குற்றங்கள் இழைத்த வாரிசுகளைக் கூட தம் அதிகாரம் கொண்டு காப்பாற்றுவதோடு, அவர்களுக்கு மகுடம் சூட்டவும் நினைப்பதும் கண்கூடு. ’அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் ’ என்பார்கள். ஆனால் நம் அரசில் நடப்பது என்ன? குற்றம் புரிந்தவர்கள் , நீதி மன்றம், வழக்கு என்று பல காலம் இழுத்தடிக்கப்பட்டு,காலம் கடந்து , இறுதிக் காலங்களில் கூட, சில நேரங்களில் தீர்ப்பு வருவதற்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் ஆயுட்காலம் கூட முடிந்து விடுகிறது. சட்டம் ஒரு இருட்டறை என்ற நிலை மாறி, சரியான நேரத்தில், சரியான தீர்ப்பெழுதும் சட்டமாக நம் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே நாட்டில் குற்றங்கள் குறைவதோடு, சட்டத்தைக் கண்டு குற்றவாளிகளுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.
இந்து மதத்தை தூக்கி நிறுத்துவதற்கென்றே தாங்கள் அவதாரம் எடுத்து வந்தது போன்று வாக்கு வல்லமை காட்டும் பலர், நம் நாட்டின் பாரம்பரியச் சின்னங்களான பெரும்பாலான கோவில்களின் அவல நிலைகளைக்கூட கண்டும் காணாமல் இருப்பதும் சிந்திக்கச் செய்யும் செயலாகும். மிகப்பழமையான திருவாரூர் தியாகராஜர் சன்னதியின் நிலையும் பராமரிப்பின்றியே இருக்கிறது. ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் நல்ல அலைகள் பரவிவர இந்த விஜய தசமி நன்னாளில் மனதார வேண்டுதல் வைப்பதன்றி நாம் செய்யக்கூடியது சிறப்பானது வேறு என்ன இருக்க முடியும்.
இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின் [ குறள் – 547]
வைணவர்களுக்கு, திருவரங்கம் என்பது போல சைவர்களுக்கு கோவில் என்ற பெயர் சொன்னாலே சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலை மட்டுமே அது குறிக்கும். மிகவும் பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோவிலின் சிறப்பு வாய்ந்த சிவ கங்கை குளம் மற்றும் நீராழி மண்டபமும், தீர்த்தவாரி மண்டபமும் இன்று பராமரிப்பு இன்றி பயன்பாடில்லாமல் இருப்பது வருந்துதலுக்குரியதாகும். தொல் பொருள் ஆய்வு மைய அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்வார்களா?
கல்வெட்டில் சொல்லப்படும் நீதி ஒரு உருவகமாகவும் இருக்கலாம். அதனால், அதனுடைய அருமை குறையவில்லை. மற்றபடி, உங்கள் அங்கலாய்த்தல் உண்மை நிலையை எடுத்துரைக்கிறது. கோயில், குளங்களுக்கு வருமுன்: ஊழல் மலிந்து, ஆளுமை படைத்தவர்கள் அசுரர்களாக மாறி, மனித உரிமை பறி போய், கல்வியை ஏலம் விட்டு, பலவிதங்களில் கற்பு இழந்து பரிதாபமாக நிற்கிறார்கள், இந்தியர். சிதம்பரத்தில் டாலர் சையின் அணியாத தீக்ஷிதர் கிடையாது. குளம் பாசி. கோயில் குப்பை. நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும். குழந்தைகளை சிறப்பாக வளர்க்கவேண்டும். அதிகாரிகளுக்கு முன்னால் மக்களின் விழிப்புணர்ச்சியுடன் நடமாடவேண்டும்.