-வேதா. இலங்காதிலகம்

சிந்திக்கும் என் சுதந்திரம் என்றும்
நந்தவன மலர்களில் தேனருந்த அலைந்து
சிந்து பாடும் தேனீயாக உலவும்!
மந்திரமாய் உயர்வாய் மலைத்திட எழுத
செந்தமிழ்ச் சதுரங்கம் ஆடும். சங்கொலி
முந்தி வரட்டும் என்  தமிழுக்கு
முந்திய மூன்று சங்கங்களின் இருப்பும்
தந்தது  இந்த எழுத்து தானே!

என் சொற்காலம் இப்படித்தான் நிலவட்டும்!
என் கவிச்சிறகுகள் இப்படித்தான் விரவட்டும்!
மீன்களாகக் கண்ணாடிக்குள் வண்ணமாக அல்ல
மீளாது ஓடிடும் ஆற்றின் மீன்களாய்
கீழாகவோடி அழியாது சரித்திரம் படைக்கட்டும்!
என் விரல்கள் எப்போதும் பேசட்டும்!
மென் அலங்கார வார்த்தை இரசனையிலல்ல
இன்னமுதத் தகவலோடு இனிமையாய்ப் பரவட்டும்!

நாலெழுத்துத் திறமையோடு சபை நடுவே
நீட்டோலை வாசிக்காதவனே மரமென்றார் ஒளவையார்
வல்லமையாய் எழுத்தில் மேன்மை தேடுதல்
வில்லேந்தும் வீரமாக அகலவியலாத அறிவாகும்.
மெல்லிய மலர் மஞ்சமாக மனதில்
தொல்காப்பியம் விரிக்கும் அகளங்கம் இன்றி
புல்லறிவு விரட்டி தமிழினிமை கொள்ளல்
அல்லிக் குளத்தருகே முல்லை மல்லிகையனுபவமாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *