குறளின் கதிர்களாய்…(279)

செண்பக ஜெகதீசன்

 

குறளின் கதிர்களாய்…(279)

 உள்ளொற்றி யுள்ளூர் நாப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

– திருக்குறள் -927(கள்ளுண்ணாமை)

புதுக் கவிதையில்…

பிறர் அறியாவண்ணம்
எங்காவது ஒளிந்திருந்து
கள்ளுண்டு போதையில்
சாய்ந்தாலும்,
கண்டுபிடித்திடுவர் ஊரார்
ஆய்ந்தறிந்தே..
அதனால்
குடித்தவன் ஊரார்
கேலிக்கு ஆளாவான்…!

குறும்பாவில்…

ஒளிந்திருந்து பிறரறியாமல் கள்ளை
விரும்பிக் குடித்துச் சாய்பவன், ஊராரால்
கண்டறியப்பட்டு கேலிக்கு ஆளாவான்…!

மரபுக் கவிதையில்…

அடுத்தவர் அறிந்திடா வகையினிலே
அயலிடம் தன்னில் ஒளிந்திருந்தே
படுத்திடும் வகையிலே கள்ளுண்ணும்
பண்பிலா ஒருவனை ஊர்மக்கள்
அடுத்தே இருப்பிடம் கண்டறிவர்
அவன்குணம் அனைவரும் அறியவைப்பர்,
தடுத்திட வியலாத் தவறிதனால்
தள்ளப் படுவான் நகைப்பிற்கே…!

லிமரைக்கூ..

மறைவினில் கள்ளினை உண்டு
மயங்கிவிழுபனை ஊரார் எள்ளிநகைப்பர்,
அறிந்தவன் இருப்பிடம் கண்டு…!

கிராமிய பாணியில்…

குடிக்காத குடிக்காத
கள்ளக் குடிக்காத,
கொணத்தக் கெடுத்துக்
குடியக் கெடுக்கும்
கள்ளக் குடிக்காத..

ஒருத்தருக்கும் தெரியாத எடத்தில
ஒளிஞ்சிருந்து கள்ளக்குடிச்சி
உழுந்து கெடந்தாலும்
அவன எப்புடியும்
ஊரார் கண்டறிஞ்சிடுவாங்க,
அவனுக்கு
ஊர்சிரிக்கும் நெலம வருமே..

அதால
குடிக்காத குடிக்காத
கள்ளக் குடிக்காத,
கொணத்தக் கெடுத்துக்
குடியக் கெடுக்கும்
கள்ளக் குடிக்காத…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க