நஞ்சு கலவாத நட்பு
நிர்மலா ராகவன்
(பழகத் தெரிய வேணும் – 3)
சீனப்பெண்கள் பிறருடன் நட்புகொள்ளும் வழி எது தெரியுமா?
முதல் பெண்: ஐயோ, இப்போது சிக்கன் என்ன விலை விற்கிறது, பார்த்தீர்களா!
இரண்டாமவள்: ஸேலோ (செத்தோம்!).
மூன்றாவது: நாம் என்ன செய்தாலும், மாமியாரை மட்டும் கவரமுடியாது. மாமியார் கர்ப்பமாக இருந்தபோது, எந்தவிதமான உடல் உபாதையும் இருந்ததில்லை. நாம்தான் வியாதி கொண்டாடுகிறோமாம்.
இரண்டாமவள்: ஹேலோ ஹேலோ ஹேலோ! (ஆமாம், ஆமாம், ஆமாம்).
நல்லதோ, கெட்டதோ, எதிரிலுள்ளவர்கள் சொல்வதை அப்படியே ஆதரிக்க வேண்டும். நல்ல விஷயமாகத் தோன்றினால், மூன்று ‘ஆமாம்’.
இவ்வாறு, உரையாடல்வழி நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள்.
எனக்கு அம்மொழி தெரியாது. ஆசிரியைகளின் பொதுவறையில் இவ்விரண்டு வார்த்தைகளும் அடிக்கடி ஒலிக்கும். அவர்களைக் கேட்டு, அர்த்தம் தெரிந்துகொண்டேன்.
இத்தகைய நட்பு ஆழமானதல்ல. பொழுதைக் கழிக்க ஒரு வழி. அவ்வளவுதான். ஒருவர் அருகில் இல்லாதபோது அவரைப்பற்றிப் பிறரிடம் குறையும் கூறுவார்கள்.
பார்ப்பவர்களிடமெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கும் குணமும், பொறாமையும் நட்பை வளர்க்குமா?
துஷ்டரைக் கண்டால்..
ஒரு கோப்பையில் நஞ்சு.
இன்னொன்றில் நஞ்சு கலந்திருக்கலாமோ என்ற ஐயம்.
இவற்றில் எதைக் கையில் எடுப்போம்?
நட்பும் இப்படித்தான். ஒருவனுக்கு நற்பண்புகள் இல்லை என்று தெரிந்தும், ‘அவனை நான் மாற்றிவிடுவேன். அவனுடைய தீயகுணங்கள் எனக்குள் தொற்றிவிடாது. நான் மனோதிடம் உள்ளவன்,’ என்று சாதிப்பது அறிவீனம். நம் குறைகளை உணராது, அல்லது ஏற்க விரும்பாது, நமக்கு நாமே அதிக மதிப்பெண்கள் அளித்துக்கொள்வதால் வரும் வினை. சறுக்குவது எளிது.
ஒருவரது மகிழ்ச்சியை எப்படியெல்லாம் குலைக்கலாம் என்று கணக்குப் போட்டுக்கொண்டே இருப்பார்கள் நண்பர்கள் என்ற போர்வையில் நடமாடுபவர்கள்.
கதை
உயர் அதிகாரியான கேசவனின் மனைவி, பலர் முன்னிலையில் அவனைப் பழிப்பாள்.
அதனால் அவனுக்குத் தன்கீழ் உத்தியோகம் பார்த்த முரளியின் இன்பமான இல்லற வாழ்க்கையைக் கண்டு பொறாமை.
முரளியை மனைவி வத்சலாவுடன் தன் இல்லத்திற்கு வரும்படி அழைத்தான் கேசவன். அவளுக்கு முரளியினுடைய குடிப்பழக்கம் பிடிக்காது என்று அவனுக்குத் தெரியும்.
நண்பன் சிறுநீர் கழிக்க உள்ளே போனதும், “நேற்று வெகு நேரம் கழித்துத்தானே முரளி வீட்டுக்கு வந்தான்? என் வீட்டில்தான் குடித்துக்கொண்டிருந்தான்,” என்று வத்தி வைத்தான்.
வத்சலா எந்தவித அதிர்ச்சியையும் காட்டாதது அவனுக்கு ஏமாற்றம்தான்.
வீடு திரும்பியதும், “இந்த மனிதனைப்போய் நண்பன் என்று நம்பினீர்களே, பாவம்!” என்றபடி, நடந்ததை விவரித்தாள் அவள்.
“விளையாட்டாக அப்படிச் சொல்லி இருப்பார்!” என்று அதிகாரிக்குப் பரிந்தான் முரளி.
மறுமுறை சந்தித்தபோது, “உன் மனைவி அன்று ஏதாவது சண்டை பிடித்தாளா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் கேசவன்.
“இல்லையே!” என்றபோது, முரளிக்கு மனைவி கூறியதில் இருந்த உண்மை புரிந்தது.
என்ன இருந்தாலும், மேலதிகாரி. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்த்தானே ஆகவேண்டும்!
பல வருடங்களுக்குப்பின், “உன் மனைவி வத்சலாவுக்கு நீ நிகரே இல்லை. நான்தான் அவளைத் திருமணம் செய்துகொண்டிருக்கவேண்டும்,” என்று கேசவன் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தபோது, முரளிக்கு வெறுத்துப்போயிற்று.
குடிப்பழக்கத்தால் இணைந்த இருவரும் நிம்மதியற்று, மற்றவரைவிட்டு விலக முடியாது தவித்தனர். இன்னும் எப்படியெல்லாம் இவனைக் கவிழ்க்கலாம் என்று யோசித்தான் கேசவன். மேலும் மேலும் தீய பழக்கங்களில் முரளியை ஈடுபடுத்த முயன்றபோது, அவன் விலகினான்.
ஏதோ ஒரு தீய பழக்கத்தால் ஒன்று சேர்ந்து, அதை நெருங்கிய நட்பு என்று மகிழ்பவர்களுக்கு இறுதியில் கசப்புதான் மிஞ்சும்.
மாறாக, நல்ல நண்பராக இருந்தால், ஒன்றாக மது அருந்தினாலும், ‘இல்லவே இல்லை,’ என்று பொய்சத்தியமாவது செய்வார்!
கதை
நள்ளிரவில் ஒரு நண்பர் சிவநேசனை அழைத்து, “என் கார் நின்றுவிட்டது. உதவி செய்ய உடனே வா,” என்று அழைப்பு விடுத்தார்.
இருவரும் பதின்ம வயதிலிருந்தே சிறந்த நண்பர்கள். ஆனாலும், தூக்கக்கலக்கத்தில் எழுப்பி உதவி கேட்கிறானே என்று சிவநேசனுக்கு எரிச்சல்.
“நான் போகப்போவதில்லை,” என்று, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டார்.
“உங்களுக்கு ஒரு ஆபத்து என்றுல் அவர் வருவாரா?” என்று கேட்டாள் மனைவி.
“வருவான்!”
“நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நம்பித்தானே அழைக்கிறார்! நீங்கள் போகத்தான் வேண்டும்,” என்று மனைவி வற்புறுத்தலாகக் கூற, சிவநேசன் எழுந்தார்.
‘நான் என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பது ஏமாளித்தனம். இத்தகையவர்களை ‘நல்லவர்’ என்று பாராட்டுகிறவர்கள் அனேகமாக சுயநலவாதிகளாக இருப்பார்கள்.
கதை
எவ்வளவு விஷயங்களை இந்த ஆசிரியை தெரிந்து வைத்திருக்கிறாள் என்று மாணவர்களை பிரமிக்கவைக்கும் நோக்கத்துடன் ரோஸ் என்ற சீன ஆசிரியை இந்தியாவைப்பற்றி என்னிடம் ஏதாவது கேட்டுத் தெரிந்துகொள்வாள்.
அடிக்கடி இது தொடர்ந்தது.
‘நெருங்கிய தோழிதானே!’ என்றெண்ணி, ஒரு நாள் நான் அவளிடம் ஒரு புத்தகத்தை இரவல் கேட்டேன்.
“மலிவுதான். உங்களால் வாங்கிக்கொள்ள முடியாதா!” என்றாளே, பார்க்கவேண்டும்!
அடுத்தடுத்து வந்த நாட்களில், என்னிடம் பழையபடி உறவுகொண்டாடி, ஏதேதோ சந்தேகம் கேட்டாள்.
விறைப்பாக எழுந்த என் ஒரே பதில்: “தெரியாது”.
என் கோபம் புரிந்து, அந்த புத்தகத்தை எடுத்துவந்து கொடுத்தாள்.
நான் அதைத் தொடவே மறுத்துவிட்டேன்.
முகத்தில் அழுகையைக் காட்டினாள்.
‘நாடகமாடுகிறாளோ!’ என்ற சந்தேகம் எனக்கு. இப்படிப்பட்டவர்களுடன் உறவாடுவதைவிட தனிமையே மேல் என்று தோன்றிப்போயிற்று.
தம்மை உயர்த்திக்கொள்ளும் முயற்சி
சிலர் ஒருமுறை சந்தித்தபின், அடிக்கடி நம்முடன் உறவு கொள்ள முயற்சிப்பார்கள்.
கதை
வேற்றூரிலிருந்து வந்திருந்த மேரியை ஒரு பொதுநிகழ்ச்சியில் சந்தித்தேன். சில நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.
மறுநாளே அவளிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. பெரிதாக எதுவும் சமாசாரம் கிடையாது.
அடுத்து வந்த சில மாதங்களில், நாள் தவறாது அழைக்க ஆரம்பித்தாள். அப்படித் தினமும் பேச என்ன இருக்கிறது? சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லியதுடன், திரைப்படப்பாடல்களின் வரியைக் கேட்பாள்.
பிறரைப்பற்றி ஓயாது குறைகூற ஆரம்பித்தாள். அவர்கள் எனக்கும் தெரிந்தவர்கள் என்பதால் தர்மசங்கடமாக இருந்தது. என்னைப்பற்றி அவதூறாகச் சிலர் பேசியதையும் என்னிடமே கூறினாள்.
கோலாலம்பூரிலிருந்து தொலைதூரத்தில் நிகழ்ந்த ஓர் இலக்கிய நிகழ்வுக்கு என்னை உரையாற்ற அழைத்திருந்தார்கள்.
“பார்வையாளராக நானும் வருவேன். நீங்க என்னோட அறையிலதான் தங்கணும்,” என்றாள் மேரி, பிடிவாதமாக.
‘சில நிமிடங்களிலேயே அவ்வளவு பேரைக் குறை கூறுவாளே! இரண்டு நாட்கள் முழுவதும் இவளுடன் எப்படிக் கழிப்பது!’ என்று அயர்ந்தேன்.
மாடியும் கீழுமாக விஸ்தாரமாக இருந்த இடத்தில், ஊடகத்துறையிலிருந்த இளம்பெண் ஒருத்தியுடன் நான் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நான் அவளுடன்தான் தங்க வேண்டும் என்று மேரி நிர்வாகத்தினருடன் சண்டை பிடித்தாளாம். அவர்கள் ஒப்பவில்லை.
என்னைச் சந்தித்தபோது, “நீங்க கேக்கலியா, என்கூடத்தான் தங்குவேன்னு?” என்று கேட்டபோது, “அவர்களுக்குத் தலைக்குமேல வேலை, பாவம்! எதுக்கு நான் வேற கஷ்டப்படுத்தணும்?” என்றுவிட்டேன்.
“ஒங்க கூட இருக்கிற பெண்ணை ஒங்களுக்கு மொதல்லேயே தெரியுமா?”
“தெரியாது”.
இந்த இரண்டு கேள்விகளையும் பல முறை கேட்டபோது, என் பொறுமை மீறியது. “எதுக்கு ஓயாம பேசறது? ஒங்களுக்குப் பொழுதுபோகாட்டா, லைப்ரரிக்குப் போறது! இல்லே..,” என்று சிடுசிடுத்தேன்.
அதிலிருந்து அவள் என்னை அழைப்பதில்லை.
‘படித்த, பணக்காரப் பெண்ணைக் காதலிக்கப்போகிறேன்,’ என்று முடிவெடுப்பதுபோல், ‘இவளுடன் நடந்தால் என்னையும் கவனிப்பார்களே!’ என்ற எதிர்பார்ப்பா? (காதலோ, நட்போ இப்படி முன்னேற்பாடுடன் வருவதில்லை). நம் நிலை சரிந்தால் மறந்துவிடுவார்கள்.
உண்மையான நட்பு
பத்து ஆண்டுகள் ஒன்றாகப் படித்து, அல்லது ஒரே துறையில் ஈடுபட்ட ஓரிருவர் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கிறார்கள். குறைகளைப் பெரிதுபடுத்தாது, ஒருவர் மற்றவரை அப்படியே ஏற்கும் தன்மை கொண்டவர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டி, ஒருவரையொருவர் ஊக்குவிக்கிறார்கள்.
இம்மாதிரியான நண்பர்கள் உடலால் பிரிந்துபோனாலும், மனதால் விலகுவதில்லை.