திறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்த புலமையாளர் – அ.ச. ஞானசம்பந்தன்

-மேகலா இராமமூர்த்தி

இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியைத் தம் பேச்சாலும் எழுத்தாலும் செங்கோல் செலுத்தியாண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர். அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள். அழுத்தந்திருத்தமான கணீரென்ற பேச்சு; அருவியின் வீழ்ச்சிபோன்ற தடையற்ற சொற்பெருக்கு; அதிலே பொங்கிவரும் புதுபுதுச் சிந்தனைகள் என்று அனைவரையும் வியக்கவைத்த வித்தகர் அவர். சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன்வரை அவர் பேசாத பொருளில்லை!

1916ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று திருச்சி, லால்குடியை அடுத்த அரசங்குடியில் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தார் அ.ச. ஞானசம்பந்தன். தந்தையார் சிறந்த தமிழ்ப் பண்டிதர். இலக்கண, இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் கரைகண்டவர். பெரிய புராணத்தை எழுத்தெண்ணிக் கற்றவர். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாருடன் இணைந்து திருவிளையாடற் புராணத்துக்கு உரை வரைந்தவர். பின்னர், லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் (Board High School) தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது அவருக்கு. பிற்காலத்தில் அதே பள்ளியில் அ.ச.ஞா. சேர்க்கப்பட்டார். தந்தையே அவருக்குத் தமிழாசிரியராகவும் திகழ்ந்தார்.

’பெருஞ்சொல் விளக்கனார்’ இலக்கியவாதி மட்டுமல்லர், சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளரும் ஆவார். தந்தையின் ஆர்வமும் புலமையும் தனயனுக்கும் இயல்பாகவே அமைந்திருந்தது. தமது ஒன்பதாவது அகவையில் துறையூரில் ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் தலைமையில் நடந்த ஒரு சைவ மாநாட்டில் கலந்துகொண்டு மெய்ப்பொருள் நாயனார் குறித்துச் சிறப்புறப் பேசிப் பாராட்டைப் பெற்றார் அ.ச.ஞா.

தம்முடைய பதினைந்தாவது வயதில் வ. உ. சிதம்பரனார் ஏற்பாடு செய்திருந்த சைவ சித்தாந்த மகாசபையில் பேசுவதற்காகத் தம் தந்தையாருடன் அ.ச.ஞா.  தூத்துக்குடி சென்றார். அப்போது நடந்த சுவையான சம்பவத்தை அவரே பின்வருமாறு பதிவுசெய்திருக்கின்றார்.

”தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்றைய ஊர்களைப் போலக் காலையிலும் மாலையிலும் அங்கு விழா நடைபெறாது. இரவு 9:30 மணிக்குத் தொடங்கி, விடியற்காலை 3 மணி 3:30 மணிவரை நடைபெறும். காரணம் வருபவர் அனைவரும் வணிகர்கள். ஆதலால் கடையை மூடிவிட்டு இரவில்தான் வருவார்கள். இந்த நிலையில் ஒரு பிரச்சினை எழுந்தது. அன்று இரவு கூட்டத்திற்குச் சொற்பொழிவாளர்களைப் போடும்போது ”சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளையைக் கடைசிப் பேச்சாளராகப் போட்டுவிடுங்கள்” என்றார் வ.உ.சி; எல்லாரும் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், என் வாய் சும்மா இருக்கவில்லை. சிதம்பரம் பிள்ளையைப் பார்த்து, “அது ஏன்?” என்று நான் கேட்டேன். அவர் மிக அமைதியாக, “பையா! ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் பேசிய பிறகு யாருடைய பேச்சும் எடுபடாது. அதனால்தாம் நிகழ்ச்சியை இவ்வாறு அமைக்கிறோம்” என்றார். நான் கொஞ்சங்கூடச் சிந்திக்காமல், ”அவர் என்ன கொம்பா?” என்று கேட்டுவிட்டு, அத்தோடு நிறுத்தாமல், “அவருக்குப்பின் நான் பேசுகிறேன்” என்றேன். என் தந்தையார் என்னைக் கடிந்துகொண்டார். ஆனால், பிள்ளையவர்கள், “அப்படியானால் இன்றிரவு, ரா.பி.க்குப் பின்னால் நீ பேசலாம்” என்றார். பிள்ளையைத் தவிர மற்ற அனைவரும் என்னைக் கோபத்துடன் பார்த்தனர்.

விழாத் தொடங்கியது. திரு. ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் பேசத்தொடங்க இரவு 1 மணிக்குமேல் ஆகிவிட்டது. நான் இரவு 10:30 மணிக்கே மேடையின் பின்புறம் தூங்கிவிட்டேன். சேதுப்பிள்ளையவர்கள் தம் பேச்சை முடிக்கும் தறுவாயில், வ.உ.சி. அவர்கள் எல்லையற்ற அன்புடன் என் முகத்தை ஈரத்துணியால் துடைத்துத் தூக்கம் கலையுமாறு செய்தார்கள். என்னை மேசையில் ஏற்றிவிட்டார்கள்; பின்னர் என்னை அப்படியே தூக்கிக் கொண்டார்கள். பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் தூக்கி வைத்துக்கொண்டே “பேசு ஐயா பேசு!” என்றார்கள். அவர் தூக்கிக்கொண்டிருந்தபடியால் என்னால் பேச இயலவில்லை; இறக்கிவிட்டதும் பேசத் தொடங்கினேன்.

என் பேச்சு முற்றுப்பெற்றதும் என் தந்தையாரைப் பார்த்து, “முதலியார், இவனை என்ன செய்யப் போகீறீர்கள்?” என்று கேட்டார் வ.உ.சி. அப்போது என் தந்தையார், ”இவனைக் கல்லூரியில் படிக்கவைக்க எனக்கு வசதியில்லை; எனவே வித்துவானுக்குப் படிக்கவைக்கப் போகிறேன்” என்றார். வ.உ.சி. உடனே, “நான் கப்பலோட்டிய காலத்தில் நீங்கள் வரவில்லையே; இவனைப் போய் வித்துவானுக்குப் படிக்கச் சொல்லுகிறீர்களே! ஏதாவது வழிசெய்து கல்லூரியில் படிக்க வையுங்கள் என்று தழுதழுத்த குரலில் கூறினார்” என அச்சம்பவத்தை நெகிழ்ச்சியோடு நினைவுகூரந்து, ’நான் கண்ட பெரியவர்கள்’ என்ற தம்முடைய நூலில் எழுதியிருக்கின்றார் அ.ச. ஞானசம்பந்தன்.

இச்சம்பவம், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளைக்கே சவால் விடும் அ.ச.ஞா.வின் துணிச்சலையும், மேடை ஆளுமையையும் பறைசாற்றுவதோடல்லாமல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் பெருந்தன்மையையும் பேரருள் உள்ளத்தையும் அங்கை நெல்லியென நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

1935இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பில் (Intermediate) சேர்ந்தார் அ.ச.ஞா. தமிழின் பெரும்பகுதி இலக்கண, இலக்கியங்களை வீட்டிலிருந்தவாறு ஏற்கனவே பயின்றிருந்ததால், பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியலை விருப்பப்பாடங்களாக எடுத்துப் படித்தார் அவர். அதைத்தொடர்ந்து இயற்பியல் ஹானர்ஸ் படிப்பில் சேரவிருந்தார். அப்போது தமிழ்த்துறைத் தலைவராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், அ.ச.ஞா.வின் தமிழ்ப் புலமையை நன்கு அறிந்தவராதலால், மிகவும் வற்புறுத்தி அ.ச.ஞா.வைத் தமிழில் முதுகலைப் படிப்பு படிக்க வைத்திருக்கின்றார்.

ந.மு. வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், மகாவித்துவான் இரா. இராகவையங்கார், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற இலக்கியப் பேரறிஞர்கள் பேராசிரியர்களாய் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அணிசெய்த பொற்காலமது.  அவர்களது அறிவின் ஆழத்தால் அ.ச.ஞா.வின் மேதைமை மேலும் சுடர்விட்டது.

அ.ச.ஞா. தம்முடைய பேராசிரியரான நாவலர் சோமசுந்தர பாரதியாரிடம் திருக்குறளுக்குப் பரிமேலழகரின் வைப்புமுறை தவறு என்றதும், ’ஏஎ இஃதொத்தன் நாணிலன்’ என்று தொடங்கும் கலித்தொகை 62ஆவது குறிஞ்சிக்கலிப் பாடலை நச்சினார்க்கினியர் பெருந்திணைப் பிரிவில் அடக்கியது தவறு; அஃது அன்பின் ஐந்திணையிலேயே அடக்கத்தக்கது என்று வாதிட்டு நாவலரை ஏற்கச்செய்தமையும் அ.ச.ஞா.வின் அறிவுக்கூர்மைக்குத் தக்க சான்றாகும்.

அப்போது பல்கலைக்கழகத் துணைவேந்தராக விளங்கிய மகாகனம் ’ரைட் ஹானரபிள்’ சீனிவாச சாஸ்திரியார், அ.ச.ஞா.வின் ஆங்கிலப் புலமை சிறந்து விளங்கக் காரணமானார். இசைமேதை எஸ். இராமநாதன், பேராசிரியர் க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், தோழர் பாலதண்டாயுதம் போன்றோர் அக்காலத்தில் அ.ச.ஞா.வோடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒருசாலை மாணாக்கர் ஆவர்.

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றபின் 1942இல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார் அ.ச.ஞா. அக்கல்லூரியில் 1956 வரை பணியாற்றினார். பின், இந்திய வானொலியின் சென்னை அலுவலகத்தில் நாடகங்கள் தயாரிப்புப் பிரிவின் பொறுப்பு அலுவலராகப் பணியாற்றினார்.  தமிழ்நாட்டுப் பாடநூற் கழகத்தின் தலைவராகச் சிலகாலம்  பொறுப்பில் இருந்தார். 1970இல் மதுரைக் காமராசர் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியிற்சேர்ந்து 1973இல் அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார். 

தமிழொடு நல்ல ஆங்கிலப்புலமையும் கைவரப்பெற்ற அ.ச.ஞா., மேலைநாட்டுத் திறனாய்வாளர்களின் கோட்பாடுகளைத் தமிழ்ப்படுத்தித் தம் விரிந்த தமிழ்ப்புலமையால் அவற்றிற்குத் தக்க சான்றுகளைத் தமிழிலக்கியங்களிலிருந்து பொருத்திக்காட்டித் திறனாய்வுத் துறைக்குக் கால்கோள் செய்தவர் ஆவார்.

திறனாய்வுத்துறைக்கு மட்டுமன்று! ’திறனாய்வு’ என்ற சொல்லையே தமிழுக்கு அறிமுகம் செய்தவர் அ.ச.ஞா.வே ஆவார். அதுவரை ’விமர்சனம்’ என்று வழங்கப்பட்டுவந்த சொல்லுக்குத் ’திறனாய்வு’ எனும் புதுப்பெயர் தந்தவர் அவர். ஆரம்பத்தில் அதற்குப் பலத்த எதிர்ப்பு இருந்திருக்கின்றது. ஆனந்தவிகடன் பத்திரிகை, ”திறனாம்…ஆய்வாம்!” என்று அதனைக் கேலி செய்து தலையங்கம் எழுதியதையும், பத்தாண்டுகளுக்குள் அப்பத்திரிகையே அச்சொல்லைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டதையும் அ.ச.ஞா.வே தம் நூலொன்றில் குறிப்பிடுகின்றார். அதுபோலவே ’டிராஜடி’ (Tragedy) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ’அவலம்’ என்ற தமிழ்ச்சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவரும் அவரே.

ஏராளமான ஆய்வு நூல்கள், எண்ணிலடங்கா இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சிப் பொழிவுகள் என அ.ச.ஞா. தமிழுக்கு ஆற்றியிருக்கும் அரும்பணிகள் அளப்பரியன. எல்லாருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் ஆனந்த விகடனில் அவர் எழுதிய ‘குறள் கண்ட வாழ்வு’ எனும் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். தாகூர், ஜான் டெவி (John Dewey), தொரோ (Henry David Thoreau) போன்றோரது நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் அவர். தம்பியர் இருவர், கிழக்கும் மேற்கும், மணிவாசகர், தத்துவமும் பக்தியும் போன்ற பல நூல்கள் அவரது நுண்மாண் நுழைபுலத்தைப் பறைசாற்றுவன.

ஆங்கில இலக்கியம் பயிலும் மாணாக்கர்கட்கு ஹட்சனின் (William Henry Hudson) இலக்கியத் திறனாய்வு (Literary Criticism) போலத் தமிழிலக்கியம் பயில்வாருக்கு அவருடைய ‘இலக்கியக் கலை’  சிறந்த இலக்கியக் கைகாட்டி எனலாம். 1985-இல், ஏ.வி.எம். அறக்கட்டளைக்காகப் பன்னிரண்டே நாள்களில் அவர் எழுதிய ‘கம்பன் புதிய பார்வை’ என்ற திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தமை அவரது ஆராய்ச்சித் திறனின் ஆழத்தையும் விரைவையும் அவனிக்கு அறியத்தருகின்றது.

’இளங்கோவடிகளின் சமயம் எது?’ என்ற நூலில் இளங்கோவடிகளும், கோவலனும் சமணர் அல்லர் என்பதைத் தக்க சான்றாதாரங்களோடு நிறுவியுள்ளார் பேராசிரியர் அ.ச.ஞா.

இவரது ’பெரிய புராண ஆய்வு நூல்’, சைவ அறிஞர்களால் பெரிதும் போற்றப்படும் நூலாகும். அதில் பெரியபுராணம் தோன்றிய காரணம், அதன் காலப் பின்புலம், சேக்கிழாரின் நூல்நோக்கம், படைப்பாற்றல் திறன், பெரிய புராணத்தின் மூலம் அவர் கூறவந்த கருத்து போன்ற தகவல்களையும், வேதத்திற்கும் சைவத்திற்கும் உள்ள தொடர்பு, உருத்திரன் உருத்திர சிவனாகி, சிவ வழிபாடு முக்கியத்துவம் பெற்றமை, சங்ககாலம் முதல் காப்பியக் காலம்வரை தமிழகத்தில் நிகழ்ந்த சிவ வழிபாட்டுமுறை, தேவார காலத்திற்கு முன்னும் பின்னுமான சிவ வழிபாட்டு நிலை போன்ற பல அரிய செய்திகளை விரிவாக ஆய்ந்து விளக்கியிருக்கின்றார். அந்நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கும் ’ஸ்ரீ ருத்திரம்’ பற்றிய விளக்கம் மிகச் சிறந்த ஒன்றாகும்.

பேராசிரியர் அ.ச.ஞா.வின் மாலைக்கால வாழ்வு (evening of his life) ஆங்கில மாக்கவி மில்டனின் (John Milton) வாழ்வை நிகர்த்ததாய் அமைந்திருந்தது. அக்கவிஞன் தன் பார்வையை இழந்த நிலையிலேயே துறக்க நீக்கம் (paradise lost), துறக்க மீட்சி (paradise regained) போன்ற ஒப்பற்ற காப்பியங்களைப் படைத்தான். அ.ச.ஞா.வும் அவ்வாறே நீரிழிவு நோயால் கண்பார்வை பறிபோன முதுமை நிலையிலும் ஆய்வுப்பணிகளில் ஓயாது ஈடுபட்டார். ஏதேனும் நூல் தேவையாக இருந்தால் கூட, இல்லத்தில் அந்நூல் வைக்கப்பட்டிருக்கும் இடம், நூலின் தலைப்பு, அதன் அட்டையின் நிறம் என எல்லாவற்றையும் குறிப்பிட்டுத் தெளிவாகக் கூறுமளவிற்கு நிகரற்ற நினைவாற்றல் படைத்திருந்தார். அவர் குரல்வழி வந்த கருத்துக்களைத் தம் விரல்வழி எழுத்துருவாக்கித் தந்தார்கள் அ.ச.ஞா.வின் அருமை மகளார் மீராவும், யாழ்ப்பாணத் தமிழன்பர்  மார்க்கண்டு என்பவரும். அவ்வாறு வெளிவந்தவையே திருவாசக விரிவுரை, இராமன் பன்முக நோக்கில் முதலிய அற்புத நூல்கள்.

பேராசிரியர் தம் இளமைக்காலத்தில் எழுதிய நூல் ’இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.’ அஃது இராவணனின் சிறப்பை மாட்சியுடன் எடுத்துக்காட்டுவது. அதுபோல் அவர் தம் முதுமைக்காலத்தில் எழுதிய ’பன்முக நோக்கில் இராமன்’ எனும் நூல் இராமனின் பெருமைகளைப் பல்வேறு கோணங்களில் பரக்கப் பேசுவது. பரபக்கம் பேசிச் சுபக்கம் காட்டும் சமயக்கணக்கர்போல் இந்நூலில் எதிர்த்தட்டுத் தலைவனின் இயல்புகளைக் காட்டி நடையில் உயர் நாயகனான இராமனின் உயர்பண்புகளை நிலைநிறுத்துகின்றார் பேராசிரியர் அ.ச.ஞா.

தமிழ் மூதறிஞர், தமிழ்ச் செம்மல், இயற்றமிழ்ச் செல்வர், செந்தமிழ் வித்தகர், கம்பன் மாமணி போன்ற பல பட்டங்களையும், ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது, திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, உட்படப் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவரான அ.ச.ஞா, 2002ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் நாள் தம்முடைய 85ஆவது அகவையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

பரந்த கல்வியும், ஆழ்ந்த அறிவும், அறிவியல் பார்வையும் பெற்று, இலக்கியத் திறனாய்வுக்குத் துறைக்கு முன்னோடியாய்த் திகழ்ந்து, புதிய நூல்கள் பலவற்றை ஆய்வுநோக்கில் படைத்தளித்திருக்கும் பேராசிரியர் அ.ச.ஞா.வின் அரும்பணி,  தமிழர்கள் அனைவரும் போற்றிப் பயன்கொள்ளத்தக்கது.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. https://ta.wikipedia.org/wiki/அ._ச._ஞானசம்பந்தன்
  2. https://www.dinamani.com/specials/ nool-aragam/2017/oct/09/அசஞானசம்பந்தன்-2786757.html
  3. நான் கண்ட பெரியவர்கள் – கங்கை புத்தக நிலையம், 13 தீனதயாளு நகர், சென்னை – 600 017

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க