அறிவும் புத்தியும்
-நிர்மலா ராகவன்
நலம்… நலமறிய ஆவல்… (170)
அக்குழந்தைக்கு அன்று ஆண்டுநிறைவு.
“குழந்தை புத்திசாலியா?” தன் முதல் குழந்தை நல்லவிதமாக வளரவேண்டுமே என்ற ஆதங்கத்துடன் ஓர் இளம் தாய் என்னைக் கேட்டாள்.
அதன் கண்களைப் பார்த்தபோது, களங்கமற்ற குணம் மட்டும்தான் தெரிந்தது.
“நாம் பேசப் பேசத்தான் குழந்தைகளின் அறிவு வளரும்,” என்று என் அனுபவத்தில் அறிந்ததைக் கூறினேன்.
பொது இடங்களில், குழந்தையிடம் பேசுவதே வீண் என்பதுபோல் நடக்கிறார்கள் பல தாய்மார்கள். அப்படியே கைத்தொலைபேசியிலிருந்து மிகுந்த சிரமத்துடன் கண்களை அகற்றிப் பேசினாலும், எதைப் பற்றிப் பேசலாம் என்ற கேள்வி எழுகிறது.
சில பெரியவர்கள், ‘வேடிக்கை’ என்று நினைத்து, கெட்ட வார்த்தைகளும், பழிப்புச் சொற்களும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அர்த்தம் புரியாது, குழந்தைகள் அதையெல்லாம் திரும்பச் சொல்லும்போது, மூத்தவர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். ஆனால், வளர்ந்தபின் அப்படிப் பேசினால், யாரும் அப்படி வளர்க்கப்பட்ட ஒருவனை மதிக்கமாட்டார்கள்.
கல்வி ஒருவனை அறிவாளி ஆக்குகிறதா என்பதும் யோசிக்க வேண்டிய சமாசாரம்தான்.
பள்ளிக்கூடத்தில், “உன் மூளையை உபயோகப்படுத்து!” என்று படித்துப் படித்துச் சொல்வார்கள். தற்காலத்தில், பிறர் தமது மூளையை உபயோகித்து அறிந்தவற்றை நமதாக்கிக்கொள்ள விஞ்ஞானம் வழிவகுக்கிறது.
நிறைய விஷயங்களைத் தெரிந்துவைத்து, ஒருவன் தான் புத்திசாலி என்று பெருமிதம் கொண்டிருக்கலாம். ஆனால், வெறும் ஏட்டுச் சுரைக்காயால் என்ன பயன்! நற்குணமும், ஆழமாகச் சிந்திப்பதன் பயனாக உலகைப் புரிந்துகொள்ளும் அறிவும் வேண்டாமா?
கதை
பட்டப்படிப்பில் மாநிலத்திலேயே முதலாவதாக வந்த சரவணனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பது சிரமமாக இருக்கவில்லை. ஆனால், புத்தக அறிவைத் தவிர வேறு எதுவும் இல்லாதவனுக்குப் பயம் ஏற்பட்டது, புதிய இடத்தில் தான் எப்படி பிழைக்கப் போகிறோமோ என்று.
மாற்றங்களை எதிர்கொள்ளும் துணிவு புத்தகப் பாடங்களைப் படித்துப் பெற்ற புத்தியால் கிடைப்பதல்ல.
தன் நண்பர்கள் யாருக்காவது அங்கு உறவினர்கள் இருக்கிறார்களா என்று கேட்டுப் பார்த்தான் சரவணன். அவர்களுடன் தொடர்புகொண்டு, “என்னை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்,” என்று கெஞ்சினான். ஆதாயம் எதிர்பார்த்து வலுவில் நட்பை ஏற்படுத்திக்கொண்ட போதும், பிறருடன் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அன்றாடம் வானொலியில் கேட்ட செய்திகளை மட்டும் திரும்பக் கூறுவான்.
`இவன் கல்லூரியில் என்னதான் கற்றான்?’ என்ற கேலிக்கு ஆளானான்.
`தெரிந்தவரை போதும்,’ என்ற மனப்பான்மை இருந்தால் அறிவு எப்படி வளரும்?
