குறளின் கதிர்களாய்…(262)

-செண்பக ஜெகதீசன்…
ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
-திருக்குறள் -873(பகைத்திறம் தெரிதல்)
புதுக் கவிதையில்…
சுற்றம் நட்பு படை ஏதுமின்றி
தனி ஆளாய்ப்
பலரிடமும் பகை கொள்கிறவன்,
பித்துப் பிடித்தவனைவிட
அறிவில்லாதவன்…!
குறும்பாவில்…
தனியனாய் நின்று
பலரிடம் பகைமை பாராட்டுபவன்,
பித்தனைவிட அறிவிலிதான்…!
மரபுக் கவிதையில்…
உடன்வரும் உறவுகள் நட்புடனே
உதவிடும் படையென எதுவுமின்றி
துடிப்புடன் துணைக்கு யாருமின்றித்
தனியொரு மனிதனாய் நின்றேதான்
அடக்கிடும் ஆவலால் பகைகொண்டால்
அளவுக் கதிகமாய் மாந்தருடன்,
கிடைக்கு மவனுக் கொருபெயரே
கிறுக்கனை விடவும் அறிவிலியே…!
லிமரைக்கூ..
துணையேதுமின்றி நின்று தனியே,
பலரிடமும் பகைகொண்டு நடப்பவன்
பித்தனைவிட அறிவிலிதான் இனியே…!
கிராமிய பாணியில்…
பகவேண்டாம் பகவேண்டாம்
அடுத்தவரோடே பகவேண்டாம்,
தனக்க நெலம தெரியாம
பகவேண்டாம் பகவேண்டாம்..
ஒதவிக்கு யாரும் இல்லாம
ஒத்த ஆளா நின்னுக்கிட்டு,
பலரோட பகயச் சேக்கிறவன்,
பயித்தியத்த மிஞ்சுன
அறிவுகெட்டப்
பயித்தியக்காரன்தான்..
அதால
பகவேண்டாம் பகவேண்டாம்
அடுத்தவரோடே பகவேண்டாம்,
தனக்க நெலம தெரியாம
பகவேண்டாம் பகவேண்டாம்…!