மனக்கேணி
பாஸ்கர் சேஷாத்ரி
என் சின்ன வயதில் குடி இருந்த வாடகை வீடு மிக சின்னது. அவ்வளவு சின்ன வீடு என்ற சிந்தனையே வராத அறியாமை. சுற்றி நாலு குடித்தனம். ஒரு பெரிய கிணறு. எல்லோருக்கும் நீர் இறைத்து கொடுப்பது தான் கிட்டத்தட்ட என் வேலை.
அவர்களுக்கும் அது வசதி. சின்ன சலுகை என்னவெனில் அங்கேயே தண்ணீர் இறைத்து ஜோவென குளிக்கலாம். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
ஒரு பழைய பிளாஸ்டிக் டப்பாவில் லைப்பாய் சோப்பு. சுமார் ஒரு பத்து முறை கிணற்றில் விழுந்து இருக்கும் -கிணற்று நீருக்கு மெல்ல தான் கரையும். ஆனால் அங்கே குளிக்கும் ஆனந்தம் வேறங்கும் கிடைக்காது. ஒரு பித்தளை குடம் அடிபட்டு நசுங்கி ஒரு ஓரமாய் எப்போதும் இருக்கும் கண்ணில் சோப்பு பட்டு உள்ளே நானே பல முறை தள்ளி இருப்பேன்.
ஒரு நாள் வீட்டுக்காரர் அங்கே குளிக்க கூடாது என சொல்லிவிட்டார். எவ்வளவு முறை கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்த இரண்டு நாளில் மின்சாரத்தை பத்து மணிக்கு மேல் எல்லோருக்கும் நிறுத்தினார். கேட்டதற்கு பொறுப்பான பதில் இல்லை.
நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என ஒருவர் சொன்னதற்கு அட்வான்ஸ் பணத்தை தர முடியாது என சொல்லிவிட்டு வாடகையில் கழிக்க சொல்லி விட்டார். அவர் பால் வியாபராம் செய்யும் வீட்டுகாரர். கோபமான பக்கத்துக்கு வீட்டு குடித்தனக்காரர் அவரிடம் பால் வாங்குவதை நிறுத்தினார். அடுத்த நாள் மாசா மாசம் எம் ஈ எஸ் பணத்தை கட்ட முடியாது என ஒருவர் சொன்னார்.
இரண்டு நாள் பொது கதவை யாரும் மூடவில்லை. அந்த வீட்டுக்கார குழந்தைகளுக்கு ஒரு மாமி இலவச டுயுஷன் எடுப்பார். அதுவும் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட யூனியன் மாதிரியாக அது மாறி விட்டது.
வீட்டுக்காரர் மகன் எங்களிடம் வந்து பேசினார்.
எல்லோரும் திடீரென சமாதானமாக போய் விட்டார்கள். அந்த மாமி வீட்டுக்காரர் பேரனை கொஞ்ச ஆரம்பித்தாள். இன்னொருவர் புத்துக்கு பால் தெளிக்க வெள்ளிக்கிழமை இரண்டு லிட்டர் பசும்பால் கேட்டார்.
ஆனாலும் கிணற்றில் நீர் இறைத்து குளிக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எவ்வளவு கேட்டு பார்த்தும் சாரி என சொல்லி விட்டார் . சட்டென என்னை கழட்டி விட்டது போல உணர்ந்தேன். ஏன் இப்படி இவர்கள இப்படி என யோசிக்க எந்த பதிலும் புரிபடவில்லை. இரண்டு நாள் கழித்து கிணற்றில் தூர் வார இரண்டு பேர் வந்து வேலை முடித்து அங்கேயே குளித்து விட்டு சென்றார்கள்.
தொடர்ந்து மற்ற அண்டை வீட்டுக்கார்களும் குளிக்க துவங்கினார். நானும் குளிக்க தீர்மானித்து அங்கே சென்றவுடன் ஒரு திடீர் மனமாற்றம். இப்படி ஒரு வெறியாக தணித்து கொள்வது போன்ற ஒரு ஆசை ஒரு தவறு என புரிந்தது. அன்று முதல் கிணற்றின் அடியில் குளிக்கும் பழக்கம் ஒழிந்தது.
ஒரு தீவிரமான பழக்கம் அல்லது பெரும் ஆசை போனதில் ஒரு பெரிய ஆனந்தம். சார்ந்து இல்லை என்ற நிலையே ஒரு பெரும் சந்தோஷம். கிட்டத்தட்ட இது அந்த காலத்தில் ஒரு பாடம்.
பாடம் கொடுத்தது கொஞ்சம் தெளிவு .