`நான் புத்திசாலி!’ என்று படிப்பையும் உத்தியோகத்தையும் வைத்து இவன் பெருமை கொள்ளலாம். கைநிறையப் பணமும் கிடைக்கலாம். ஆனால், பிறருடன் பழகத் தெரியாவிட்டால், கல்வியால் என்ன பயன்?
செய்தித்தாள் மட்டுமின்றி, நிறைய புத்தகங்களையும் படித்து, தான் அறிந்ததை சமயம் கிடைத்தபோதெல்லாம் வெளிக்காட்டிக்கொள்பவன் தன்னைப் புத்திசாலி என்று நினைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்வது உள்ளாடைகளைப் பெருமையுடன் வெளியில் காட்டிக்கொள்வதுபோல்தான் என்கிறார் திரு.அனுபவசாலி. உள்ளாடை, புத்தி இரண்டும் ஒருவருக்கு அவசியம் தேவை. ஆனால், பிறர் மெச்சுவதற்காக அல்ல.
கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்களைச் சொல்பவனும் புத்திசாலி என்பதல்ல. படித்ததை எவ்வாறு தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தலாம் என்று புரிந்து, அதை உபயோகிக்காவிட்டால், படித்து என்ன பயன்?
புதிய விஷயங்களைக் கற்று, புத்திக்கூர்மையை அதிகரிக்க சரியான கேள்விகளைக் கேட்கவேண்டும். நிறையக் கேள்வி கேட்பவர்களை பலரும் விரும்புவதில்லை. சந்தேகத்துடன் பார்ப்பார்கள்.
ஆனால், அறிவை நாடுகிறவர்கள் தமக்குள் எழும் கேள்விகளுக்கு விடைகாணும்வரை முயற்சியைக் கைவிடமாட்டார்கள். இவர்களால் வித்தியாசமான பிறரைப் புரிந்து ஏற்க முடிகிறது. தம் சொந்த வளர்ச்சிக்காக பிறரை நோகடிக்கவோ, அதிகாரம் செலுத்தவோ மாட்டார்கள். ஏனெனில் இவர்களது உணர்ச்சிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.
அறிவை எப்படித்தான் வளர்ப்பது?
கல்வி மட்டுமின்றி, கலை, ஆரோக்கியமான, கவனம் செலுத்தவைக்கும் விளையாட்டுகள், தியானம் போன்றவற்றால் அறிவு வளரும். அதைக் குறித்து கர்வம் எழாதபோது, தன்னம்பிக்கையும் மிகும்.
தன்னம்பிக்கையுடைய எழுத்தாளர், சைத்திரிகர், நடிகர் போன்றோர் தனிமையை விரும்புகிறார்கள். கற்பனையில் பல பாத்திரங்களுடன் ஒன்றிணைந்து, அவர்களாகவே மாற வேறு வழியில்லை.
இவர்களிடமும் பிறர் குற்றம் கண்டுபிடிப்பார்கள் -– பழகத் தெரியவில்லை என்று. இவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். ஏனெனில், தகுதியானவர்களை மட்டுமே இவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். பிறர் சொல்லாததையும் புரிந்துகொள்ளும் திறமை இருப்பதால் `ஆமாம் சாமி’ போட இவர்கள் விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணம்.
விஞ்ஞான வளர்ச்சியால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை கணக்கில் அடங்காமல் போய்விட்டன. எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாவிட்டால், நாம் முட்டாள்கள் என்றாகாது.
கணினி, கைத்தொலைபேசி என்று பல்வித சாதனங்களையும் ஓயாது உபயோகிக்கும் திறன் மட்டும் இருந்தால் போதுமா?
பழகத் தெரிய வேண்டும்
ஒரு பேரங்காடியில் பார்த்தேன். நாற்பது வயதுக்குட்பட்ட ஆறுபேர் ஒரு நீண்ட இருக்கையில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு தொலைபேசி. பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து யாரும் புன்முறுவல் செய்யவோ, உரையாடவோ முயலவில்லை. மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கையிலும் Ipad! அவர்களும் தம் உலகில் மூழ்கி இருந்தார்கள்.
மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பிறருடன் பழகத் தெரிந்திருக்க வேண்டாமா? கணவன் எப்போதும் கணினியின்முன், மனைவி கைத்தொலைபேசி அல்லது தொலைக்காட்சி என்றிருந்தால், சிறுபிராயத்தில் ஒரு குழந்தைக்கு எதையோ இழந்துவிட்டது போன்ற ஏமாற்றம் எழும். சமாதானம் செய்யும் வகையிலோ, அல்லது `அன்பு’ என்ற பெயரிலோ, ஏதாவதொரு சாதனத்தை வாங்கிக் கொடுக்கத்தான் பொற்றோர்களால் இயலும்.
இப்படிப்பட்ட குடும்பத்தின் அங்கத்தினர் அனைவரும் தீவுகள்போல் தனித்து இயங்குவார்கள். எல்லாச் சூழ்நிலைகளிலும் சுயநலத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து நடக்க முற்படுவது இதனால்தான்.
கதை
ஒருமுறை என் சக ஆசிரியை, “ஆண்கள் வளர்ந்துவிட்ட குழந்தைகள். என் கணவர் குழந்தைகளிடம் பேசியதே கிடையாது. நண்பர்களுடனேயே தன் நேரத்தைக் கழிப்பார். ஒரு விடுமுறை நாள், வீட்டில் உட்கார்ந்திருந்தபோது, அவருடைய ஆத்திரம் பெருக்கெடுத்தது. `யாருமே என்னை மதித்து, ஒரு வார்த்தைகூடப் பேச வரவில்லை!’ என்று கத்தினார்!’ என்று சிரித்தாள்.
இருபது வயதுக்கு மேற்பட்டிருந்தாலும், அவளுடைய குழந்தைகள் தம் வாழ்க்கையில் நடப்பதையெல்லாம் தன்னுடன் ஏன் பகிரவேண்டும் என்ற என்னிடம் ஆச்சரியப்பட்டாள்.
“உன் குழந்தைகள் ஏதோ, கடவுளைக் கண்டதுபோல் பரவசத்துடன் உன்னைப் பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன். அது உனக்குத் தெரியுமா?” என்று நான் கேட்டபோது, அவள் விழித்தாள்.
எதையும் எதிர்பாராது, அவள் தன் நேரத்தை, உழைப்பை, தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்த கசப்பான, அல்லது இனிமையான, பொழுதுகளை சிறுவயது முதல் அவர்களிடம் சொல்லியிருக்கிறாள். (தமிழ் தெரியாத, அல்லது நெருக்கமாக இல்லாத அக்கம்பக்கத்தினர் இருந்தால், நாம் பெற்ற குழந்தைகளே உற்ற நண்பர்கள் ஆகிவிடுகிறார்கள்).
இப்படி வளர்க்கப்பட்ட குழந்தைகள் தாயுடன் நெருக்கமாக இருப்பதில் என்ன அதிசயம்?
புத்தி மட்டும் போதுமா?
என்னதான் புத்திசாலியாக இருந்தாலும், பெரிய உத்தியோகம் வகித்து, கைநிறைய சம்பாதித்தாலும், சக மாந்தருடன் சுமுகமாகப் பழகுவது, அவர்களைப் புரிந்து நடப்பது போன்ற தன்மைகள் குறைந்துவிட்டால் அறிவு மங்கிவிடும்.
வெளிநாட்டில் வேலை பார்த்த சரவணன் கூறினான், “என் இரு குழந்தைகளுக்கும் இப்போதுதான் இரண்டு வயது, ஒரு வயதாகிறது. இந்த வயதில் அவர்களுக்கு நான் தேவைப்படமாட்டேன்!”
நினைவுதெரிந்த நாளாக, தாய்தந்தையரின் அன்பு கிடைக்கப்பெற்று, அதன்மூலம் வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் எதிர்கொள்ளும் மனோதிடத்துடன் வளர்ந்திருக்கும் எத்தனைபேர் இதை ஒப்புக்கொள்வார்கள்?
முற்றும்
மிகச் சிறந்த, அர்த்தமுள்ள தொடர். பயனும் இருந்தது, படிக்கச் சுவையாகவும் இருந்தது. வேறு தலைப்புகளில் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.