கரிசல் காட்டு ராஜா கி.ரா. 89(பகுதி-1)

தி.சுபாஷிணி

1976-ஆம் ஆண்டு என்று எண்ணுகின்றேன். ஜெர்மன் தூதரகத்தில் “நேருக்கு நேர்” நிகழ்ச்சியில் எனது தந்தை திரு. டி.டி. திருமலை பேசிய பொருள் “கி.ராஜநாயணனின் கோபல்ல கிராமம்”. அப்பொழுது நூல் வாயிலாகத் தெரியும் ஆசிரியரை. அவருடன் அப்பாவிற்கு நல்ல உறவு இருந்தது. அதுவும் “ரசிகமணி டி.கே.சி” என்றும் இலக்கிய உறவு மூலமாக என்று அறிந்தேன். பல வருடங்கள் கழிந்தால், கி. ராஜநாராயணன் அவர்கள், அவர்தம் இணை நலம் திருமதி. குணவதி அம்மாளுடன், ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் அன்னம் ஸ்டாலில் காட்சி தருவார்.

இதற்கிடையில் நான் என் மகள்கள் இருவருக்கும் இவருடைய “நாட்டுப்புறக் கதைகளை” அறிமுகப்படுத்தினோம். இருவரும் மிகவும் ரஸித்தும் படித்தார்கள். நேர்முகமான அறிமுகம் வழக்கம் போல் நண்பர்கள் ஞாநியின் கேணியில் கிடைத்தது. அங்கு அவரது அனுபவங்களைப் பகிர்ந்து முடித்தபின் குடிக்க வெந்நீர் கேட்டார். நான் கொணர்ந்து கொடுத்தேன். வெந்நீரைக் குடித்ததும் “நல்ல வெந்நீர்” என்றார். “வெந்நீரில் நல்ல வெந்நீரா” என ஞாநி வினவினார். “ஆமாம்! குடிக்கும் பதத்தில் இதமான சூட்டில் இருக்கின்றது” என்றார். அப்போது அவர் ஒரு நல்ல சுவைஞர் என அறிந்து கொண்டேன்.

அதற்குப் பின் அவர் சென்னை வந்திருக்கிறார் என்றால் அவர் பேசும் கூட்டத்திற்குத் தவறாமல் செல்வேன். சமீபத்தில் காலச்சுவடு கருத்தரங்கிற்கு கூடச் சென்றிருந்தேன். அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் “ரசிகமணி டி.கே.சியுடன்” தானிருந்த அனுபவத்துடன்தான் தொடங்குவார்.

தற்போது, எனக்கு ரசிகமணி டி.கே.சி. பற்றி எழுத வேண்டிய பணி இருந்தது. அதையொட்டி நான் அவரைப் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஸ்ரீவி.ப. ராஜாராம் அவர்கள் கி.ரா.வின் பிறந்தநாள் அன்று போகலாம் என்று கூறிவிட்டார். எனவே நூற்பணி முடிந்து விட்டது. தட்டச்சு வேலைதான் எஞ்சியிருந்ததால், செப்டம்பர், 16-ஆம் நாள், அவர் பிறந்தநாளன்று (சென்னையிலிருந்து) பாண்டிச்சேரி கிளம்பி விட்டேன்.

முதன்மையான விஷயம் இம்முறை அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பான முறையில் வரும் 90 வயது விழாவிற்கு முன்னோடியாகக் கொண்டாடுவது. இரண்டாவது ரசிகமணியின் பேரன் திரு. தீப நடராஜன், அவரது மகள், மருமகள் மூவரும், ஸ்ரீவி.ப. ராஜாராம் ஆகியோரும் வருகை தந்திருப்பது, மற்றும்   மூன்றாவதாக அவரிடம் அமர்ந்து ஒரு மணி நேரமாவது பேச வேண்டும் என்ற ஆவல். மூன்றாவது விஷயம் ஆசை நிறைவேறவில்லை. அடுத்த முறை அதற்காகவே செல்ல வேண்டும்.

பாண்டிச்சேரியை அடைந்ததும், எங்களது நிறுவன முன்னாள் ஆய்வாளர் பேரா. அரிமளம். சு. பத்மநாபன் அவரின் வீட்டிற்குச் சென்றேன். அவரது அறுபதாவது ஆண்டு விழாவிற்கு கலந்து கொள்ள முடியாததால், முதலில் அவரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றேன். பின் இருவரும் கி.ரா அவர்களைச் சந்திக்கப் புறப்பட்டோம். திருமதி. பத்மநாபன் அவர்கள் நான் வருகிறேன் என்றதும் அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ‘மதிய உணவு இங்குதான்’ என்று கூறிவிட்டார்கள். அத்துனை கள்ளமில்லா அன்பு அவர்களிடம் எப்போதும் இயல்பாக இருக்கின்றது.

நானும் பேராசியரும் கி.ரா.வைப் பார்த்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டோம். அதற்குள் திரு. தீப. நடராஜன் நான் “டி.டி. திருமலையின் மகள்” என்று ஏற்கனவே கூறியிருந்தார். ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பி விட்டோம். பேராசிரியர் வீட்டில், பாயசத்துடன் மதிய உணவு காத்திருந்தது. அன்பாய்ப் பரிமாறியது, மேலும் உணவு சுவையாக இருந்தது. சற்று நேர ஓய்வுக்குப் பின், விழாவிற்காக மீண்டும் கி.ராவின் வீட்டிற்குச் சென்று அவருடன் சேர்ந்து விழா நடக்கும் இடத்திற்குச் சென்றேன்.

‘கி.ரா. 89’ என்னும் இவ்விழா, புதுச்சேரியில் உள்ள ரேவே சோஷியல் சங்கம், 26, லெபோத் வீதியில், செப்டம்பர் 16ஆம் நாள் வெள்ளியன்று மாலை ஆறு மணிக்கு விழாத் தொடங்க வேண்டும் என திட்டமிடப் பட்டிருந்தது. எப்போதும், கி.ரா.வின் பிறந்தநாளன்று அவரது வீட்டு மொட்டை மாடியில் சில நெருங்கிய நட்புடன் கொண்டாடப்படும். இம்முறை திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளுக்கு இணங்க, மறுவருடம் ‘90’ என்பதால் அதற்கு முன்னோடியாக வெளியில் சிறிது சிறப்பாகச் செய்யலாம் என ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு வருடம் ‘கி.ரா’ அவர்கள் ஒரு சிற்றிதழுக்கு ‘5000 ரூபாயும்’, விருது ஒன்றும் ‘கரிசல் கட்டளை’ அமைப்பு சார்பில் அளிக்கப்படும். இம்முறை ‘மணல் வீடு’ என்றும் சிற்றிதழுக்காக அதன் ஆசிரியர் மு. அரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

விழா தொடங்க மணி ஏழாகி விட்டது. மிகவும் அருமையான கணேசனை வாழ்த்தும் பாடலுடன் விழா தொடங்கியது. பாடிய சௌமியா மிகவும் அழகாகப் பாடினாள். இறைவணக்கத்தில் பழமையான இனிமையான திரைப்படப் பாடல் ஒன்றையும் நமக்கு கூடுதலாக அளித்தாள். இனிய இன்னிசை அனுபவத்துடன் விழாத் தொடங்கியது.

திடீரென்று வானம் தரை தட்டியது. அனைவரும் தரை தொட வேண்டிய நிலை. தவழ்ந்து தவழ்ந்து இயங்க வேண்டிய நிலை. ஏனெனில் வானம் பூமியுடன் காதல் வயப்பட்டு விட்டதாம், அக்காதலின் கனிகளாய் இரு பிள்ளைகள். அழகாக உருண்டையாய் செஞ்சிவப்பாய் ஒன்று. குளிர் வெண்மையில் இன்னொன்று. இரண்டும் அடித்த லூட்டியில், பாட்டிக்கு வந்ததே கோபம். ஓங்கி இரண்டையும் கம்பால் ஒரு அடி. சச்சின் சிக்ஸர் அடித்தது போல். இரண்டும் மேலேபோய் ஒட்டிக் கொண்டு விட்டது. அவ்வளவுதான் வானம் அழத் தொடங்கி விட்டது. “என் பிள்ளை என் பிள்ளை” என்று அவைகளின் பின்னே சென்று விட்டது. அன்றிலிருந்து வானம் கீழே இறங்குவதில்லை. தன் பிள்ளைகளான சூரிய சந்திரனுடன் சுகமாக இருந்து வருகின்றது.

இக்கதை ‘கி.ரா’ கதைகளில் ஒரு சிறுபகுதி. இதைத்தான் உடல் மொழியாலும், குரல் மொழியாலும் மிகவும் சிறப்பாக நடித்துக் காண்பித்தார்கள் மாளவிகா. அவரது இந்த சிறப்பு நடிப்பு தாண்டி, அவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. சிறுவர்களுக்கான பாடப்புத்தகங்களுக்கு ஓவியம் வரைபவர். சிறந்த நாளிதழான தினமணியின் ஆசிரியர் திரு. கே. வைத்திய நாதன் இவ்விழாவிற்கு தலைமையேற்று, ‘கரிசல் கட்டளை விருதை’ திரு. ஹரிகிருஷ்ணன் (மணல் வீடு) அவர்களுக்கு வழங்கினார். பின் கி.ரா. அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பியவர்கள், அவரைச் சிறப்பிக்க விரும்பியவர்கள் மேடைக்குச் சென்று அவரை வணங்கி அவரது வாழ்த்துக்களைப் பெற்றனர்.

கி.ராவிற்கு வந்திருந்த கடிதங்களைத் தொகுத்து “அன்புள்ள கிராவுக்கு” என்று உயிர்மை பதிப்பகம் ஒரு நூலை கொணர்ந்திருந்தது அந்நூலை அவ்விழாவில் திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன் வெளியிட, அதைக் கவிஞர் வெண்ணிலா பெற்றுக் கொண்டார்.

மதுரையிலிருந்து அரக்கப் பரக்க ஓடி வந்திருந்தார். பேராசிரியர் க. பஞ்சுங்கம் அவர் தன் உரையில் நாட்டுப்புறக் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, விளிம்பு நிலை மக்களின் வரலாறுகளைத் தன் கதையின்வழி பதிவு செய்திருக்கிறார் கி.ரா. எனக் கூறினார். அடுத்து தீப. நடராஜன் அவர்கள் வாழ்த்து வழங்கினார்.

திரு. தீப. நடராஜன் அவர்கள் கி.ரா.வின் ஆத்ம நண்பர். ரசிகமணி தாத்தாவைப் பார்க்க வரும் போதெல்லாம் கி.ராவுடன் நல்ல நட்புப் பெருகி வளர்ந்து தாத்தா காலத்திற்கு பின்னும் அந்நட்பு வளர்ந்து ஆல் போல் தழைத்து விளங்குகிறது. இல்லாவிடில் கி.ரா.வின் பிறந்த நாளுக்கு முன்பே வந்திருந்து, கணவதி அம்மாளுக்கு உதவியாய் இருந்திருக்க மாட்டார்கள். ரஸிகமணி காலத்தில் கல்கி தீப. நடராஜன் வளர்ச்சியில் அக்கறை காட்டினார். அவருக்குப் பின் கி.ரா. அவர்கள் தன் வாழ்வின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தார் எனக் கூறினார்.

‘எங்கிருந்தோ வந்தான் இனம் சாதி நான் என்பான்’ என்னும் பாரதியின் பாடலைச் சற்று மாற்றி “எங்கிருந்தோ வந்தான் இடைச்செவல் நான் என்பான்” என்று மாற்றிக் கூறினார். அவருடன் இருக்கும் நட்பின் உன்னதம் அதில் தெரிந்தது. மேலும் கி.ரா.தான் வட்டார வழக்குக்க உயிர் கொடுத்தவர். அவற்றை இலக்கியங்களாகப் படைத்தவர். அவரது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார். கவிஞர் வெண்ணிலா அவர்கள், “காமன்வெல்த்” மாநாட்டில் நம்முடைய தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு முறையான அறிமுகம் இல்லை என்று வருத்தப் பட்டார்.

தினமணி ஆசிரியர். கே. வைத்தியநாதன் அவர்கள்தன் வாழ்த்துரையில், “கி. ராஜநாராயணனின் பெயரை “கி.ரா.” என்று ரத்தினச் சுருக்கமாக்கி விட்டோம். அவரது படைப்புகளில் மண்ணின் மணத்தோடு நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் இருக்கும். 20ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சொல்வழக்கு எப்படி இருந்தது என்பதற்கான பதிவு கி.ராவின் படைப்புகள்.

ராஜநாராயணன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவது வித்தியாசமாக இருக்கிறது. தனது பிறந்தநாள் அன்று ஆண்டுதோறும் ஒரு சிற்றிதழைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் நல்ல இலக்கியப் படைப்புகள் சிற்றிதழ்கள் மூலம்தான் வெளிக் கொணரப் படுகின்றன. தமிழ் இலக்கியத்தில் ஊற்றுக்கண் சிற்றிதழ்கள்தான். அதனால் கி.ரா.வின் பிறந்தநாள் விழா தமிழுக்கான விழாவாக இருக்கிறது என்றார். மேலும் வரும் 90-வது பிறந்தநாளை, டெல்லியிலும், சென்னையிலும், கொண்டாடி விடலாம் என்று தீர்மானமாகக் கூறினார்.

கி.ராஜநாராயணன் அவர்கள், தனக்கு வந்த கடிதங்கள் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருந்தார். அவைகள் ஒரு சாக்கு நிறைய இருந்தன. ‘அதிலிருந்து கடிதங்களைத் தேர்வு செய்து, “அன்புள்ள கி.ரா.விற்கு” என்னும் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறோம். அதை உயிர்மைப் பதிப்பகம் தன் வெளியீடாகக் கொணரச் சம்மதித்தது மிகவும் சிறந்தது’ எனக் கழனியூரான் தன் உரையில் கூறினார். (ஏற்கனவே உயிர்மைப் பதிப்பகம், ரசிகமணி டி.கே.சிக் கடிதங்களைப் பதிப்பித்து, இலக்கிய உலகிற்குத்தான் பணியைச் சிறப்பாகச் செய்து இருக்கின்றது என்பதை நான் நினைவு கூர்வதில் மகிழ்கின்றேன்.)

இவ்விழாவிற்கு வந்து தனக்கு வாழ்த்துரை வழங்கிய அனைத்துச் சான்றோர்களுக்கும், கடவுள் வாழ்த்தைப் பாடி இன்னிசை விழாவாக்கிய சௌமியாவிற்கும், கதைமொழியை உடல் மொழியாக்கிக் காட்டிய மாளவிகாவிற்கும் உடனுக்குடன் கி.ரா. தம்பதியினர் சிறப்பு செய்தனர்.

கி.ரா.வும் அவரது இணைநலமான கணவதி அம்மாள் அவர்களுடன் அமர்ந்திருந்ததே, மிகவும் அழகாய் இருந்தது. அம்மேடையை அன்பும், ஆனந்தமும் நிறைத்து இருந்தது. அனைவருடைய வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்ட கி.ரா. அவர்கள், தன் ஏற்புரையை வழங்கினார்.

தன்னுடைய சிறுவயது அனுபவத்திலிருந்து தொடங்கினார். சிறுவயதுப் பருவம் முழுவதும் பள்ளிக்குச் செல்லாமல், கரிசல் காடுகளே பள்ளிகளாகவும், அங்கு மாடு மேய்க்கும் சிறுவர்களே ஆசான்களாகவும் இவருக்கு இருந்தன. அச்சிறுவர்கள் நிறைய விஷயங்களை இவரிடம் பகிர்ந்து கொண்டனர். நண்பர்களுக்கு எழுதும் கடிதங்கள் மொழிநடையைத் தந்தன. இடையில் ரசிகமணி டி.கே.சி.யுடன் பழகிய இலக்கிய அனுபவங்கள் அவரை மெருகூட்டின. உடல்நலம் அவரை மிகவும் பாதித்தது. முதலில் டி.பி. நோய் எனும் தீரா நோய்ப் பற்றிக் கொண்டது. இடையில் டைபாய்டு ஜுரம் வேறு. “இவன் எங்கு பிழைத்து எழப் போகிறான்” என்று கூறியவர்கள் எல்லோரும் போய்ச் சேர்ந்து விட்டார்கள். சகோதரிகளுக்குத் திருமணங்கள் நடந்தது. சகோதரியின் வற்புறுத்தலால், திருமணத்திற்கு இசைந்தார்.

சகோதரியின் தோழியே மனைவியாக அமைந்தது சிறப்பு. அதனினும் சிறப்பு ஆவணி 29 நிச்சயித்து, மறுநாளே திருமணம் நடைபெற்றது அதனினும் சிறப்பு. அம்மாள், அய்யா இருந்த அதே தெருவில்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களது சிறிய வயதில் அய்யா அவர்களைப் பார்த்ததையும் சொன்னார்கள். அம்மா அப்போது கத்திரிப்பூ கலர் அதாவது வயலட் கலர் பாவாடைச் சட்டை அணிந்து இருந்திருக்கிறார்கள். அவர்கள் நிறம் அவ்வளவு வெண்மை. அந்தக் கண்கள் அத்துணை அழகு. அவர்களது உதடுகள் அவ்வளவுச் சிவப்பாய் அழகாய் இருக்கும். அந்த அழகு இப்போது இல்லை. எனச் சொல்ல சொல்ல, அம்மா அன்றலர்ந்த மலராய் இருந்தார்கள். இதில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் அன்றும், அவர்கள் அழகைத் தூக்கி நிறுத்தும் வயலட் நிறப் புடவையைத்தான் அணிந்து இருந்தார்கள்.

தனக்கென்று ஒரு மொழி நடை, தனக்கென்று ஒரு இலக்கியத் துறை தனித்துவ மிக்கதாய், விதியை மீறிய வளர்ச்சியாய் இன்று நின்று கோலோச்சுகிறார் கி.ரா. அய்யா அவர்கள்.

இறுதியாக ஆனால் உறுதியாக, ஸ்ரீவி.ப. ராஜாராம் தன் கணிரென்ற குரலில், தம்பதியரை வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கியவர்களுக்கும், விழாவிற்கு வந்திருந்த சிறப்பித்த தமிழ் சான்றோர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை அழகான உவமான உவமேயங்களுடன் வழங்கினார். அனைவரும் அருமையான இரவு உணவு விருந்துடன் மகிழ்ச்சியாய் விடைபெற்றனர்.

89 வயதிலும் சுறுசுறுப்பும், இளமையும், இதற்கு ஈடுகொடுக்கும் இணைநலமும் நமக்கும் பிரமிப்பாகத்தான் இருக்கின்றது. இதன் ரகசியத்தை மறுநாள் நான் அவரைச் சந்தித்து விடைபெறும் போது தெரிந்து கொண்டேன். அதை உயிர்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

ஆச்சார்ய வினோபாவே அவர்களின் கீதைப் பேருரைகள் மிகவும் பிரசித்தமானது. அதில் கூறியிருக்கும் ஒன்றைத்தான் கி.ரா. அவர்கள் அன்று எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

அந்த ஊரில் ஒரு பணக்காரர் வசித்து வந்தார். அவரது பக்கத்து நிலத்தின் வரப்பை இடித்து விட்டு, அவரது நிலத்தில் ஒரு பகுதியைத் தன் நிலத்தோடு சேர்த்துக் கொண்டார். இதைப் பார்த்ததும் பக்கத்து நிலத்துச் சொந்தக்காரர் அந்தப் பணக்காரரிடம் சென்று, ‘தங்கள் வரப்பு என் நிலப்பகுதியில் இருக்கிறது. பழையபடி அதை மாற்றியமையுங்கள்’ என்றார். உடனே ஒத்துக் கொள்வாரா அல்லது ஒத்துக் கொள்ளத்தான் அவ்வளவு செய்தாரா அவர். பணக்காரர் மறுத்துவிட்டார். பஞ்சாயத்துப் பேசுபவர்களும் அந்தப் பணக்காரரின் செல்வாக்குக்கு எதிராகச் செயல்பட மறுத்து விட்டார்.

நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகி விட்டது. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வழக்குரைஞர் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார். இதற்கிடையில் பணக்காரரது மகன் தன் பங்கைப் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டு அவரை நச்சரித்துக் கொண்டிருக்கின்றார். இவரோ தன் காலம் வரை சொத்தைப் பிரிக்க மாட்டேன் என்கின்றார். அவரது மகளோ தன் பங்குக்கு நச்சரிக்கின்றாள். அவளது மாமியார் வீட்டில் நகை கேட்கிறார்கள் என்று வீட்டுக்கு வரும் போதெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தாள். இப்படி ஏதாவது ஒரு வகையில் பிரச்சனைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தார். எந்த பிரச்சனையையும் தீர்க்கும் எண்ணத்தில் இல்லை.

அப்போது அவ்வூருக்கு ஒரு சாமியார் வருகை தந்தார். அனைவரும் அவரைத் தரிசித்து விட்டு வந்தார்கள். இவரது வீட்டு அம்மாவும் போய் விட்டு வந்தார்கள். இதையெல்லாம் அவர் கவனித்துக் கொண்டு இருந்தார். இவருக்கும் நாமும் போய்ப் பார்க்கலாமா எனத் தோன்றியது. உடனே அந்தப் பணக்காரர், அந்தச் சாமியாரைப் பார்க்கக் கிளம்பினார். வீட்டு அம்மாவிடம் இவ்விஷயத்தைச் சொன்னதும் ஆச்சர்யத்தில் அசந்து போனார்கள். இருப்பினும் போய்ப் பார்த்து, தங்கள் தோட்டத்தில் காய்த்தப் பழங்களையும், பூக்களையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

பணக்காரர், சாமியாரைப் பார்க்கப் போகிறார். அப்படியென்ன அவரிடம் இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டே போகிறார். அவர் இருக்குமிடம் அடைந்து விட்டார். இவருக்கு முன்னால் இருவர் காத்து இருக்கிறார்கள். அவர்கள் பார்த்து விட்டு வரட்டும் என்று அங்குள்ள திண்ணையில் அமர்கிறார். அவர்களும் பார்த்துவிட்டு சந்தோஷமாக வருகின்றனர். இவரும் உள்ளே போகிறார். சாமியார் அமைதியாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து இருக்கின்றார். இவரைப் பார்த்ததும் சந்தோஷமாய் மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார். தன் முன் அமரச் சொல்கிறார். இவரும் அவர் முன் அமர்ந்து விடுகிறார்.

‘என்ன வேண்டும்‘ என அப்பணக்காரரை வினவுகிறார்.

“எனக்கு மனம் நிம்மதியாக இல்லை. பக்கத்து நிலத்துக் காரன் வரப்புத் தகராறு பண்ணுகிறான். மகன் சொத்தில் தன் பங்கை இப்போதேப் பிரித்துக் கொடுக்குமாறு கேட்கிறான். மகளோ அவள் தாயின் நகைகளை இப்போதே கேட்கிறாள்.” இப்படித் தொடங்கி சிற்சிலப் பிரச்சனைகளைக் கூறி முடித்தார். பணக்காரர்.

“அப்படியா?” எனக் கூறி விட்டு தன் கண்களை மூடித் தியானம் செய்தார். சாமியார். ஒரு நிமிடம்…..இரண்டு நிமிடங்கள்…..நான்கு……..என அரைமணி நேரம் ஓடியது. கண் விழித்தார் சாமியார். அதுவரை அமைதியாகச் சாமியாரைப் பார்த்த வண்ணம் இருந்தார். சாமியார் கண் விழிக்கிறார். அமைதியாய் அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறார். அவர் கொணர்ந்த பழங்களையும், பூக்களையும் அங்கிருக்கும் கடவுளர்கள் படத்தின் அருகே வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

பின் அவரிடம், “அப்பா! நீ இருக்கும்…உயிருடன் இருக்கும் நாட்கள் ஒரு மாதம் தான்….அதாவது 30 நாட்கள்தான். போய் வா” என்று கூறி அனுப்பி விடுகிறார்.

பணக்காரனுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. அவரையே பார்க்கின்றான். “போய் வா” என்று அவரது தலையில் தன் கரங்கள் வைத்து ஆசிர்வதித்து அனுப்புகின்றார்.

மிடுக்காகச் சென்ற கணவர், அமைதியாய் வருகிறாரே என்று அவரின் வீட்டம்மா பார்க்கிறார். அவரும் ஒன்றும் பேசவில்லை. இவர்களும் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டுப் படுத்தார். பலவிதமான எண்ணங்களிலும், சிந்தனைகளிலும், உணர்வுகளிலும் அந்த நாள் இரவு கழிந்தது. இரவு அவரது இரகசியமான விவாதங்களையெல்லாம் காப்பாற்றி, விடியலிடம் கொடுத்தது, விடியல் அவருக்கு ஒரு விடையைத் தரத் தொடங்கியது.

எழுந்ததும் அவர், முதற் காரியமாக குளித்து, காலை வேலைகளை அவரே அவசரமாக முடித்துக் கொண்டார். பின் தன் நிலத்துக்குப் பக்கத்து நிலத்துக்காரரும், தன் மேல் ‘வரப்பிற்காக’ வழக்குத் தொடுத்தவருமானவரின் வீட்டிற்குச் சென்றார். இவ்வளவு காலையில் இவர், அவரது வீட்டிற்கு வந்ததும், வீடே அதிர்ந்து ஆச்சர்யத்தில் நின்றது. வீட்டின் பின்னால் கொல்லைப்புறத்தில் நின்றிருந்த அந்த வீட்டுக்காரர் முன்கட்டுக்கு விரைந்து வந்தார். அதற்குள் இவர் அவர்களது வீட்டுத் திண்ணையில் அமைதியாய் அமர்ந்து விட்டார். வந்ததும், அவரைப் பணக்காரர் தன் பக்கத்தில் அமருமாறு கேட்டுக் கொண்டார். அவருக்கோ ஒன்றும் புரியவில்லை.

பணக்காரர் அவரிடம், “இதோ பார்! இனி நம்மிடம் இந்த வரப்பிற்காகத் தகராறு வேண்டாம். இன்று பன்னிரெண்டு மணிக்கு வக்கீல் வருகிறார். உன்னுடைய பத்திரங்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வா நாம் அவர் முன் உன் விருப்பப்படி வரப்பை எழுதித் தருகின்றேன்” என்று கூறினார். வீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. புரிவதற்குள் அந்தப் பணக்கார் அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

அவ்வீட்டிலிருந்து நேராகத் தன் மகன் வசிக்கும் வீட்டிற்கும் போகிறார். அவரது மருமகள் ஆச்சர்யமாகப் பார்க்கின்றாள். “வாங்க மாமா” என்று பதட்டமாகக் கூப்பிட்டு உள்ளே சென்றாள். சென்றவள் சொம்பு நிறைய மோருடன் வந்தாள். அவரும் அமைதியாய் அமர்ந்து மோரைக் குடித்தார். இந்த அமைதியின் காரணம் மருமகளுக்கும் புரியவில்லை. முன்அறிவிப்பு இல்லாது இந்த வருகை மகிழ்ச்சியில் சேர்த்தியா? பிரச்சனையின் அறிகுறியா? புரியாது பாவம் அவள் மனம் தவித்தது. அதற்குள் விஷயம் அறிந்து தோட்டத்திலிருந்து மகன் வந்து விட்டான்.

‘வாங்க அப்பா’ என்று அசுவாரஸ்யமாயக் கூறினான். (மனதிற்குள் அவனுக்கு அப்பாவிடம் ஆதங்கம். இருக்கலாம்தானே)

“மகனே! இப்படி வா! உட்கார். வீட்டுப்பக்கம் இன்று பன்னிரண்டு மணிக்கு வா. வக்கீலைக் கூப்பிட்டு இருக்கேன். உனக்கு என் சொத்தில் என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்” என்று கூறி விட்டுக் கிளம்பி விட்டார். அவர் நிதானமாய்த்தான் போனார். அவரது நிதானம்தான் இந்த வீட்டில் ஒரு அதிர்வைத் தந்து விட்டுப் போய் விட்டது.

அப்பாடா! அந்த பணக்காரர் முகத்தில் அப்படியொரு நிம்மதி. பரவசம்!! ம்..ம். இரண்டு வேலைகள் முடிந்தது. பின் போகும் போதே ஆளைவிட்டு நகை செய்யும் தட்டானை வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டுச் சென்றார்.

பன்னிரெண்டு மணி ஆயிற்று. வீட்டுக்கு வந்த வக்கீல் இரண்டு வேலைகளையும், மிகச்சரியாக முடித்துக் கொடுத்து விட்டார். நகை செய்யும் ஆசாரி வந்தார். தன் வீட்டம்மாவை அழைத்தார். ‘தன் மகள் என்ன நகை கேட்டாள்’ என்று வினவினார். அதையெல்லாம் ஆசாரியிடம் செய்யச் சொல்லிச் சொன்னார். எனவே அந்த வேலையும் முடிந்து விட்டது. அவரது வீட்டு அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவரிடம் இந்த மாறுதல் நல்லதிற்கா? அல்லது…..என்னும் சிந்தனையில் இருந்தார்.

இவ்வாறு ஒவ்வொரு செயலையும் சிந்தித்துச் சிந்தித்துச் செய்தார். அவரிடம் பரபரப்பும் இருந்தது. காலம் அதிகம் இல்லை என்னும் மனநிலை அவரிடம் இருந்தது. அவர் அப்புறம் செய்து கொள்ளலாம் என்னும் செயலையெல்லாம் நேரத்தே முடித்து விட்டார். அவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. அவ்வூர் பள்ளிக்கூடத் தேவையை நிறைவேற்றினார். கோவில் திருப்பணித் தொடங்கப் பட்டது. தன் சுற்றம், தன் நட்பு எல்லோருடனும் இனிமையாய்ப் பழகி, வேண்டும் என்கின்ற உதவி புரிந்தார். இவ்வாறு மாதத்தின் இறுதி வந்தது. இன்னும் ஒரு நாள்தான் பாக்கி இருந்தது. அன்று மாலையில் அவர் வீட்டு வாசலில் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

ஆம். அந்தப்பணக்காரர் வீட்டின் முன் அந்தச் சாமியார் காத்திருந்தார். சாமியாரைப் பார்த்ததும் பணக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. “என்ன சாமி! எங்க வீட்டிற்கு!” என்றார்.

“ஏன் வரக் கூடாதா நான்” என்று பதில் கேள்வி கேட்டார் சாமியார். உள்ளே அழைத்துச் சென்று, அவருக்குப் பழங்கள் அளித்தார். அவரும் அவரது வீட்டம்மாவும் அவரை வணங்கினர். நீண்ட ஆயுளுடன் நலமாய் இருக்குமாறு அவர் ஆசிர்வதித்தார். பணக்காரருக்கோ வியப்பு தாங்க முடியவில்லை. “எப்படி சாமி! எனக்கு நீண்ட ஆயுள் கிட்டும். நாளை ஒருநாள்தான் எனக்கு கெடு. வாழ்வில் பாக்கி இருக்கிறது” என்றார். சாமியார் புன்னகைத்தார். வீட்டம்மாவோ புரியாது விழித்தார்.

“எப்படி இருக்கிறாய்?” என்று வினவினார் சாமியார்.

“நிம்மதியாய் சந்தோஷமாய் இருக்கிறேன் சாமி! ஆனால் நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றது. இன்னும் ஒருநாளில் நான் எப்படி முடிக்கப் போகிறேன் என்றுதான் தெரியவில்லை.” என்றார்.

சாமியார் சிரித்தார். “ஏன் சிரிக்கிறீர்கள்” என்று பணக்காரர் கேட்டார்.

“அப்பா! நீ நாளை சாகப் போவதில்லை. முடிவை யாராலும் தீர்மானிக்க முடியாது. வாழ்வு சிறிது காலம்தான் என்னும் போது….எப்படி நல்ல விஷயங்களைப் பற்றி நினைக்கிறோம் அல்லவா? எப்போதும் நாம் வாழும் காலம் இதோ இன்னும் சில நாட்கள்தான் என்ற கதியில் நம் வேலைகளைச் செய்தல் வேண்டும். நிச்சயமாக நற்செயல்களைத்தான் செய்வோம். காலம் குறுகிடக் குறுகிட ‘செய்து முடிக்க வேண்டும்‘ என்கின்ற எண்ணம் பலப்படும். வேகப்படும். வலுப்படும். உறுதிப்படும் இல்லையா?” என்று கூறிவிட்டுப் புன்னகைத்தார்.

“சரி. நான் வந்த வேலை முடிந்தது. கிளம்பட்டுமா?” என்று கூறிவிட்டு, “நலமாய் வளமாய் இருங்கள். எடுத்த பணி தொடரட்டும்“ என்று ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

என்று கதையை முடித்து விட்டு சில மணித்துளிகள் நிறுத்தினார் கி.ரா. அவர்கள். “இதைப் போல்தான் நான் செயல்பட்டு வருகின்றேன். செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் காலமோ சிறிது என்கின்ற கதியில் செயல்படுவதுதான் என் இளமையின் ரகசியம்” என்றார்.

என்ன நண்பர்களே! கிளம்பி விட்டீர்கள்! ஓ! காலக்கதியை எண்ணி செயல் முடிக்க ஓடுகிறீர்களா! நல்லது! நாங்களும் பாண்டிச்சேரியை விட்டுக் கிளம்புகிறோம். திரு. தீப. நடராஜன் குடும்பம் சென்னை வருவதால், அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். எல்லோருமாய் கிளம்பினோம். காலை உணவு கி.ரா. வீட்டில்தான். இட்லியும் அவர்களைப் போல் அன்பைப் போல் மென்மையாய் வெண்மையாய் இருந்தது.

ஸ்ரீவி.ப.ராஜாராம் அடிக்கடி சொல்வார்கள். அம்மாவின் காபி குடிக்க வேண்டும். அவர்கள் சமையல் சாப்பிட வேண்டும். அத்துனை ருசி என்று. எனக்கு அன்று அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. அதற்காகத் தனியாக ஒருநாள் செல்ல வேண்டும். ஒருவழியாய், மனமிலாது புதுச்சேரி விட்டுக் கிளம்பினோம். புதுச்சேரியில் ஒரு விஷயம் கவனித்தேன். அங்கு திறந்தவெளிக் கழிவுநீர்ச் சாக்கடைதான் எங்கும். ஒரு கொசு இல்லை. குப்பை இல்லை. ஒரு பிளாஸ்டிக் கவர் அந்த நீரோட்டத்தைத் தடுக்கவில்லை. தெளிந்த நீரோட்டமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி இவர்களுக்கு மட்டும் சாத்தியமாகிறது?

நண்பர்களே! உடனே நம் சென்னையை நினைத்துப் பார்த்தேன்…. அப்பப்பா…..அப்படியே இங்கு முரண்பாடு! சென்னையும் பாண்டிச்சேரியின் சுத்தத்தைத் தத்து எடுத்துக் கொள்ளுமா? இப்படிக் கவலைப்பட்டு ஏங்கிக் கொண்டு சென்னை வந்து கொண்டிருந்தோம். வழியில் “கும்பகோணம் ஃபில்டர் காபி கிடைக்கும்“ என்ற போர்டு பார்த்தும், காரை நிறுத்தி அந்தக் காபியைக் குடித்தோம். அந்த மணத்தில் சென்னை வந்து சேர்ந்தோம்.. நல்ல பயனுள்ள பயணம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கரிசல் காட்டு ராஜா கி.ரா. 89(பகுதி-1)

 1. வாழ்க்கை நிலையாமை பற்றிய சாமியார் கதை அருமை.
  “ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
  கோடியும் அல்ல பல” என்ற குறளில் வள்ளுவர்,
  அடுத்த நொடிப்பொழுது உயிரோடு இருப்போமா என்பதை
  அறியமுடியாத ஒருவன் கோடிக்கணக்கான கற்பனைகளில்
  உழல்வான் என்கிறார். இவனுடைய கனவுகள் நனவாக பல
  காலம் பிடிக்கும். ஆனால் அடுத்த நொடி இவன் உயிரோடு
  இருப்பானா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
  நிலையாமையின் உண்மையை அறியாதவனை எண்ணிச்
  சொன்னது அக்குறள். எனவே நல்லவற்றை அன்றே அல்ல,
  அப்பொழுதே செய்யவேண்டும். “அன்றறிவாம் என்னாது
  அறம் செய்க” என்றும் வள்ளுவரே சொல்லுகிறார்.
  இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *