குறளின் கதிர்களாய்…(284)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(284)

எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்.
– திருக்குறள் -746 (அரண்)

புதுக் கவிதையில்…

 உள்ளிருக்கும் மக்கள்
தேவைக்கு
வேண்டிய பொருட்களெல்லாம்
உள்ளே இருப்பதுவாய்,
பகைவரால் அழிவு வருகையில்
வராமல் அதைத் தடுக்கும்
வல்லமைமிகு
வீரரைக் கொண்டதுதான்
வலிய அரண்…!

குறும்பாவில்…

தேவைக்குரிய பொருட்களெல்லாம்
உள்ளிருப்பதுவாய், வருபகை தடுத்தழிக்கும்
வீரரைக் கொண்டதுதான் அரண்…!

மரபுக் கவிதையில்…

 உள்ளே யிருக்கும் மக்களவர்
உடனடித் தேவைப் பொருளெல்லாம்
உள்ளே கிடைக்கும் வகையதுவாய்,
ஊறிக் கிடந்த பகைமீறி
வெள்ள மெனவே படையுடனே
வேற்று நாட்டார் தாக்கவந்தால்
தள்ளித் தடுத்திடும் திறமைமிகு
தளரா வீரரும் அரணாமே…!

லிமரைக்கூ..

பொருளொடு வீரருளதே கோட்டை,
தேவைப்பொருளெலாம் கிடைத்திடும் உள்ளே
தடுப்பர் வீரர் பகையாம் கேட்டை…!

கிராமிய பாணியில்…

கோட்டயிது கோட்ட,
மக்களுக்குப்
பாதுகாப்பான கோட்டயிது..

குடிமக்களுக்குத்
தேவயான பொருளெல்லாம்
தேடி அலயாம
உள்ளேயே கெடைக்கும்,
அதோட
பகயாளி படயெடுப்பப்
பயப்படாமத் தடுக்கிற
தெறமவுள்ள வீரருகளுந்தான்
வலுவான கோட்ட..

கோட்டயிது கோட்ட,
மக்களுக்குப்
பாதுகாப்பான கோட்டயிது..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.