-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

68.வினைச்செயல் வகை

குறள் 671:

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

ஒரு காரியத்த செய்யுதப்போ சாதகபாதகத்த யோசிச்சு முடிவெடுக்கணும். முடிவு எடுத்த பொறவு காரியத்த கெடப்புல போடுதது தப்பா போயிடும்

குறள் 672:

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

நிதானமா செய்ய வேண்டியத தாமதமா செய்யலாம். வெரசலா செய்ய வேண்டியத தாமதமா செய்யக்கூடாது. 

குறள் 673:

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

ஏலுத (இயலுகின்ற) எடத்துல காரியத்த செஞ்சு முடிக்கது நல்லது. ஏலாத எடத்துல அதுக்கேத்த வழியத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது நல்லது. 

குறள் 674:

வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

செய்ய ஏத்துக்கிட்ட காரியம், அழிச்சுப் போட நெனச்ச பகை ரெண்டுலயும் முடிக்காம வைக்குத மிச்சம் பாதில அணைக்காம விட்ட தீயப் போல வளந்து கெடுதல வெளைவிக்கும்.

குறள் 675:

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்

ஒரு காரியத்த செய்யுததுக்கு முன்ன அதுக்குத் தேவைப்படுத பணம், சாமான், காலம், இடம், எப்டி செய்யணும் ங்குத மொறை இந்த அஞ்சையும் சந்தேகமில்லாம யோசிச்சு பொறவு தொடங்கணும். 

குறள் 676:

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

காரியத்த எப்டி முடிக்கணும் ங்கதையும், அதச் செய்யுதப்போ வரப்போகுத தடங்கலையும், காரியம் முடிஞ்ச பொறவு கெடைக்கப்போவுத பயனையும் நெனைச்சுப்பாத்து செய்யணும்.   

குறள் 677:

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்

ஒரு காரியத்த தொடங்குதப்போ அத முன்னமே செஞ்சவங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு செய்யுதது தான் மொறை. 

குறள் 678:

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

ஒரு காரியத்த செய்யுதப்போ அத வச்சி இன்னொரு காரியத்தயும் நடத்திக்கிடதது  ஒரு யானைய வச்சி இன்னொரு யானைய பிடிக்குதது கணக்கா ஆவும்.   

குறள் 679:

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

பகையாளியா இருக்கவங்கள சேத்துக்கிடதது சேக்காளிங்களுக்கு தேவைப்படுதத செஞ்சு கொடுக்கதக் காட்டிலும் வெரசலா செய்ய வேண்டிய விசயம். 

குறள் 680:

உறைசிறியார் உண்ணடுங்கல் அஞ்சிக் குறைபெறிற் 
கொள்வர் பெரியார்ப் பணிந்து

தங்கள விட பலசாலிய  எதித்து நிக்கதுக்கு கூட இருக்கவங்களே நடுங்குதப்போ  எதிர்பாக்குத பலன் கெடைக்கும்னு தெரிஞ்சா அவுக பலசாலிய பணிஞ்சு ஏத்துக்கிடுவாக. 

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *