குறளின் கதிர்களாய்…(254)

செண்பக ஜெகதீசன்

இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்.

-திருக்குறள் -517  (தெரிந்து வினையாடல்)

புதுக் கவிதையில்…

இவ்வினையை
இவ்வழியில்
இவன்
பழுதின்றிச் செய்வான்
என்பதைப்
பகுத்தாராய்ந்து அறிந்தபின்னே
அவனிடம் ஒப்படைக்கவேண்டும்
அச்செயலை…!

குறும்பாவில்…

செயல் கருவி செயல்படுவோன்
மூன்றையும் பகுத்தாராய்ந்து அறிந்தபின்னே,
அவனிடம் ஒப்படைக்கவேண்டும் செயல்பட…!

மரபுக் கவிதையில்…

செய்யும் செயலின் தரமறிந்து
சேர்க்கும் கருவி தனையறிந்து,
செய்வோன் தனது திறமறிந்து
சேர்த்து மூன்றையும் ஆராய்ந்து,
மெய்யதை நன்றாய் முழுதுணர்ந்து
முடிவு செய்த பின்னர்தான்
செய்யும் செயலினைத் தொடங்கிடவே
சேர்க்க வேண்டும் அவனிடமே…!

லிமரைக்கூ..

வினைவிவரங்கள் முதலில் எடுத்துவிடு
செயல் கருவி செய்பவன் தன்மை மூன்றையுமே,
ஆராய்ந்தறிந்து செயல்படக் கொடுத்துவிடு…!

கிராமிய பாணியில்…

வேலகுடு வேலகுடு
விவரமறிஞ்சி வேலகுடு,
ஆள அறிஞ்சி ஆராஞ்சி
அப்புறமா வேல செய்யவுடு..

வேல விவரமறிஞ்சி
செய்யிற வழியறிஞ்சி
செய்யிறவன் தெறமயறிஞ்சி,
எல்லாத்தையும் அலசி ஆராஞ்சி
அப்புறந்தான் அவங்கிட்ட வேலய
ஒப்படைக்கணும்..

அதால
வேலகுடு வேலகுடு
விவரமறிஞ்சி வேலகுடு,
ஆள அறிஞ்சி ஆராஞ்சி
அப்புறமா வேல செய்யவுடு…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க