புது வண்டி
வை.கோபாலகிருஷ்ணன்
தன்னுடைய புத்தம்புது வண்டியை சுத்தமாகக் கழுவித் துடைத்து, நான்கு ஊதுபத்திகள் ஏற்றி, மல்லிகை மணத்துடன் கூடிய ஸ்ப்ரேயர் தெளித்து, டேஷ் போர்டில் இருந்த விநாயகருக்கு பூவும் வைத்து, இதுவரை ஏதும் சவாரிக்கு அழைப்பு வராததால், அன்றைய செய்தித்தாளைப் புரட்டிய வண்ணம் டிரைவர் சீட்டில், காற்றுக்காக கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, அமர்ந்திருந்தான் ராமைய்யா. புது வண்டி வாங்கி ஒரு மாதமே ஆகியும், நேற்று வரை தொழில் அமோகமாகத்தான் நடந்து வருகிறது.
எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பான அந்தப் போக்குவரத்துப் பகுதியில் காலேஜ், பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்க ஆஸ்பத்தரி, போலீஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் போன்ற அனைத்துமே இருப்பதாலும், எப்போதுமே ஜன நடமாட்டத்திற்கு பஞ்சமே இல்லாததாலும், ராமைய்யாவுக்கு அடிக்கடி சவாரி கிடைப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான்.
என்ன ஒரே ஒரு சின்ன குறைதான் ராமைய்யாவுக்கு. வரும் வாடிக்கையாளர்கள், புத்தம்புது வண்டியாச்சே, அதை படு சுத்தமாகப் பராமரித்து வைத்துள்ளாரே, நாமும் ஒத்துழைப்புக் கொடுக்கணும் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாதவர்களாக உள்ளனர்.
அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக வண்டியில் ஏறி வண்டியை அசிங்கப் படுத்தி விடுகின்றனர். போதாக் குறைக்கு மாலைகளையும், உதிரிப்பூக்களையும் வண்டி முழுக்க வாரி இறைத்து விடுகின்றனர்.
அமரர் ஊர்தி தானே என்ற அலட்சியம் அவர்களுக்கு.