மலையாள மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்
தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் (உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை)

ஆமாம், அவள் ஒரு விடுகதை!

ஏப்ரல் 17, 2006
திங்கட்கிழமை
நேரம்:12.20

வெப்பம் மிகுந்ததும் காற்றில்லாததுமான ஒரு மதிய வேளை. ஆஷா உடல் முழுக்க வியர்க்க, மேனேஜர் அறைக்குள் சென்றாள். ஒரு மேசை தூரம் இருந்தும் தனது வேர்வை நாற்றம், மேனேஜிங் டைரக்டரைத் தொந்தரவு செய்யுமோ என்ற குழப்பத்தில் அவளால் அவரின் வார்த்தைகளைக் கவனிக்க முடியவில்லை. அறைக்குள் இருந்து வெளியில் வந்ததும் நிம்மதிப் பெருமூச்சு தானாக வந்தது. அது கொஞ்சம் சத்தமாக வந்தது. மன்னிக்கவும்.

மொபைல் ஃபோன் மேசை மேலிருந்தது. திரும்ப இருப்பிடத்திற்கு வருவதற்குள் அதில் நான்கு அழைப்புகள். நான்கும் ஒரே எண்ணிலிருந்து. அதுவும் பழக்கமில்லாத எண். யாராக இருக்கும். அவள் ஃபோனை காதோடு வைத்தாள். கொஞ்ச நேரத்திற்குள் அவள் கேட்டது இதுவரை கேட்காத ஒரு குரல்.

ஆஷாவா?………

ஆமா!….

நாம பார்த்ததில்ல, என்னோட பேரு அனில்

எதுக்கு கூப்பிட்டீங்க?

சும்மா.

நம்பர் எப்படி கெடச்சுது?

மானுவல் தந்தான்

ஏது மானுவல்

மானுவல் ஜோர்ஜ். நீங்க ஒன்னாத்தா வேல பாத்தீங்கன்னு சொன்னான்.

ஓ……………………..

அவளுக்கு மானுவலை நினைவுக்கு வந்தது. அந்த நினைவை நிலையானது எனக் கூற முடியாது.

ஒன்னா வேல செஞ்சோம்ங்கறது சரிதா. கடைசியா ஃபோனில பேசியே சில மாதங்களிருக்கும். நம்பர் எப்போ கொடுத்தான், ஆஷா கேட்டாள். அவள் கொஞ்சம்
ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

நம்பர் தந்து கொஞ்ச நாளாச்சு, அனில் விளக்கினான். வாடகை வீட்டின் படுக்கையறையில் ஓய்வாகச் சாய்ந்து கிடந்தான். மொபைல் போனின் இன்டக்ஸைத் தேடின போது ஆஷாவின் நம்பர் கிடைத்தது. அது பயன்பாட்டில் இருக்கா என்று கூட யோசிக்கல. சும்மாதான் டயல் செய்தான். ஒரு ஆர்வம். அவ்வளவுதான். வீட்டில் தனியாகத்தான் இருந்தான்.

விஷாலும் அவனோட அம்மாவும் மொதல் நாள்தா ஊருக்குப் போயிருக்காங்க. அவங்க திரும்பிவர ஒரு வாரமாகும். அத்தனை நாட்கள் இங்க தனியாக…… இன்னக்கினு பாத்து வேலயுமில்ல. ஆஃப் டேதா. கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தாச்சு. விஷால் இல்லாம வீடு சூன்யமானது. அவன் அடிக்கடி அப்பாவின் ஷூ அணிந்து ஒரு தொப்பியும் வெச்சு மூங்கில் தடியும் ஊன்றிப் பிடித்து சார்லி சாப்ளினாக மாறுவான்.

எம்பொண்ணுக்கும் சாப்ளினெ ரொம்பப் புடிக்கும். ஆஷா விளக்கினாள். ஆனால் அவள் சாப்ளினை போலச் செய்யமாட்டாள்…… ஆனா சினிமா எல்லாம் பாப்பா.

“ஒரு பொண்ணு மட்டுந்தானா?” அனில் கேட்டான்.

“ஓ…. அதுவே போதும்!” ஆஷா கூறினாள்.

அவளோட அப்பா?

ஒரு கம்பெனில வேல பாக்கறாரு. இப்போ டூரிலிருக்காரு.

பொண்ணுக்கு எத்தன வயசாச்சு?

மூணு?………. மகனுக்கோ?

அவனுக்கு நாலாச்சு. கிண்டர்கார்டனுக்குப் போறா. பெரிசா அவனுக்கு
நாட்டமில்ல. அவன் ஒரு கிரகவாசி.

அது என்ன வா……..சி?………

சிரிப்பு கேட்க நல்லா இருக்கு.

ஆஷா சிரிப்பதை நிறுத்தினாள். பேசுவதற்கும் இடைவேளை விட நேர்ந்தது.

மேனேஜிங் டைரக்டர் மறுபடியும் அவளை அலுவலக பணிக்காக தனது கேபினுக்கு அழைத்தார். அவள் அவசரமாக ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து எழுந்தாள். மறுபடியும் வியர்வையின் குழப்பம். அவள் கேபினை லட்சியமிட்டு நடக்கும்போது சக ஊழியர்களில் சிலர் அவளை உதாசீனப் பார்வை பார்த்துவிட்டுப் பின்தொடர்ந்தனர். அவர்களுடைய பார்வையில் சந்தேகமோ, விருப்பமோ, பகையோ இருக்கவில்லை. அவர்களில் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மேனேஜிங் டைரக்டர் தனது அறைக்கு அழைக்க உரிமையிருக்கிறது. வியர்வை மூலம் உடல் ஈரமாவதைச் சபித்துக்கொண்டு ஆஷா நகர்ந்தாள். கண்ணாடி ஜன்னலுக்கு அப்புறம் வேனலின் அக்னி ஜ்வாலை வெளியில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.

நேரம்: 12.45

தனது சோர்வை அகற்ற இதற்கு முன் முழுமையாக்காமல் பாதியில் நிறுத்திய பேச்சை ஃபோனில் மீண்டும் தொடர்வதல்லாமல் வேறு உபாயம் ஒன்றும் மனத்தில் தோன்றவில்லை. ஆஷா மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தாள். ஏதோ ஹொரர் படங்களிலிருந்து எடுத்த சிறப்பு சத்தங்களுடன் ஹலோ ட்யூன் கேட்கத் தொடங்கியது.

ஹலோ………..

வேலயா இருப்பீங்கன்னு நெனச்சுதா நா ஃபோன் பண்ணாம இருந்தேன்.
கொஞ்சம் வேலயிருந்துச்சு

முடிஞ்சுதா?

இப்போதைக்கு

எனக்கிங்க போரடிக்குது.

என்ன பண்றீங்க?

போட்டோ எடுத்திட்டிருக்கிறே.

ஸ்டுடியோ?…

இல்லல்ல ஒரு இங்கிலீஷ் நாளிதழ்ல…

ஓ ஓ….

சமீபமா ஒரு ஃபோட்டோ கண்காட்சி போட்டிருந்தேன்.

எங்கே?

கொச்சில தர்பார் ஹாலில.விஷ்வல் மீடியாவிலயும் பேப்பர்ல கவரேஜ் இருந்துச்சு.

நா…. கவனிக்கலன்னு நெனக்கறே.

நெனக்கறன்னு சொல்ல வேண்டாம். கவனிக்கலன்னு சொன்னாப் போதும்.

மொழிக்கு இப்படி சில பிரச்சனைகளிருக்கு.

‘அப்போ போட்டோகிராஃபர் மட்டுமல்ல மொழி வித்வானும்தான்’.

’மொழி வித்வானு சொன்னதனால என்னோட ஒரு கணிப்பு.
சொல்லட்டுமா?’

’என்னது?’

படிச்சது மலையாளம் எம்.ஏ. …..கரெக்டா……

சோரி நா படிச்சது இங்க்லீஷ் லிட்டரேச்சர்.

நான் கெமிஸ்ட்ரி…

ஏதாவது கல்லூரில வேல கெடக்கும்னு நெனச்சே. நடக்கல…

இனியும் வாய்ப்பு இருக்கே?

எனக்கு எதிர்பார்ப்பில்ல

அது ஏ……

வாழ்க்கையும் எதிர்பார்த்த மாதிரி இல்லயே

என்னோட வரலாறும் கிட்டதட்ட அதுவேதா.

சமீபமா எங்கேயோ வாசிச்சே. வன் ஓஃப் தி ட்ரேஜடீஸ் ஆஃப் ரியல் லைஃப் ஈஸ் தாட் தேர் ஈஸ் நோ பேக்ரௌன்ட் மியூசிக்.

அதொரு நல்ல கண்டடைதல்.

சாப்பிட்டாச்சா?

நேரமாகலயே! வேளில எங்காவது போணும். ஆப்பீடைசரா ஒரு ஜிம்லெட் (எலும்பிச்சம்பழம் சேர்த்து செய்யக்கூடிய ஒரு வகை குளிர்பானம்) செய்யலாம்னு யோசிக்கிறே.

ஜிம்லெட்!….?

ஏன், புடிக்குமா? நா எப்பவும் செய்வே ப்ரண்ட்ஸெல்லா நல்ல பிரிபரேஷனு சொல்லுவாங்க.

அது இப்போ சாப்பிடாம எப்படி சொல்றது?

அப்படீனா இங்க வா. நா ஜிம்லெட் செஞ்சு வெக்கறே….

இப்போ எங்க இருக்கீங்க?

அந்த இடத்தோட பேரெக் கேட்டதும், ஆஷா கடவுளக் கூப்பிட்டு விட்டாள். ரெண்டு எடங்களுக்குமிடையே உள்ள இடைவெளி சுமார் 80 கிலோ மீட்டராவது இருக்கும். ஆஷா கடவுளைக் கூப்பிடவும், ரெண்டு இடங்களுக்கும் இடையேயான தூரத்தைக் கூறும்போது, அணினில் சுவரில மாட்டியிருக்கிற கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.

மணி ஒன்றாகல.ஏதாவது சூப்பர் ஃபாஸ்ட் பஸ்ல ஏறினா ரெண்டரை மணிக்குள் இங்கே வரலாம். அதுக்குமேல நேரமாகாது. நல்ல ரோடு சூப்பர் ஃபாஸ்ட் பஸ்கள் மிகவும் வேகமாகவும் வரும்.

எனக்கு இன்னக்கு வேல இருக்கற நாள்.

பாதி வேல முடிஞ்சதில்ல. ஹாஃப்டே லீவ் எழுதிக் கொடுத்திட்டு வெளில வா.

அனில் மொழிந்தான்.

நாம எப்படி தெரிஞ்சக்கறது.

அது அப்படி கஷ்டமான விஷயமொன்னுமில்ல. நான் காரெடுத்திட்டு பஸ் ஸ்டாப்
பக்கத்தில நிக்கறே. காரோட நம்பர் சொல்றே. எழுதிக்கோ.

 

நேரம்: 2.40

ஆஷா, பஸ்சை விட்டிறங்கினாள். மதிய வேளையின் சிவப்புப் பொடி அமர்ந்து கிடந்தது. அதுவழியாகச் சென்ற நீண்ட பாதை. வெயிலின் தீவிரம் கண்களை குருடாக்குவது போல இருந்தது. பஸ் ஸ்டாப்பில் சிலர் நிழல் உருவங்கள் போல அசைவற்று நின்று கொண்டிருந்தனர். அவர்களையும் தூசி மூடியிருந்தது. முகம் தெரியவில்லை. அவள் வடக்கே பார்த்தாள். கார் மரநிழலில் நின்று கொண்டிருந்தது. அவள் அதற்கு நேராக நடந்தாள். நம்பர் மனத்தில் பதிந்திருந்தது.

அனில், பச்சைநிற காட்டன் ஆடையும், கார்கோவும் அணிந்து ஸ்டியரிங் வீலிற்கு
கை வைத்து உட்கார்ந்திருந்தான். காருக்கு நேராக வருகின்ற நீலநிறச் சுடிதார்
அணிந்த பெண்ணை அவன் உற்றுப் பார்த்தான். சந்தேகமே இல்லை. அவளே தான்.
அவன் இடப்புற கதவைத் திறந்தான். அவள் ஏறி உட்கார்ந்தாள்.

’போலாமா?’ அவன் கேட்டான்.

அவள் தலையாட்டினாள்.

கார் மெதுவாக நகர்ந்தது.

யாரைப் பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை இருவரும் இவ்வளவு நேரம் அனுபவித்தனர். தற்போது அவ்வெண்ணம் அடங்கியது. அனில், கார் ஓட்டுவதற்கிடையில் பின்சீட்டில் கிடக்கும் பாட்டிலை சுட்டிக் காண்பித்தான். ஜிம்லெட். ஆஷா அதை கைநீட்டி எடுத்து ஒரு வாய் குடித்துப் பார்த்தாள்.’நல்லா
இருக்கு.’

நமக்குச் சாப்பிட ஏதாவது வாங்க வேண்டாமா? அனில் கேட்டான்.

எங்கிட்ட சாப்பாடு இருக்கு. ஆஷா கூறினாள்.

கரிமீன் சுட்டதும். வாத்து ரோஸ்ட்டும், இரால் குழம்பும், மரவள்ளியும் பரிமாறுகின்ற ஒரு கடைக்கு முன்னால் அனில் காரை நிறுத்தினான். ஆஷா வெளியில் இறங்கவில்லை. கையில் ஜிம்லெட் பாட்டிலைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

 

நேரம்: 2.55

படுக்கையறையில் பாரிசில் இருந்து வாங்கின சில வாசனைப்  பொருட்கள் இருந்தன. அவற்றைத் தோற்கடிக்கும் ஒரு வாசனை அனுபவப்பட்டு அனில் மூக்கை விரித்து நின்றான்.

குளித்து முடிந்து பாத் டவலால் தலைமுடியைச் சுற்றிக்கொண்டு ஆஷா அவனுக்கு முன்னால் வந்தாள். பரிமள வாசனை அவளின் தேகத்தினுடையது. அவன் மெய்மறந்தான். அவள் அணிந்திருந்த தனது மனைவியின் ஆடை ஒரு நொடி அவளை நினைவுபடுத்தியது. அது ஆஷாவுக்கு நன்றாக இணைந்திருந்தது.

அவள் வார்ட்ரோபில் கண்ணாடிக்கு முன்னால் சென்று நின்றாள். கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அனில். அவனின் பிரதிபிம்பத்தைப் பார்த்து அவள் சிரித்தாள்.

டைனிங் டேபிளில் பல பாத்திரங்களில் உணவுப் பொருட்களை வைத்துவிட்டு, அவன் அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். ஜிம்லெட் தீர்ந்திருந்தது.

’நாம சாப்பிடத் தொடங்கலாமே’. அனில் கேட்டான்.

’பசிக்குது. ’ ஆஷா கூறினாள்.

சாப்பிட உட்கார்ந்த போது அவளுக்கு எதை முதலில் தொடங்கலாம் என்ற குழப்பமானது. நிறைய வகைகள். ஊறுகாயே நாலு வகை. பூண்டு ஊறுகாய், பச்ச குறுமிளகு, பாவற்காய் ஊறுகாய், வடுமாங்கா.

.இதெல்லா இங்கே செஞ்சதுதா..’ அனில் கூறினான்.

ஆஷாவுக்கு அவனின் மனைவியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஊறுகாய் ஒவ்வொன்றும் அவ்வளவு ருசி.

அனில் அவளுடைய வலது கை நகர்வதைக் கவனித்தான். கரிமீனிற்கும், பொடிமீனிற்கும் நேராக விரல்கள் நீண்டன. அவளுடைய ஓவ்வோர் அசைவும் கவர்ச்சியுடையதாக இருந்தது. கண்களிலோ ஒரு மின்னல் எப்போதும் இருந்தது.

 

நேரம்: 3.20

கிம் கிடுக்கின் ‘ஸ்ப்ரிங், சம்மர், ஃபால், வின்டர்.. அன்ட் ஸ்ப்ரிங் என்ற ஆங்கிலப் படம் கம்ப்யூட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அப்படத்தை இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்த ஆஷா, அனிலை பேர் சொல்லி அழைத்து தனக்குப் பின்னால் வந்து நெருக்கமாக நிற்கவும், தொடர்ந்து தன் பின் கழுத்தில் உதடுகள் பதிக்கவும் உத்தரவிட்டாள். வாசனைச் செடிகளுக்கு நடுவில் தனது உதடுகள் அமர்ந்தது என்ற நினைவில் அவன் கண்களை மூடினான்.

அவனுடைய உதடுகளின் ஸ்பரிசம் ஏற்காத ஒரு இடம் கூடத் தன் பின் கழுத்தில் இல்லை என்று தெரிந்த பிறகு அவள் திரும்பி நின்றாள். அவள் சிரித்தாள்.

கண்களின் மின்னல் அதிகரித்திருந்தது. இரண்டு கைகைளையும் அவள் அவனுடைய தோள்களில் வைத்து அழுத்தினாள்.

