thiruvalluvar

செண்பக ஜெகதீசன் 

உளரெனினு மில்லாரோ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
-திருக்குறள் -730(அவை அஞ்சாமை)

புதுக் கவிதையில்...

அவைக்களத்தில் பேச
அஞ்சித்
தாம் கற்றவற்றைப்
பொருள் விளங்கச்
சொல்ல இயலாதவர்,
உயிருடன் இருந்தாலும்
இல்லாதவராய்
இறந்தவர்க்கு ஒப்பானவரே…!

குறும்பாவில்…

உயிருடன் இருந்தாலும் ஒருவர்
கற்றவற்றை அவையஞ்சி எடுத்துரைக்க இயலாதெனில்,
இறந்தவராய் இல்லாதவர் ஆவார்…!

மரபுக் கவிதையில்…

அவையி லுள்ளோர் பொருள்விளங்க
அச்ச மின்றி கற்றவற்றைச்
சுவையோ டெடுத்துச் சொல்லிடவே
சிறிதும் திறமை யில்லாதார்,
எவையும் கற்றுப் பலனில்லை,
எல்லோர் போல வாழ்ந்தாலும்
சவமாய் உயிரே யில்லார்க்குச்
சமமாய்க் கருதுவர் உலகோரே…!

லிமரைக்கூ..

உயிரிலா பிணத்துக் கொப்பாவார்,
கற்றவற்றைப் பிறரறியும்வகையில் அஞ்சாதே
அவைதனில் எடுத்துச் செப்பாதார்…!

கிராமிய பாணியில்

அஞ்சாத அஞ்சத
அறிஞ்சதச் சொல்ல அஞ்சாத
சபயில சொல்ல அஞ்சாத..

படிப்பு நெறய படிச்சிருந்தாலும்
படிச்சதப் பலரறியச் சபயில
பயமில்லாம எடுத்துச்சொல்லணும்..

அந்தத் தெறமயில்லாதவன்
உயிரோட இருந்தாலும்,
உயிரு இல்லாத
பொணமும் அவனும் ஒண்ணு..

அதால
அஞ்சாத அஞ்சத
அறிஞ்சதச் சொல்ல அஞ்சாத
சபயில சொல்ல அஞ்சாத…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.