மரபின் மைந்தன் முத்தையா  

வணங்கா முடியும்
வணங்கும் திருவடி
இணங்கா அசுரரும்
இணையும் மலரடி
துணங்கை வென்று
துலங்கும் கழலடி
குணங்கள் கடந்த
கயிலைச் சிவனடி

வேதப் பொருளென
விளங்கும் திருவடி
ஆதிச் சுடர் என
ஆடும் கழலடி
நாதமும் தாளமும்
நாடும் மலரடி
மாதொருபாகன்
மந்திரத் திருவடி

சித்தர்கள் தேடிச்
செல்லும் திருவடி
பக்தர்கள் அஞ்சிப்
புல்லும் திருவடி
சத்திய ஞானியர்
சொல்லும் திருவடி
வித்தகன் சிவனின்
வெல்லும் திருவடி

தென்னாடுடைய
தெய்வக் கழலடி
எந்நாட்டவரும்
எண்ணும் திருவடி
பொன் கைலாயம்
பொருந்தும் பொன்னடி
தென் கைலாயம்
தோயும் மலரடி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க