இலக்கியம்கவிதைகள்

2019 நவராத்திரி 2

-மரபின்மைந்தன் முத்தையா 

இடைவெளியே இல்லா இவள்கருணை கிட்ட
தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை
அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால்
கிடைக்குமே சக்தி கனிவு .

சிறகசைத்துப் பாடுகிற சின்னப் பறவை
உறவென்று வானத்தை உன்னும் _ பிறவியினைப்
பெற்றவர்க் கெல்லாம் பராசக்தி தாய்தானே
உற்றிந்த உண்மை உணர்.

உன்னில் ஒரு துளியாய் உள்ளாள் அவளைநாம்
உன்னும் பொழுதே உருத்தெரிவாள் – இன்னும்
தொடரும் பிறவித் துயர்நீங்க தேவி
சுடரடிகள் நீசென்று சூழ்.

மாயத் திரைகள் மறைக்கும் மஹாமாயை
தாயென் றழைத்தால் திரை விலகும் – ஓயுமே
எண்ணில் பிறவிகள் எல்லாமே சக்தியை
எண்ணில் நிகழும் இது.

தானே வெயிலாகித் தானே நிழலாகி
தானே இயங்குந் தயாபரி _ தேனாய்
சிவக்கூட்டில் நின்றொழுகும் சுந்தரி பாதம்
தவக்காட்சி கண்டு தெளி

மும்மலப் பிள்ளையை மோகிக்கும் தாய்மையே
அம்மையே எங்கள் அபிராமி – இம்மையே
எம்மையே ஆளும் எழிலரசி செம்மையாய்
நம்மையே காப்பாள் நயந்து .

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க