’எத்தனை விசித்திரமானது ….நம்முடைய….. இந்த அறிமுகம்…’

அமைதியான குரலில் அவள் கூறினாள்.

அவளுடைய பெருமூச்சு அவனுடைய முகத்தில் பட்டது. அவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான்.

நாம் ஒவ்வொருவருக்கு உள்ளும் இருண்ட விடுகதைகள் இருக்கின்றன.

அவனுடைய கண்களைப் பார்த்துக்கொண்டு அவள் கூறினாள்.

 

நேரம்: 4.00

பகல் வெளிச்சமே ஆடைகள் என்பது போல படுக்கையில் கிடந்தனர். ஜன்னலுக்கு வெளியே வாழைத் தோப்புகளின் இருண்ட பச்சை. ஆடுகள் அழுகின்றன.

’கொஞ்சம் தூங்கலாமா?’ அனில் கேட்டான்.

’நாலு மணியாச்சு. ’ ஆஷா சொன்னாள்.

அவளுக்குத் திரும்பப் போகாமல் இருக்க முடியாது. வீட்டை அடைய நெடுந்தூரம்
பயணிக்கவும் வேண்டும்.

அவனது வலது கையை அகற்றிவிட்டு அவள் எழுந்தாள். அவளுடைய உடல்
வசீகரமாக அவனுடைய கண்களில் நிறைந்து நின்றது. ஒளியைக் கடத்துகின்ற
கண்ணாடித் திரைகளுக்குப் பின்னால் அவள் ஷவருக்குக் கீழே நின்றாள்.

அதற்கிடையில் எப்போதோ அவனையறியாமல் அவன் கண்ணயர்ந்தான். ஷவரிலிருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. வெயிலின் வானத்திலிருந்து வெண்மை நிற இறகுகள் கழன்று விழுந்தன.

 

நேரம்: 4.15

பஸ் எந்த நேரத்துக்கு வரும்னு உறுதியாத் தெரியாது. சாயங்காலம் கூட்டமும் அதிகமா இருக்கும்.

’நான் கூட்டிட்டுப்போய் விடுறேன்.’ அனில் கூறினான்.

வேண்டாம். ஆஷா பட்டெனச் சொன்னாள்.

எனக்கு அதில ஒரு சிரமமும் இல்ல. அனில் கூறினான்.

கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்றதெல்லாம அவனுக்கு அன்றைக்குப் பெரிய வேலையொன்றுமில்லை. ட்ரைவ் செய்வது ரொம்பப் புடிக்கும். ஆனால் ஆஷா ஒத்துக்கொள்ளவில்லை.

அதற்கு முன்பாக அவனுடைய மற்றொரு உடன்படிக்கையையும் அவள் நிராகரித்திருந்தாள். மடித்த வெள்ளைக் கவரில் அது அவன் ஜோப்பிலிருந்தது.

’கிளம்பறேன்……,’ அவள் முனகினாள்.

அவனுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் அவள் நடந்தாள். அவள் நடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

நேரம்: 4.22

பஸ் வருவதும் போவதும் தெரிவதற்காகக் கார்லேயே இருந்தான்.

மொபைலில் ரிங்டோன் எப்போதும் போல பேய்ச் சத்தமோ எனத் தோன்றுமளவிற்கு முழங்கியது.

ஆஷாவின் நம்பர். ஆவேசத்துடன் அவன் காதருகே வைத்தான்.

சொல்ல மறந்து போன ஒரு விஷயத்துக்காக அழைத்திருந்தாள்.

அவனுடைய கருத்திற்கோ, எதிர்வாதத்திற்கோ இடம் கொடுக்காமல் தீர்க்கமாகக் கூறினாள்.

என்னுடைய நம்பரை நினைவில் வைக்கக் கூடாது. இனி உங்களப் பொறுத்தவரை
நான் என்கிற ஒருத்தி கிடையாது. உங்க நம்பரை நான் இப்பவே அழிச்சிடுவேன்.

ஒரு ஜடப் பொருளாக நிசப்தமான ஃபோனைக் கையிலேந்தி அனில் நிற்கும்போது, இரண்டு நகரங்களை இணைத்துக்கொண்டு ஓடுகின்ற அந்த பஸ், தெருவின் கடைசிப் பக்கத்தைப் பார்த்து முகம் நீட்டியது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *