புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

தி. சுபாஷிணி

எனது இரண்டாவது மகளுக்கு நிச்சயதார்த்தம் சென்ற ஜுலை மாதம் நடந்தது. அதை எப்படியெல்லாம் சிறப்பாகத் தனித்துவம் மிக்கதாய்க் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டு எனது மூத்த மகளும் மருமகனும் செய்கிறார்கள். ஊருக்கு வெளியே கிழக்குக் கடற்கரைச் சாலையிலே கேரளாவில் இருக்கும் வீடு மாதிரி ஒன்று வாடகைக்கு எடுக்கிறார்கள். விழா முழுக்கவும் நம்முடைய பண்பாடு மாறாது நடத்த வேண்டும் என்று, விரும்பினர். நண்பர்கள், சுற்றத்தார் அனைவரையும், புடவை, வேட்டி அணிந்து வருமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அந்த வீட்டு அழகும் முற்றத்தில் நடந்த விழாவும், அனைவரின் வருகையும் மிகவும் அழகு சேர்த்தன.  தன் தங்கையின்பால் கொண்ட பாசமும் வருகின்ற சம்பந்தி குடும்பத்தாரின் நல்ல பண்பும் அவர்களை அப்படிச் செய்ய வைத்தது. நான் இதை என் நண்பர்கள், என் சுற்றத்தார், என் அலுவலக நண்பர்கள், என் இலக்கிய நண்பர்கள், என எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டேன். அப்படியும் எனக்குத் தீரவில்லை. பேப்பரையும், பேனாவையும் எடுத்து விட்டேன். வல்லமை.காம் என்னும் இணையதளத்திற்கு எழுதத் தொடங்கி விட்டேன். அப்போது என் இதயமும் வல்லமை.காம்மின் வாசகர்களின் இதயங்களும் பேசத் தொடங்கிவிட்டன. அவர்களுடன் பகிர்ந்த பகிர்வில் என்னுடைய உணர்வும் தீர்ந்தன. அப்படித்தானே இருந்திருக்கும் டி.கே.சி.க்கும்.!

ஆகஸ்ட் 13ந் தேதி. இரவு 7 மணிக்கு ஞாநியின் வீட்டில் முக்கியமான வேலை தொடர்பாக கூட்டம் ஒன்று இருப்பதாக ஞாநி என்னை அன்று இரவு ஏழு மணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி அலுவலகத்திலிருந்து அவசரமாக வீடு வந்து, அவசரமாகக் கிளம்பி ஆட்டோவில் அவர் வீடு போய்ச் சேர்ந்தேன். ஒருவரையும் காணும். கூட்டம் நடக்கப் போகும் சுவடே இல்லை. ஞாநி மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தார்.

‘கூட்டம் என்றாய்’, எனக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, கொல்லென அங்கு பாஸ்கரசக்தி, பத்மா, அண்ணாமலை, வெங்கடேசன், கல்பனா, பாலா என ஆத்மார்த்த நண்பர்கள் அத்தனை பேரும் அனைவரும் வந்தனர். ஒவ்வொருவரையும் நலம் விசாரித்துக் கொண்டே உள்ளறைக்குச் சென்றேன். எல்லோரும் அங்கு அமர்ந்தோம். பத்து நிமிடத்தில் ஹாலுக்கு வரும்படி ஞாநி கூப்பிடவே அனைவரும் அங்கு சென்றால், என் மூத்த மகள் ஆரபியும், மருமகன் ஹரியும் இருந்தனர். சிறிய மேசையில் ஒரு கேக் பெட்டி இருந்தது. அதைத் திறக்கச் சொன்னாள் ஆரபி.

வாவ்!  அந்த கேக்கில் நான்…ஆச்சரியமாய் இருக்கிறது அல்லவா! அந்தப் புகைப்படம் ஹரி எடுத்த படம். ஹரியால் நான் அழகாய்த் தெரிவேன். ஆனால் அது எப்படி கேக்கில்…..அப்படியே………ஆஹா! நண்பர்களே! படைப்புத் திறனின் வியப்பு நம்மை எங்கேயோ கொண்டு சென்று விடுகிறது. ஆஹா! அன்று எனக்குப் பிறந்தநாள் என்கின்ற எண்ணம் உதித்தது. இப்படித்தான் ஒவ்வொரு பிறந்தநாளும் ஒவ்வொரு புதுமையாய் கொண்டாடி என்னைப் பெருமைப் படுத்துவார்கள் என் குடும்பத்தினர். என் ஆனந்தத்தை….என்ன நண்பர்களே…..அளவிடவா முடியும் சொல்லுங்கள்.

மறுநாள் ஞாநி வீட்டில் ‘கேணி’. வழக்கம் போல் நடைபெற்றது. அன்று கலந்து கொண்டவர் வண்ணநிலவன் அவர்கள். அவர் எழுதுவதற்கு வந்த கதையைப் பகிர்ந்து கொண்டார். ‘பட்டங்கள் வேண்டாம்’ என்பவர் அதை வைத்து என்ன செய்வது? எந்த விருதிற்கும் ஆசைப்படாதவர். வந்த விருதையும் வேண்டாம் என மறுத்தவர். யாராவது இந்தக் காலத்தில் பணத்தை வேண்டாம் என்று சொல்வார்களா? அவர் பொருளாதார நிலை ஒன்றும் அப்போது ‘ஆஹா ஓஹோ’ என்றில்லை.

கூட்டம் முடிந்தவுடன் ஒரு எதிர்பாரா நிகழ்ச்சி. ஆகஸ்ட் பன்னிரண்டாம் தேதி. பாஸ்கர் சக்தியின் பிறந்தநாள். பதிமூன்றாம் தேதி என்னுடைய பிறந்தநாள். பதினான்காம் தேதி ஞாநியின் கூட்டம். ஞாநியுடன் பாஸ்கர்சக்தி இணைந்து தான் ‘கேணி’ நடத்தப்பட்டு வருகிறது. இதில் நான் ஒரு அணில் போல. ‘டீ’ போடும் உத்தியோகம். உங்களிடம்தான் ஏற்கனவே கூறியிருக்கிறேனே நண்பர்களே. இந்த அணிலுக்கு ஒரு கிரீடம். ஞாநியின் அன்பளிப்பு. கூட்டம் முடியுமுன், எங்கள் இருவரது பிறந்தநாளையும் அனைவரின் முன் கொண்டாடுவதற்காக, கூட்டத்தினரை 5 நிமிடம் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். பெரிய கேக்கும் வந்தது. பெட்டித் திறக்கப்பட்டது.

வாவ்! நானும் பாஸ்கர்சக்தியும் இருந்தோம். (பாவம் பாஸ்கர் சக்தி. என்னுடைய மெல்லிய உடலால் அவர் ஓரத்தில் ஒடுங்கி இருந்தார் என்பது வேறு விஷயம். அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது). “போட்டோ ஐஸிங்” முறையில் கேக் செய்யப்பட்டிருந்தது. இதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதன்மையாக நமது உறவுகளை மதிப்புற வெளிப்படுத்திக் கொள்கிறோம். அடுத்ததாக, வெளிப்படுத்தும் முறையில் ஆனந்தம் அதிகரிக்கக் கூடியதாக, அதற்கு நாம் எவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்கின்றோம் என்பதையும் அது தெரியப்படுத்தி விடுகின்றது.

இப்படியொரு அருமையான விஷயத்தை, எப்படி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியும் நண்பர்களே! பார்ப்போரிடமெல்லாம் அந்த போட்டோ கேக்கைக் காட்டிக் காட்டி ஆனந்தப்படுகிறேன். அப்படித்தானே இருந்திருக்கும். இரசனைக்கென்று பிறவி எடுத்த இரசிகமணி டி.கே.சிக்கும்.

ஆங்கிலமோகமும், வடமொழியில் மயக்கமும், வித்வான்கள் பண்டிதத்தனமும், தமிழை அதலபாதாளத்தில் தள்ளி விட்டிருந்த நேரம்! தமிழன்னை தன் தரிசனத்தை டி.கே. சிதம்பரநாதன் என்கிற இளைஞனுக்குத் தருகிறாள். தன் உறைவிடத்தை அவன் இதயத்தில் மாற்றுகிறாள். கம்பனைக் கொணர்ந்து அமர்த்துகிறாள். கம்பன் அமர்ந்ததும், தமிழ்க்கவிகள் தானாக வந்து அமர்ந்து விடுகின்றன. அவ்வண்ணம் பண்பாடுள்ளவனாக்கி, மனிதனாக்கி, இரசிகமணியாக்கி, மாமனிதனாக்கி விடுகிறாள். இதயம் முழுவதும் கவி அனுபவம். அவரால் எப்படிப் பகிராது இருக்க இயலும். பகிரப் பகிரத்தான் அனுபவம் பேரின்பம் பெறும். ஒவ்வொரு முறை அனுபவிக்கும் போதும் ஒவ்வொரு புதுமையான அனுபவம் கிட்டும்தானே!

அன்பர்களை அழைத்து, அமுதூட்டி கவி அனுபவமும் கொடுக்கிறார்கள். கட்டுரை எழுதுகிறார்கள். கம்பரைக் காட்சியாக்குகின்றார்கள். கம்பனின் உண்மையானக் கவியைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். இதோ! இதோ! இங்கே பாருங்கள்! இதுதான் கம்பர்! இதுதான் உண்மையானக் கவி எனக் காட்டி ஆனந்தப் படுகிறார்கள். உண்மைத் தரிசனத்தைக் கண்ட ஆனந்த அனுபவம். அவரைத் தேடி அறிஞர்கள் அன்பர்களாய் வரும் அதிசயத்தைக் காணலாம். அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்குகிறார்கள். அப்படியும் தீரவில்லை. நள்ளிரவில் நண்பர்களுக்கு கடிதம் எழுதி விடுகிறார்கள். அப்படி எழுதும் போது டி.கே.சி. அவர்களின் அனுபவங்களும், உண்மை விளக்கங்களும் உணர்ச்சியோடு கொப்புளித்த வண்ணம் வெளிப்படுகிறது.

அப்படிப் பகிர்ந்து கொண்ட அவருடைய உற்ற நண்பர்கள், அவர் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும்போதோ அல்லது அவர்களாக கடிதம் எழுதும்போதோ ஒரு சந்தேகத்தைக் கேட்டு விடுவார்கள். இல்லையெனில் அவர்கள் ரசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு விடுவார்கள். அவ்வளவுதான். அவர்களுக்கு அவர் பதில், பல அரிய உண்மைகளுக்கு விளக்கங்களும் டி.கே.சி. அவர்களுக்குரிய தனித்த பார்வையில் அந்தக் கடிதங்கள் எல்லாம் பிரகாசித்துக் கொண்டு இருக்கும். இன்று அவை சாகாவரம் பெற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன. அவைகள் டி.கே.சி. யார் என்று தமிழ்ச் சமுதாயத்திற்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

முதல் கடிதம் ஸ்ரீமதி சுந்தரிக்கு டி.கே.சி. அவர்கள் எழுதியது “குற்றாலத் தமர்ந்துறையும் கூத்தர்” என்றும் பழம்பாடலைத் திருத்தி “குற்றாலத் தமர்ந்துறையும் தாத்தா” என டி.கே.சிக்கு எழுதியவர். வந்தவாசியில் வசிப்பவர். திரு. கி. இராமலிங்கம் என்பவரின் துணைவி.

“அந்த அம்மாள் முதல் முதலாகக் கடிதம் எழுதினது எனக்குத்தான். கணவர் இராமலிங்கத்துக்கும் வந்தவாசிதானே! கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லை” என்று அவரே சொன்னார். அவரும் நல்ல அறிஞன். கடிதத்தைப் பார்த்து அவரே அதிசயித்தார். ஒவ்வொரு கடிதமும் அற்புதமாகவே இருக்கும். உயர்ந்த இலக்கியமாய் அமைந்து நிற்கும்.

(டி.கே.சி, மகராஜன் அவர்களுக்கு எழுதிய கடிதம். சுந்தரி அம்மாளையும் அவரது கடிதத்தைப் பற்றியும் இதில் குறிப்பிடுகிறார். (ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள், முழு தொகுப்பு, உயிர்மை பதிப்பகம், 2010&பக்கம் 451) உங்களுக்கு, டி.கே.சி. அவருக்கு எழுதிய கடிதத்தைத் தருகிறேன்.

 

திருக்குற்றாலம்,

தென்காசி,

12-8-47.

அம்மை சுந்தரிக்கு,

அழகான கடிதம் கிடைத்தது. துணைவர் கண்ட பிரகாரம் கடிதம் வெகு அழகாய் இருக்கிறது. இங்குள்ளவர்கள் பலரும், நல்ல அறிஞர்களுமே வாசித்து ரொம்ப ரொம்ப அனுபவித்தார்கள்.

தமிழ் உலகத்தில், இத்தகைய கடித இலக்கியம் பிறந்து வருகிறது என்று சொல்லி ஆனந்தப்படுகிறார்கள்.

பொதுவாக நம்மவர்கள் கடிதம் எழுதினால் “இவ்விடம் க்ஷேமம், அவ்விடம் க்ஷேமத்துக்கு எழுதியனுப்ப வேண்டும்“ என்பதுதான் விஷயமாயிருக்கும்.

பண்டிதர்கள் எழுதியனுப்பினால் அதுவும் இராது. ‘பன்னாள் நோக்குற்றது இந்நாட் போந்தெய்தியது’ என்று அவர்கள் படித்த பாடத்தையெல்லாம் ஒப்பிக்கப் பார்ப்பார்கள்.

உணர்ச்சியோ உண்மையோ சூன்யம். நமக்கு ஏமாற்றமும் தலைவலியும் மிச்சம் என்று ஏற்படும்.

இப்படி இருந்த கடித உலகில் கிடந்தவனுக்கு துணைவர் கடிதமும் தங்கள் கடிதமும் எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதைத் தாங்கள் அறிய முடியாது.

துணைவரும் வெகு அழகாகத் தாங்கள் எழுதியதுதான் முதன்முதலாக எழுதிய கடிதம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே!”

என்ற அடி எவ்வளவு லாவகமாகத் தங்கள் நாவில் மாறிக் கொண்டது என்பதை நினைக்கும்போது எனக்கு ஒரே ஆனந்தமாய் இருக்கிறது. அன்பு எப்பேர்ப்பட்ட விளையாட்டுகளையெல்லாம் விளையாடி விடுகிறது என்று நினைக்கிறேன்.

இந்த ஒரு விஷயம் தங்கள் தமிழ் அனுபவத்தை அபாரமாக வெளியிடுகிறது. தமிழானது தாய்மாருக்குத்தான் என்று அடிக்கடி நான் சொல்லுவதுண்டு. தாங்கள் அந்த உண்மையை நன்றாய் வலியுறுத்தி விட்டீர்கள்.

தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் பாடிய பாடலையும் வைத்து, நன்றாய் விளையாடுகிறீர்கள்.

‘கன்னித் தமிழேப் போல்

கம்பன் கவியைப் போல்’

என்ற தமிழ் வார்த்தைகளிலுள்ள இனிமையை அப்படியே பருகி விட்டீர்கள். இதயத்தை விட்டுப் போகாது அது என்று தெரிகிறது.

துணைவரும் தாங்களும் வந்து பத்து நாள் உடனிருந்தது என் வாழ்க்கையில் கிடைத்த அரிய அனுபவங்களில் ஒன்று. நல்ல உணர்ச்சியும் பண்பாடும் கொண்ட அழகிய இளந்தம்பதிகள், வீட்டோடு வீடாய்க் குடும்பத்தோடு குடும்பமாய்ச் சேர்ந்து, உடன் இருந்தும் உண்டும் அளவளாவியும் பொழுது போக்குவதை விட சிறந்த அனுபவம் வேறொன்று இருந்து விடாது.

பழனியாண்டவன் அருள் என்றென்றும் உங்கள் இருவருக்கும் அமைவதாக.

‘வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட

தீரவேல் செவ்வேள் திருக்கை வேல் வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்

துளைத்தவேல் உண்டே துணை.’

இப்படிக்கு,

டி.கே.சி. தாத்தா.

இந்தக் கடிதத்தில் கடிதத்தின் வடிவமும், டி.கே.சி எவ்வாறு ரசித்து அவர்களுக்குப் பதில் எழுதியிருக்கிறார் என்பதும் நமக்குப் புலப்படும்.

என்னைப் பொறுத்தவரையும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று சதா சொல்லிக் கொண்டேயிருப்பவள்.முதலில் அருமையான பெற்றோர். அவர்கள் வழிக் குடும்பம், இப்பேர்ப்பட்ட மாமனிதன் நாங்கள் வாழுங்காலத்தில் வாழ்ந்தார்களா என அனைவரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்த டி.கே.சி. தாத்தாவும், அவர்கள் வழி வந்தவர்களின் உறவும், உபசரிப்பும், ஆனந்தம். அறிவான கணவர். அவர் வழி வந்த அன்பான அருமையான மகள்கள். காலத்தே எனக்குத் துணை நிற்கும் நட்பு, மனதிற்கு இனிய தோழமை, எழுத்துலகம் அளித்த ஏற்றமிகு நண்பர்கள், அவர்கள் என்னுடன் பழகும் எளிமை, நேர்மை, இத்தனைக்கும் தகுதியானப் பாத்திரம் நான், எதுவுமில்லாத காலிப்பாத்திரம். ‘அன்பைத்’ தவிர, வேறொன்றும் அறியேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் மனித உறவுகள். எனக்குப் பிடித்ததெல்லாம் மனிதர்களுடன் ஸத்சங்கம்.

ஒவ்வொரு முறை நட்புடன் விடைபிரியும் போது, சுற்றத்துடன் பழகிக் குளிர்ந்து விட்டு வரும் போது உள்ளம் படும் பாடு இருக்கிறதே! விவரிக்க முடியாது. மௌனத்தின் மொழி இன்னும் வலிமைப்படும் என்று சமாதானப்படுத்தும். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பிசிராந்தையார்-கோப்பெருஞ் சோழன் காலத்தில் தகவல் தொடர்பு இவ்வளவு வேகத்தில் இல்லை. அவர்கள் உள்ளுணர்வில் ஒரு தொடர்பு நிகழ்ந்திருக்கும் என்றேத் தோன்றுகிறது. ஏன் ‘டெலிபதி’ என்பார்களே இது உதவியிருக்கும். நம் காலத்தில் அப்படியில்லை. நினைத்ததும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஏன் இதில் சுணக்கம்? இந்த என் மனச் சஞ்சலத்திற்கு டி.கே.சி. தாத்தா, ஜஸ்டிஸ் மகாராஜன் அவர்களுக்கு எழுதிய கடிதம் எனக்குத் துணை செய்கிறது.

 

டி.கே.சிதம்பரநாத முதலியார்                                                                                                   முகாம் “கல்கி”

சென்னை.

16-12-49

அருமை நண்பர் மகராஜன் அவர்களுக்கு,

திருவள்ளுவர், ‘அன்பு உண்டாக்குவதற்கோ வளர்வதற்கோ நெருங்கிப் பழகுதலோ, உறவாடுதலோ வேண்டாம், ஒத்த உணர்ச்சி இருந்தால் போதும்’, என்று பேசுவார்.

“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்“

என்பதாகப் பேசினார்: சௌடால்த் தனமாகத்தான் பேசினார். அப்பா குதிருக்குள் இல்லை என்ற கதைதான் அப்படிச் சொன்னது. சினேகிதர்களோடு ரொம்ப ரொம்ப உறவாடி இருக்கிறார், ஜமா, ஜமா என்று ஜமாய்த்திருக்கிறார். அல்லாத பக்ஷம்

“பெரிதினிது பேதையார்கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்.”

என்று சொல்லுவாரா?. ஏன், ஒத்த உணர்ச்சிதான் இருக்கிறதே, பிரிவைப் பற்றி ஏன் தொந்தரவு பண்ணிக் கொள்ள வேண்டும் என்று அமைதியாய் இருந்து விடலாமே. அப்படி இருந்து விடவில்லையே. வண்டிபோட்டு, வண்டியிலேறி ரயிலடிக்கல்லவா வந்து விடுகிறார்.

திருமலை, அம்மா, அப்பா, செல்லம்மாள், தாங்கள் எல்லாருமாக வந்தது திருவள்ளுவரே வந்த மாதிரிதான். திருவள்ளுவரின் சபலம் இருக்கட்டும். திருமலையின் அம்மா அப்பா அவர்களின் சபலத்தை என்ன சொல்ல. என்ன ஆர்வத்தோடு ரயிலடிக்கு வந்தார்கள்! அன்று ரயிலடியில் கண்ட காட்சியை ஒரு இதிகாசக் காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். அன்பும் பண்பாடும் கலந்து கொண்டால் ஆட்களை என்ன பாடெல்லாமோ படுத்தி விடும் என்பதாகத் தெரிகிறது.

அவர்கள் இருவரும் வந்து நின்ற நிலையை என்ன என்று சொல்லுகிறது. அம்மாவுக்கு இலக்கணம் தெரியாது. பவணந்தி, தொல்காப்பியனார்களைப் பற்றிக் கேட்டதே கிடையாது. தமிழ் எழுத்துக்களின் மர்மம் இன்னது என்றும் தெரியாது. ஆனால், அவர்கள்தான் பாடல்களை வார்த்தை வார்த்தையாய், எழுத்து எழுத்தாய் அனுபவிக்கிறார்கள். “விஷயம் ஓகோ இதுதானா, அடுத்த பாட்டுக்குப் போவோம்“ என்ற கணக்கில் அல்ல அவர்கள் பாடல்களைக் கேட்கிறதும் அனுபவிக்கிறதும். சிருஷ்டி வேகத்துடனேயே அல்லவா கலந்து அனுபவிக்கிறார். தற்காலத்துப் புஸ்தக யுகத்துக்கு ஒரு அற்புதமான மறுப்பாய் விளங்குகிறார்கள் அந்த அம்மணி.

அப்பா ரொம்ப ரொம்ப நூல்களைக் கற்றவர்கள்.  பல நூல்களோடும் இதயம் ஒட்டிப் பழகி வந்தவர்கள். ஆனாலும், மனசில் உண்டாக நேர்ந்த ஒரு ஏமாற்றம் அவர்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டது. அவர்களுக்கும் தமிழ்ப் பாடல்களும் பண்பாடும் தெளிவைக் கொடுத்தன. அசௌகரியங்களை உதறி விட்டு அப்படியே ரயிலுக்கு வந்து விட்டார்கள். தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு அரிய பாஷ்யக்காரராக விளங்குகிறார்கள் அவர்கள். எனக்கு ஒரு புதிய ஊக்கம் பிறந்து விட்டது அவர்களால். மிக்க சந்தோஷம். இத்தகைய அன்பர்களை அடிக்கடி பார்த்துத் தீர வேண்டியதுதான். உணர்ச்சியோடு நிற்க முடியாது.

கணவருக்காக வைத்திருந்த மாங்கனியை சிவனடியாருக்கு அளித்து விடுகிறார் அப்பெண்மணி. கணவர் உணவருந்த உட்கார்ந்து விடுகிறார். உணவருந்தும் போது அவர் வாங்கி வந்த மாங்கனியைக் கேட்கிறார். கணவன் கேட்கும் போது எப்படி இல்லையென்பாள்? தவிக்கிறாள். உதவுபவர் சிவபிரான், தெய்வீக மாங்கனியைத் தருகிறார். அப்படியே கணவனுக்குப் படைக்கிறாள். அதன் அந்த சுவை கணவனுக்குச் சந்தேகம் அளிக்கிறது. ஆம் இந்தக்கதை காரைக்கால் அம்மையாரின் கதைதான். இதுதான் நாங்கள் பள்ளியில் படித்தப் பாடம். இதற்கு மேல் எனக்குத் தெரியாது. ஆனால் டி.கே.சி. அவர்கள் ஜஸ்டிஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் படித்தவுடன், இப்படியொரு அருமையான கவியா? இவ்வளவு அருமையான உவமையா என அசந்தே போய்விட்டேன். அந்தக் கடிதத்தை அப்படியே தருகிறேன். படியுங்களேன்! அனுபவியுங்களேன் நண்பர்களே!

 

ஓம்

டி.கே.சிதம்பரநாத முதலியார்                                                                                                                     முகாம்

“கல்கி”

சென்னை,

27-9-49.

அருமை நண்பர் மகராஜன் அவர்களுக்கு,

ரயிலுக்குத் தங்கள் கடிதமும் ஓட்ஸ் கஞ்சியும் வந்தன. கஞ்சி அவசியமாகவே இருந்தது. அதை அனுபவித்தேன். அதைவிட அதிகமாக அனுபவித்தேன் கடிதத்தை.

காரைக்கால் அம்மையாரின் தொனி தங்கள் காதுக்கு எட்டி விட்டது. வெகு நாளாக எட்டாமலிருந்தது தமிழருக்கு. வேண்டாத கதையைச் சைவ சபைகளில் அளந்து கொண்டே இருந்தார்கள். யாரும் அற்புதத் திருவந்தாதியைக் கவனிக்கவில்லை.

அந்தாதிச் செய்யுள்களிலுள்ள சிருஷ்டி அற்புதம் விளங்கவில்லை. மாம்பழம் கைக்கு வந்த அற்புதம்தான் விளங்கிற்று. மாம்பழத்துக்குப் பதிலாகக் கருப்புக் கட்டி வந்திருந்தாலும் போதும். அவர்களுக்குக் கடித்துத் தின்ன ஏதாவது வேண்டும். அவ்வளவுதான்.

சைவத்திலும் தமிழிலும் எத்தனையோ ஆண்டுகளாத் தோய்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் கேட்டும் இருக்கிறேன். அற்புதத் திருவந்தாதியை வாசித்ததாகவே இல்லை.

முதல் முதலாக அற்புதத் திருவந்தாதியை நான் சொல்லி அனுபவித்தவர், வண்ணார்பேட்டையிலிருந்த சுந்தர மூர்த்திப் பௌராணிகர்தான். மற்றவர்களைப் பற்றி அப்படி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. தாங்கள் காரைக்கால் அம்மையாரின் கவிதையை உணர ஆரம்பித்து விட்டீர்கள்.

‘அழலாட அங்கை சிவந்ததோ, அங்கை அழகால்

அழல் சிவந்தவாறோ கழலாடப்

பேயோடு கானிற்பிறங்க அனல் ஏந்தித்

தீயாடு வாய், இதனைச் செப்பு.’

ஏதோ நேருக்கு நேர் நின்று “இதனைச் சொல்லு,” என்று சொல்லுவது கடவுள் தத்துவத்தில் அத்தனை திளைப்பு இருக்கிறது என்பதை அல்லவா காட்டுகிறது. செந்நிறத்தைத் தீக்கு ஏற்றுவதில் ஒரு அரிய காதல் சுவையே கிடக்கிறது.

பாடலைத் தாங்கள் நன்றாக அனுபவித்து விட்டீர்கள். காரைக்கால் அம்மையாருக்கு ஒரு ஸர்ப்ரைஸ் கிடைத்து விட்டது. மிக்க சந்தோஷம்.

மிக்கதொரு யோகம். காரைக்கால் அம்மையாரை அபத்தக் கதைக்குள் புகுத்தியவர்கள் காரியம் இனிச் செல்லாது. அற்புதத் திருவந்தாதியின் காரியம் வெற்றி பெற்றதல்லவா! என்று சொல்லிக் கொண்டிருக்கலாம் நான்.

இங்குள்ள காரியங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.

அக்காள், குழந்தைகள், செல்லம்மாள் எல்லாருக்கும் என் அன்பு.

அன்புடன் டி.கே.சி

‘திரு. ஜஸ்டிஸ் மகாராஜன் அவர்கள், அவர்களது சகோதரி வேலம்மாள் அவர்கள் ஆகிய இருவர்தான் தனக்கு இணையாகத் தைரியமாக இலக்கியப் பகிர்தலுக்குரியவர்கள்’ என இரசிகமணி அவர்களே சான்றிதழ் வழங்கினார். ஜஸ்டிஸ் மகாராஜன் அவர்களின் சகோதரி வேலம்மாள் அவர்களை “அருமைப் புதல்வி வேலம்மாள் என்றுதான் கடிதம் தொடங்கும்.

 

ஓம்

டி.கே.சிதம்பரநாத முதலியார்                                                                                                            சி/ஷீ. கல்கி

சென்னை

21-8-48.

அருமைப் புதல்வி அன்னை வேலம்மாளுக்கு,

இன்று காலை சௌகரியமாகச் சென்னை வந்து சேர்ந்தோம். மனையாளும் குழந்தைகளும் திருநெல்வேலி மார்க்கமாக மதுரை வந்து சேர்ந்தார்கள். நான் சீவிலிபுத்தூர் மார்க்கமாகவே மதுரை சேர்ந்தேன். மதுரையிலிருந்து ஒன்றாகவே பிரயாணம்.

சீவிலிபுத்தூர் ஸ்டேஷனுக்குத் தம்பி வர இயலவில்லை. தாங்களும் வர இயலவில்லை. வத்தலக்குண்டுக்குப் போய்விட்டு அன்றுதான் வந்தீர்கள் என்று கேள்விப்பட்டேன். சுப்புவின் மாமியார் ரொம்ப கஷ்டப்பட்ட அம்மாள், காலமாகி விட்டார்கள். சுப்புவுக்குப் பெண் துணையாக வீட்டில் யாராவது இருக்கிறார்களா. பெண் துணையில்லாமல் வீட்டில் கஷ்டமாகத்தான் இருக்கும். சுப்பு மிக்க திறமைசாலி. பொறுப்பாய்ப் பார்த்து வீட்டுக் காரியங்களை நடத்தக் கூடியவள். கடவுள் கிருபை செய்வார்.

திருமலை ஐயங்கார் அவர்கள் என்னுடன் திருச்சி வரை வந்தார்கள். விருதுநகர் வரை கம்பார்ட்மெண்டிலேயே இருந்து தமிழைக் “கிறுக்கன்” மாதிரி அனுபவித்து வந்தார்கள். தமிழ் வித்துவானும், ஹிந்தி வித்வானும் ஸ்டேஷனில் நின்று விட்டார்கள். அவர்களுக்கும் தமிழிடம் எவ்வளவு பிரியம். பாருங்கள், அந்த பிரியந்தானே அவர்களை ஸ்டேஷனுக்குத் தள்ளிக் கொண்டு வந்தது. நினைக்க எவ்வளவு திருப்தியாய் இருக்கிறது.

பொதுவாகத் தமிழ் வித்வான்களுக்குத் தமிழ் என்றாலே வேப்பங்காயாகப் போய்விட்டது. தமிழிலே ஒன்றும் இல்லை என்று வெளிப்படையாய்ச் சொல்லவும் எழுதவும் ஆரம்பித்து விட்டார்கள். டி.கே.சி. சொல்லுவதெல்லாம் ஒன்றைப் பத்தாய்ச் சொல்லும் படாடோபந்தான் என்றும் பிரச்சாரம்! இந்த நிலைமையில் வித்துவான் திருமலை ஐயங்கார் அவர்களுக்குத் தமிழில் ஒரு மோகம். மிக்க சந்தோஷமான காரியம் அல்லவா.

ரயிலில் திருமலை ஐயங்கார் அவர்களுடன் வேறு சில ரஸிகர்களும் பிரயாணம் செய்தார்கள். அவர்களிடம் ஒரு வெண்பாவைச் சொல்லி வந்தேன். “செட்டி நாடு” என்ற பத்திரிக்கையில் வந்த வெண்பா. செய்தவர் யாரோ தெரியவில்லை. ஆனாலும் ரஸம் இருக்கிறது.

“மன்றல்க் குழல்கமழும் வள்ளிக்கு வாய்த்தவனை,

வென்றி மயிலேறும் வித்தகனை – ஒன்றின்

முளையானை யாவர்க்கும் மூத்தானை யானைக்(கு)

இளையானை நெஞ்சமே ஏத்து.”

முதலடியில் பாடல்

“மன்றல் கமழ் குழல் சேர்”

என்று இருந்தது. இதில் “சேர்” என்ற வார்த்தை பிஞ்சு தொங்குகிற மாதிரி நிற்கிறது. “வள்ளி”யோடு அங்கமாய்ப் பொருந்தவில்லை.

“குழல் கமழும் வள்ளி”

என்று சொல்லும் போது அங்கமாகப் பொருந்தி நிற்கிறது. இது ஒரு சிறு திருத்தந்தான். ஆனால்

(வாய்த்தவனை)

என்று திருத்தந்தான் முக்கியமான திருத்தம். பத்திரிகையில் “வாய்த்தானை” என்று இருக்கிறது. அது

“வித்தகளை” என்ற இரண்டாம் அடியில் வரும் இளக்கமான இலக்கணப் பாங்குக்கு மேலாய்ப் போய் விடுகிறது.

வாய்த்தவனை

வித் தகனை

இரண்டும் இளக்கமான நீண்டு செல்லும் ஓசை. ஆனால்,

முளையானை

மூத்தானை

இளையானை

என்னும் உருவங்கள் எழுத்துக் குறுகி வேகத்தோடு ஒலிப்பன, இந்த வேகத்தைக் கெடுத்து விடுகிறது. “வாய்த்தானை” என்று முதலடியில் வரும் வேகம் கொண்ட உருவம். மூன்றாவது நான்காவது அடிகளில் வரும் அற்புதமான பொருள் பொதிந்த வேகத்தைக் கெடுத்து விடுகிறது; கெடுக்காமல் இருப்பதற்காகவே திருத்தம்.

மறுபடியும் வெண்பாவைத் திருத்தத்துடன் சொல்லிப் பார்க்கலாம்.

மன்றல்க் குழல் கமழும் வள்ளிக்கு வாய்த்தவனை

வென்றி மயிலேறும் வித்தகனை & ஒன்றின்

முளையானை, யாவர்க்கும் மூத்தானை, யானைக்கு

இளையானை நெஞ்சமே ஏத்து.

(மன்றல்க் குழல்=புஷ்ப மாலை சூடிய கூந்தல்; ஒன்றின் முளையானை, அநாதியான வஸ்து, வேறொரு வஸ்துவிலிருந்து வராத தத்துவம்; யாவர்க்கும் மூத்தானை, அவனுக்கு முன் யாதும் இருந்ததில்லை.

கவியில் விஷயம், வேகம், ஓசை எல்லாம் அமைந்திருக்கிறது. திருமலை ஐயங்கார் அவர்கள் நன்றாய் அனுபவித்தார்கள். பிரயாணத்துக்கு ஒரு நல்ல சகுனம் அல்லவா.

இங்கே நண்பர் சதாசிவத்தின் மருமகளுக்கு நாளை மத்தியானம் கலியாணம். எங்கள் பாடுதான் கஷ்டமாயிருக்கிறது. மாப்பிள்ளை வீட்டுக்காரரா, பெண் வீட்டுக்காரரா என்பதுதான் தெரியவில்லை. இரண்டுந்தான். இருபக்கத்திலிருந்தும் மரியாதையும் உபசாரமும்.

இப்படிக்கு

டி.கே.சிதம்பரநாதன்

இப்படிக் கடிதத்தில் இலக்கிய வகுப்பே நடந்து முடிகிறது. அது இவர்களால்தான் முடியும்.

முதன்முதலில் ரசிகமணியோடு ஸ்ரீ பட்டாபி அவர்கள் அறிமுகம் ஆனபோது இளையவராய் இருந்தார். அந்த இளம் வயதில் தம் தந்தையார் ஸ்ரீ ஜி.என். சக்ரபாணி செட்டியார் அவர்கள் நிறுவிய மோட்டார் கார் வியாபாரத்தில் மிகவும் திறமையுடன் ஈடுபட்டு வந்தார். நிதானம், முன்யோசனை, நாணயம், பக்குவம் அனைத்தும் ஸ்ரீ பட்டாபி அவர்களிடம் குறைவின்றி இருந்தது. அவர் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், இலக்கியம், கலை முதலிய துறைகளிலும் மிகுந்த பாண்டித்திடம் பெற்றிருந்தார். இவருடன் டி.கே.சி. அவர்கள் இசையைப் பற்றிப் பகிர்ந்து கொண்டதை விளக்குகிறது ஒரு கடிதம்.

திருக்குற்றாலம்,

2-9-44.

அருமை நண்பர் பட்டாபி அவர்களுக்கு,

நமஸ்காரம்

தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது. ரொம்ப சந்தோஷம் நண்பர்கள் விஷயத்தில் என் பாக்கியமே பாக்கியம்.  ஆம். ராஜாஜி என்னிடம் மிக்க அன்புடையவர்கள்.  அப்படி அன்பு பிறப்பதற்கு சந்தித்தும், உடன் உறைத்தும், அளவளாவியும் இருக்கும் அடிப்படையான காரணங்கள் உண்டு. ஆனால் தங்கள் விஷயங்களில் தங்கள் இதயத்தோடு என் இதயம் ஒட்டுவதாகத் தெரியவந்தது.  அதிலிருந்து தங்களுக்கு அன்பு பிறந்து விட்டது. இத்தகைய அன்பை (வைரத்தை மதிக்கிற காரியம் என் துறையல்ல) மதிக்க தெரியாதா எனக்கு?

எப்படியோ இறைவன் தங்களுக்கு இதயப்பாங்கை தங்களுக்கு ஏராளமாக கொடுத்து விட்டார். சங்கீதத்தைத் தாங்கள் எப்படி எல்லாமோ அனுபவிக்கின்றீர்கள். இவ்வளவு சிறுவயதில் இந்த அனுபவம் கிடைப்பது அரிது. சங்கீதம் போலவே இலக்கியத்தையும் அனுபவிக்கின்றீர்கள். அதைவிட என் போன்ற சிநேகிதர்களை அனுபவிக்கின்றீர்கள். இதையெல்லாம்  எண்ண எண்ண எனக்கு ஒரே ஆனந்தமாய் இருக்கிறது.

கடிதப் போக்குவரத்து நடந்து கொண்டிருப்பதற்காக ஒரு விஷயத்தைக் குறியாக நட்டு வைத்துக் கொண்டீர்கள்.  அதாவது தமிழிசை என்பது பாவ இசை என்று நான் சொல்வதாக. நான் அப்படிச் சொல்லவில்லை தான். ஆனாலும் விவாதம் ஒன்றை நடத்தி விவாதத்தைத் தெளிவுபடுத்துவதற்கு அது ஒரு வசதிதான்?

உலகம் எங்குமே சங்கீதம் இருக்கிறது. அது மாத்திரம் அல்ல. அந்த சங்கிதத்தில் பாவமுள்ள சங்கிதம் என்றும், பாவமற்ற சங்கீதம் என்றும் இருக்கின்றன.

மேல்நாட்டில் நடைபெறுகிற சங்கீதம் எல்லாம் அநேகமாய் ஜெர்மன் சங்கீதத்தைத் தழுவியதுதான். மேவான ஜெர்மன் சங்கீத கர்த்தாக்கள் சங்கீதத்தை ஜெர்மன் சாகித்தியத்தோடு சேர்ந்து மிக்க உணர்ச்சிபாவம் விளையும்படி செய்தார்கள்.  அந்தச் சாகித்தியங்களுக்கு மேல்நாட்டு முறைப்படி சுரம் அமைத்து வைத்தார்கள்.  பியானாவில் அந்தச் சுரத்தை அழுத்தி ஏதோ பாடியும் விட்டார்கள். ஜெர்மன் பிராந்தியத்தையும் இங்கீலிஷ் ‘சானலை’யும் கடந்து போன போது சுரமும் பியானாவும் தான் மிஞ்சின.  ஜெர்மன் பாஷையின்  உணர்ச்சி, ஊக்கம், பக்தி முதலிய உயிரான அம்சங்கள் எல்லாம் ஜெர்மன் பூமியிலே தங்கி விட்டன. ஆங்கில நாட்டின் சங்கீதம் காரணமாக உணர்ச்சியற்றுப் போய் விட்டது.  கேலிக் கூத்தாகவே போய்விட்டது. கார்லைல் ஆகியோருக்கு வெகு கோபம் வந்துவிட்டது. பல்கலைக் கடித்தார் & தலை ரோமத்தைப் பிய்த்தார்.

தமிழ் நாட்டுக்கு வருவோமானால் இங்கேயும் சங்கீதத்தை இரண்டு விதமாகப் பிரிக்க வேண்டும். பாவமான சங்கீதம் பாவமற்ற சங்கீதம் என்பதாக. தெலுங்கு சங்கீதத்திலும் அப்படியே தான். தெலுங்கு சாகித்தியத்தை உணர்ச்சியோடும், பக்தியோடும் பாடும் போது அது பாவ சங்கீதம். வெறும் விளையாட்டாக, உணர்ச்சியில்லாமல் பாடும் போது சாமான்யம் என்று சொல்லிவிட வேண்டியதுதான். ஏதோ காதில் சவ்வுக்கு சுகமாயிருக்கலாம்; அவ்வளவுதான்.

தெலுங்குக்குச் சொன்னது தமிழுக்கும் அப்படியே பொருந்தும். ராகம் பாடும் போது தமிழருக்கும், தெலுங்கருக்கும் பொதுதான். இருவரும் அனுபவிக்கலாம். அதில் பாஷை கலப்பில்லாததால் இருவருக்கும் பொது என்கிறோம். தெலுங்கர்களும் சில பேராவது கேட்டு வந்திருக்கிற காரணத்தால் அவர்கள் ராகங்களை அனுபவிக்கிறார்கள்.

ஆனால், தெலுங்கு தேசத்துக்கு வடக்கிலுள்ள பங்காளிகளின் ராகங்களை மற்றும் சங்கராபரணம், தோடி போன்ற கர்னாடக ராகங்களைக் கேட்டு அனுபவிக்க முடியாது. ஆங்கிலேயரும் அனுபவிக்க மாட்டார்கள். ‘ஏதோ சுரங்கள் அப்படி ஏறுகின்றன, இப்படி ஏறுகின்றன’ என்று அயலார் சொல்லும் போது ஏதோ முதுகைத் தட்டிக் கொடுக்கிற காரியந்தான் என்று நாம் மனசில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ராகம் பாடுவது என்பது கெண்டியை வைத்துக்கொண்டு சுண்ணாம்புக் கோலம் போடுவது போன்றது. கை லாகவத்தைக் கண்டு அனுபவிக்கிறோம். வளையும், நெளிவும் அந்த லாகவத்தைக் காட்டுகின்றன.  அது போல சாரீரத்ததின் லாகவத்தைக் கண்டு ராகத்தின் நயத்தை அனுபவிக்கிறோம். ஆனால் சாகித்தியத்துக்கு வரும்போது பாவத்தை எதிர்பார்க்கிறோம்.  உள்ளிருக்கும் உணர்ச்சி வேகம் சங்கீதத்துக்கு ரூபம் கொடுக்கிறது.

மில்டன் சொன்னதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் சங்கீதத்தில் பாவரூபம் என்று ஒன்று இருக்கிறதென்றும், அதுவே சங்கீதத்துக்கு லக்ஷியம் என்றும் தெரியவரும்.

நான் சொல்லுவதெல்லாம்: சங்கீதம் பாவ சங்கீதமாகவே இருக்க வேண்டும். தெலுங்கர்கள் பாவத்தை உணரவேண்டும் என்றால் தெலுங்கு பாஷையில் தான்  சாகித்தியமும் இருக்க வேண்டும்;  தமிழில் இருந்தால் விஷயம் புரியாது.  உணர்ச்சியை உணர முடியாது. பாவத்தைக் காண முடியாது.

மேற்படி மேற்படிதான் காமட்ச்சட்காவில் உள்ளவர்களுக்கும், தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கும். தமிழ்ச் சங்கீதந்தான் பாவ சங்கீதம் என்று நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்ல சந்தர்ப்பமும் ஏற்பட்டிருக்காது.

ஆனால் பத்திரிக்கைகள் என்னவெல்லாமோ என்னைப்பற்றி எழுதுகின்றன. பேனா ஓடுகிறபடி எல்லாம் எழுதுகின்றன.  அப்பாவிகள் என்ன செய்வார்கள். சங்கீதத்தைப் பற்றியோ எழுத முடியாது. மனுஷர்களைப்பற்றி எழுதித்தான் பத்தியை நிரப்ப வேணும். டி.கே.சி. கவியும், சங்கீதமும் ஒன்றென்று எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று எழுதுவார்கள். உடனே கவிக்கும் சங்கீதத்துக்கும் சம்பந்தமே கூடாது என்று கூசாமல் எழுதுவார்கள்.  அதில் அவர்களுக்கு லஜ்ஜையே இல்லை.  என்ன,  சர்க்கரைக்கும் கடலைமாவுக்கும் வித்தியாசம் தெரியும். கடலைமாவை மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. சர்க்கரையைத் தனியாய்ச் சாப்பிடவும் முடியாது. ஆனால் லட்டு செய்து கொடுத்தால் சாப்பிட முடியும்.

பதங்களை உயர்ந்த பாவ உருவத்துக்காக தெய்வத் தன்மை வாய்ந்தது என்று அனுபவிக்கிறேன். பக்தி உணர்ச்சியோடு, களிக்கண்ணி, சித்தர் பாடல், காவடிச் சிந்து முதலியவைகளைப் பாடினாலும் பரவமும் அடையத்தான் செய்கிறேன்.  ஆனால் சங்கதி சங்கதி என்று சுரங்களைக் கொண்டு கீச்சுக் கீச்சுத் தாம்பலம் விளையாட்டு விளையாடுகிறதை ரொம்ப அனுபவித்து விட முடியாது.  அதோடு அபசுரமும் கருதி இன்மையும் சேர்ந்து விட்டால் கேட்கவா வேண்டும்? அமிர்தாஞ்சனத்துக்கு ஆர்டர் பண்ண வேண்டியதுதான்!

கல்வி, கலை விஷயங்களில் தாகூர் தெளிவான உண்மை ஒள்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது பள்ளிக் கூடங்களிலும், யூனிவர்ஸிட்டிகளிலும் மூளையை வளர்க்கிற காரியமாகத்தான் இருக்கிறது.  அதற்குப் பதிலாக இதயத்தை வளர்த்தால் அளவில்லாதபடி கல்வி, கலை எல்லாம் வளரும் என்பதாக, இதில் சந்தேகமே இல்லை. ஆனால் நம்முடைய கல்வி இலாகாவுக்கு அதில் நம்பிக்கையே இல்லை. நாம் என்ன செய்ய?

பக்கம் அதிகம் ஆகி விட்டது. தங்களுக்கு எவ்வளவோ ஜோலி இருக்கும்.  என் பஞ்சு வெட்டுதல் போதும். தங்களுக்கு இப்படியெல்லாம் எழுதுவது எளிதாயிருக்கிறது.  பத்திரிகைக்குக் கட்டுரை எழுதுவது என்றால் கஷ்டமாய் இருக்கிறது. காரணம் கட்டுரையைப் படிக்கிறவர்கள் எல்லோரும் பட்டாபிகள் அல்ல அல்லவா?

தங்கள்

டி.கே.சிதம்பரநாதன்.

இந்த மாபெரும் அன்பான அருமையான ஆனந்தத்தை அள்ளித் தந்த இரசிகமணியின் குடும்பத்துடன் ஏற்பட்ட உறவு என் தந்தையில் தொடங்கியது. என் தந்தை வழி அவருக்குத் தெரிந்தவருக்கெல்லாம் ‘இதோ இதோ’ என அறிமுகப்படுத்தினார். இரசிகமணி மூலம் அப்பாவிற்கு ஜஸ்டிஸ் மகாராஜனிலிருந்து பல நண்பர்கள் கிடைத்தார்கள். அப்பாவின் அன்பளிப்பாய் இராஜாராம், குழந்தைசாமி, மோகன், அண்ணாமலை, பிரேமா, நித்யானந்தம், சரவணன் வரை அவர்களது நிழலில் தங்கி இளைப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம். இது ஒரு தொடர் பயணமாய் அடுத்தடுத்த தலைமுறைகளில் இரசிகமணி ஆனந்த அனுபவங்கள் செல்ல வேண்டும்.

டி.கே.சி. அவர்களின் கடிதங்களில் சொற்கள் பேசுவதில்லை. இதயத்தோடு இதயம் பேசும் அற்புதம்தான் நிகழ்கிறது. ஆம். இதை நாம் மறுக்க இயலாது. இன்னமும் கைநிறைய தபால்களுடன் வரும் தபால்காரன் நமக்கு ஒரு எதிர்பார்ப்பையே உருவாக்குபவர்தானே! முகநூலிலிருந்து குறுஞ்செய்தி வரை எவ்வளவு இருக்கிறது. எங்கள் வீடு தேடிவரும் எங்களுக்கு விருப்பமான எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் கடிதங்களுக்கு ஆர்வமாய்க் காத்துக் கொண்டு இருக்கிறாள் என் மகள் என்றால் கடிதம் செய்யும் மாயம் தானே!

என்ன நண்பர்களே! திடீரென்று ஏன் புழுதியை தோண்டிப் பூசணியை, சாம்பல் பூத்த நெருப்பில் சாம்பலை ஊதி ஊதித் தள்ளித் தணலை எடுப்பது போல் எடுக்கிறாரே இவர் என்று யோசிக்கிறீர்களா? ஆம். ஒரு குச்சியால் சாம்பலைக் கிளறினால் நெருப்பின் செம்மேனி பளிச்சிடுகிறதல்லவா? புழுதியில் புதைந்து கிடக்கும் ஆன்மாவைத் தோண்டி எடுத்து அதன் ஒளிப்பெருக்கத்தை யாருமறியாது காட்டுவது கவிதை. கவிதை இங்கு குச்சியாய் தொழிற்படுகிறது. இக்கவிதையை ரசித்து ரசித்து ஆனந்தித்து ஆனந்தித்து, தன் வாழ்வையே ஆனந்த வாழ்வாக வாழ்ந்தார் இரசிகமணி டி.கே.சிதம்பர முதலியார் அவர்கள். அவர்கள் ஆனந்தித்தது மட்டுமல்லாது தன் ஸக ஹிருதயர்களை அழைத்துத் தன்னுடன் இருத்தி, இன்னமுது காட்டி, இன்னமும் இருங்கள், இருங்கள் என உபசரித்து, கவிதையின்பத்தால் அனைவரையும் அபிஷேகம் செய்தார்.

அவர்களின் 130-வது பிறந்தநாள் விழா, குற்றாலத்தில் தாய்பாலா அரங்கத்தில் சென்ற மாதம் ஆகஸ்ட்த் திங்களில் 26ஆம் நாள் மாலை 5.30 மணி அளவில் கொண்டாடப்பட்டது. டி.கே.சி. அவர்களின் பேரன் திரு. தீப. நடராசன் அவர்கள் வந்திருந்த அனைவரையும் ஒவ்வொருவராய்க் குறித்து வரவேற்ற விதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. பேரா. திரு. ஆறு. அழகப்பன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். திரு. நரேந்திர குமார் “தான் ரசித்த ரசிகமணி” என்று தன் ரசனையை அணிந்தார். அதனுடன் டி.கே.சி. பற்றிய சிறுநூல் ஒன்று அனைவருக்கும் வழங்கினார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனி நடை எப்படியோ, அப்படி டி.கே.சிக்கு என்று ஒரு தனித்துவம். அவர் கண்ட கவி உருவம் என்பதைப் பற்றி அழகாய் எடுத்துரைத்தார். டி.கே.சி. அவர்களின் வளர்ப்புப் பெண் வயிற்றுப் பேரன் திரு. கி. திருமலையப்பன் அவர்கள் இவ்விழாவில் என்னைத் தோண்டி எடுத்த உணர்வுகளை, மேலே கூறியவற்றை நான் பகிர்ந்து கொண்டேன். திரு. கழனியூரான் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். இறுதியில், டி.கே.சி. அவர்களின் பேரன் திரு. தீப. குத்தாலிங்கம் அவர்கள் விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்த அனைவரையும் வாழ்த்தி நன்றி கூறினார்.

விழாவிற்கு மேலும் சிறப்பை நல்கியது டி.கே.சி.க்கே உரிய விருந்து உபசாரம்தான். இரவு அருமையான உணவுடன் விழா இனிது முடிந்தது. ஆனால் இன்னமும் டி.கே.சி.யுடன் அனுபவம் எங்களுடன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குற்றாலத்தில் சாரலும், டி.கே.சி.யின் ரசனையும், அவரது குடும்பத்தாரின் பண்பாடும், விருந்தும் மறக்கத்தான் இயலுமா?

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது

 1. இத்தனை ரசனையுடன் புழுதியை தோண்டினால், பூசணியும் பூக்கும், பலாவும் பழுக்கும். ஒரு நூலே படைத்து விட்டீர்கள், ஸுபாஷிணி. நல்வரவு ஆகுக. மேகும் இவ்வாறு எழுதுக. கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால் நான் மின் தமிழில் பதிவு செய்ததில் ஒரு பகுதி இங்கே: எல்லாம் ரசனை தான்!
  இன்னம்பூரான்
  09 10 2011
  *
  ‘…நவரசங்களில் பல ரசங்களை புகுத்துவார் கம்பன், என்கிறார், டி.கே.சி. சில பாடல்களில், பல ரசனைகளின் நீரோட்டம் (ரெ.கா. நோக்குக.) பளிங்கு நீர் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. கானகம் செல்வதற்கு முன் ‘கோசலை தன் மணி வயிறு  வாய்த்த’ ஶ்ரீராமன், அன்னையிடம் விடை பெற வருகிறான். அவளோ முடிவிழா எதிர்நோக்கி இருக்கும் தருணத்தில் ஒரு பேரிடி தாக்குகிறது! ‘புனைந்திலன் மெளலி’ என்கிறார், கம்பன். மகுடத்தை காணவில்லை. ‘திக்’ என்று இருந்தது, அவளுக்கு.  ‘…எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகிறான்…’ என்றான், அருமை மைந்தன், சுற்றி வளைத்து. அரண்மனையே, அயோத்தி மாநகரமே ஶ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு விழாக்கோலம் பூண்டிருக்க, என்னே கொடுமையான திருப்புமுனை இது? நீங்கள் அந்த நற்றன்னையின் கலக்கத்தையும், நீங்கா சோகத்தையும் சிறிதளவாவது புரிந்து கொள்ள, அந்த கனலிடம் துடித்த கோசலையின் பெருந்தன்மையும் காணத்தான் வேண்டும். அடுத்த வரி. ‘ …முறைமை அன்றென்பது….’ என்று இழுத்தாள். இந்த இரு சொற்களின் ஆழம் காணீரோ, மின் தமிழர்களே! ‘என்னடா இது? தர்மம் என்று, நியாயம் என்று, நீதி என்று, மரபு என்று ஒன்று இல்லையா? இது தகுமோ? இது அடுக்குமோ! கேட்பார் இல்லையா? மாமுனி வஸிஷ்டர் எங்கே? சுமந்திரனுக்கு நன் மந்திரங்கள் மறந்தா போயின? சக்ரவர்த்தி திருமகனுக்கான உனக்கு இந்த கதியா? இவ்வாறான பல திசைகளும் பயணிக்கும் வினாத்தொடரை, அம்மம்மா!, இரு சொற்களில் அடக்கிவிட்டாளே. ‘டக்’ என்று சுதாரித்துக்கொண்டாள், பண்பின் உறைவிடமாகிய கோசலை. ‘…[பரதன்] …நின்னினும் நல்லனால் குறைவிலன்…‘என்றாள். என் சிற்றறிவு அடித்துக்கொள்கிறது, ‘அம்பா! நீ (உனக்கே) இரங்கலாகாதா?’ என்று. கோசலைக்கு அளவிலா வருத்தம் தான்; இருந்தும் சமாதானம் தேடுகிறாள். இங்கு ஒரு நுட்பம் காண வேண்டும். தற்கால உளவியலார் இப்படி தான் இன்னல்களுக்கு சமரசம் தேடிக்கொள்ள சொல்வர்; அது எளிது போல! அது போகட்டும்.
  தத்க்ஷணமே பெண்டாட்டி ஆகிவிடுகிறாள், தசரதனுக்கு. நான் வழக்குச்சொல் பயன்படுத்தி விட்டேன் என்று அதிரவேண்டாம். ‘…பெண்டாட்டியை மகடூஉ…’ என்பது பண்டையார் வழக்கு. (தொல்காப்பியத்துக்கு சேனாவரையுரை). ‘… மன்னர் ஏவி(யது) அன்றெ னாமை மகனே! …தும்பிக்கு நானிலம் நீ கொடுத்து (து) ஒன்றி வாழுதி ஊழிபல்…’ என்றாள், ஒரு அறிவுரையாக. பதினான்கு வருடங்கள் வனவாசம் என்ற ஆணையை மென்மையாக உணர்த்துகிறான், அன்றொரு நாள், ‘தாலேலோ…’ என்று தாலாட்டப்பெற்ற ராகவன். மஹாகவி பாரதியாக இருந்தால், ‘ இது பொறுக்குது இல்லை. (தந்தை) தன் கைதனை எரித்திடுவோம் என்று பீமசபதம் எடுத்திருப்பார். கம்பனின் பாடலில், கோசலை, “…ஏங்கினாள், இளைத்தாள், திகைத்தாள். மனம் வீங்கினாள், விம்மினாள் விழுந்தாளரோ!…”. துவண்டு போன அன்னை, ‘வஞ்சமோ, மகனே? ‘ என்று கதறுகிறாள். தாளொண்ணாத்துயரத்திலே, ஒரு ஏளன புன்னகை தோன்றும். ‘…நன்று மன்னன் கருணை…’ என்று நகைக்கிறாள்.
  எதிர்ப்பார்ப்பு, அதன் மகிழ்ச்சி, குழப்பம், தர்ம வாதம், சமாதானம், அறிவுரை, துயரம், ஆத்திரம், ஏளனமென, இலக்கணத்தார்  பட்டியலிடக்கூடிய ‘நகையே, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று அப்பால் எட்டே மெய்பாடு என்ப’ இருந்தாலும், வடநூல் மரபு ஆகிய சமனிலை, இங்கு உளதோ! நீவிரே சொல்லும்.
  படித்து, ரசித்தது: ‘கோசலை உள்ளம்’: ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் [2006] தொகுப்பு: தீப நடராஜன்,காவ்யா ஷண்முகசுந்தரம்: சென்னை: காவ்யா: ப:148-153.

  இன்னம்பூரான்18 10 2010
  *

 2. திருமதி சுபாஷிணியின் கட்டுரை ரசிகமணியை உள்வாங்கியதை
  எடுத்துக்காட்டுகிறது. ரசிகமணியிடம் நகைச்சுவை இழையோடுவது
  ஒரு சிறப்பு அம்சம். அவரின் எழுத்துக்களிலேயே இவ்வளவு
  நகைச்சுவை மிளிரும் போது அவருடைய பேச்சில் எவ்வளவு
  நகைச்சுவை ஒளிர்ந்திருக்குமோ தெரியவில்லை! ஏன் என்றால்
  அக்காலத்தில் நான் பிறக்கவே இல்லை. அவருடன் பழகிய
  அன்பர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்களே!
  ஒரு நண்பர், ஆனால் அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி, அவர் ஒரு முறை
  ரசிகமணியிடம் பொய் சொல்லி 200 ரூபாய் வாங்கிச் சென்றுவிட்டார்.
  நண்பர்கள் ரசிகமணியிடம் ” அவருக்கு ஏன் பணம் கொடுத்தீர்கள்?
  உங்களுக்கு ரூபாய் 200 நஷ்டம் தானே?” என்று கேட்டவுடன் ரசிகமணி,
  “இல்லை இல்லை எனக்கு 800 லாபம் தான்!” என்று சொல்லியுள்ளார்.
  எப்படி? என்று நண்பர்கள் கேட்க ” அவர் ரூபாய் 1000 கேட்டிருந்தால்
  அதையும் கொடுத்திருப்பேன்! எனவே ரூபாய் 800 லாபம் தானே!”
  என்று ரசிகமணி சொன்னதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.
  இவ்வாறு தனக்கு வந்த நஷ்டத்தை லாபமாகப் பார்க்கும் பக்குவம்
  ரசிகமணியிடம் இருந்தது. அதற்கு நகைச்சுவை உணர்வு அவருக்குக்
  கைகொடுத்தது.
  இரா.தீத்தாரப்பன், ராஜபாளையம்.

 3. உங்க கூட “டூ”.!  பிறந்தநாள் னா, சொல்ல வேண்டாமோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *