வெங்கட் சாமிநாதன்

நினைவுகளின் சுவட்டில் (பகுதி – II – பாகம் – 30)

ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது ஹோட்டலின் உள்ளே நுழைந்தவர்கள் மூன்று நான்கு பேர் நாங்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தது கேட்டு எங்கள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தனர்.   தமிழ் நாட்டில் ஏதோ ஊரிலிருந்து புதிதாக வந்திறங்கிய தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. வந்தவர்கள் எங்களைப் பார்த்து முகம் மலர புன்னகை ஒன்றை வீசினர். “ஏதோ பேச்சுக்கு, “புதுசா வந்திருக்கீங்களா?” என்று எங்களில் ஒருவர் கேட்க, “ஆமாங்க, இங்க நிறைய நம்மாட்கள் இருக்காங்களாங்க? என்று கேட்டார் வந்தவர்களில் பெரியவர். “நிறைய இருக்காங்க. ஆபிஸ்ல வேலை செய்யறவங்களும் சரி, அணைக்கட்டிலெ வேலை செய்யறவங்களும் சரி, நிறையவே இருக்காங்க. அணை கட்டி முடியற வரைக்கும் இருப்பாங்க. அப்பறம் எங்கேயோ யார் என்ன சொல்ல முடியும்? வேறே எங்கே வேலை கிடைக்கும்னு தேடிப் போகணும்” என்றோம். “ஆமாம், நீங்க எங்கே இந்தப் பக்கம். உங்களைப் பாத்தா இங்கே வேலை தேடி வந்தவங்களாத் தெரியலை. சுத்திப் பாக்க வந்தீங்களா? சுத்திப் பாக்கக் கூட இங்கே ஒண்ணும் இல்லீங்களே” என்று எங்களில் ஒருவன் மறுபடியும் பேச்சைத் தொடர, அந்தப் பெரியவர், நாங்க இங்க சம்பல்பூருக்கு வந்திருக்கோமுங்க. ஒரு அரங்கேற்றம் நடக்கப் போகுது. என் பேர் ராமையாங்க. வழுவூர் ராமையாப் பிள்ளைன்னா சட்டுனு புரியும். பரதம் ஆடற பொண்ணு சம்பல்பூர் பொன்ணுங்க. மீனொதி தாஸ்னு. எங்க கிட்ட பரதம் கத்துக்கிட்டது. அதுக்குத் தான் அங்கே யார் வருவாங்களோ, யாருக்கு பிடிச்சிருக்குமோ என்னவோன்னு நினைச்சுத்தான், இங்கே வந்தா நம்ம தமிழாளுங்க இருப்பாங்க, விஷயத்தைச் சொல்லி வரச் சொல்லி கூப்பிட்டுப் போகலாம்னு வந்தோம்.: நீங்கள்லாம் கட்டாயம் வரணும். வந்தா எங்களுக்கு சபையும் நிறைஞ்சிருக்கும். எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும். இந்த ஊர்க்காரங்களுக்கு பரதம்னா என்னான்னு தெரியுமோ என்னவோ, அதான் வந்தோம். வந்த இடத்திலே உங்களையெல்லாம் பாக்க சந்தோஷமா இருக்குங்க” என்றார்

பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கும் இது ஒரு அதிசயமான, முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. இவ்வளவு பெரியவர் ஒருவர் எங்களை மதித்து, எங்களுக்கு ஒன்றுமே தெரியாத ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு வருந்தி வருந்தி அழைக்கிறாரே. சென்னையில் இருந்திருந்தால் இந்த மாதிரி அவர் முன்னால் நாங்கள் உட்கார்ந்திருப்போமா, அவர்தான் எங்களை மதித்து அழைப்பாரா? பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கப் போகிறோம். சினிமாவில் இல்லை. நேரில். சினிமாவில் பார்த்திருக்கிறோம் தான். நான் மதுரையில் படித்துக் கொண்டிருந்த போது,  சென்டிரல் சினிமாவில் நாம் இருவர் படத்தில் பேபி கமலா பாரதி பாடல்களுக்கு நாட்டியம் ஆடியதைப் பார்த்திருக்கிறேன்.. அதற்கப்புறம் கும்பகோணத்தில் படித்துக் கொண்டிருந்த போது லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகள் ஏதேதோ படங்களில் ஒன்றிரண்டில் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். எங்களில் ஒருவன் அதைப்பற்றிக் கூடச் சொன்னான். அவருக்கும் அதைக் கேட்கச் சந்தோஷமாக இருந்தது. ஏதோ போன இடத்தில் கிடைத்த தமிழர்களைக் கூட்டினோம் என்று இல்லாமல், தான் சம்பந்தப்பட்ட நாட்டியங்களையும் சினிமாவையும் பார்த்திருக்கிறார்களே இவர்கள் என்ற சந்தோஷம் இராதா அவருக்கு?. எங்களுக்கும் இது முற்றிலும் எதிர்பாராத ஒரு சந்திப்பு. அதிர்ஷ்டம். ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்கப் போகிறோம்.  சினிமாவில் அல்ல. நேரில். அதுவும் இவ்வளவு பெரிய மனுசரைச் சந்திப்போம் அவர் நம்முன் உட்கார்ந்து இவ்வளவு சகஜமாக நம்மோடு பேசிக்கொண்டிருப்பார். பின் அவருடைய நிகழ்ச்சிக்கும் எங்களுக்கு அழைப்பு தருவார் என்று எதிர்பார்க்க முடியுமா? நடந்திருக்கிறது. அதுவும் புர்லாவில். சென்னையில் இந்த மாதிரி நடந்திருக்குமா என்ன? அவராவது எங்கள் பக்கம் வந்து அருகில் உட்காருவதாவது, சகஜமாக பேசுவதாவது. நிகழ்ச்சிக்கு வருந்தி வருந்தி அழைப்பதெல்லாம் பின்னால் தானே

எதிர்பாராது கிடைத்த அந்த சந்திப்பும் நிகழ்ச்சி அழைப்பும் அந்த காம்பில் எங்களை வந்தடைந்த அதிசயம் சரி. இன்னொரு அதிசயம் ஒன்று இதில் உடன் வந்தது எங்களுக்குத் தெரியவில்லை அப்போது. நடனமாடப் போகும் மீனோதி தாஸுக்கோ அல்லது வழுவூர் ராமையா பிள்ளைக்குமோ தான் தெரிந்திருக்குமோ தெரியாது, தில்லிக்கு மாற்றலாகி, அங்கு இந்திராணி ரகுமானைப் பற்றிக் கேள்விப் படும்போதும், தில்லி மாக்ஸ்முல்லர் பவனில் சோனால் மான்சிங்கின் ஒடிஸ்ஸி நடனமும் பார்க்கக் கிடைத்து ஒடிஸ்ஸி நடனம் பற்றியும் அதன் வரலாற்றுத் தொன்மை பற்றியும் தெரிந்து கொண்டபோது தான் அன்று புர்லாவில் நிகழ்ந்த அதிசயத்தின் இன்னொரு பரிமாணமும் தெரிந்தது தமிழ் நாட்டின் பரத நாட்டியம் போல, ஒரிஸ்ஸாவுக்கே உரிய ஒடிஸ்ஸி என்னும் மிகத் தொன்மையான நாட்டிய மரபு உண்டு

அதற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் உண்டு. பரத நாட்டியத்தை அதன் பல்வேறு நிலைகளில் விளக்கும் சிலைகள் சிதம்பரம், கும்பகோணம் போல இன்னும் பல ஊர்க் கோயில்களில் காணப்படுவது போல ஒடிஸ்ஸி நாட்டியமாடும் பெண்களின் சிலைகள் பல்வேறு நடனத் தோற்றங்களில், புவனேஸ்வர் கோயிலிலும், உதயகிரி குகைச் சிற்பங்களிலும் காணலாம். தமிழ் நாட்டில் பரதநாட்டியம் கோவில் சார்ந்த தேவதாசிகளால் அப்பாரம்பரியம் பேணப்பட்டு வந்தது போல, ஒடிஸ்ஸியும் மகரி என்று சொல்லப் பட்ட தேவதாசிகளால் பயிலப்பட்டு பேணப்பட்டும் வந்துள்ளது. பின்னர் சின்ன பையன்களுக்கும் இது கற்றுக்கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இச்சிறுவர்களை கோதிபட்டுவா என்று அழைத்தனர். கோதி பட்டுவாக்கள் தான் பின்னர் இன்று ஒடிஸ்ஸி நடன குருக்களாகியுள்ளனர். மீனோதி தாஸ் ஒரிஸ்ஸாவிலிருந்து சென்னை வந்து வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க வந்த போது, ஒடிஸ்ஸி நடனம் ஒரிஸ்ஸா கோவில்களில் ஆடப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஒரு வேளை சதிர் என்று ருக்மிணி தேவி அருண்டேல் பரதம் கற்று ஆடத் தொடங்கிய பிறகே சதிர் என்று இழிவாகப் பேசப்பட்டு வந்த நம் பாரம்பரிய நடனம் பரதம் என்று பெயர் சூட்டப்பட்டு கலை என்று கௌரவம் பெற்றதோ அது போல ஐம்பதுகள் வரை ஒடிஸ்ஸியும் மஹரிகளால் பேணப்பட்டதால் இழிவாகக் கருதப்பட்டது போலும்

1945திலோ இல்லை 1956 இலோ தான் தில்லியில் வருடா வருடம் நடக்கும் இந்தியா முழுதும் உள்ள கல்லூரி மாணவ மாணவிகள் விழா( All Inida Youth Festival) ஒன்றில் பிரியம்வதா மொஹந்தி என்ற பெண் ஒடிஸ்ஸி ஆடினாள். இது தான் ஒடிஸ்ஸி கோவிலை விட்டு, ஒரிஸ்ஸாவை விட்டு வெளியே காலடி எடுத்து வைத்த முதல் நடன நிகழ்வு. அப்போது அதைப் பார்க்க நேரிட்ட டாக்டர் சார்ல்ஸ் பாப்ரி (Dr/ Charles Fabri) என்னும் ஹங்கேரிய கலை ரசிகர் (இவர் தில்லி வாசியாகி, Statesman பத்திரிகையின் கலை விமர்சகராக இருந்தவர். அனேக ஓவியர்கள், நடனம் போன்ற கலைகள் இவர் ரசித்து எழுதிய காரணத்தால் புகழ் பெற்றார்கள்). அதில் ஒன்று தான் பிரியம்வதா மொஹந்தி ஆடிய ஒடிஸ்ஸியும். சார்லஸ் பாப்ரி அதைப் பாராட்டி எழுதவே, அதிலிருந்து ஒடிஸ்ஸி இந்தியா முழுதும் அறியப்பட்டு புகழும் பெற்றது

நான் தில்லி மாக்ஸ்முல்லர் பவனில் ஸொனால் மான்சிங்கின் ஒடிஸ்ஸியைப் பார்த்தபிறகு, அது எனக்கு மிகவும் பிடித்த நடன வடிவாயிற்று. அதன் நளினமும், அழகும், சலனங்களும் இந்தியாவின் வேறு எந்த நடன வடிவையும் விட மனதைக் கொள்ளை கொள்ளுவதாக இருந்தது.. பரத நாட்டியத்தையும் சேர்த்துத்தான் என்று நான் சொல்வேன். இதன் சிறப்பான அம்சங்கள் அதன் திரிபங்கம், ஆதார நிற்கும் நிலையே மூன்று வளைவுகளக் கொண்டது. மூன்று அங்கங்களும் தனித்தனியே சலனிக்கவேண்டும் திரிபங்கத்தில். பின்னர் அதன் பல்லவி எனப்படும் பாடல் வடிவு பெறாத ராகம் பெறும் .நடன வடிவும் தான் பல்லவி.

பின்னர் ஒடிஸ்ஸி நடனத்திற்கு பதம் பாடுவதைகேட்க வேண்டும். அது ஒரு மிக மிக இனிமையான அனுபவம். அதிலும் சம்யுக்த பாணிக்கிரஹிக்கு ஒருவர் என்னமோ பட்டநாயக் அவர், ராமா என்று தொடங்கும் அவர் பெயர். ராமானந்தவோ என்னவோ. அவரைக் கேட்பது மிக இனிமையான அனுபவம். அவரை இனி கேட்க முடியாது போய்விட்டதே என்று வருத்தம் எனக்கு உண்டு.

1955-56-ல் தான் ஒடிஸ்ஸி கோவில்களிலும் மஹரிகளிடமும் சிறைப்பட்டிருந்த ஒன்று வெகு சீக்கிரம் அகில இந்தியாவையும் தன் வசப்படுத்திவிட்டது. 1980-களில் எப்போதோ ஒரு வருடம் எனக்கு நினைவில் இல்லை. தில்லி கமானி தியேட்டரில் ஒரு மாபெரும் ஒடிஸ்ஸி விழா நடந்தது. அதில் கேலு சரண் மகாபாத்ரா, பங்கஜ் சரண் தாஸ், தேவ ப்ரஸாத் போன்ற குருக்கள் அனைவரும் தங்கள் சிஷ்யைகளோடு ஏழு நாட்களோ என்னவோ ஒடிஸ்ஸி நடனங்கள் நிகழ்த்தினர். அதாவது ஒடிஸ்ஸி ஒரிஸ்சாவை விட்டு வெளியே தெரிய வந்த முப்பது ஆண்டுகளுக்குள் இந்திய பாரம்பரிய சாஸ்திரீய கலைகளுள் ஒன்றாக தன்னை ஸ்தாபித்துக்கொண்டுவிட்டது. 1930 களில் இம்மாதிரி தெரிய வந்த பரத நாட்டியம் தன் அனைத்து குருக்களோடும் சிஷ்ய கணங்களோடு ஓரிடத்தில் கூடி விழா நடத்தியிருக்க முடியுமா, நடத்த ஒன்று கூடுவார்களா? இல்லை நம் பரத நடன மணிகள் தான் ஒன்று கூடுவார்களா, என்பதெல்லாம் எனக்கு பதில் தெரியாத கேள்விகள். தெரியவில்லை. சந்தேகம் தான்.

ஆனால் அன்று, 1953 களிலோ என்னவோ, ஒரு வளமான நடனக் கலையை தன்னிடத்தில் கொண்டுள்ள ஒரிஸ்ஸாவிலிருந்து அது பற்றிய பிரக்ஞை இல்லாது, சென்னை வந்து பரத நாட்டியம் கற்க ஒரு மினோதி தாஸ் தன் நடன அரங்கேற்றத்துக்கு திரும்ப தன் ஊரான சம்பல்பூருக்கே தன் குருவையும் அழைத்து வந்திருந்தாள்.  நடன நிகழ்வு நடந்தது. நாங்கள் சினிமா பார்க்கப் போகும் விஜயலக்ஷ்மி டாக்கீஸில் தான். அரங்கேற்றம் நிகழ்ந்தது. நாங்கள் பார்த்த முதல் பரத நாட்டிய நிகழ்ச்சி சம்பல்பூரில் நடந்தது. ஆச்சரியமாக இல்லை!

ஆனால் ஏதோ வேடிக்கையாகப் பார்த்தோமே தவிர, எங்களுக்கும் பார்க்க சந்தோஷமாக இருந்ததே தவிர அதை ரசிக்கும் பக்குவம் அன்றிருக்கவில்லை. அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவ்வளவே. அன்று பரதம்  ஆடிய மீனோதி தாஸைப் பற்றியோ, அல்லது, பின்னர் 1955-ல் நான் தில்லிக்கு வேலை தேடிச் செல்லும் முன் நிகழ்ந்த முதல் ஒடிஸ்ஸி நடனம் ஆடிய பிரியம்வதா மொஹந்தியைப் பற்றியுமோ, பின்னர் நான் ஏதும் செய்தி படித்ததில்லை. திருமணம் செய்துகொண்டு நடன உலகிலிருந்து விலகிவிட்டார்களா, இல்லை, தாமும் ஏதும் கலைப் பள்ளியில் நடன ஆசிரியை ஆனார்களா, இல்லை வெளிநாடு சென்றார்களா என்பது போன்ற செய்திகள் எதுவும் எனக்குத் தெரியவரவில்லை..

மேலும் தெரிய வரும்……………. ,
.
படத்திற்கு நன்றி

பரதத் தாரகைக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பரதமும், ஒடிசியும்!

  1. கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு முன் இது விஷயமாக, நான் கட்டுரை ஆசிரியருக்கு, வேறு ஒரு தளத்தில் எழுதியது:
    *
    ‘அன்புள்ள திரு.வெ.சா. அவர்களுக்கு,
    அன்றொரு நாள் ஒரிஸ்ஸா பாலசுப்ரமண்யம் வந்திருந்தார். மகிழ்ச்சியுடன்இருவரும் ஒரிஸ்ஸாவின் புகழ் பாடிக்கொண்டிருந்தோம். இயற்கையின் மடியில்தூங்கி வடியும் அழகிய பெண்குழந்தையல்லவா, அவள். நான் 80களில் ஒரிஸ்ஸாவில்பணி புரிந்தேன். ஸீதாகாந்த் மஹோபாத்ரா அண்டைவீடு. நினைத்தால் வரத்துபோக்கு. திரு.வெங்கட் ராமன், திருமதி.லீலா வெங்கட் ராமன் ( அவர் தந்தைதிரு. கிருஷ்ணசாமியும் நண்பர், ஆசான்), சுந்தரராஜன் (ஐஏஎஸ்), ஹபீப்அஹ்மத், மீனாட்டி மிஸ்ரா [கலை உணர்வு: என்னுடன் தமிழில் பேசினார்,பந்தநல்லூரில் குருகுலவாசம் பற்றி சொன்னார். கண்வெட்டு எப்படி என்று கலைஉணர்வுடன் அடித்துக் காண்பித்து என்னையும் என் மனைவியையும் அசத்தினார்.]ஆகியோர் நட்பு. கொரபேட் குக்கிராமத்திலிருந்து மயூர்பஞ்ச் இடிந்த அரண்மனைவரை அத்துபடி. சிமிலிபால் கோர் ஏரியாவில் அசந்தர்ப்பமான களிறு நேர்காணல்,கைரி புலிக்குட்டியுடன் ஓடி விளையாட்டு, பீத்தர் கணிகா ராஜநாகம், முதலை.சம்பல்பூர் கரடி, பூரி ஜெகன்னாத் நபகளேபரில் குஷி, சாக்ஷிகோபாலில்தாருப்ரம்மன் தரிசனம். ஃபூல்பானி முதுகுடி விருந்து. சொல்லி மாளாது.போங்கள். சொல்வதில் எனக்கு சந்தோஷம். ஒரு காசு கொடுத்து பாடச்சொன்னா,பத்துக்காசு கொடுத்து நிறுத்தச்சொல்லணும். நாடோடி சொன்னமாதிரி, ‘இதுவும்ஒரு ப்ருகிருதி’. கேட்பதில் மகிழ்ச்சி என்றீர்கள். அதான்.
    நீங்கள் ஒரிஸ்ஸாவில் இருந்தது 50களில்? அப்போது நான் சென்னைக்கேணியில் தவளை.
    இன்னம்பூர் பாடஸ்தலம்; கஜப்ரிஷ்டவிமானம். பெருமாள் ஶ்ரீனிவாசர்நாவல்பாக்கத்தில் புலன் பெயர்ந்து இருந்தாராம், சிலகாலம்.கும்பகோணத்திலிருந்து ஸ்வாமி மலை ரோட்டில் 3 மைல்கல், தள்ளி. நம்மூர்.இல்லை. நான் அந்த ஊர். என் இயர்பெயர்: ஸெளந்தரராஜன். ஒரு வார்த்தைகேட்டா, பத்து எழுதறேன். சுருக்கி எழுதறான்ன்னு பேரு வேறே.
    நான் கேள்வி கேட்கவே இல்லையே. ‘உருப்படவைப்பது சாத்தியமே’ என்று காமன்பாட்டு பாடினேன். தமிழ் நாடு அந்த வகையில் இயங்காததால், பொருள் வளம்,கல்வி, திறன், ஆகியவற்றில் குறைந்த அளவே உருப்பட்டிருக்கிறது. மற்றவர்கள்எழுதிய கருத்துக்களையும் படித்தேன். உங்கள் கருத்துக்கள் தெளிவாகஇருந்தன,எனக்கு. என் ஆதங்கம் என்ன எனில், கலை உணர்வு அனிச்சமலர் போல.தொட்டாச்சிணுங்கி. சொரணை என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள். It is morethan aesthetics. It is more than sensitivity. It carries within itselfthe Saraswathi of ப்ரஞ்ஞை. நானும் மற்ற நாடுகளிலும், ஏன் மும்பை,டில்லி, கொல்கத்தாவில் காணப்படும் கலை ப்ரஞ்ஞையை சென்னையில் பார்க்கஇயலவில்லை. குறிப்பாக, இங்கிலாந்து கலைத்துறை விஷயங்கள் பற்றி, குடும்பஈடுபாட்டினால் தெரியும். நமது பிரச்னை இது தான். கலையும், அரசியலுக்கும்,வணிகத்துக்கும் கைப்பொம்மையாக இயங்கத் தொடங்கிவிட்டது. ஒரு சின்னஉதாரணம்: சாலியமங்கலத்தில் பாகவதமேளா நடக்கிறது. உலகளவில் ஒரளவுபுகழப்படுகிறது. அரசு இனி பார்க்காதது போல் பாசாங்கு செய்யமுடியாது.விருது கொடுத்தார்கள். யாருக்கு? நாதஸ்வர வித்வானுக்கு மட்டும்! அவர்கம்பீர நாட்டை ஜோராத்தான் வாசித்தார். அதுவா பாயிண்ட். ஏதோ பாகவத மேளாநிழலாட்டம் போல. இங்கு சிலப்பதிகாரம் எப்படி தழைக்கும்?
    இதுவே ஜாஸ்தி, மன்னிக்கணும்.
    அன்புடன்,
    இன்னம்பூரான்
    *
    இன்னம்பூரான்
    08 10 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.