கௌரி நோன்பு
இராஜ ராஜேஸ்வரி
மனம் போல மகேசனில் பாதியாகும் வரத்தினை மகேஸ்வரி பெற்றது கேதார கௌரி விரதத்தினைக் கடைப்பிடித்துத்தான். மணக்கோலத்தில் இருக்கும் சிவ-பார்வதியைத் தரிசிப்பது சீரான வாழ்வும், சிறப்பான இல்லறமும் அமைய உதவும் என்பது ஐதிகம்.
அனைத்து தம்பதிகளும் அன்பில் குறைவின்றி இணை பிரியாது வாழ அருள் பாலிக்கும் உமா சகித மூர்த்தியைத் தரிசிப்பதால் உறவில் உடைந்து போன தம்பதியர் கூட உளம் மாறி ஒன்று சேர்வர். சகல சௌபாக்கியங்களும் நல்கி நமக்கு எந்த வித துன்பமும் ஏற்படாது “(பாது) காப்பு” தரும் காப்பு விரதம் – கேதார கௌரி விரதம்.
ஆண்டு தோறும் புரட்டாசி மாதச் சுக்கில பட்ச தசமி முதல், கிருஷ்ண பட்சத்துச் சதுர்த்தசி வரை (ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை) இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும். சிவ-சக்தி அருளால் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீடுபேறடைவர் என புராணங்கள் கூறும் கேதார கௌரி விரதம், இந்த வருடம் 06.10.2011 வியாழக்கிழமை ஆரம்பமாகி 26.10.2011 புதன்கிழமை வரை அமைவதாக சோதிடம் கணித்துள்ளது.
வண்டின் உருவம் பெற்றதால் ‘பிருங்கி முனிகள்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்ற பிருங்கி மகரிஷி வண்டின் உருவம் பெற்றுப் பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே வலம் வந்து பயபக்தியோடு வணங்கினார்.
பிருங்கி முனிவர் உலக இன்பத்தை நாடுபவர் அல்ல. மோட்சத்தை நாடும் அவர் உலக இன்பங்களை நல்கும் சக்தியை வணங்காது மோட்சத்தை நல்கும் சிவனை வணங்கியதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.
இதனைக் கேள்வியுற்ற லோகமாதா கோபமுற்றவளாக தனது சக்தி இல்லாமல் மோட்சத்தை நாடும் சிவபக்தரான பிருங்கி முனிவர் மோட்சத்தை அடைய முடியாது என்பதுடன் ஒரு அடி கூட எடுத்து வைத்து தனது இருப்பிடத்தைக் கூட அண்ட முடியாமல், “நிற்க முடியாமல் போகக் கடவாய்’ எனச் சாபமிட, சக்தியின் சாபம் பெற்று நிற்க முடியாது சக்தி அனைத்தையும் இழந்த முனிவர் தள்ளாடியவாறே நிலத்தில் விழப் போனார்.
இந்நிலையில் தன் பக்தனைக் காப்பாற்றுதல் என் தர்மம் எனக் கூறி பிருங்கி முனிவரின் கையில் தண்டு (ஊன்றுகோல்) ஒன்றைச் சிவன் கொடுத்தார். தண்டினைப் பெற்றுக் கொண்ட முனிவர் சிறிது சக்தியைப் பெற்றவர் போல் ‘லோகநாயகனுக்கு கோடானு கோடி வணக்கம்’ என மீண்டும் பரமேஸ்வரனை மட்டும் வணங்கித் தனது ஆசிரமத்தை அடைந்தார்.
பிருங்கி முனிவர் மட்டுமன்றி தனது கணவரான பரமேஸ்வரனும் தன்னை அவமதித்து விட்டார் என்ற கொடிய கோபத்தில் கயிலையை விட்டு நீங்கிப் பூலோகத்தில் வால்மீகி மகரிஷி சஞ்சரிக்கிற பூங்காவனம் வந்தடைந்தாள். வால்மீகியும் பூங்காவனம் பொலிவுற்றதன் காரணம் அம்பிகையின் வரவே என அறிந்து, அவளை அர்ச்சித்து பூஜை செய்து விட்டு அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும்” என்றாள்.
கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார். முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாளும் சிவனைப் பூஜித்து சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரன் என்று எல்லாரும் போற்றும்படி சிவனின் இடப்பாகத்தில் அமர்ந்து அருள் புரிகின்றாள்.
சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் இவ்விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்குக் கூறியருளினார். விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனிப் பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். மேலும் உஜ்ஜயனி தேசத்து வைசிய குலத்துப் பெண்களான புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தார்கள். மிகவும் வறுமையினால் வாடிய அப்பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிக்க சிவபெருமான் தோன்றி இவர்களுக்கு வேண்டிய செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் கொடுத்தருளினார்.
கணவனும் மனைவியும் ஓருயிர், ஈருடல் என்பதை உணர்த்தும் விரதம்தான் கேதார கௌரி விரதம். ஆயுள் முழுக்க ஆதர்ச தம்பதிகளாக வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அதை நிறைவேற்றித் தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு.
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டான் நஞ்சை உலக முய்யவே
*- திருஞானசம்பந்தர்*
விரதத்தின் போது தினமும் லிங்காஷ்டகம் படித்தல் அவசியம்.
லிங்காஷ்டகம்
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம்
தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம்
பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்
வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம்
கேதாரம் என்பது இமயமலைச் சாரலைக் குறிப்பதாகும். இமயமலைக் கேதாரப் பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்த நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப் பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்றபடியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. மணமாகிய பெண்கள் தங்கள் மாங்கல்யம் தொடர்ந்தும் மங்களமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தினை அனுஷ்டிக்கின்றனர். மங்கள கரமான வாழ்க்கையை வேண்டி ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
கௌரி நோன்பை அனுஷ்டித்து கைமேல் பலன் கண்டவர்கள் பலர். சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. கேதார கௌரி விரத்தின் பிரசாதம் அதிரசம் ஆகும். வெல்லப்பாகு, பச்சரிசி மாவு கலந்து செய்யப்படும் பக்ஷணம் இது . பெண்கள் திருமணம் ஆகிச் செல்லும் போது இந்த அதிரசத்தைக் கேதாரீஸ்வரர் பிரசாதமாகக் கொடுத்து அனுப்பும் வழக்கும் இன்றும் உள்ளது.
தமது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் தமது குடும்பத்தவரின், ஆயுள் விருத்தி, செல்வ விருத்தி, குடும்ப அன்னியோன்னிய அபிவிருத்தி, மனச்சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெருகவும், குழந்தைகளின் கல்வி, உத்தியோகம் பெறவும், சுபமங்கள திருமணம் கைகூடவும், குழந்தைப் பாக்கியப்பேறுகள் கிட்டவும் இவ்விரதத்தை இயன்றவரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம் ஆகும். தேவியின் வேண்டுதலினால் இவ்விரதத்தை அனுஷ்டிக்கும் அனைவருக்கும் இந்த வரங்கள் கிடைப்பது உறுதியாகும்.
நோன்பு நோற்று வரம் பெற்ற பராசக்தியை நோக்கி இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுவதால் இது கௌரிநோன்பென அழைக்கப்படுகிறது. இவ்விரதத்தின் அங்கங்களாக அமைந்தவை சங்கற்பம், நைவேத்தியம், தூபம், தீபம், அர்ச்சனை, வலம் வருதல் என்பனவாகும். ஆகவே, இவற்றை ஒவ்வொருவரும் தாமாகவே செய்து விரதத்தை நிறைவேற்றுதல் விரும்பத் தக்கதாகும்.
விரும்பினால் அவரவர் இல்லங்களிலும் இதனைச் செய்து கொள்ளலாம். ஆனால், புனிதமான சூழ்நிலை அமைய வேண்டும். இலிங்கத்தின் அருகில் அம்பாள் திருவுருவையும் வைத்து அலங்கரித்துப் பூஜை செய்தல் மேலானது. 21 நாள் இவ்விரதத்தை அனுஷ்டிக்க முடியாதவர்கள் இறுதிநாளில் எல்லாப் பூஜையையும் முடித்துக் கொள்ளலாம். ஆனால் வருடாவருடம் தொடர்ந்து அனுஷ்டிப்பதே முக்கியமானதாகும். இதனால் வாழ்க்கைப்பேறு, முத்திப்பேறு ஆகிய இரு பெரும் பேறுகளும் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை என்பதைக் கௌதம முனிவர் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.
இந்த ‘தோடுடைய செவியன்’ கதை சுவையாக இருக்கிறது. நினைத்த காரியத்தை முடித்துக்கொள்வதில் உள்ள பெண்மையின் சாமர்த்தியம் ஆண் தன்மைக்கு அருளப்படவில்லை. இந்த ;அர்த்த்நாரீஸ்வரன்’ ஒரு தொன்மை நுட்பம். வேறு எந்த தொன்மை சமுதாயத்திலும் இத்தனை நுட்பம் கிடையாது. அம்பிகை கேட்ட வரன் நியாயமானது.