நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

33.கொல்லாமை

குறள் 321:

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

அறம் ங்கது என்னன்னா எந்த உசிரயும் கொல்லாம இருக்கது. கொல்லுதது எல்லா பாவத்தையும் குடுக்கும்.

குறள் 322:

பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை

இருக்கத பங்குபோட்டு சேந்து சாப்புட்டு பல உசிர காப்பாத்தணும் ங்கது நூல்கள எழுதினவங்க தொகுத்த எல்லா அறத்திலயும் ஒசத்தியா நிக்குத அறம்.

குறள் 323:

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

அறங்கள வரிசப்படி வச்சோம்னா மொதல்ல உசிர கொல்லாம இருக்குத கொல்லாமையும் அதுக்கு பொறத்தால பொய் பேசாத பொய்யாமையும் இருக்கும்.

குறள் 324:

நல்லா றெனப்படுவது யாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி

நல்ல வழி எதுன்னு கேட்டா எந்த உசிரயும் கொல்லாம இருக்குத அறம் காக்குத வழி தான்.

குறள் 325:

நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

ஒலகத்து வாழ்க்கைய வெறுத்த துறவிய விட ஒரு உசிரயும் கொல்லக் கூடாதுனு நெனைக்கவன் தான் ஒசந்தவன்.

குறள் 326:

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று

கொலை செய்யாமை ங்குத அறத்தைக் கடைபிடிக்கவனோட பெருமையப் பாத்து சாவு கூட கிட்டத்துல அண்டத் தயங்கும்.

குறள் 327:

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை

தான் சாவப் போறோம் ங்குத நெலமைல அத தடுக்குததுக்காவ கூட மத்தவன் உசிர எடுக்குத செயல செய்யக் கூடாது.

குறள் 328:

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

கொல செய்யுததுனால பெரிசா நன்ம கெடைக்கதா இருந்தாலும் படிச்ச பெரிய மனுசங்க அந்த நன்மைய தாழ்த்தியா தான் நெனைப்பாங்க.

குறள் 329:

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து

கொல செய்யுதத தொழிலா நடத்துதவங்க தன் தப்ப உணந்துகிடலனாலும் அத அறிஞ்ச பெரிய மனுசங்க மனசுக்குள்ளார அவங்க தாழ்த்தியா தான் நெனைக்கப்படுவாங்க.

குறள் 330:

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

காசு பணமில்லாம நோவு நொடியோட கெடந்து சீரளியுதவன் முன்ன பல உசிரக் கொன்ன பாவத்த செஞ்சிருப்பான்னு அறிவாளிங்க சொல்லுதாங்க.

(அடுத்தாப்லயும் வரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *