-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

69. தூது

குறள் 681:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு

நேசமான கொணமும், நல்ல குடிப்பொறப்பும், ராசா விரும்புதது கணக்கா நல்ல பழக்கவழக்கமும் இருக்கது தான் தூதருக்கு உண்டான தகுதிங்க. 

குறள் 682:

அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று

தூது போவுதவுங்களுக்கு தேவப்படுத மூணு முக்கியமான பண்பு  நேசம், புத்திசாலித்தனம், பேச்சுத்தெறமை.

குறள் 683:

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
வென்றி வினையுரைப்பான் பண்பு

வேத்து நாட்டுக்குப் போயி தன் நாட்டு ராசா செயிக்கது கணக்கா சேதி சொல்லுதவன் நூல்களப்படிச்சு அறிஞ்ச அறிவாளிய விட தெறமசாலிய இருக்கணும். 

குறள் 684:

அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு

நல்ல புத்தி, பாக்கவங்க விரும்புத தோற்றம், நல்ல படிப்பு இந்த மூணு பொருத்தமும் இருக்கவன் தான் தூது போவணும்.

குறள் 685:

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது

கோவத்த உண்டாக்காம சந்தோசம் கொடுக்குத மாதிரி இருக்க சேதிகளாப் பாத்து ஒண்ணுபோலத் தொகுத்து வெறுப்பு ஏத்துதத ஒதுக்கிப்போட்டு உபயோகமா சொல்லுததே நல்ல தூதருக்கு அழகு.

குறள் 686:

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
தக்க தறிவதாந் தூது

படிச்சவனாவும் எரிச்சுப்போடுதமாரி பாக்க பகையாளிக்கு பயந்துகிடாம, அவன் மனசுல பதியுதமாரி சொல்லவேண்டியதச் சொல்லி தெரிஞ்சுக்கிடவேண்டியத தெரிஞ்சுக்கிட்டு வருதவன் தான் ஒசந்த தூதன். 

குறள் 687:

கடனறிந்து காலங் கருதி இடனறிந்
தெண்ணி உரைப்பான் தலை

தான் செய்ய வேண்டிய கடம என்னன்னு தெரிஞ்ச பொறவு தகுந்த காலத்தையும் எடத்தையும் பாத்து வச்சி சொல்ல வேண்டியதச் சொல்லுதவன் தான் சிறந்த தூதன். 

குறள் 688:

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு

துணிச்சல். தொணை, ஒழுக்கம் இந்த மூணும் தூதுவர்க்கு தேவையானவைகள் னு சொல்லுதாங்க. 

குறள் 689:

விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்

ஒரு ராசா சொல்லிவிட்ட சேதிய இன்னொரு ராசா கிட்ட சொல்லுதப்போ தெரியாம கூட தப்பான வார்த்தைகளச் சேத்து சொல்லாம இருக்கவனால தான் தூது போவ ஏலும். 

குறள் 690:

இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற் 
குறுதி பயப்பதாம் தூது

தூது போன எடத்துல ஏதும் ஆபத்து வந்து தான் செத்தா கூட பரவாயில்ல தன் ராசாக்கு நல்லது செய்யணும்னு நெனைக்கவன் தான் தூதன்.

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.