அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும்  காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.04.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 209

 1. நேற்று நீ மறைந்ததால் தான்
  எங்களுக்கு இன்று கிடைத்தது
  இன்று நீ மறைந்தால் தான்
  எங்களுக்கு நாளை கிடைக்கும்
  என்ன மாயம் உன்னிடத்தில்..?
  ஒன்பது கோள்களும் உன்னை சுற்ற…
  தங்கமுலாம் பூசப்பட்டதா உனக்கு..?
  பூசி என்ன பயன்
  பார்ப்பதற்குள் கண்கள் கூசுகிறதே
  மாலை பொழுதில் மேற்கு தொடர்ச்சி மலைகள் பின்னால் மறைவதென்ன..?
  நீ மறைந்த கர்வத்தில்
  சந்திரன் ஒளிர்கிறது
  கொண்ட கர்வத்தில் தேய்ந்தும் போகிறது
  நீ உதித்தால் தான் எங்களுக்கு விடியல்
  என்றும் உதித்திடு
  உன்னை போல் நாங்கள் ஒளிர வாழ்த்திடு

  காந்திமதி கண்ணன்

 2. இருளை விரட்டு…

  அந்தியில் அழகுகாட்டும்
  கதிரவனே,
  ஓய்வெடுக்கச் செல்கிறாய் நீ
  இன்றும்
  ஒழுங்காய்ப் பணிமுடித்த நிறைவில்..

  ஓய்வெடுக்கச் செல்கின்றன
  வழக்கம்போல் பறவைகளும்,
  பணிமுடித்து
  இரைதேடிய நிறைவில்..

  இந்த மனிதன் மட்டும்
  ஏன் இப்படி,
  நீ பணிமுடித்தபின்
  இரவின் இருள்வரவில்
  இவன் பணியைத்
  தொடங்கிவிடுகிறானே,
  ஆக்கப் பணியாய் அல்ல-
  அழிவுப் பணியாய்..

  இரவின் இருளை
  இரவியே நீ
  இவன்மனதில் புகுத்திவிட்டாயா..

  இதை விரட்ட
  நீட்டு
  உடனே உன் ஒளிக்கிரணங்களை…!

  செண்பக ஜெகதீசன்…

 3. அந்தியில் நீயும் ஓய்வெடுக்க ஆழியில் மூழ்குகிறாய்…உன்னுடன் சேர்ந்து இயற்கை அன்னையும் ஓய்வெடுக்க சென்றுவிடுகிறாள்!!! மாலையிலே உன்னை ரசிக்கும் நண்பனாய் நான் இருக்க. காலையிலே ஏன் எனக்கு பகைவனாக மாறுகிறாய்! !!

 4. இரவு பூக்கள்

  கிழக்கும் மேற்கும் பகலெல்லாம்
  ஓடி திரிந்து குறும்புகள் என்ன செய்தாயோ
  நீல வானம்கூட நிறம் மாறியதே
  கோவத்தில் அது நன்கு சிவந்ததே

  இரைதேடி திசை எங்கு பறந்தாலும்
  இருள் வந்து சேரும் முன்னே
  இல்லம் வந்து சேரும்
  இரவில் கூட்டாய் கூட்டில் வாழ்ந்திடவே

  விடியலாய் விடிவெள்ளி நீ வந்து
  விடைபெற்று சென்றதும்
  வெண்ணிலவு வந்து
  விடிகின்றதே இங்கே பலரது வாழ்வு

  ஆசை அடக்கிட
  மோகத்தில் திளைத்திட
  அள்ளி அணைத்திட
  ஆள் தேடும் ஆண்களுக்கு
  ஆனந்தத்தை வெளிச்சமாய் காட்டிடுவாள்
  மெழுகாய் இவள் தினம் உருகி

  இன்றேனும் விடியாதா என்று
  இரவெல்லாம் எதிர்பார்த்து
  நாட்கள் நகர்ந்திட
  அழகாய் பூத்து நின்று
  ஆண்களை கவர்ந்திடவே
  நாள்தோறும் இரவில் மட்டும்
  பூத்து நிற்கும்
  நட்சத்திர பூக்கள் இவர்கள் …….
  விடியலை எதிர்பார்த்து……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *