பறப்பதே வாழ்விங்கு
பாஸ்கர் சேஷாத்ரி
பேருடம்பு இங்கே கால் பதிந்து நிற்கிறது
மனமோ ஹோவென வானில் கலந்து கிடக்கிறது
இயக்கம் நின்ற சிந்திப்பில் கண்கள் செருகி நிற்கின்றன
இது இல்லை இது இல்லை என நில்லாத பயணம்
பேரானந்தத் தவிப்பிலும் கிடந்தே படபடக்கிறது மனம்
இலக்கை நோக்கும் அம்பு போல ஓர்திசை வேகம்.
வண்ண வண்ணக் காற்றாடிகளைத் தாண்டிவிட்டேன்
பறவைகளே அரண்டு சிறகடிப்பதை நிறுத்தின.
இரைச்சல் கொண்ட பூமி சற்றே விலகிப் போனது
சப்தமற்ற பேரண்டம் விரிந்துகொண்டே செல்கிறது
ஆதியும் இல்லாது, அந்தமும் புரியாத அல்லாட்டம் .
தேடும் பொருள் சுகம் இல்லை, தேடுவதே சுகமிங்கு .
பறந்தே களைத்து, பாதையே மறந்து போனேன்
பாதையே தேவையில்லை பறப்பதே வாழ்விங்கு .
காற்றில் கலந்து கரைந்தே போவேன் ஓர் நாள்
தேடாதீர் என்னை எங்கும் நீரும் மறைந்து போவீர் .