சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் – 5
சு.கோதண்டராமன்
பிரெஞ்சுக் கலாசாரம் வந்ததாலோ போனதாலோ பாதிக்கப்படாத ஒன்று உண்டென்றால் அது காரைக்கால் மக்களின் விருந்தோம்பும் பண்புதான். ‘அதிதி தேவோ பவ’ என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்றாலும், ‘செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருத்தல்’ தமிழர் எல்லாருக்கும் பொதுவானது என்றாலும், காரைக்கால் மக்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும் விஷயம் ஒன்று உண்டு. உலகிலேயே இறைவன் அமுது செய்த ஒரே ஊர் காரைக்கால் தான். ஊர் ஊராகப் பலிக்குத் திரிபவர் என்ற பெயர் சிவனுக்கு உண்டு. ஆனால் அவர் சாப்பிட்டதாக வரலாறு இல்லை.
உணவு வேண்டி இளையான்குடி மாற நாயனார் வீட்டுக்கு வந்த இறைவன், அடியார் மிகுந்த அல்லல் பட்டு உணவு தயாரித்துப் படைத்தவுடன் உண்ணாமல் மறைந்து போனார். சிறுத்தொண்டரிடம் மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்து உணவு தயாரிக்கச் சொல்லி விட்டு உணவு படைத்தவுடன் வல்லடி வழக்குகள் செய்து மறைந்து போனார். அங்கும் சாப்பிடவில்லை. ஆனால் காரைக்காலில் மட்டும் இறைவன் சாப்பிட்டதாகப் பெருமை கொள்கிறார்கள், அவ்வூர் வாசிகள்.
ஆலமுண்ட சிவனார் கபாலம் கையிலேந்தி
ஞாலமெங்கும் பலியைத் தேடித் தேடித் திரிந்தார்
செம்மை மாறன் சோறும் தொண்டர் கறியும் தள்ளி
அம்மை ஊட்டும் கனியே அமுதமாக உண்டார்.
ஆனால், காரைக்கால் அம்மையாரிடம் உணவு வேண்டி வந்தவர் இறைவன் என்று சேக்கிழார் கூறவில்லை. ஒரு அடியவர் வந்தார் என்று தான் சொல்கிறார். மக்கள் என்னவோ பெரிய புராணச் சான்றை விட ஐதீகத்துக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கோவில் திருவிழாவும் ஐதீகத்தை ஒட்டித் தான் நடைபெறுகிறது.
மாங்கனித் திருவிழா காரைக்காலில் ஒரு முக்கியமான வருடாந்திர நிகழ்வு. இதில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவு கூரும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப் பட்டுள்ளன. அன்று காரைக்காலில் விருந்தினர் இல்லாத வீடு இல்லை எனலாம்.
ஆனி மாதம் பௌர்ணமி அன்று முக்கிய விழா நாள். அதற்கு இரு நாட்கள் முன்பு காரைக்கால் அம்மையாருக்கு மணமகனாக நிச்சயிக்கப் பட்டவருக்கு மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும். அடுத்த நாள் காலை அம்மையாரின் திருமணம் நடைபெறும். மாலையில் பிட்சாடனரை முழுவதும் மல்லிகை மலர்களாலேயே அலங்கரித்து (வெள்ளை சார்த்தி) கோவில் பிரகாரத்தைச் சுற்றிப் புறப்பாடு. அதன்பின் மணமக்களுக்குத் திருமண ஊர்வலம் முத்துப் பல்லக்கில்.
விழா நாளன்று விடியற்காலை 3 மணி முதல் 6 மணி வரை பிட்சாடனருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். காலை 9 மணி அளவில் பிட்சாடனர் பிச்சைக்குப் புறப்படுவார்.
நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்
பிச்சை எடுத்துண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்கடல்போற் றான்முழங்கும்
மேளமேன் ராஜாங்கமேன்?
என்று காளமேகம் கூறியபடி பல வகையான சீர் சிறப்புகளுடன் வரும் அவருக்கு, மக்கள் இரண்டு மாம்பழமும் ஒரு பட்டுத் துண்டும் படைப்பர். பட்டுத்துண்டு அவர் மேல் சாற்றப் படும். பழங்களில் ஒன்று பிரசாதமாகத் திருப்பித் தரப்படும். சப்பரம் நகர்ந்தவுடன் சுவாமியின் பின்புறத்தில் கூடியிருக்கும் மக்கள் மீது பழமழை பொழியத் தயாராக வீட்டு மாடிகளி்ல் அனபர்கள் பழக்கூடைகளுடன் காத்திருப்பர். வேண்டிக் கொண்டு இதுபோல் 100 பழம், 50 பழம் என்று இறைப்பவர்களில் இஸ்லாமியரும் உண்டு, கிருத்துவரும் உண்டு.
பெய்யெனச் சொன்னாய் நீயும் பழமழை பெய்ததங்கே
பொய்யென அழகைத் தள்ளிப் பேயுடல் வேண்டிப் பெற்றாய்
ஈயென ஈசன் நின்றான் உன் கையால் உணவு வேண்டி
தாயெனச் சிவனே போற்றும் அம்மையே வாழி வாழி
ஊர்வலம் மெதுவாக நகர்ந்து மாலை ஆறு மணிக்கு அம்மையார் கோயிலை வந்தடையும். அங்கே இறைவன் திருமுன் பல முழு வாழை இலைகளைப் பரப்பி சுமார் ஐம்பது லிட்டர் அரிசியைச் சாதமாக்கிப் பரப்புவர். சுற்றிலும் மக்கள் கொடுத்த மாங்கனிகளைப் பரப்பி வைத்துப் படைப்பர்.
அன்று இரவு அம்மையாரின் கணவர் பரமதத்தர் பாண்டிய நாட்டுக்குப் போவதாக உள்ள ஐதீகத்தின் அடிப்படையில் அத்திருவுருவம் ஊரின் தெற்குக் கடைசியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டு, அவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும். நள்ளிரவில் அம்மையார் புஷ்பப் பல்லக்கில் தன் கணவனைத் தேடிப் பாண்டிய நாட்டுக்குச் செல்வார். கணவனால் தெய்வம் என்று தொழப்பட்ட நிலையில் அவர் என்புருவம் தாங்குவதை நினைவூட்டும் வகையில் வெட்டிவேரால் செய்யப்பட்ட பேயுருவக் கவசம் ஒன்று அம்மையார் விக்கிரகத்திற்கு அணிவிக்கப்படும்.
விடியற்காலையில் அங்கிருந்து கோவிலை நோக்கி, மிக வேகமாக, பல்லக்கு, தீவட்டி, மேளதாளம் எதுவுமில்லாமல் அம்மையாரைப் படிச்சட்டத்தில் வைத்துத் தூக்கிக் கொண்டு ஓடி வருவர். கைலாசநாதர் கோவிலை அடைந்ததும் அங்கு இறைவன் அம்மையாருக்குக் காட்சி கொடுப்பார். காலை 9 மணி அளவில் பஞ்சமூர்த்திகளுடன் கவசம் நீக்கப்பட்ட அம்மையாரின் பழைய உருவம், அற்புதத் திருவந்தாதிப் பாடல்களைப் பாடியபடி, வீதி வலம் வரும்.
இத்துடன் விழா முடிவுறும். ஆனால் நடவானப் பந்தல் பிரிக்கப்பட மாட்டாது. திருவிழாக் கடைகள் தொடரும். ஒரு மாதத்திற்கும் மேலாக அம்மையார் கலை அரங்கில் பல விதமான கலை நிகழ்ச்சிகள் தினமும் மாலையில் நடைபெறும்.